<body><script type="text/javascript"> function setAttributeOnload(object, attribute, val) { if(window.addEventListener) { window.addEventListener('load', function(){ object[attribute] = val; }, false); } else { window.attachEvent('onload', function(){ object[attribute] = val; }); } } </script> <div id="navbar-iframe-container"></div> <script type="text/javascript" src="https://apis.google.com/js/platform.js"></script> <script type="text/javascript"> gapi.load("gapi.iframes:gapi.iframes.style.bubble", function() { if (gapi.iframes && gapi.iframes.getContext) { gapi.iframes.getContext().openChild({ url: 'https://www.blogger.com/navbar/6955529389241309188?origin\x3dhttp://thozharmaniyarasan.blogspot.com', where: document.getElementById("navbar-iframe-container"), id: "navbar-iframe" }); } }); </script>

"ஆறு இலட்சம் பணியிடங்களில் தமிழ்நாடு அரசு அலுவலர்களை அமர்த்தாது! வேலை தேடுவோர் கதி என்ன?" ---- பெ. மணியரசன், தலைவர் – தமிழ்த்தேசியப் பேரியக்கம்.

Monday, December 26, 2022


ஆறு இலட்சம் பணியிடங்களில்

தமிழ்நாடு அரசு அலுவலர்களை அமர்த்தாது!
வேலை தேடுவோர் கதி என்ன?
=====================================
பெ. மணியரசன்,
தலைவர் – தமிழ்த்தேசியப் பேரியக்கம்.

=====================================

தமிழ்நாடு அரசுப் பணித் தேர்வாணையம், புதிதாக அலுவலர்கள் தேர்வு நடத்துவதை நிறுத்தி வைத்துள்ளது. கடந்த சில நாட்களுக்கு முன் அத் தேர்வாணையம் பணி இடங்களுக்கான எந்தெந்த பிரிவுகளுக்கு எவ்வெப்போது தேர்வுகள் என்ற விவரத்தை வெளியிட்டுள்ளது.

அதில் பிரிவு 1 (குரூப் 1) பணித்தேர்வு பற்றிய அறிவிப்பு 2023 ஆகத்து மாதம் வெளியிடப்படும் என்றும் அதற்கான முதல்நிலைத் தேர்வு (Preliminary) 2023 நவம்பரில் நடைபெறும் என்றும், அதற்கான முதன்மை (Main)த் தோ்வு 2024 சூலையில் நடத்தப்படும் என்றும், நேர்காணல் 2024 டிசம்பரில் நடத்தப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதாவது முதல் பிரிவு அலுவலர்கள் (அதிகாரிகள்) பணி அமர்த்தல் 2023, 2024 இரண்டு ஆண்டுகளிலும் நடக்காது.

பிரிவு 2, 2A, 3A பதவிகளுக்குான தேர்வு குறித்த அறிவிப்பு எதுவும் இல்லை. பிரிவு 4 – (group-4) பணியிடங்களுக்கு 1754 பேர் மட்டுமே தேர்வு செய்யப்பட உள்ளதாக அறிவித்துள்ளது ஆணையம்.

தமிழ்நாடு அரசுப் பணியிடங்களின் மொத்த எண்ணிக்கை 15 இலட்சம் என்றும், இப்போது அப்பணிகளில் இருப்போர் எண்ணிக்கை 9 இலட்சம் மட்டுமே என்றும் தமிழ்நாடு நிதியமைச்சர் பழனிவேல் தியாகராசன் அவர்கள் கூறியது 5.12.2021 அன்று ஊடகங்களில் வந்தது. அதாவது ஆறு இலட்சம் பணி இடங்கள் 2021 லிருந்து காலியாக உள்ளன. இந்த எண்ணிக்கை இப்போது இன்னும் கூடியிருக்கும்.

மக்களில் வேலையின்றித் தவிக்கும் பலலட்சம் பேரில் 6 இலட்சம் பேர்க்குத் தமிழ்நாடு அரசு உடனடியாக வேலை கொடுக்க முடியும். ஆனால் வெறும் 1754 பேரை நான்காம் நிலைப் பணிகளுக்கு மட்டும் எடுக்கப் போவதாக அரசு அறிவித்துள்ளது.

கடந்த சில மாதங்களுக்கு முன் நடத்தப்பட்ட நான்காம் பிரிவு (குரூப் 4) பணியாளர் தேர்வுக்கு விண்ணப்பித்தவர்கள் எண்ணிக்கை 21 இலட்சத்து, 85 ஆயிரத்து 328 என்று கூறுகிறது இன்றைய (26.12.2022) தினத்தந்தி. தமிழ்நாடு அரசு, 2023, 2024-இல் பணியாளர்களையும் அலுவலர்களையும் புதிதாக வேலைக்குச் சேர்க்கப்போவதில்லை என்ற செய்தி தெரிந்த இளையோர் - ஆண்களும் பெண்களும் - கொதித்துப் போயுள்ளார்கள். அவர்களில் சிலரின் குமுறல்களைத் தினத்தந்தி நாளேடு வெளியிட்டுள்ளது.

மக்களுக்கு நிறைவான, சிறப்பான ஆட்சி தருவதில் “திராவிட மாடல்” இந்தியாவுக்கு மட்டுமல்ல, உலகத்துக்கே முன்மாதிரியானது என்று முதல்வர் மு.க.டாலின் பேசிவருகிறார். சற்றொப்ப ஒரு கோடிப்பேர் படித்துவிட்டு உரிய வேலையில்லாமல் வறுமையிலும் மன உளைச்சலிலும் அல்லாடுகின்றனர். தமிழ்நாடு அரசுக்கு 6 இலட்சம் அலுவலர்கள் தேவை. எதிர்காலம் என்னாகுமோ என்று நிகழ்காலத்தில் அல்லாடும் தமிழர்களில் ஆறுலட்சம் பேரை வேலையில் சேர்த்து வாழ்வளிக்க திராவிட ஆட்சியாளர்களுக்கு இரக்கம் வரவில்லையா? அவர்களுக்கு சமூகப் பொறுப்பு இல்லையா?

தமிழ்நாடு அரசிடம் நிதி இல்லை என்பார்கள்! அமைச்சர்கள், ஆளுங்கட்சிப் பிரமுகர்கள் வருமானத்தில் பாதிப்பு எதுவும் இல்லையே! அண்ணா திமுக ஆட்சியாளர்கள் ஏற்கெனவே வகையினப்படி - வரையறுத்த விகிதப்படி கையூட்டுட்டுத் தொகை இப்போதுள்ள ஆட்சியாளர்களுக்கு வந்து கொண்டுதானே உள்ளது! விலைவாசி உயர்வுக்கேற்ப அத்தொகை உயர்ந்து கொண்டுதானே உள்ளது!

தமிழ்நாட்டின் இண்டு, இடுக்கு, முலை, முடுக்கிலெல்லாம் வரி, வரி என்று வசூலித்துப் புதுதில்லி அள்ளிக் கொண்டு போகிறது. அதில் தமிழ்ட்நாட்டிற்குரிய பங்கை உயர்த்தித் தர இந்திய அரசை தமிழ்நாடு வலியுறுத்தி, அதை மக்கள் கோரிக்கையாக மாற்றலாம் அல்லவா! இந்திய அரசு விதிக்கும் வரிஉயர்வு அனைத்தும் அசல் வரிக்கு மேலதிக வரியாக செஸ், (Cess) சர்சார்ஜ் (Sur-charge) வகையாகவே இருக்கின்றன. ஏன்? செஸ், சர்சார்ஜ் வகைகளில் வசூலாகும் தொகையில் மாநில அரசுக்குப் பங்கு தரவேண்டியதில்லை இந்திய அரசு.

புதுதில்லியின் இந்த வரிவேட்டை சூழ்ச்சியை எதிர்த்துத் தமிழர்கள் கொடுக்கும் எல்லாவகை வரிப்பணத்திலும் பெரும் பங்கு தமிழ்நாட்டிற்கே வேண்டும் என்று கோரிக்கை வைக்கத் திராவிட மாடல் மாநில சுயாட்சியில் – கொள்கை இல்லையோ?

மாநில அரசின் வரிவசூல் உரிமைகளைப் பறித்துக் கொண்டு, ஓட்டாண்டி ஆக்கி வருகிறது இந்திய ஏகாதிபத்திய அரசு! அதற்குக் கீழ்ப்பட்ட ஒரு மாநகராட்சிபோல் மாற்றி வருகிறது 8 கோடி மக்களைக் கொண்ட தமிழ்நாட்டை! ஆனால் அந்தக் குற்றேவல் பதவிகளையே பேரரசு அதிகாரம்போல் பித்தம் தலைக்கேற புகழ்ந்து கொள்ளும் பதவிக் காமம் திமுக தலைவர்களின் கண்களை மறைக்கிறது.

சாராய விற்பனையை அதிகப்படுத்தி மட்டும், தமிழ்நாட்டின் நிதித் தேவைகளை நிறைவு செய்ய முடியாது என்ற உண்மையை முதலமைச்சரும், நிதியமைச்சரும் உணர வேண்டும்.

தமிழ்நாட்டில் உள்ள இந்திய அரசு நிறுவனங்களில்
தமிழர்களுக்கு வேலை கிடைக்கிறதா?

தமிழ்நாட்டில் உள்ள இந்திய அரசு நிறுவனங்கள் மற்றும் அலுவலகங்களில் ஒட்டு மொத்தமாகத் தமிழர்களைப் புறக்கணித்து இந்திக்காரர்களையும் இதர வெளிமாநிலத்தவரையும் வேலையில் சேர்க்கின்றனர். இந்த அநீதியைத் தமிழ்நாடு தட்டிக் கேட்கிறதா? அரசு தடுத்து நிறுத்துகிறதா? இல்லை. அவற்றில் வேலைக்காக நடக்கும் தேர்வுகள் தமிழ்நாட்டிற்குள்தான் நடக்க வேண்டும். இந்திய அளவில் நடத்தக் கூடாது என்று கூறி உரிமை மீட்க முடிகிறதா? அதற்கு உரத்துக் குரல் கொடுக்கிறார்களா? இல்லை; இல்லை! இதற்கெல்லாம் பயன்படாத முதலமைச்சர் பதவி எதற்கு?

தமிழ்நாட்டையே இந்தி மாநிலம் ஆக்கிவிடும் அளவிற்கு அன்றாடம் இந்திக்காரர்கள், வெள்ளம்போல் வந்து குவிகிறார்கள். உலகத்திற்கே வெளிச்சம் காட்டும் திராவிட மாடலில் தமிழ்நாட்டைக் கவ்வியுள்ள இந்த அயலார் இருட்டை நீக்க முடியவில்லையே ஏன்?

அமைச்சர் நாசர் இல்லத் திருமணவிழாவில் 19.12.2022 அன்று திருவேற்காட்டில் பேசிய முதலமைச்சர் ஸ்டாலின் “...இன்று தமிழகம் நாட்டிலேயே வளர்ச்சியில் முதலிடத்தில் உயர்ந்து நிற்கிறது என்பதுதான் மகிழ்ச்சியளிக்கிறது” என்று கூறினார் (முரசொலி 20.12.2022)

பலவகைக் கல்வி கற்று, உரிய வேலையில்லாமல் திண்டாடும் ஒரு கோடி பிள்ளைகளைப் பற்றி மு.க. ஸ.டாலினுக்குக் கவலையில்லை. பன்னாட்டு, வடநாட்டு முதலாளிகளைக் கூட்டிவந்து தொழில் தொடங்குவதிலும், அவர் முதல்வர் பதவி வகிப்பதிலும், அதற்கு நெருக்கமாக மகனைக் கொண்டுவந்து விட்டதிலும் அவருக்கு அளவிட முடியாத மகிழ்ச்சி! அந்த மகிழ்ச்சியில் இந்தியாவிலேயே முதலிடத்தில் தமிழ்நாடு இருக்கிறது என்று பூரிப்பு அடைகிறார்.

நம் இளையோர் இவற்றையெல்லாம் விமர்சித்தால், அல்லது கண்டித்தால் மட்டும் போதாது. மாற்று அரசியலை, மாற்று செயல்திட்டங்களை முன்வைத்து மக்களைத் திரட்ட வேண்டும்.

முதலில் கணிசமான மக்களிடம் மாற்றுத்திட்டம் குறித்த ஆதரவை உருவாக்க வேண்டும். பின்னர் அறவழிப்பட்ட மக்கள் திரள் போராட்டங்களை நடத்த வேண்டும். இந்திய அரசு – தமிழ்நாடு அரசு – இரண்டையும் நோக்கி நமது கோரிக்கைகளை - சிக்கல்களுக்கு நாம் கூறும் தீர்வுகளை முன்வைக்க வேண்டும்.

இதற்கெல்லாம் மிகவும் பொருத்தமான மாற்று அரசியல் தமிழ்த்தேசியம்! இப்பொழுது தமிழ்நாட்டில் வேளாண்துறை – சுற்றுச் சூழல் துறை – மனித உரிமைத் துறை போன்றவற்றில் தாக்கங்களை உண்டாக்கி, இயன்றவரை தீர்வுகளைப் பெறுவோர் யார்? பதவி அரசியலுக்கு வெளியே உள்ளோர்தான். ஒரே ஓர் எடுத்துக்காட்டு நம்மாழ்வார்!

நாம் தமிழ்த்தேசியத்தை முதன்மைப்படுத்தி மேற்கண்ட செயல்பாட்டாளர்கள் போல் செயல்களில் ஈடுபட்டால் நாம் முன்வைக்கும் கோரிக்கைகளை அடைய முடியும். மண்ணின் மக்களுக்கு தமிழ்நாடு அரசிலும், இங்குள்ள இந்திய அரசு நிறுவனங்களிலும், தனியார் துறையிலும் வேலை பெற முடியும்!

============================
தலைமைச் செயலகம்,
தமிழ்த்தேசியப் பேரியக்கம்
============================
பேச: 9443918095, புலனம் : +91 98419 49462
முகநூல் : www.fb.com/tamizhdesiyam
ஊடகம் : www.kannottam.com
இணையம் : www.tamizhdesiyam.com
சுட்டுரை : www.twitter.com/tamizhdesiyam
காணொலிகள் : youtube.com/tamizhdesiyam
===================================

Labels: , ,

0கருத்துக்கள்:

Post a Comment

<< முகப்பு பக்கம்


தோழர் மணியரசன்
அவர்களின் படைப்புகள் மற்றும் கருத்துக்களை இத்தளத்தில் காணலாம்.
வாசகர்களின் கருத்துக்களும் வரவேற்கப்படுகின்றன.

Web This Blog

தொகுப்பு

முந்தைய பதிவுகள்

தோழமைத் தளங்கள்