இந்திய அரசு எப்போதும் சிங்களர் பக்கமே நரேந்திர மோடி காணொலி உரை! பெ. மணியரசன்
Sunday, July 22, 2018
இந்திய அரசு எப்போதும் சிங்களர் பக்கமே
நரேந்திர மோடி காணொலி உரை!
தமிழ்த்தேசியப் பேரியக்கத் தலைவர்
தோழர் பெ. மணியரசன் சிறப்புக்கட்டுரை!
இலங்கையில் இந்திய அரசு உதவியுடன் செயல்படும் மருத்துவ உதவி ஊர்தி (ஆம்புலன்ஸ்) திட்டத்தை விரிவுபடுத்தும் நிகழ்ச்சியில் நேற்று (21.07.2018) இந்தியத் தலைமை அமைச்சர் நரேந்திர மோடி தில்லியில் இருந்தவாறு காணொலி மூலம் தொடங்கி வைத்தார்.
அப்போது அவர் பேசியது உலகெங்கும் வாழும் தமிழர்கள் கவனிக்கத்தக்கதாகும். “இலங்கையை ஒரு பக்கத்து நாடாக மட்டும் நான் பார்ப்பதில்லை. தெற்காசியாவில் மிகச்சிறப்பான - நம்பிக்கைக்கு உரிய பங்காளியாகத்தான் (Trusted Partner) நான் பார்க்கிறேன். நல்ல தருணங்களிலும், மோசமான தருணங்களிலும் எப்போதுமே இலங்கை கூப்பிட்ட குரலுக்கு முதலில் பதில் அளிக்கும் நாடு இந்தியா” என்று அப்போது மோடி பேசியுள்ளார். இச்செய்தி இன்று (22.07.2018) ஏடுகளில் வந்துள்ளது.
சிங்கள அரசுடன் இந்தியாவுக்குள்ள இந்த உறவு ஆரியப்பாசத்தின் அடிப்படையிலானது! காங்கிரசு ஆட்சியாக இருந்தாலும், பா.ச.க. ஆட்சியாக இருந்தாலும் பாசமுள்ள பங்காளி உறவைத்தான் சிங்கள இனத்துடன் அவை கொண்டுள்ளன.
ஒன்றரை இலட்சம் ஈழத்தமிழர்களை சிங்கள அரசு இனப்படுகொலை செய்ததற்கு போர் வகையிலும், அரசியல் வகையிலும் உற்ற துணையாய் நின்றது இந்தியா! அதை மனத்தில் வைத்துத்தான், “நல்ல தருணங்களிலும் மோசமான தருணங்களிலும் இலங்கையின் கூப்பிட்ட குரலுக்கு முதலில் பதில் அளிக்கும் நாடு இந்தியா!” என்று நரேந்திர மோடி குறிப்பிட்டுள்ளார்.
தமிழ்நாட்டு மீனவர்கள் 600-க்கும் மேற்பட்டோரை சிங்களக் கடற்படை சுட்டுக் கொன்ற நேரங்களிலும், இன்றைக்கும் நம் மீனவர்களை தமிழ்நாட்டுக் கடல் பரப்பிலும், பன்னாட்டுக் கடல் பரப்பிலும் சிங்களக் கடற்படை தாக்கும்போதும், தமிழ்நாடு கதறிக் கதறி இந்தியாவின் உதவியைக் கேட்டது. ஆனால், இந்தியா ஒரு போதும் உதவிக்கு வந்ததில்லை!
சட்டப்படி அமைக்கப்பட்ட தீர்ப்பாயம் மற்றும் உச்ச நீதிமன்றம் ஆகியவை அளித்த தீர்ப்புகளின்படி கர்நாடகம் காவிரியில் தண்ணீர் திறந்துவிட வேண்டும் என்று தமிழ்நாட்டு உழவர்களும், அரசியல் கட்சிகளும் கதறிக் கதறி வேண்டுகோள் வைத்தாலும் இந்தியா அதற்கு செவி சாய்த்ததில்லை!
தமிழ்நாடு முதலமைச்சர் தலைமையில் அனைத்துக் கட்சிக் குழுவினர் தலைமையமைச்சரை நேரில் சந்தித்து காவிரி தொடர்பாக மனு கொடுக்க அனுமதி கேட்டபோது, அதற்குக்கூட அனுமதி மறுத்தார் நரேந்திர மோடி!
ஆனால், “இலங்கை கூப்பிட்ட குரலுக்கு ஓடோடி சென்று உதவுகிற இந்தியா” என்று நரேந்திர மோடி ஒளிவு மறைவின்றி குறிப்பிடுகிறார்.
உள்ளதை உள்ளபடி புரிந்து கொள்ள வேண்டியவர்கள் – தமிழர்கள்!
இந்திய அரசின் கங்காணிகளாகச் செயல்பட்டுக் குழப்பிக் கொண்டிருக்கும் “அறிவாளிகள்” மற்றும் அரசியல்வாதிகள் ஆகியோரிடம் எச்சரிக்கையாய் இருந்து, தமிழர்கள் தமிழ்த்தேசிய உணர்வைப் பெறுவதற்குரிய பாடத்தையே நரேந்திர மோடி நடத்தியுள்ளார்.
0கருத்துக்கள்:
Post a Comment
<< முகப்பு பக்கம்