"சாதி ஒழிப்புக்கான பண்பாட்டு மாற்றங்கள், போராட்டங்களை எங்களது தமிழ்த் தேசியம்தான் செய்துகொண்டிருக்கிறது" -- தோழர் பெ.மணியரசன்
Thursday, September 14, 2017
======================
இயக்குநர் ரஞ்சித்துக்கு..
======================
''எங்களை இந்தியன் என்று சொல்லாதீர்கள் 'தலித்' என்று சொல்லுங்கள் என காங்கிரஸாரிடமோ அல்லது பி.ஜே.பி-யினரிடமோ ரஞ்சித் கேட்பாரா?
'திராவிடன்' என்று சொல்லிக்கொண்டிருக்கும்போதே , வெண்மணிப்படுகொலை நடக்கிறது, தெருவுக்கு நடுவே சுவர் கட்டப்படுகிறது... அப்போதெல்லாம், 'எங்களைப் பார்த்து திராவிடன் என்று சொல்லாதீர்கள்' என்று தி.மு.க-வினரைப் பார்த்துக் கேட்டிருக்கிறாரா?
தமிழன் என்றால் மட்டும் ஏன் எதிர்க்கிறார்?
ரஞ்சித்தினுடைய தாய்மொழியும் என்னுடைய தாய்மொழியும் தமிழ்தான்! சாதி என்பது தமிழர்களிடையே பிற்காலத்தில் வந்த ஒரு சீர்குலைவு. ஆரிய உபநிடதங்களும் வேதங்களும்தான் இந்த வர்ணாசிரம பாகுபாபாடுகளுக்கெல்லாம் அடிப்படைக் காரணம். பாமர மக்களை ஏமாற்றுவதற்காகத்தான் அவர்கள் இப்போது 'இந்து' என்ற ஒற்றைச் சொல்லில் ஒருசேரச் சொல்லி ஏமாற்றிவருகிறார்கள். அது இந்துத்துவா அல்ல... ஆரியத்துவா என்று நாங்கள்தான் மக்களிடையே எடுத்துச் சொல்லிவருகிறோம்.
பெரியார் பெயரைச் சொல்லி தமிழ்நாட்டில் கட்சி வளர்த்தவர்கள்தான் எம்.எல்.ஏ., மாவட்ட செயலாளர், வட்ட செயலாளர் என்று எல்லா பதவிகளையும் சாதி பார்த்தே கொடுக்கிறார்கள்.
நாமெல்லாம் ஒருதாய் வயிற்றுப் பிள்ளைகள்தான். உனக்கும் எனக்கும் மூல பேராசான் திருவள்ளுவர்தான். நமது தாய் மண் தமிழகம் என்பதையெல்லாம் நாங்கள்தான் எடுத்துச்சொல்லி வருகிறோம். 'பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்' என்று நாமெல்லோரும் ஒன்றாக இருந்ததற்கான சான்றுகள் தமிழ் இலக்கியத்தில் இருக்கின்றன.
மனதில் அழுக்கில்லாமல் இருத்தல், மனிதர்கள் அனைவரும் சமம், தமிழர்கள் அனைவரும் சமம் என்ற மூன்று தமிழர் அறத்தைத்தான் நாங்களும் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறோம். மனிதர்கள் அனைவரும் சமம் என்று சொல்வதில், ஆண் - பெண்ணும் சமம் என்ற அர்த்தம் உள்ளடங்கியிருக்கிறது. அதனால்தான் சங்க இலக்கியத்திலேயே தலைவன் - தலைவி என்று வர்ணித்தார்கள். குடும்ப நலத்தைக்கூட 'இல்லறம்' என்று அறத்தோடு சேர்த்து வலியுறுத்திய இலக்கியம் தமிழைத் தவிர வேறு உலக மொழிகள் எவற்றிலாவது உண்டா?
ஆக, இப்படியெல்லாம் சமமாக உரிமையோடு வாழ்ந்தவர்களின் வழித்தோன்றல்கள்தான் நாம் எல்லோரும். அந்த சமநிலையை மறுபடியும் மீட்டெடுக்கவேண்டுமானால், இடையில் ஏற்படுத்தப்பட்ட தாழ்த்தப்பட்டவர், பிற்படுத்தப்பட்டவர் என்ற வேறுபாட்டையெல்லாம் தூக்கி எறிந்துவிட்டு நாமெல்லோரும் "தமிழராய்" ஒன்றுபட வேண்டியது அவசியம் என்பதைத்தான் நாங்கள் தெளிவாக வலியுறுத்திவருகிறோம். எத்தனை சாதிக் கிளைகளாக இன்று நாம் பிளவுப்பட்டுக் கிடந்தாலும் அடிமரத்து வேர் என்பது நமக்கு தமிழ்தான். இதுதான் நம்மை உளவியல் ரீதியாக ஒன்றிணைக்கும்.
தொழிற்சாலைகளை எல்லாம் அரசுடைமையாக்கிவிட்டால், முதலாளித்துவத்தை ஒழித்துவிடலாம். நிலத்தையெல்லாம் கையகப்படுத்தி கூட்டுப் பண்ணைகளை உருவாக்கிவிட்டால், நிலப் பிரபுத்துவத்தை ஒழித்துவிடலாம்.
ஆனால், "எதை எடுத்து சாதியை ஒழிப்பீர்கள்?"
அதற்கு மனதளவில் அல்லவா மெள்ள மெள்ள மாற்றம் வரவேண்டும்; வாழ்வுரிமையில் சமத்துவம் வரவேண்டும். இப்படி ஒவ்வொன்றாக உதிர்ந்துபோகக்கூடியதுதான் சாதி என்றக் கட்டமைப்பு. மற்றபடி உடனடியாக, நம்மிடையே இருக்கும் சாதி அழுக்கை ஒரே நாளில், தேதி குறித்து களைந்துவிட முடியாது. எனவே, சாதி ஒழிப்புக்கான பண்பாட்டு மாற்றங்கள், போராட்டங்களை எங்களது தமிழ்த் தேசியம்தான் செய்துகொண்டிருக்கிறது'' என்றார் உறுதியான குரலில்.
Labels: தமிழ்த் தேசியம், திராவிடம்
0கருத்துக்கள்:
Post a Comment
<< முகப்பு பக்கம்