"தமிழ்நாட்டை வறட்சி மாநிலமாக அறிவிப்பதில் இன்னும் தாமதம் ஏன்?" --மன்னார்குடியில் காவிரி உரிமை மீட்புக் குழு ஒருங்கிணைப்பாளர் பெ. மணியரசன் வினா!
Tuesday, January 10, 2017
=========================================
"தமிழ்நாட்டை வறட்சி மாநிலமாக
அறிவிப்பதில் இன்னும் தாமதம் ஏன்?"
=========================================
மன்னார்குடியில் காவிரி உரிமை மீட்புக் குழு
ஒருங்கிணைப்பாளர் பெ. மணியரசன் வினா!
=========================================
“தமிழ்நாட்டை வறட்சி மாநிலமாக அறிவிப்பதில் இன்னும் ஏன் இவ்வளவு தாமதம்?” என மன்னார்குடியில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில், காவிரி உரிமை மீட்புக் குழு ஒருங்கிணைப்பாளர் தோழர் பெ. மணியரசன் வினா எழுப்பினார்.
முன்னதாக, நேற்று (08.01.2017), திருவாரூர் மாவட்டத்தில் நீரின்றி கருகிய பயிர்களையும், அதன் காரணமாக உயிரிழந்த உழவர்களின் குடும்பங்களையும் காவிரி உரிமை மீட்புக் குழுவினர், நேரில் சென்று பார்த்தனர். குழுவின் ஒருங்கிணைப்பாளரும், தமிழ்த்தேசியப் பேரியக்கத் தலைவருமான தோழர் பெ. மணியரசன், தமிழர் தேசிய முன்னணி திருவாரூர் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் மருத்துவர் இலரா. பாரதிச்செல்வன், மாவட்ட அமைப்பாளர் தோழர் கலைச்செல்வன், தமிழ்த்தேசியப் பேரியக்க மன்னைக் கிணைச் செயலாளர் தோழர் இரெ. செயபாலன், வழக்கறிஞர் பாலசுந்தரம், மீத்தேன் திட்ட எதிர்ப்புக் கூட்டமைப்பு தோழர் கண்ணன், தமிழக உழவர் முன்னணி செயற்குழு உறுப்பினர் தோழர் கோட்டூர் இரா. தனபாலன் உள்ளிட்டோர் அக்குழுவில் இடம் பெற்றிருந்தனர்.
திருவாரூர் மாவட்டத்தில் உயிரிழந்த புதுக்குடி அசோகன், வெங்கத்தாங்குடி விசயக்குமார், திருக்கலர் நடராசன், பெரியபுருவாடி இராமையா, தண்ணீர்குன்னம் ஓவர்சேரி துரைராசு, பண்டிதகுடி உத்திராபதி உள்ளிட்ட உழவர் குடும்பங்களுக்கு, மருத்துவர் இலரா. பாரதிச்செல்வன் அவர்களும், தமிழ்நாடு மூத்தப் பொறியாளர் சங்கச் செயலாளர் பொறியாளர் அ. வீரப்பன் அவர்களும் வழங்கிய நிதியுதவியில் அக்குடும்பங்களுக்கு தலா 5,000 ரூபாயை தோழர்கள் நேரில் வழங்கி, அவர்களுக்கு ஆறுதல் கூறினர்.
அதன்பின், மன்னார்குடியில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் ஒருங்கிணைப்பாளர் தோழர் பெ. மணியரசன் கூறியதாவது:
“இந்திய அரசின் துணையோடு கர்நாடகம் காவிரியில் தமிழ்நாட்டுக்குரிய தண்ணீரை தடுத்து வைத்துக் கொண்டதாலும், பருவமழைப் பொய்த்ததாலும், தமிழ்நாட்டின் வேளாண்மை பெருமளவு பாதிக்கப்பட்டுள்ள நிலையில், வறட்சி பாதித்த மாநிலமாக தமிழ்நாட்டை அறிவிக்காமல், தமிழ்நாடு அரசு இன்னும் ஏன் கால தாமதம் செய்கிறது?
தமிழ்நாட்டுக்குரிய தண்ணீரைத் திருடிப் பாசனம் செய்த கர்நாடகம், வறட்சி என்று கூறி, முதல் தவணையாக 1,785 கோடி ரூபாய் இந்திய அரசு வழங்கியுள்ளது. அவர்கள் நடுவண் நீர்வளத்துறையினரிடம் தங்கள் மாநிலத்தில் வேளாண்மை பாதிக்கப்பட்டுள்ள மாவட்டங்களையும், அதன் காரணமாக உயிரிழந்த உழவர்களின் பட்டியலையும் அளித்து நிவாரணம் பெற்றுள்ளனர்.
ஆனால், தமிழ்நாட்டில் சாகுபடி பயிர்கள் கருகியதால் இதுவரை நூற்றுக்கும் மேற்பட்ட உழவர்கள் தற்கொலை செய்து கொண்டும், மாரடைப்பாலும் இறந்துள்ளனர். இந்த உயிரிழப்புகளை வேளாண்மை பொய்த்ததால் ஏற்பட்ட உயிரிழப்பு என தமிழ்நாடு அரசு சட்டப்படி இதுவரை பதிவு செய்யாதது கடும் கண்டனத்திற்குரியது.
உயிரிழந்த உழவர்கள் நோயாலும் மூப்பினாலும் இறந்தார்கள் என அ.இ.அ.தி.மு.க. அமைச்சர்கள் கூறுவது, 1967க்கு முன் காங்கிரசு அமைச்சர்களின் பேச்சைப்போல் உள்ளது.
1964 இல், இந்தித் திணிப்பை எதிர்த்து திருச்சியில் கீழப்பழூர் சின்னச்சாமி தீக்குளித்தபோது, அன்றைய முதல்வர் பக்தவத்சலம், அவர் கடன் தொல்லையால் தீக்குளித்திருக்கலாம் அல்லது வயிற்று வலியால் தீக்குளித்திருக்கலாம் என்று சொன்னார். 1966இல் அனைத்திந்திய அளவில் கடும் உணவுப் பஞ்சம் ஏற்பட்டபோது, காங்கிரசு அமைச்சர்கள் எலிக்கறி சாப்பிடச் சொன்னார்கள். அந்த ஆணவத்திற்குரிய தண்டனையை காங்கிரசுக்கு பின்னர் மக்கள் வழங்கினார்கள்.
அ.இஅ.தி.மு.க. அமைச்சர்கள் 1967க்கு முன்பு காங்கிரசு ஆட்சியாளர்கள் பேசிய எகத்தாள பேச்சை, உயிரிழந்த உழவர்கள் குடும்பத்தை நோக்கிப் பேசுவதை மக்கள் கவனித்துக் கொண்டுதான் இருக்கிறார்கள்.
உழவர்கள் உயிரிழப்பை சட்டப்படி பதிவு செய்யாத தமிழ்நாடு அரசு, இந்திய அரசு நிவாரண நிதி வழங்கினால், அந்நிதியை தமிழ்நாட்டு உழவர்களுக்கு வழங்கத் தயாராக இருக்கிறோம் என்று மட்டும் கூறி வருகிறது. இது ஏற்புடையதாக இல்லை!
எனவே, உடனடியாக உழவர்களின் உயிரிழப்பை வேளாண்மை பொய்த்ததால் ஏற்பட்ட உயிரிழப்பு என தமிழ்நாடு அரசு சட்டப்படி பதிவு செய்ய வேண்டும். தமிழ்நாட்டை வறட்சி மாநிலமாக அறிவிக்க வேண்டும். உடனடியாக, பயிர்க் காப்பீட்டு இழப்பீடு தொகையை இந்திய அரசும் தமிழ்நாடு அரசும் போர்க்கால வேகத்தில் வழங்க வேண்டும்.
பயிர் கருகியதால் உயிரிழந்த உழவர்களின் குடும்பங்களுக்கு 15 இலட்ச ரூபாயும், வேளாண் சாகுபடி செய்த நிலங்களுக்கு ஏக்கருக்கு 25,000 ரூபாயும், கடந்தாண்டு சாகுபடி செய்து - இவ்வாண்டு சாகுபடி செய்ய முடியாமல் தரிசாய் போட்ட நிலங்களுக்கு ஏக்கருக்கு 15,000 ரூபாயும் இழப்பீட்டுத் தொகையாக வழங்க வேண்டும்.
மேலும், தொழிற்சாலைகளில் உற்பத்தி நிறுத்தப்பட்டால், தொழிலாளர்களுக்கு லே ஆப் ஊதியம் தருவது போல், உழவுத் தொழிலாளிகளுக்கு, ஒரு குடும்பத்திற்கு 25,000 ரூபாய் இழப்பீடு வழங்க வேண்டும்.
உழவர்களின் கூட்டுறவுக் கடன்களையும், அரசுடைமையாக்கப்பட்ட வங்கிகளின் கடன்களையும் தமிழ்நாடு அரசும் இந்திய அரசும் முற்றிலுமாகத் தள்ளுபடி செய்ய வேண்டும். பயிர்க்கடன்கள் மட்டுமின்றி, வேளாண் பணிகளுக்காக, உழுவை எந்திரம் வாங்குதல் உட்பட எந்தக் கடன் வாங்கியிருந்தாலும், அந்தக் கடனை நடுவண் – மாநில அரசுகள் முழுமையாகத் தள்ளுபடி செய்ய வேண்டும்.
தமிழ்நாடு முழுவதிலும் உழவர்கள் வாங்கியுள்ள தனியார் கடன்கள் அனைத்தையும் ஓராண்டுக்கு வசூலிக்கத் தடை விதித்து தமிழ்நாடு அரசு கட்டளையிட வேண்டும் (Moratorium). உழவர்களுக்குத் தனியார் கொடுத்த கடன்களுக்கான வட்டியை முழுமையாகத் தள்ளுபடி செய்ய வேண்டும். ஓராண்டு கழித்து, தனியார் கடன்களை பல தவணைகளில் அளிக்க ஆணையிட வேண்டும். இதை மீறும் தனியார் நிதி நிறுவனங்கள் மீதும், வட்டிக்குக் கடன் கொடுத்த தனிநபர்கள் மீதும் சட்டப்படி குற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்”.
இவ்வாறு தோழர் பெ. மணியரசன் கூறினார்.
Labels: காவிரி உரிமை, பேட்டிகள்
0கருத்துக்கள்:
Post a Comment
<< முகப்பு பக்கம்