“நெற்பயிர்கள் காய்ந்து சருகாகிவிட்டன! ஏக்கருக்கு 25,000 ரூபாய் இழப்பீடு தர வேண்டும்” -- காவிரி உரிமை மீட்புக் குழு நெல் வயல்களை நேரில் பார்வையிட்டுக் கோரிக்கை!
Friday, November 25, 2016
==============================================
“நெற்பயிர்கள் காய்ந்து சருகாகிவிட்டன!
ஏக்கருக்கு 25,000 ரூபாய் இழப்பீடு தர வேண்டும்”
==============================================
காவிரி உரிமை மீட்புக் குழு நெல் வயல்களை
நேரில் பார்வையிட்டுக் கோரிக்கை!
==============================================
“நெற்பயிர்கள் காய்ந்து சருகாகிவிட்டன!
ஏக்கருக்கு 25,000 ரூபாய் இழப்பீடு தர வேண்டும்”
==============================================
காவிரி உரிமை மீட்புக் குழு நெல் வயல்களை
நேரில் பார்வையிட்டுக் கோரிக்கை!
==============================================
காவிரி நீர் மறுக்கப்பட்டதால், தஞ்சை மாவட்டத்தில் காய்ந்து
கருகியுள்ள சம்பாப் பாசன நிலங்களை, காவிரி உரிமை மீட்புக் குழுவின்
ஒருங்கிணைப்பாளர் தோழர் பெ. மணியரசன் தலைமையில், காவிரி உரிமை மீட்புக்
குழுவினர் இன்று (25.11.2016) காலை குழுவாகச் சென்று நேரில்
பார்வையிட்டனர்.
தமிழர் தேசிய முன்னணிப் பொதுச் செயலாளர் திரு. ஐயனாபுரம் சி.
முருகேசன், தமிழக விவசாயிகள் சங்கத் தஞ்சை மாவட்டத் தலைவர் திரு. த.
மணிமொழியன், விடுதலைத் தமிழ்ப்புலிகள் கட்சி நிறுவனத் தலைவர் திரு. குடந்தை
அரசன், மனித நேய மக்கள் கட்சி வணிகப் பிரிவு தமிழகச் செயலாளர் திரு. ஜெ.
கலந்தர், தமிழ்த்தேசியப் பேரியக்கத் தஞ்சை மாவட்டச் செயலாளர் தோழர் குழ.
பால்ராசு, இந்திய சனநாயகக் கட்சித் தஞ்சை மாவட்டத் தலைவர் திரு. சிமியோன்
சேவியர்ராஜ், மனித நேய சனநாயகக் கட்சி மாவட்டச் செயலாளர் திரு. அகமது கபீர்
ஆகியோர் அக்குழுவில் இடம்பெற்றிருந்தனர்.
முதலில், தஞ்சை மாவட்டம் – பாபநாசம் வட்டம் – ரா.ரா.
முத்திரக்கோட்டையில், நடவு நட்டு 40 நாள் – 50 நாள் கடந்த நெற்பயிர்களை
இக்குழுவினர் பார்வையிட்டனர். உள்ளூர் உழவர்கள் திரளாக வந்து, காவிரித்
தண்ணீர் வராததாலும் பருவமழைப் பொய்த்துப் போனதாலும் காய்ந்து கிடக்கும்
நெற்பயிர்களைப் பாருங்கள், அரசிடம் கோரிக்கை வைத்து நிவாரணமாவது பெற்றுத்
தாருங்கள் என துயரத்தோடு கூறினர். குறிப்பாக, உழவர்கள் பாலசுப்பிரமணியன்,
இரமேசு ஆகியோர் வயல்களில் சருகாகிக் காய்ந்து கொண்டிருந்த நெற்பயிர்களைப்
பிடிங்கிக் கூட வந்திருந்த செய்தியாளர்களிடம் அவர்கள் காட்டினர்.
பிறகு, அங்கிருந்து புறப்பட்டு தஞ்சை வட்டம்
இரெட்டிப்பாளையம், வண்ணாரப்பேட்டை வழியாக நெற்பயிர் காய்ந்து சருகான
வயல்களைப் பார்த்தனர். அங்கிருந்து கல்விராயன்பேட்டை சென்றனர்.
அங்கு நடவு நட்டு நாற்பது நாள் ஆன வயல்களில், பாளம் பாளமாக
வயல் வெடித்துக் கிடந்ததையும் நெற்பயிர்கள் சருகாகிக் கொண்டிருந்ததையும்
குழுவினர் பார்த்தனர். இனிமேல் மழைப் பெய்தால்கூட இந்த நெற்பயிர்கள் தேறாது
என்பதனால், அந்த நடவு நட்ட வயல்களிலும் - நடவு செய்வதற்காக நாற்றங்காலில்
காய்ந்து சருகாகிக் கொண்டிருந்த வயல்களிலும் மாடுகளைவிட்டு மேய்த்துக்
கொண்டிருந்தார்கள். பார்வையிடவந்தோர் அவற்றைப் பார்த்தனர். செய்தியாளர்கள்
படம் பிடித்தனர்.
அதன்பிறகு, அந்த ஊர் மக்கள் திரண்டு தங்கள் துயரங்களை
சொல்வதற்காகக் கூடியிருந்த இடத்திற்கு பார்வையாளர் குழுவினர் சென்றனர்.
அங்கிருந்த உழவர்கள் ஆண்களும், பெண்களும், இனி எங்கள் எதிர்காலம்
என்னாவதென்றே தெரியவில்லை, இனிமேல் இந்த நெற்பயிரைப் பாதுகாக்கவோ
காப்பாற்றவோ முடியாது, நடவு நட்டு காய்ந்து சருகாகிப் போன வயல்கள் ஒரு
பக்கம். இன்னொரு பக்கம், நாற்றங்காலில் நாற்றுவிட்டு நடவுக்கு சேரடித்து
தண்ணீரில்லாமல் காய்ந்து போன வயல்கள் இருக்கின்றன. எனவே அரசாங்கம்
எங்களுக்கு இழப்பீடு வழங்கினால்தான் குடும்பம் நடத்த முடியும்,
இல்லையென்றால் உயிரை மடித்துக் கொள்வதைத் தவிர வேறு வழியில்லை என்று
கண்ணீரும் கம்பலையுமாக அவர்கள் தெரிவித்தனர்.
இரண்டு இடங்களிலும் செய்தியாளர்களைச் சந்தித்த, குழுவின் ஒருங்கிணைப்பாளர் தோழர் பெ. மணியரசன் பின்வருமாறு தெரிவித்தார் :
“தமிழ்நாடு அரசு மேட்டூர் அணையைத் திறந்து சம்பா சாகுபடியைச்
செய்யுங்கள் என அறிவுறுத்தியதை நம்பிதான், காவிரி டெல்டா மாவட்ட உழவர்கள்
சம்பா சாகுபடியைத் தொடங்கினர்.
கர்நாடக அரசும் இந்திய அரசும் கூட்டுச் சேர்ந்து கொண்டு
தமிழ்நாட்டிற்குரிய காவிரித் தண்ணீரை - உச்ச நீதிமன்றம் கட்டளையிட்டும்
திறந்துவிடாமல் பழிவாங்கி விட்டனர். இந்த நிலையில், பருவமழையும்
பொய்த்துவிட்டது. நெற்பயிர்கள் நீரின்றி காய்ந்து சருகாகிக் கிடக்கின்றன.
தமிழ்நாடு அரசு இதுபற்றி இதுவரை எந்த ஆறுதல் வார்த்தையும்
விவசாய மக்களுக்குக் கூறவில்லை. தமிழ்நாடு வேளாண்மைத்துறை அமைச்சர் தஞ்சை
மாவட்டத்தில் இருக்கிறார். உணவுத்துறை அமைச்சர் திருவாரூர் மாவட்டத்தில்
இருக்கிறார். இவர்கள் இருவரும் காவிரி டெல்டாவில் காவிரி நீர் இல்லாமலும்,
பருவமழைப் பொய்த்தும் பாதிக்கப்பட்ட நிலங்களை – மக்களை நேரில் பார்த்து
ஆய்வு செய்யவில்லை; ஆறுதல் கூறவில்லை.
காவிரி டெல்டாவில் தஞ்சை, திருவாரூர், நாகை மாவட்டங்களில்
மட்டும் இதுவரை வேளாண்மை பொய்த்துப் போனதால் 12 உழவர்கள் இறந்துள்ளனர்.
வேளாண் நிலங்களிலேயே சிலர் மாரடைப்பு ஏற்பட்டு இறந்திருக்கிறார்கள்.
மற்றும் சிலர் நெற்பயிருக்கு அடிக்கப்படும் பூச்சி மருந்தை உட்கொண்டு உயிர்
விட்டிருக்கிறார்கள்.
இவ்வளவு கொடிய துயரம் ஏற்பட்டுக் கொண்டிருக்கும்போது, டெல்டா
மாவட்ட அமைச்சர்கள்கூட அக்குடும்பங்களைச் சந்தித்து ஆறுதல் சொல்லவில்லை.
அந்த நிலங்களைப் பார்வையிடவில்லை.
எனவே, உடனடியாக டெல்டா மாவட்டங்களை வறட்சி பாதித்த
மாவட்டங்களாக தமிழ்நாடு அரசு அறிவிக்க வேண்டும். தமிழ்நாட்டில் இவ்வாண்டு
முற்றிலுமாகப் பருவமழைப் பொய்த்துவிட்டதால், தமிழ்நாடு முழுவதையும்
வறட்சியால் பாதிக்கப்பட்ட மாநிலமாக தமிழ்நாடு அரசு அறிவிக்க வேண்டும்.
வறட்சி துயர் துடைப்புப் பணிகளுக்காக இந்திய அரசிடமிருந்து சிறப்பு நிதி
கோரிப் பெற வேண்டும்.
கடந்த 2014 - 2015ஆம் ஆண்டுக்கு கர்நாடக அரசு, தன்னை வறட்சி
மாநிலமாக அறிவித்துக் கொண்டு இந்திய அரசிடம் 2,400 கோடி ரூபாய் பெற்றது.
அதுபோல், தமிழ்நாடு அரசும் அறிவித்து இந்திய அரசிடம் கூடுதல் நிதி பெற்று,
டெல்டா மாவட்டங்களின் உழவர்களுக்கு குறைந்தபட்ச நிவாரணமாவது அளிக்க முன்வர
வேண்டும்.
உழவர்களுக்கு சாகுபடி செய்து இழப்பு ஏற்பட்ட நிலங்களுக்கு ஒரு
ஏக்கருக்கு 25,000 ரூபாய் வீதம் இழப்பீடு வழங்க வேண்டும். சாகுபடி செய்ய
தயாராக இருந்தும், காவிரித் தண்ணீர் இல்லாததால் தரிசாகப் போடப்பட்டுள்ள
நிலங்களுக்கு, ஒரு ஏக்கருக்கு 15,000 ரூபாய் இழப்பீடு வழங்க வேண்டும்.
வருவாய்த்துறை அடங்கல் புத்தகத்தில், கிராம நிர்வாக
அதிகாரிகள் சாகுபடிக் கணக்கு எழுதும்போது, கடந்த ஆண்டு சாகுபடி செய்ததைக்
கணக்கில் கொண்டு, இவ்வாண்டு தரிசு நிலத்திற்கு இழப்பீடு வழங்க வேண்டும்.
சில கிராமங்களில் சாகுபடிக் கணக்கு, இன்னும் எழுதவேத் தொடங்கவில்லை.
உடனடியாக அங்கெல்லாம் சாகுபடிக் கணக்கு எழுதும் பணிகளைத் தொடங்க வேண்டும்.
தொழிற்சாலைகளில் கதவடைப்பு ஏற்பட்டால், தொழிலாளர்களக்கு லேஆப்
சம்பளம் தருவதுபோல், காவிரி டெல்டா மாவட்ட விவசாயத் தொழிலாளர்களுக்கு ஒரு
குடும்பத்திற்கு ரூபாய் 25,000 இழப்பீடு வழங்க வேண்டும்.
தமிழ்நாடு அரசு தொடர்ந்து அலட்சியம் காட்டினால்,
பல்லாயிரக்கணக்கில் இலட்சக்கணக்கில் விவசாயிகள் வீதிக்கு வந்து நீதி
கேட்டுப் போராடுவோம்! யாரும் மனமுடைந்து தற்கொலை முயற்சிகளில் ஈடுபடக்
கூடாது! நாம் வாழப் பிறந்தவர்கள். வாழ்வதற்காகப் போராடுவோம்!
நிலவுகின்ற அவல நிலையின் தீவிரத்தைப் புரிந்து கொண்டு,
இழப்பீடு வழங்கவும் துயர் துடைப்புப் பணிகளை உடனடியாகச் செய்யவும்,
உழவர்கள் வாங்கியுள்ள கூட்டுறவுக் கடன், இந்திய அரசு வங்கிக் கடன் உள்ளிட்ட
அனைத்துக் கடன்களையும் தள்ளுபடி செய்யவும் நடுவண் – மாநில அரசுகள் முன் வர
வேண்டும்”.
இவ்வாறு தோழர் பெ. மணியரசன் கூறினார்.
Labels: அறிக்கைகள், காவிரி உரிமை, பேட்டிகள்
0கருத்துக்கள்:
Post a Comment
<< முகப்பு பக்கம்