" கட்டணக் கொள்ளைக்கு எதிரான இராசா முத்தையா கல்லூரி மாணவர் போராட்டம்" -- தோழர் பெ. மணியரசன் நேரில் சென்று ஆதரவு!
Monday, October 2, 2017
=============================================
கட்டணக் கொள்ளைக்கு எதிரான
இராசா முத்தையா கல்லூரி மாணவர் போராட்டம்
-------------------------------------------------------------------------------
தமிழ்த்தேசியப் பேரியக்கத் தலைவர்
தோழர் பெ. மணியரசன் நேரில் சென்று ஆதரவு!
=============================================
சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழகம் முறைகேடுகளால் சீரழிந்து வந்த நிலையில், 2013இல் தமிழ்நாடு அரசே அதை கையகப்படுத்தியது. அதைத் தொடர்ந்து, அண்ணாமலைப் பல்கலைக்கழகத்துடன் இணைந்த இராசா முத்தையா மருத்துவக் கல்லூரி, பல் மருத்துவக் கல்லூரி ஆகியவையும் அரசுடைமை ஆக்கப்பட்டன. எனினும், இராசா முத்தையா மருத்துவக் கல்லூரி, பல் மருத்துவக் கல்லூரி ஆகியவற்றில் அரசு அனுமதிக்க கட்டணம் வசூலிக்கப்படாமல், கொள்ளைக் கட்டணம் வசூலிக்கப்படுகிறது.
தமிழ்நாட்டிலுள்ள மருத்துவக் கல்லூரிகளையும், அதன் கட்டணங்களையும் கட்டுப்படுத்தவும், முறைப்படுத்தவும் தமிழ்நாடு அரசு ஏற்படுத்திய எம்.ஜி.ஆர். மருத்துவப் பல்கலைக்கழகத்ததுடன், இராசா முத்தையா மருத்துவக் கல்லூரி – பல் மருத்துவக் கல்லூரி ஆகியவையும் இணைக்கப்பட்டிருக்க வேண்டும். ஆனால், அது நடைபெறாததால், இராசா முத்தையா கல்லூரி தம் விருப்பத்திற்குக் கட்டணக் கொள்ளை நடத்தி வருகிறது.
இதைக் கண்டித்தும், தமிழ்நாடு அரசு விதித்த கட்டணத்தையே இங்கு வசூலிக்க வேண்டுமெனக் கோரி கடந்த ஆகத்து 29 முதல் அக்கல்லூரிகளின் மாணவர்கள், கல்லூரி வளாகத்தில் தொடர் போராட்டம் நடத்தி வருகின்றனர்.
மாணவர்களின் ஞாயமான கோரிக்கைகளுக்கு செவி சாய்க்க வேண்டிய அரசு, அதைச் செய்யாமல் மருத்துவம் மற்றும் பல் மருத்துவக் கல்லூரிகளுக்கு விடுமுறை அளித்தன. மேலும், விடுதிகளையும் மூடி மாணவர்களை கட்டாயமாக வெளியேற்றினர். போராட்டத்தைக் கைவிடவில்லை எனில் காவல்துறை மூலம் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் மிரட்டல் விடுத்திருக்கின்றனர்.
எனினும், அச்சுறுத்தலுக்கு அடிபணியாமல் போராட்டம் தொடர்ந்து நடைபெற்று வருகின்றது. நேற்று (01.10.2017) நடைபெற்ற 33ஆவது நாள் போராட்டத்தில், தமிழ்த்தேசியப் பேரியக்கத் தலைவர் தோழர் பெ. மணியரசன், பொதுச் செயலாளர் தோழர் கி. வெங்கட்ராமன் ஆகியோர் பங்கேற்றுடன், கோரிக்கைகளை ஆதரித்து மாணவர்களிடம் உரையாற்றினர்.
தோழர் பெ. மணியரசன் பேசுகையில், “அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தை அரசே ஏற்று நடத்தத் தொடங்கிய பிறகு, இராசா முத்தையா கல்லூரியும் தமிழ்நாடு அரசுதான் நிர்வகித்திருக்க வேண்டும். அது நடக்காததால்தான், இங்குக் கட்டணக் கொள்ளை பெருமளவில் நடக்கிறது.
அரசு மருத்துவக் கல்லூரிகளில் சற்றொப்ப 13,600 ரூபாய் கட்டணம் வசூலிக்கப்படுகிறது. தனியார் கல்லூரிகளிலோ 2 இலட்சம் முதல் 4 இலட்சம் ரூபாய் வரை கட்டணம் வசூலிக்கப்படுகிறது. ஆனால், இராசா முத்தையா கல்லூரியிலோ மிக மோசமாக சற்றொப்ப 13 இலட்சம் ரூபாய் வரை கட்டணம் வசூலிக்கும் அவலம் நடக்கிறது!
இதன் காரணமாக, இங்கு நடைபெறும் மருத்துவமனையும் சீரழிந்து கிடக்கிறது. பொது மக்களுக்கு அளிக்கப்படும் சிகிச்சையும் தரமானதாக இல்லை!
மாவட்டத்திற்கு ஒரு மருத்துவக் கல்லூரி என்று சொல்லும் தமிழ்நாடு அரசு, கடலூர் மாவட்டத்திற்கென்று உள்ள இந்த மருத்துவக் கல்லூரியை உடனடியாக அரசின் நேரடிக் கட்டுப்பாட்டில் கொண்டு வர வேண்டும். அப்போதுதான், இக்கட்டணக் கொள்ளையைத் தடுக்க முடியும்!
இதை வலியுறுத்தி, வரும் அக்டோபர் 9 அன்று சிதம்பரத்தில் முன்னெடுக்கப்படும் அனைத்துக் கல்லூரி மற்றும் பொது மக்கள் ஆர்ப்பாட்டத்தில், தமிழ்த்தேசியப் பேரியக்கமும் பங்கெடுக்கிறது. தமிழ் மக்கள் அனைவரும் இதில் பங்கேற்க வேண்டுமெனவும் அழைப்பு விடுக்கிறோம்” என்று பேசினார்.
தமிழக இளைஞர் முன்னணி துணைப் பொதுச் செயலாளர் தோழர் ஆ. குபேரன், தமிழக மாணவர் முன்னணி அமைப்பாளர் தோழர் சுப்பிரமணிய சிவா, மகளிர் ஆயம் நடுவண் குழு உறுப்பினர் தோழர் ம. இலட்சுமி, தோழர் சுகன் உள்ளிட்ட பேரியக்கத் தோழர்கள் உடனிருந்தனர்.
Labels: போராட்டங்கள்
0கருத்துக்கள்:
Post a Comment
<< முகப்பு பக்கம்