<body><script type="text/javascript"> function setAttributeOnload(object, attribute, val) { if(window.addEventListener) { window.addEventListener('load', function(){ object[attribute] = val; }, false); } else { window.attachEvent('onload', function(){ object[attribute] = val; }); } } </script> <div id="navbar-iframe-container"></div> <script type="text/javascript" src="https://apis.google.com/js/platform.js"></script> <script type="text/javascript"> gapi.load("gapi.iframes:gapi.iframes.style.bubble", function() { if (gapi.iframes && gapi.iframes.getContext) { gapi.iframes.getContext().openChild({ url: 'https://www.blogger.com/navbar/6955529389241309188?origin\x3dhttp://thozharmaniyarasan.blogspot.com', where: document.getElementById("navbar-iframe-container"), id: "navbar-iframe" }); } }); </script>

"திமுக ஆட்சியினரின் போலித் தமிழ்ப் பற்றும், தமிழர் பற்றும் அம்பலம்!" ---- பெ. மணியரசன் தலைவர், தமிழ்த்தேசியப் பேரியக்கம்.

Wednesday, March 1, 2023


திமுக ஆட்சியினரின்

போலித் தமிழ்ப் பற்றும், தமிழர் பற்றும் அம்பலம்!
======================================
பெ. மணியரசன்
தலைவர், தமிழ்த்தேசியப் பேரியக்கம்
======================================


தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் நடத்தும் தேர்வுகளில் தமிழ்மொழிப் பாடம் ஒரு தேர்வுத் தாளாக இருக்கும் என்று அண்மையில் திமுக ஆட்சி சேர்த்தது.

தமிழ்நாடு அரசுப்பணிகளுக்கான தேர்வு விதிகளில் அஇஅதிமுக ஆட்சி- 2016-இல் திருத்தம் கொண்டு வந்தது. இந்தியாவின் எல்லா மாநிலங்களைச் சேர்ந்தவர்களும் தமிழ்நாடு அரசுப்பணிகளுக்கு (TNPSC) தேர்வு எழுதலாம்; தேறி வேலையில் சேரலாம். தமிழ்மொழி எழுதப்படிக்கத் தெரிந்திருக்க வேண்டும் என்ற முன்நிபந்தனை இல்லை; வேலையில் சேர்ந்த பின் இரண்டாண்டுகளில் பணித் தேவைக்குரிய அளவில் தமிழ் கற்றுக் கொண்டால் போதும் என்று அத் திருத்தம் கூறியது. இந்தியாவின் எல்லா மாநிலங்களைச் சேர்ந்தவர்களும் தமிழ்நாடு அரசுப் பணிகளில் சேர அஇஅதிமுக ஆட்சி கதவைத் திறந்து விட்டுள்ளது. இந்தத் திருத்தத்தை மாற்றிட தமிழ்நாடு அரசுப் பணிகளில் தமிழ்நாட்டுக் குடிமக்கள் மட்டுமே சேரக்கூடிய வகையில் அந்த விதியைத் திருத்த வேண்டும் என்று தமிழ்த்தேசியப் பேரியக்கம் கோரிவந்தது. அப்போதைய முதல்வர் திரு. எடப்பாடி பழனிச்சாமி அவர்களிடம் அதற்கான மாநாட்டுத் தீர்மானத்தையும் 2018-இல் அளித்தோம். மற்றும் பலரும் இந்தத் திருத்தம் தீங்கானது என்றனர். ஆனால் அப்போது எதிர்க்கட்சியாய் இருந்த திமுக இந்தத் திருத்தத்தை எதிர்க்கவில்லை.

கர்நாடகம், குசராத், மராட்டியம், ஆந்திரம், மேற்கு வங்கம், தெலங்கானா போன்ற பல மாநிலங்களில் மாநில அரசு வேலைகள் மண்ணின் மக்களுக்கே என்று விதிமுறைகளும் அரசு ஆணைகளும் சட்டங்களும் உருவாக்கி வைத்துள்ளார்கள். ஆனால் அது போன்ற சட்ட ஏற்பாடு தமிழ்நாட்டில் இல்லை. தமிழ்நாட்டிலும் அப்படியான சட்டம் வேண்டும் என்று தமிழத்தேசியப் பேரியக்கம் பல போராட்டங்களை நடத்தியுள்ளது.

இப்பொழுது உள்ள திமுக ஆட்சியினர் தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையத் தேர்வுகளில் தமிழ்மொழி குறித்த ஒரு தேர்வு இருக்குமாறு விதிகளில் சேர்த்துள்ளோம். இந்த விதியானது வெளி மாநிலத்தவர் வந்து தேர்வெழுதாமல் தடுத்துவிடும் என்றார்கள்.

இந்தத் “தமிழ்” தேர்வு எவ்வளவு மோசடியானது என்று இப்போது அம்பலமாகிவிட்டது. கடந்த 25.2.2023 அன்று பிரிவு 2, 2ஏ (Group 2 and 2A) பணியிடங்களுக்கான தேர்வு தமிழ்நாட்டில் 20 மாவட்டத் தேர்வு மையங்களில் நடந்தது.

ஒவ்வொரு தேர்வர்க்கும் அவரவர்க்குரிய வினாத்தாளிலும், விடை எழுதுவதற்கான தாளிலும், அவரவர்க்குரிய தேர்வு எண் வழங்கப்பட்டிருக்கும். இரண்டிலும் ஒரே எண் இருக்க வேண்டும். இதற்கு மாறாக, 25.2.2023 அன்று நடந்த தேர்வில் அளிக்கப்பட்ட வினாத் தாளிலும் விடை எழுதும் தாளிலும் எண்கள் வேறு வேறாக இருந்தன. இதனால், ஒரு தேர்வர் எழுதிய விடை அவருக்குரிய விடைத்தாளில் பதிவாகாமல், வேறொரு தேர்வர் எழுதியதாகப் பதிவாகும்.

இந்தக் குழறுபடிகள் கண்டுபிடிக்கப்பட்டு, தேர்வர்கள் பேரச்சத்தில் மூழ்கினார்கள். தங்கள் எதிர்காலமே பாழாகிவிடுமோ என்று அச்சப்பட்டார்கள். இச்சிக்கலுக்கான தீர்வாக, மீண்டும் புதிதாகத் தமிழ்த்தாள் தேர்வை மட்டும் நடத்துங்கள்; 25.2.2023-இல் தேர்வர்கள் எழுதிய விடைத்தாள்களை அழித்துவிடுங்கள் என்று ஆசிரியர்களும், தேர்வர்களும், மற்றவர்களும் கோரிக்கை வைத்தார்கள்.

ஆனால், திமுக ஆட்சியாளர்கள், மேற்படித் தமிழ்த் தேர்வெழுதிய அனைவர்க்கும் வெற்றிக்கான குறைந்தபட்ச மதிப்பெண்களான 40 வழங்கி விடுகிறோம். அவர்கள் அன்றைக்கு எழுதிய இரண்டாம் தாள் தேர்வு மதிப்பெண்ணை வைத்து பணி வழங்கலாம் என்கிறார்கள். இதற்கு அவர்கள் சொல்லும் காரணம் தமிழ்த்தாள் என்பது வேலைக்கான இரண்டாம்தாள் தேர்வை எழுதுவதற்குரிய தகுதி வழங்கும் தேர்வுதான். அதற்கு 40 மதிப்பெண் போதும். இத் தகுதித்தாள் தமிழ்த்தேர்வில், கடந்த தேர்வுகளில் 98 விழுக்காட்டினர் வெற்றி பெற்றுள்ளார்கள். அவ்வளவு எளிமையாக இருக்கும். எனவே, இந்தத் தடவை 100 விழுக்காட்டினரும் தேர்வெழுதத் தகுதியுள்ளோர் என்று ஆக்கிவிடலாம். இரண்டாம் தாள்தான் வேலைக்குரிய கனத்துடன் வினாக்கள் கொண்டது என்று கூறுகிறார்கள்.

தமிழ்த்தாள் என்பது அசல் தேர்வெழுதுவதற்கான அனுமதி பெற்றிடும் ஒரு தகுதித் தேர்வுதான்; வேலைக்குரிய அசல் தேர்வு அல்ல; விவரமான தேர்வும் அல்ல, கட்டாயம் வேண்டிய தேர்வும் அல்ல என்பதை அரசுத்தரப்பினர் ஒரு வகையாக ஒப்புக் கொள்கிறார்கள். அதாவது இத்தேர்வு ஒரு கண்துடைப்பு.

அடுத்து, மாற்றுத் திறனாளிகளுக்கு இந்தத் தமிழ்த்தாளை எழுத வேண்டியதில்லை என்று விலக்கு அளித்துள்ளார்கள். மாற்றுத் திறனாளிகளாக உள்ள தமிழர்களுக்கு தங்கள் மண்ணின் வேலை கிடைக்காமல் அயல் மாநிலத்தார்க்குக் கிடைத்தால் பரவாயில்லையா? மாற்றுத் திறனாளித் தமிழர்களுக்குக் கூடத் தமிழ்நாட்டில் வேலை பாதுகாப்புத் தரக் கூடாதா?

அரசுப் பணிகளுக்கான தேர்வில் தமிழ்த்தாள் மதிப்பெண்கள், பணியில் சேர்வதற்கான தரவரிசைக்கு எடுத்துக் கொள்ளப்படாது என்பது, தமிழையும் தமிழரையும் புறக்கணிப்பதாகவும் இழிவுபடுத்துவதாகவும் உள்ளது.

அடுத்து மிக முகாமையான வினா, பிற்பகல் தேர்வுக்கான இரண்டாம்தாள் தேர்விலும் இதுபோல் குழறுபடிகளோ குறைபாடுகளோ இருக்காது என்பதற்கு என்ன உறுதி? இத்தேர்வில் ஏதோ ஊழல் நடந்ததால்தான் தேர்வர்க்குரிய பதிவெண் முறைப்படி பதிவாகாமல், வினாத் தாளில் ஓர் எண்ணும் விடைத்தாளில் வேறொரு எண்ணாகவும் மாறி உள்ளது.

தேர்வுக்கான வினா - விடைத் தாள் கட்டுகள் தேர்வெழுதும் அறையில் தேர்வர்களுக்கு முன்னால்தான் திறக்கப்பட்டு, பிரிக்கப்பட்டு வழங்கப்படும் நடைமுறையை இம்முறை (25.2.2023) பின்பற்றவில்லை. பிற்பகல் நடந்த இரண்டாம் தாள் தேர்வுக் கட்டுகள் வேறெங்கோ பிரிக்கப்பட்டு, தேர்வறைகளில் கொண்டு வந்து மாணவர்களுக்குப் பல மையங்களில் வழங்கப்பட்டதாகவும் விவரம் அறிந்தோர் கூறுகின்றனர்.

1. தமிழ்நாட்டு அரசுப் பணிகள் தமிழர்களுக்கே என்பதில் திமுக ஆட்சியாளர்க்கு உடன்பாடில்லை. அப்படி இருப்பது போல் பாசாங்கு செய்கின்றார்கள். மாநில அரசு வேலைகள் மண்ணின் மக்களுக்கே என்று சட்டம் இயற்றவோ, ஆணை பிறப்பிக்கவோ ஆட்சியாளர்கள் விரும்பவில்லை.

2. 25.2.2023 அன்று குரூப் 2, 2A தேர்வில் ஏதோ ஊழல் நடந்திருக்கிறது. அதனால்தான் இந்தக் குழறுபடி!

பெரும்பாலான தேர்வர்களும் முறையான ஊழலற்ற புதிய மறு தேர்வுகள் வேண்டும் என்று கோருகிறார்கள்.

தமிழ்த்தேசியப் பேரியக்கத்தின் சார்பில் தமிழ்நாடு அரசுக்குப் பின்வரும் கோரிக்கைகளை முன்வைக்கிறோம்.

1. தமிழ்த்தேர்வை வேலைக்கான தேர்வெழுதுவதற்குரிய தகுதித் தேர்வு என்றில்லாமல், வேலைக்கான தேர்வாக மாற்றுக! மாற்றுத் திறனாளிகளுக்கும் பொருந்தும் ஒரே தேர்வு முறை வேண்டும்.

2. 25.2.2023 தேர்வை இரத்துச் செய்து புதிய தேர்வை ஊழலுக்கு இடம் கொடுக்காமல், நேர்மையாக நடத்த வேண்டும்.

3. 25.2.2023 தேர்வுக் குழறுபடிகளுக்கும், ஊழலுக்கும் காரணமானவர்களைக் கண்டறிந்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.

=====================================
தலைமைச் செயலகம்,
தமிழ்த்தேசியப் பேரியக்கம்
=====================================
பேச: 9443918095, புலனம் : 9841949462
முகநூல் : www.fb.com/tamizhdesiyam
ஊடகம் : www.kannottam.com
இணையம் : www.tamizhdesiyam.com
சுட்டுரை : www.twitter.com/Tamizhdesiyam
காணொலிகள் : youtube.com/Tamizhdesiyam
=====================================

Labels: , ,

0கருத்துக்கள்:

Post a Comment

<< முகப்பு பக்கம்


தோழர் மணியரசன்
அவர்களின் படைப்புகள் மற்றும் கருத்துக்களை இத்தளத்தில் காணலாம்.
வாசகர்களின் கருத்துக்களும் வரவேற்கப்படுகின்றன.

Web This Blog

தொகுப்பு

முந்தைய பதிவுகள்

தோழமைத் தளங்கள்