இரசினிகாந்த், அசீத், விசால் நடிகர்களை ஓரங்கட்டுங்கள்! - இந்தியன், திராவிடன் “இனப்பெயரை” நீக்குங்கள்! -- தோழர் பெ. மணியரசன்
Thursday, May 18, 2017
========================== ============
இரசினிகாந்த், அசீத், விசால் நடிகர்களை
ஓரங்கட்டுங்கள்! - இந்தியன், திராவிடன்
“இனப்பெயரை” நீக்குங்கள்!
========================== ============
தோழர் பெ. மணியரசன்,
தமிழ்த்தேசியப் பேரியக்கத் தலைவர்.
========================== ============
தமிழ்நாட்டு அரசியலுக்குத் தலைமை தாங்க வருமாறு கன்னட நாட்டு நடிகர் இரசினிகாந்தை அழைக்கும் அளவிற்குத் தமிழ் இனத்தில் ஒரு சாரார் தரம் தாழ்ந்து தன்மானம் குறைந்து போனதற்குக் காரணமானவர்கள் யார்?
தமிழின அடையாளத்தை மறைத்து, திராவிட அயல் இன அடையாளத்தைத் தமிழர்கள் மீது திணித்த திராவிடச் சந்தர்ப்பவாதிகளும், இந்தியன் என்ற வடநாட்டு இனப்பெயரைத் தமிழர் தலையில் சுமத்திய வடநாட்டுத் தாசர்களான காங்கிரசு, கம்யூனிஸ்ட்டு, பா.ச.க. கட்சிகளைச் சேர்ந்தவர்களுமே காரணம் ஆவர்!
குறிப்பாக, ஒற்றை அதிகாரத் தலைவரை உருவாக்கிக் கொண்டு - அவரை கடவுளாக அல்லது கடவுளுக்கும் மேலானவராக சித்தரித்து, மாயாசாலம் காட்டி, மக்களின் தன்மதிப்பையும், தன்முயற்சியையும் சிதைத்து, அவதாரத் தலைவரைத் தேடும் அவலத்தை வெகுமக்கள் உளவியலில் பதித்துவிட்டன தி.மு.க. – அ.தி.மு.க. கட்சிகள்!
மற்ற மாநிலங்களில் திரைக் கதாநாயகர்களுக்கு அரசியல் தலைமை கிடைப்பதில்லை. திரைப்படத்தில் நடித்துப் பெற்ற பிரபலத்தைப் பயன்படுத்தி அரசியல் தலைமை ஏற்க முனைந்த அமிதாப்பச்சனை இந்தி வட்டார மக்கள் புறக்கணித்தனர்; ஆந்திராவில் நடிகர் சிரஞ்சீவியின் அரசியல் கடையை மூடச் செய்தனர் தெலுங்கர்கள்; ஏற்கெனவே கேரளாவில் அரசியல் கட்சி தொடங்கிய நடிகர் பிரேம் நசீர் கட்சியைக் கலைக்கச் செய்தனர் மலையாளிகள்! ஆந்திரப்பிரதேசத்தில் என்.டி. இராமாராவின் அரசியல் வாழ்வையும் அரைகுறையாக முடித்து வைத்தனர் தெலுங்கு மக்கள்!
தமிழ்நாட்டில் மட்டும் கன்னடர் இரசினிகாந்த், மலையாள அசீத், தெலுங்கர் விசால் ஆகிய அயல் இன நடிகர்கள் அரசியல் தலைவர்களாகித் தமிழர்களை ஆளத் துடிப்பதேன்? ஏமாளித் தமிழர்கள் அவர்களை அரசியலுக்கு அழைப்பதேன்?
ஆந்திரா, தெலுங்கானா, கர்நாடகம், கேரளம் ஆகிய மாநிலங்களில் தமிழ்த் திரைப்படங்கள் ஓடுகின்றன. தமிழின நடிகர்களான சத்தியராசு, விசய், சூரியா போன்றோரை அம்மாநிலங்களில் அரசியலுக்குத் தலைமை தாங்க அழைக்கிறார்களா? இல்லை! அந்த மொழிப்படங்களில் தமிழர்களைக் கதாநாயகர் அளவுக்கு வளர விட்டார்களா? இல்லை! இந்த நான்கு மாநிலங்களிலும், வட மாநிலங்களிலும் தமிழர்களை அரசியல் தலைவர்களாக வளர விட்டார்களா? மாநில அளவில் தொழிற்சங்கத் தலைவர்களாகவாவது வளர விட்டார்களா? இல்லை!
தைப்புரட்சியில் “தமிழன்டா” என்ற பதாகையை ஏந்திய இலட்சோப இலட்சம் தமிழின இளையோரே, உங்களில் தகுதிமிக்கோரிடமிருந்தும், அனுபவம் - இலட்சியக் கூர்மை - நேர்மை ஆகிய பண்புகளைக் கொண்ட தமிழின மூத்தோரிடம் இருந்தும்தான் தமழர்களுக்கு புதிய தலைமைகள் உருவாக வேண்டும்.
தமிழின அடையாளத்தை மறைத்து, திராவிடன், இந்தியன் என்ற அயல் இன அடையாளங்களைத் திணிக்கும் அரசியல்வாதிகளைப் புறந்தள்ளுங்கள்! இரசினிகாந்த் போன்ற அயல் இன நடிகர்களை ஓரங்கட்டுங்கள்!
Labels: அறிக்கைகள்
0கருத்துக்கள்:
Post a Comment
<< முகப்பு பக்கம்