<body><script type="text/javascript"> function setAttributeOnload(object, attribute, val) { if(window.addEventListener) { window.addEventListener('load', function(){ object[attribute] = val; }, false); } else { window.attachEvent('onload', function(){ object[attribute] = val; }); } } </script> <div id="navbar-iframe-container"></div> <script type="text/javascript" src="https://apis.google.com/js/platform.js"></script> <script type="text/javascript"> gapi.load("gapi.iframes:gapi.iframes.style.bubble", function() { if (gapi.iframes && gapi.iframes.getContext) { gapi.iframes.getContext().openChild({ url: 'https://www.blogger.com/navbar/6955529389241309188?origin\x3dhttp://thozharmaniyarasan.blogspot.com', where: document.getElementById("navbar-iframe-container"), id: "navbar-iframe" }); } }); </script>

"மேக்கேதாட்டு அணை பற்றி விவாதிக்க காவிரி ஆணையத்திற்கு அதிகாரம் இல்லை! அதன் தலைவரை நீக்க வேண்டும்!"--காவிரி உரிமை மீட்புக் குழு ஒருங்கிணைப்பாளர் ஐயா பெ.மணியரசன் அறிக்கை!

Saturday, February 12, 2022

மேக்கேதாட்டு அணை பற்றி விவாதிக்க காவிரி ஆணையத்திற்கு அதிகாரம் இல்லை!

அதன் தலைவரை நீக்க வேண்டும்!

=========================================================
காவிரி உரிமை மீட்புக் குழு ஒருங்கிணைப்பாளர் ஐயா பெ.மணியரசன் அறிக்கை!
=========================================================

மூன்று தடவை தள்ளி வைக்கப்பட்ட காவிரி நீர் மேலாண்மை ஆணையக் கூட்டம் நேற்று (11.02.2022) அன்று காணொலி வாயிலாக நடந்துள்ளது. இந்தக் கூட்டம் மேக்கேதாட்டு அணை குறித்து விவாதிப்பதற்கான தனிச் சிறப்புக் கூட்டம் என்று மேலாண்மை ஆணையத் தலைவர் செளமித்திர குமார் ஹல்தர் தெரிவித்துள்ளார்.

மேக்கேதாட்டு வழக்கு உச்ச நீதிமன்றத்தில் இருப்பதால் இது குறித்து விவாதிக்கக் கூடாது என்று தமிழ்நாடு அரசு அதிகாரிகள் மறுத்துள்ளனர். அதனால் மேக்கேதாட்டு அணை விவரம் பேசாமலேயே, இரண்டு மணி நேரம் அக்கூட்டத்தை நடத்தியுள்ளார்கள்.

தமிழ்நாட்டை இணங்க வைப்பதற்காக இந்திய அரசு அதிகாரிகள் அவ்வளவு நேரத்தை எடுத்துக் கொண்டுள்ளார்கள் என்று ஊகிக்க முடிகிறது.

உச்சநீதிமன்ற ஆணைப்படி அமைக்கபட்ட காவிரி நீர் மேலாண்மை ஆணையம் கர்நாடகம், தமிழ்நாடு, கேரளம், புதுச்சேரி ஆகிய மாநிலங்களுக்கிடையே உச்சநீதிமன்றத் தீர்ப்பின்படித் தண்ணீர்ப் பகிர்வைக் கண்காணித்து செயல்படுத்தும் அதிகாரம் மட்டுமே கொண்டுள்ளது. கர்நாடகம் புதிய அணை கட்டுவது பற்றி விவாதிக்கவோ முடிவு எடுக்கவோ அதற்கு அதிகாரம் இல்லை.

ஒன்றிய பா.ச.க. ஆட்சியினரின் தூண்டுதலால், அதிகார அத்துமீறலில் இறங்கி, காவிரி நீர் மேலாண்மை ஆணையம் கடந்த சில ஆண்டுகளாக மேக்கேதாட்டு அணைக்கு அனுமதி தருவது பற்றிய பொருளை நிகழ்ச்சி நிரலில் சேர்த்து வருகிறது.

மேக்கேதாட்டு அணை அனுமதி குறித்து விவாதிப்பதற்கும் முடிவு எடுப்பதற்கும் காவிரி நீர் மேலாண்மை ஆணையத்திற்கு அதிகாரம் இல்லை என்ற உண்மையைத் தமிழ்நாடு அரசு வெளிப்படையாக இதுவரை கூறாதது ஏன்?

மேக்கேதாட்டு அணைக்குத் தடை கோரி தமிழ்நாடு அரசு தாக்கல் செய்த வழக்கு உச்ச நீதிமன்ற விசாரணையில் இருப்பதால், அணை பற்றி ஆணையத்தில் விவாதிக்கக்கூடாது என்று மட்டும் தமிழ்நாடு அரசு காரணம் கூறிவருவது போதுமானது அல்ல.

காவிரித் தீர்ப்பாயம் 2007-ஆம் ஆண்டு அளித்த இறுதித் தீரப்பைச் செயல்படுத்துவது குறித்த வழக்கில் உச்ச நீதி மன்றம் 16.02.2018 அன்று தீர்பளித்தது. அதில், தண்ணீர்ப் பகிர்வு அளவில் மட்டுமே மாற்றம் செய்திருக்கிறோம், மற்றவற்றில் காவிரித் தீர்ப்பாய இறுதித் தீர்ப்பு செல்லுபடியாகும் என்று கூறியுள்ளது. காவிரித் தீர்ப்பாயத்தின் இறுதித் தீர்ப்பு, காவிரி நீர் மேலாண்மை ஆணையத்திற்கு (மேலாண்மை வாரியத்திற்கு) தண்ணீர் பகிர்வு தன்னாட்சி அதிகாரம் மட்டுமே வழங்கியுள்ளது.

எனவே, தமிழ்நாடு அரசு, காவிரி நீர் மேலாண்மை ஆணையம், மேக்கேதாட்டு அணை குறித்து விவாதிப்பது உச்ச நீதிமன்றத் தீர்ப்பிற்கு எதிரான செயல் என்று கூறி, அந்த ஆணையத்தின் கூட்டத்தைப் புறக்கணிக்க வேண்டும்.

இப்பொழுது காவிரி நீர் மேலாண்மை ஆணையத்தின் தலைவராக உள்ள செளமித்திர குமார் ஹல்தர், இதற்கு முன் ஒன்றிய அரசின் நீராற்றல் துறையின் தலைவராக இருந்து பணி ஓய்வு பெற்றவர். காவிரி ஆணைய நிரந்தரத் தலைவர் பதவியை ஐந்தாண்டுகளுக்கு மோடி அரசு அவருக்குப் பரிசாக வழங்கியிருக்கிறது. அதற்கு நன்றிக் கடனாக, தமிழ்நாட்டுக்குரிய காவிரி நீரைக் கர்நாடகம் தடுத்துப் பயன்படுத்திக் கொள்ள மேக்கேதாட்டிற்கு அனுமதி கொடுக்கத் துடிக்கிறார் ஹல்தர்.

இதே எஸ்.கே.ஹல்தர் நீராற்றல் துறைத் தலைவராக இருந்த போதுதான் மேக்கேதாட்டுக்கு விரிவான திட்ட அறிக்கையைக் கர்நாடக அரசிடம் கேட்டு வாங்கி, அதைக் காவிரி நீர் மேலாண்மை ஆணையத்தின் ஒப்புதலுக்காக அனுப்பிவைத்தார்.
எனவே, ஹல்தரை அப்பதவியிலிருந்து நீக்க வேண்டும் என்றும், தண்ணீர்ப் பகிர்வை மட்டும் செயல்படுதும் தன்னாட்சி அதிகாரமுள்ள புதிய ஆணையம் அமைக்க வேண்டும் என்றும் தமிழ்நாடு அரசு கோரிக்கை வைத்து சட்டமுறையில் நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் என்று காவிரி உரிமை மீட்புக் குழு சார்பில் கேட்டுக் கொள்கிறேன்.

==========================
செய்தித் தொடர்பகம்,
காவிரி உரிமை மீட்புக் குழு
==========================
பேச: 98419 49462, 94432 74002
==========================
Fb.com/KaveriUrimai
#SaveMotherCauvery
www.kaveriurimai.com
==========================
 

Labels: ,

0கருத்துக்கள்:

Post a Comment

<< முகப்பு பக்கம்


தோழர் மணியரசன்
அவர்களின் படைப்புகள் மற்றும் கருத்துக்களை இத்தளத்தில் காணலாம்.
வாசகர்களின் கருத்துக்களும் வரவேற்கப்படுகின்றன.

Web This Blog

தொகுப்பு

முந்தைய பதிவுகள்

தோழமைத் தளங்கள்