"தஞ்சையார் இழப்பு தாங்கமுடியாத துயரம்!"---- தமிழ்த்தேசியப் பேரியக்கத் தலைவர் பெ. மணியரசன் இரங்கல் அறிக்கை
Friday, November 12, 2021
====================================================
தஞ்சையார் இழப்பு தாங்கமுடியாத துயரம் !
====================================================
- தமிழ்த்தேசியப் பேரியக்கத் தலைவர் பெ. மணியரசன் இரங்கல் அறிக்கை
==================================================================
தஞ்சையார் என்று தலைவர்களாலும் மக்களாலும் அன்புடனும் மதிப்புடனும் அழைக்கப்பட்ட மூத்த வழக்கறிஞர் தஞ்சை அ. இராமமூர்த்தி எம்.ஏ.,பி.எல். அவர்கள் இன்று (12.11.2021) காலை சென்னையில், மருத்துவமனையில் காலமானார் என்ற செய்தி பேரதிர்ச்சி தருகிறது.
தலைவராய், எங்களுக்கெல்லாம் மூத்த தோழராய் விளங்கிய தஞ்சையார் இழப்பு பேரிழப்பு.
இந்திய தேசிய காங்கிரசில் அவரின் அரசியல் வாழ்க்கை தொடங்கியது. தமிழ்நாடறிந்த பேச்சாளராக, பிரமுகராக விளங்கினார். அதன் மாநிலத் தலைவர்களில் ஒருவராக இருந்தார். தலைவர் காமராசருடன் நெருக்கமாகச் செயல்பட்டார். காங்கிரசு 1969இல் பிளவுபட்ட போது இந்திரா காந்தி தலைமை கொண்ட இந்திரா காங்கிரசில் இணைந்து அதன் தமிழ்நாடு செயலாளராக புயுல்வேகப் பரப்புரையில் ஈடுபட்டார்.
இளமையில் கல்லூரி விரிவுரையாளராக இருந்து, பின்னர் சென்னை சட்டக் கல்லூரியில் பயின்று, வழக்கறிஞர் பட்டம் பெற்றார். ஒருங்கிணைந்த தஞ்சை மாவட்டத்தில் முன்னணி வழக்கறிஞராகத் திகழ்ந்தார்.
நான் மார்க்சிய கம்யூனிஸ்ட் கட்சியில் செயல்பட்டபோது எங்கள் தலைவர் தோழர் ந. வெங்கடாசலம் அவர்களும் தஞ்சையார் அவர்களும் நெருக்கமான தோழர்களாக விளங்கினார்கள். அவர் மூலம்தான் தஞ்சையார் எனக்கு அறிமுகம்.
தஞ்சையார் இளமையிலேயே காந்தியம், மார்க்சியம் கற்றவர். நிகரமையை (சோசியலிசத்தை) நேசிப்பவர். எங்கள் வழக்குகள் பலவற்றை கட்டணமின்றி தஞ்சையார் நடத்துவார். 1975இல் இந்திராகாந்தி அம்மையார், நெருக்கடி நிலையைச் செயல்படுத்தி, சனநாயக உரிமைகளைப் பறித்தார். அப்பொழுது மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் தோழர்கள் மீது காவல்துறை போட்ட வழக்குகளை எல்லாம் கட்டணமின்றி வாதாடி பிணை எடுத்துக் கொடுத்தார் அதில், தன் கட்சிக் கொள்கைக்கு முரண்பாடாயிற்றே என்று பார்க்காமல் நெருக்கடி நிலையை எதிர்த்துப் போராடிய எங்களுக்கு வழக்கு நடத்தினார்.
நானும் தோழர்களும் 1985ல் சிபிஎம் கட்சியை விட்டு வெளியேறி, தனிக் கட்சி தொடங்கிய பிறகும் எங்கள் உறவு மேலும் வளர்ந்தது. தமிழ்த்தேசியத்தை முழுக்கமுழுக்க ஆதரித்தார். ஆதரித்து பொதுமேடைகளில் பேசினார். பல பொதுமேடைகளில் அந்த நோக்கில் என்னைப் பாராட்டிப் பேசினார்.
தமிழ்த்தேசியம்தான் தமிழ்நாட்டிற்குத் தேவை என்றார். அதற்கு முன்பே அவர் இந்திரா காங்கிரசை விட்டு வெளியேறி, ஐயா நெடுமாறன் தலைமையில் இயங்கிய காமராஜ் காங்கிரசில் அதன் துணைத் தலைவராகச் செயல்பட்டார். காமராஜ் காங்கிரஸ் என்பது பின்னர் தமிழர் தேசிய இயக்கமாகப் பெயர்மாற்றம் பெற்றது. தமிழ்த் தேசியத்தை முழு ஈடுபாட்டுடன் கடைசிவரை ஆதரித்து வந்தார்.
என்மீது தனிப்பட்ட பாசம் காட்டினார். அவரிடமிருந்த முக்கியமான சட்ட நூல்கள் பலவற்றை எனக்குத் தந்தார். அவருடைய திருமண வெள்ளிவிழாவை ஒட்டி (25ஆம் ஆண்டு) வீட்டில் நடந்த நிகழ்ச்சியில் அப்போது எங்கள் தலைவர் வெங்கடாசலத்துடன் நானும் கலந்து கொண்டேன். அதன் பிறகு நாங்கள் தனிக்கட்சி கண்ட பிறகும் அவருடைய திருமண பொன்விழா, அறுபதாம் ஆண்டு மணிவிழா, எழுபத்தைந்தாம் ஆண்டு பவளவிழா என அத்தனை விழாக்களிலும் என்னையும் பேச்சாளராகப் போட்டு நிகழ்ச்சிகளில் பங்கெடுக்கச் செய்தார்.
அவர் புதிய கோணத்தில் விவேகானந்தார் பற்றி நூல் எழுதினார். ஒவ்வொரு கட்டத்திலும் அதன் முக்கியக் கூறுகளை என்னிடம் பேசுவார். அடுத்து தமிழ வள்ளலார் என்ற நூல் எழுதினார். அதை நாங்கள் எங்கள் பன்மைவெளி வெளியீட்டகத்தில் வெளியிட்டோம். அதற்கான அணிந்துரை நான் எழுத வேண்டும் என்றார், எழுதினேன். அண்மையில்தான் புத்தரைப் பற்றி புதிய நோக்கில் நூல் எழுதி வெளியிட்டார்.
கடந்த சில ஆண்டுகளாகவே மூப்பின் பாதிப்புகள் தஞ்சையாருக்கு இருந்தன. காது கேட்காத நிலை ஏற்பட்டது. கைத்தடி கொண்டு நடக்க வேண்டிய நிலைமை வந்தது. ஆனால் அரசியல், தத்துவம், இலக்கியம் ஆகியவை குறித்த உரையாடல்களில் பழைய இளமைத் துடிப்போடு பேசுவார். நிகழ்ச்சிகளிலும் கலந்து கொள்வார்.
மூப்படைந்து நோய்வாய்ப்பட்ட தஞ்சையார் காலமான செய்தி கேட்டதும் எனக்கு நெஞ்சம் துடித்தது. நான் ஏற்கெனவே உடல்நலம் பாதிக்கப்பட்டு கடந்த இருபத்தைந்து நாள்களாக சிகிச்சையில் இருந்து கொண்டுள்ளேன். எனக்கு அவர் காலமான செய்தியை நேரடியாகச் சொன்னால் அதிர்ச்சி அடைவேன் என்று செம்மலர் கைலாசம் அவர்கள், ”தஞ்சையார் உடல்நிலை மிகவும் பாதிக்கப்பட்டிருக்கிறது, என்ன நடக்கும் என்று சொல்ல முடியாது என்கிறார்கள்” என்று மட்டும் சொன்னார்.
தஞ்சை செம்மலர் – கைலாசம் இணையர்தான் கடந்த சில ஆண்டுகளாக தஞ்சையாரும் அவருடைய துணைவியார் சரசுவதி அம்மா அவர்களும் தஞ்சையில் இருக்கும் போது பெற்றோரை கவனிப்பது போல் கவனித்துக் கொண்டார்கள். அவருடைய மகன் சென்னையில் பணியில் இருக்கிறார். அவருடைய மகள் வெளியூரில் திருமணமாகி வழக்கறிஞராகப் பணியில் இருக்கிறார்.
பின்னர் தஞ்சையார் காலமான செய்தி கிடைத்தது. துயரம் தாங்கவில்லை. தமிழ்த்தேசியப் பேரியக்கத்தின் சார்பில் தஞ்சையாருக்குப் புகழ் வணக்கத்தையும் இரங்கலையும் அவர் குடும்பத்தாருக்கும் நண்பர்களுக்கும் ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறேன்.
தஞ்சையாரின் நினைவுகள் அவருடைய சிந்தனைகள் தொடர்ந்து வாழும்.
===================================
தலைமைச் செயலகம்,
தமிழ்த்தேசியப் பேரியக்கம்
===================================
பேச: 9443918095, புலனம் : 9841949462
முகநூல் : www.fb.com/tamizhdesiyam
ஊடகம் : www.kannottam.com
இணையம் : www.tamizhdesiyam.com
சுட்டுரை : www.twitter.com/Tamizhdesiyam
காணொலிகள் : youtube.com/Tamizhdesiyam
===================================
Labels: அறிக்கைகள், இரங்கல்
0கருத்துக்கள்:
Post a Comment
<< முகப்பு பக்கம்