"நிதிஷ்குமார் கூட்டணி மாற்றம்” நாளேடுகள் கொடுத்த தலைப்புகளில் நாம் கற்க வேண்டியவை !" --- பெ. மணியரசன் தலைவர், தமிழ்த்தேசியப் பேரியக்கம்
Monday, January 29, 2024
நாளேடுகள் கொடுத்த தலைப்புகளில் நாம் கற்க வேண்டியவை !
==================================================
பெ. மணியரசன்
தலைவர், தமிழ்த்தேசியப் பேரியக்கம்
==================================================
ஐக்கிய சனதாதளக் கட்சியின் தலைவரும் பீகாரின் முதலமைச்சருமான நிதிஷ்குமார் 28.01.2024 காலை முதலமைச்சர் பதவியிலிருந்து விலகி அதே நாள் மாலை மீண்டும் முதலமைச்சராகப் பதவி ஏற்றுக் கொண்டார்.
பீகார் ஆளுநர் இராசேந்திர அர்லேகர் பதவி ஏற்பு உறுதிமொழிச் சடங்கு செய்து வைத்தார். காங்கிரசோடு இந்தியாக் கூட்டணியில் உறுப்பு வகித்து பா.ச.க. வை எதிர்த்து வந்தவர், ஒரே நாளில் இந்தியாக் கூட்டணியை விட்டு விலகி பா.ச.க. வோடு கூட்டணி சேர்ந்து பீகாரின் முதலமைச்சராகப் பதவி ஏற்றுள்ளார்.
கூட்டணி மாறுவதற்குக் கூச்சப்படாத பச்சோந்தித் தலைவர் நிதிஷ்குமார். பதினெட்டு மாதங்களுக்கு முன் பா.ச.க.கூட்டணியில் சேர்ந்து பீகார் முதலமைச்சர் ஆனார். 2015 ஆம் ஆண்டிலிருந்து இப்போது வரை ஐந்து முறை கூட்டணியை மாற்றியுள்ளார். இந்தியாக் கூட்டணித் தலைவராக வேண்டும் என்றும் இந்தியத் தலைமை அமைச்சர் வேட்பாளராகத் தன்னை இந்தியாக் கூட்டணி முன்னிறுத்த வேண்டும் என்றும் கூச்சநாச்சமின்றி வெளிப்படையாக – வேட்கை மிகுதியோடு பேசி வந்தார். அந்த வாய்ப்பு தனக்குக் கிடைக்காது என்று தெரிந்தவுடன் இந்தியாக் கூட்டணியைப் பழிவாங்குவதற்காக பாசகவுடன் கூட்டணி வைத்து முதலமைச்சராகப் பதவி ஏற்றுக் கொண்டுள்ளார்.
பீகாரின் மொத்த சட்டப் பேரவை உறுப்பினர்கள் 243. இதில் லாலுபிரசாத்தின் ராஷ்டிரிய சனதா தளம் 79, பா.ச.க. 78, நிதிஷ்குமாரின் ஐக்கிய சனதா தளம் 45, காங்கிரசு 19, மார்க்சிஸ்ட் – லெனினிஸ்ட்-12, மார்க்சிஸ்ட் – கம்யூனிஸ்ட் -2 , சிபிஐ -2, இந்துஸ்தானி அசாம் மோர்ச்சா -4, ஏ.ஐ.எம்.எம். -1, தற்சார்பு (சுயேச்சை) – 1 உறுப்பினர்கள்.
இது பற்றி இங்கு நாம் பேசுவதற்கான முதன்மைக் காரணம் இந்தச் செய்தியை தமிழ்நாட்டு ஏடுகள் என்னென்ன தலைப்புகளில் போட்டுள்ளன. ஆங்கில ஏடுகள் என்னென்ன தலைப்புகளில் போட்டுள்ளன என்பதை ஒப்பிட்டுக் காட்டுவதுதான்.
பதவிக்காகக் கூட்டணி மாறிக் கொண்டே இருக்கும் பண்பு கெட்ட பச்சோந்தியான நிதிஷ்குமாரின் சிறுமையைத் தலைப்பிலேயே ஆங்கில ஏடுகள் சுட்டிக் காட்டுகின்றன. தமிழ் நாளேடுகளோ பொத்தாம் பொதுவில் ஒரு செய்தியாகத் தலைப்பு கொடுத்துள்ளன.
”பீகார் அரசியலில் அதிரடித் திருப்பம், காலையில் ராஜினாமா, மாலையில் பதவியேற்பு. நிதிஷ்குமார் மீண்டும் முதல் மந்திரி ஆனார்".
-தினத்தந்தி 29.01.2024
"பா.ச.க. ஆதரவுடன் நிதிஷ் மீண்டும் முதல்வர்”
-தினமணி 29.01.2024
"முதல்வராக 9ஆவது முறை பதவியேற்றார் நிதிஷ்குமார்.
"பீகாரில் மீண்டும் பாஜக கூட்டணி ஆட்சி"
-இந்து தமிழ் 29.01.2024
ஆங்கில இந்து ( The Hindu) எப்படிப் போட்டிருக்கிறது?
தலைப்புச் செய்தியில்,
"Nithish switches sides yet again, takes oath as CM"
(நிதிஷ் திடுமென மறுபடியும் அணி மாறினார். முதல்வராக உறுதி ஏற்றார். )
அடிக்கடி தப்பிலித் தனமாகக் கூட்டணி மாறும் நிதிஷின் கெட்ட பண்பை குட்டிச் சொல்லும் முறையில் தலைப்பு போட்டது ஆங்கில இந்து.
ஆனால் அதே Hinduவின் நிறுவனத்தைச் சேர்ந்த இந்து தமிழ் திசை ஏடு
”பீகாரில் மீண்டும் பாஜக கூட்டணி ஆட்சி" என்று பொத்தாம் பொதுவில் தலைப்பு போடுகிறது.
தினத் தந்தி, ”அதிரடித் திருப்பம் – காலையில் ராஜினாமா மாலையில் பதவி ஏற்பு ” என்று அதிசயச் செய்தி போல் தலைப்பு போடுகிறது. ” பாஜக ஆதரவுடன் நிதிஷ் மீண்டும் முதல்வர்” என்று நேற்று நடந்த தேர்தல் வாக்கு எண்ணிக்கையில் நிதிஷ்“ வெற்றி பெற்றது போல் போடுகிறது.
ஆங்கில நாளிதழ் Hindustan Times, “Nithish Kumar flip flops again, drumps RJD to join BJP led NDA.
(நிதிஷ்குமார் நொடித்துத் தள்ளாட்டம் ஆர்ஜேடியைப் பள்ளத்தில் தள்ளிவிட்டார்.பாசகவின் என்டிஏவில் சேர்ந்தார்.)
Deccan Herald
Nithish kumar’s Political oscillations put a pendulum to shame.”
(நிதிஷ்குமாரின் அரசியல் ஊசலாட்டம் வெட்ககரமாக உள்ளது.)
விழிப்புணர்ச்சி ஊட்ட வேண்டாமா?
================================
பதவி வெறி நோக்கில் அடிக்கடி அணி மாறும் தன்னல அரசியல்வாதிகளின் குட்டிக் கரணச் செய்திகளைப் போடும் போது திறனாய்வோடு, மென்மையான கண்டனத்தோடு தலைப்புக் கொடுக்கும் பாங்கு ஆங்கில ஏடுகளில் இருக்கிறது. தமிழ் நாளேடுகள் பொத்தாம் பொதுவில் செய்தி போடுவது வாசகர்களிடையே விழிப்புணர்ச்சியை உண்டாக்காது.
நாடறிந்த அசிங்கத்திற்குக் கூட நடுநிலையோடு தலைப்புக் கொடுக்கிறோம் என்று கூறினால் அது தப்பித்தல்வாதம். சமூகப் பொறுப்பற்ற தன்மை. வாசகர்கள் விழிப்போடு செய்திகளைப் பார்க்க வேண்டும்.
===============================
தலைமைச் செயலகம்,
தமிழ்த்தேசியப் பேரியக்கம்
=================================
பேச: 9443918095, புலனம் : 9841949462
முகநூல் : www.fb.com/tamizhdesiyam
ஊடகம் : www.kannottam.com
இணையம் : www.tamizhdesiyam.com
சுட்டுரை : www.twitter.com/Tamizhdesiyam
காணொலிகள் : youtube.com/Tamizhdesiyam
=================================
Labels: அறிக்கைகள்
0கருத்துக்கள்:
Post a Comment
<< முகப்பு பக்கம்