<body><script type="text/javascript"> function setAttributeOnload(object, attribute, val) { if(window.addEventListener) { window.addEventListener('load', function(){ object[attribute] = val; }, false); } else { window.attachEvent('onload', function(){ object[attribute] = val; }); } } </script> <div id="navbar-iframe-container"></div> <script type="text/javascript" src="https://apis.google.com/js/platform.js"></script> <script type="text/javascript"> gapi.load("gapi.iframes:gapi.iframes.style.bubble", function() { if (gapi.iframes && gapi.iframes.getContext) { gapi.iframes.getContext().openChild({ url: 'https://www.blogger.com/navbar/6955529389241309188?origin\x3dhttp://thozharmaniyarasan.blogspot.com', where: document.getElementById("navbar-iframe-container"), id: "navbar-iframe" }); } }); </script>

"உறங்குவதுபோல் சாவடைந்த உபயதுல்லா அண்ணன் என்றும் வாழ்வார்!"----தமிழ்த்தேசியப் பேரியக்கத் தலைவர் பெ. மணியரசன் இரங்கல்!

Sunday, February 19, 2023


உறங்குவதுபோல் சாவடைந்த

உபயதுல்லா அண்ணன் என்றும் வாழ்வார்!
==================================
தமிழ்த்தேசியப் பேரியக்கத் தலைவர்
பெ. மணியரசன் இரங்கல் !
==================================


திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைமைச் செயற்குழு உறுப்பினரும் முன்னாள் தமிழ்நாடு அமைச்சருமான அண்ணன் தஞ்சை சி.நா.மீ. உபயதுல்லா அவர்கள் நேற்று (19.2.2023) மாரடைப்பால் காலமானது பெருந்துயரமளிக்கிறது.

இன்று (20.2.2023) காலை 10 மணி அளவில் தஞ்சையில் அண்ணன் சி.நா.மீ அவர்களின் இல்லம் சென்று, அவருக்கு இறுதி வணக்கம் செலுத்தினோம். தமிழ்த்தேசியப் பேரியக்கத்தின் தலைமைச் செயற்குழு உறுப்பினர் தோழர் பழ. இராசேந்திரன், தோழர்கள் முகமது ரபீக், சோபன் ஆகியோரும் இறுதி வணக்கத்தில் என்னுடன் கலந்து கொண்டனர்.

திருவள்ளுவப் பேராசானைப் போற்றி, திருக்குறளைப் பரப்பி, திருக்குறள் செல்வர் என்று அறிஞர்களால் சிறப்புப் பட்டம் பெற்று வாழ்ந்தவர் அண்ணன் சி.நா.மீ. அவர்கள்! குளிர்பதனப் பெட்டிக்குள் இருந்த அவர் உடல், தூங்கிக் கொண்டிருப்பது போல்தான் இருந்தது. “உறங்குவது போலும் சாக்காடு” என்று பேராசான் திருவள்ளுவப் பெருந்தகை சொன்னது, அண்ணன் சாவில் அப்படியே மெய்யானது.

நேற்று தம் பேரன் திருமண விழாவில் பங்கேற்பதற்காக தம் வீட்டில் புறப்பட்ட அண்ணன் சி.நா.மீ. இன்னும் மகிழ்வுந்துக்கு வர காலதாமதம் ஆனதால் ஓட்டுநர் வீட்டின் உள்ளே சென்று பார்த்துள்ளார். நாற்காலியில் சாய்ந்தபடி உறங்குவது போல் அண்ணன் உட்கார்ந்து இருந்துள்ளார். தொட்டுப் பார்த்தால், உணர்ச்சி இல்லை. நிரந்தர உறக்கம்! தொல்லையில்லாமல் அண்ணன் விடைபெற்றுள்ளார். மாரடைப்பு நோய், “மனிதநேய நோய்,” தொல்லையில்லாமல் நிரந்தரத் தூக்கம் தந்து விடும் என்று நான் சொல்வதுண்டு!

சிறந்த இலக்கிய வாசிப்பாளர்; நூல்கள் எழுதிய ஆசிரியர்! உழைத்து முன்னேறிய வணிகர்; உதவி தேவைப்படுவோர்க்குக் கொடை கொடுக்கும் வள்ளல்; கையூட்டு வாங்காத அரசியலர் – அமைச்சர்! சாதி-மத உயர்வு தாழ்வு கருதாத சமநிலையர்! திராவிடத்தில் இருந்தாலும் தமிழ்த் தேசியத்தை நேசித்தவர்; தமிழ் மொழி-இனப் பற்றாளர்! இந்திய ஏகாதிபத்தியத்தால் தமிழ்மொழி, இனம், தாயகம் மூன்றுக்கும் நேர்ந்து வரும் ஆபத்துகளை உணர்ந்தவர். தமிழனத்தின் தனித்தன்மை காக்கப்பட வேண்டும் என்ற உணர்வுள்ளவர். தமிழ்த்தேசியப் பேரியக்கத்தின் “தமிழர் கண்ணோட்டம்” இதழைத் தொடர்ந்து படித்து வந்தார். ஏற்புக் கருத்து-எதிர்க்கருத்து இரண்டையும் கூறுவார்!

என்னை அவர் அண்ணன் என்பார் – நான் அவரை அண்ணன் என்பேன்; உடல் நிலையைப் பார்த்துக் கொள்ளுங்கள் என்று ஒவ்வொரு முறையும் என்னிடம் கூறுவார். கடைசியாக அண்ணனைப் பார்த்தது, தஞ்சை பெசன்ட் அரங்கில் வ.உ.சி. நூல் வெளியீட்டு விழாவில்! அப்பொழுதே மிகவும் தளர்ந்திருந்தார்.

நம்முடைய பாவேந்தர் கூறியது போல் “தமிழுக்குத் தொண்டு செய்வோன் சாவதில்லை” என்று ஆறுதல் பெறுவோம்! தமிழ் வழியாக – திருக்குறள் வழியாக – அவர் வழங்கிய பொன்மொழிகள் – அறிவுரைகள் வழியாக அண்ணன் சி.நா.மீ. உபயதுல்லா அவர்கள் என்றென்றும் வாழ்வார் என்று ஆறுதல் அடைவோம்!

================================
தலைமைச் செயலகம்,
தமிழ்த்தேசியப் பேரியக்கம்
================================
பேச: 9443918095, புலனம் : +91 98419 49462
முகநூல் : www.fb.com/tamizhdesiyam
ஊடகம் : www.kannottam.com
இணையம் : www.tamizhdesiyam.com
சுட்டுரை : www.twitter.com/tamizhdesiyam
காணொலிகள் : youtube.com/tamizhdesiyam
================================ 

Labels: ,

0கருத்துக்கள்:

Post a Comment

<< முகப்பு பக்கம்


தோழர் மணியரசன்
அவர்களின் படைப்புகள் மற்றும் கருத்துக்களை இத்தளத்தில் காணலாம்.
வாசகர்களின் கருத்துக்களும் வரவேற்கப்படுகின்றன.

Web This Blog

தொகுப்பு

முந்தைய பதிவுகள்

தோழமைத் தளங்கள்