"உயர் அதிகாரி உ. சகாயம் உயிருக்கே பாதுகாப்பு இல்லையா....?. மற்றவர்களின் கதி என்ன...? ----- ஐயா பெ .மணியரசன் தலைவர் ,தமிழ்த் தேசியப் பேரியக்கம்
Sunday, May 11, 2025
*உயர் அதிகாரிஉ. சகாயம் உயிருக்கே பாதுகாப்பு* *இல்லையா ?*
*மற்றவர்களின் கதி என்ன?*
*கண்டன அறிக்கை!*
===============================
ஐயா பெ .மணியரசன்
தலைவர் ,தமிழ்த் தேசியப் பேரியக்கம்
==================
மதுரை மாவட்ட ஆட்சியராகப் பணியாற்றிய போது மதுரை அரிட்டாப்பட்டி வட்டாரத்திலும் அதனை அடுத்துள்ள பகுதிகளிலும் ஒரு லட்சத்து பதினோராயிரம் கோடி ரூபாய் மதிப்பிலான கனிமவளக் கொள்ளை நடைபெற இருந்ததை தடுத்து நிறுத்திய வரலாற்று சாதனையாளர், கறைபடியாத கைகளுக்குச் சொந்தக்காரர் ,முன்னாள் இந்திய ஆட்சிப் பணி அதிகாரி
உ. சகாயம் அவர்கள். அவருடைய நேர்மையையும் அவரின் சேவையின் தேவையையும் உணர்ந்த உயர்நீதிமன்றம், பணி ஓய்வுக்குபின் அவரை கனிமவளக் கொள்ளை விசாரணை ஆணையத்தின் தலைவராக அமர்த்தியது.
கனிமக் கொள்ளையர்களால் அவரின் உயிருக்கு தீங்கு நேரக்கூடிய நிலைமைகள் இருந்ததால் அவருக்குக் காவல்துறை பாதுகாப்பு வழங்கப்பட்டிருந்தது.
பணி ஓய்வுக் காலத்தில் மதுரையில் நடைபெற்று வரும் கனிமக் கொள்ளை வழக்குகளில் சாட்சி சொல்ல வந்தால்- "தீர்த்துக் கட்டி விடுவோம் "என்று சமூக விரோதிகள் அவரைப் பல வடிவங்களில் மிரட்டி வருகிறார்கள்.
மேற்படி ஆபத்தை அரசுக்கு அவர் சுட்டிக் காட்டிய பின்னரும் இப்போது உள்ள திமுக ஆட்சி அவருக்குப் பாதுகாப்பு வழங்க முன்வரவில்லை.
சென்னை உயர்நீதிமன்றத்
தலைமை நீதிபதிக்கும் பாதுகாப்பு கோரி ஐயா சகாயம் அவர்கள் விண்ணப்பம் போட்டு உள்ளார்.
அண்மையில் மதுரை நீதிமன்றம் சாட்சி விசாரணைக்கு சகாயம் அவர்களை அழைத்த போது, எனக்குப் பாதுகாப்புக் கொடுத்தால் நீதிமன்றம் வர முடியும்" என்று நீதிமன்றத்திற்குத் தெரிவித்துவிட்டார். அதன் பிறகு வீட்டில் இருந்தவாறே காணொலி மூலம் நீதிமன்ற விசாரணையில் பங்கேற்குமாறு சகாயம் அவர்களுக்கு நீதிமன்றம் வாய்ப்பு கொடுத்தது.
அத்துடன் தமிழ்நாடு அரசு சகாயம் அவர்களுக்குப் பாதுகாப்பு கொடுக்கவில்லை என்றால் இந்திய அரசு பாதுகாப்புக் கொடுக்குமாறு ஆணையிடுவோம் என்று மதுரை நீதிமன்றம் கூறியுள்ளது.
நேர்மை தவறி நடுநிலை தவறி தமிழ்நாடு அரசு செயல்படுகிறது என்பதற்கு இதைவிட வேறென்ன சான்று வேண்டும் ?
இவ்வாறான அணுகுமுறையைத் தமிழ்நாடு அரசு கொண்டிருப்பதால் தான், தமிழ்நாட்டில் கனிமக் கொள்ளைகளைக் தடுத்த13 பேர் சரக்குந்து ஏற்றப்பட்டு ,கொல்லப்பட்டார்கள் என்று ஒரு கணக்கை அண்மையில் சமூக செயல்பாட்டாளர்கள் வெளியிட்டுள்ளார்கள்.
கடந்த 17.01 2025 அன்று புதுக்கோட்டை மாவட்டம் திருமயம் ஜெகபரலி என்ற சமூகச் செயல்பாட்டாளர் , கல்குவாரி கொள்ளையர்களால் சரக்குந்து ஏற்றிக் கொல்லப்பட்டார் என்ற செய்தி பல வகைச் சான்றுகளோடு பேசப்பட்டு வருகிறது .
நாடறிந்த நேர்மையான அதிகாரியும் முன்னாள் மதுரை மாவட்ட ஆட்சித் தலைவருமான ஐயா உ. சகாயம் அவர்களின் உயிருக்கு பாதுகாப்பு வழங்க அரசு முன்வரவில்லை என்றால் மற்றவர்களின் கதி என்ன என்று கேள்வி எழுகிறது.
*எனவே தமிழ்நாடு அரசு உடனடியாக ஐயா உ.சகாயம் அவர்கட்கு ஆயுதம் ஏந்திய 24 மணி நேரக் காவலர்கள் இருவரைப் பாதுகாப்பிற்கு நிரந்தரமாக அமர்த்துமாறு தமிழ்த்தேசியப் பேரியக்கத்தின் சார்பில் கேட்டுக்கொள்கிறன்.*
*பெ.மணியரசன்*
(12.05.2025)
===============================
தலைமைச் செயலகம்,
தமிழ்த்தேசியப் பேரியக்கம்
=================================
பேச: 9443918095, புலனம் : 9841949462
முகநூல் : www.fb.com/tamizhdesiyam
ஊடகம் : www.kannottam.com
இணையம் : www.tamizhdesiyam.com
சுட்டுரை : www.twitter.com/Tamizhdesiyam
காணொலிகள் : youtube.com/Tamizhdesiyam
==============================
Labels: அறிக்கைகள், தமிழ்நாடு காவல்துறை அடக்குமுறை!, திராவிடம்

0கருத்துக்கள்:
Post a Comment
<< முகப்பு பக்கம்