“தமிழ்நாடு முதலமைச்சரின் அறிக்கைக்குப் பிறகே போராட்டம் குறித்து முடிவு செய்யப்படும்” -- விரி உரிமை மீட்புக் குழு ஒருங்கிணைப்பாளர் பெ. மணியரசன் தெரிவிப்பு
Wednesday, April 12, 2017
===========================================
“தமிழ்நாடு முதலமைச்சரின் அறிக்கைக்குப்
பிறகே போராட்டம் குறித்து முடிவு செய்யப்படும்”
===========================================
தமிழ்நாடு அரசு பேச்சுவார்த்தைக்குப் பின்
காவிரி உரிமை மீட்புக் குழு
ஒருங்கிணைப்பாளர் பெ. மணியரசன் தெரிவிப்பு!
===========================================
காவிரி உரிமை மீட்கவும் உழவர்கள் வறட்சி நிவாரணத்திற்கும் கோரிக்கைகள் வைத்து, கடந்த 28.3.2017லிருந்து தஞ்சை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பாக – இரவு பகலாக சாலையோரத்திலேயே தங்கிக் கொண்டு - காவிரி உரிமை மீட்புக் குழுவினர் நடத்தி வரும் தொடர் முழக்க அறப்போராட்டம், இன்று (12.04.2017) பதினாறாவது நாளாகத் தொடர்ந்து நடந்து வருகிறது.
இன்று (12.04.2017) தமிழர் தேசிய முன்னணி திருவாரூர் மாவட்டச் செயலாளர் மருத்துவர் இலரா. பாரதிச்செல்வன் ஒருங்கிணைப்பில், மன்னார்குடி வட்டம் – காரக்கோட்டையிலிருந்து உழவர் திரு. முருகானந்தம் தலைமையில் உழவர்கள் திரளாக வந்துப் பங்கேற்றனர். காவிரி ஆறு பாதுகாப்பு இயக்கத்தினர் தோழர் முகிலன் தலைமையில் பேரணியாக வந்து பங்கேற்றனர்.
இதனையடுத்து, பகல் 12 மணியளவில், தமிழ்நாடு அரசு சார்பில், வேளாண் துறை அமைச்சர் திரு. துரைக்கண்ணு, அ.தி.மு.க. மக்களவை உறுப்பினரும் முன்னாள் அமைச்சருமான திரு. வைத்திலிங்கம், தஞ்சை சட்டப்பேரவை உறுப்பினர் திரு. ரெங்கசாமி, மாவட்ட ஆட்சியர் திரு. அண்ணாதுரை மற்றும் காவல்துறை அதிகாரிகள் ஆகியோர் போராட்டப் பந்தலுக்கு வருகை தந்து, போராட்டக் குழுவினருடன் பேச்சுவார்த்தை நடத்தினர்.
அமைச்சர்களுடனான பேச்சுவார்த்தைக்குப் பிறகு செய்தியாளர்களிடம் பேசிய காவிரி உரிமை மீட்புக் குழு ஒருங்கிணைப்பாளர் திரு. பெ. மணியரசன் பின்வருமாறு தெரிவித்தார்:
“காவிரி உரிமை மீட்புக் குழுவின் சார்பில் தொடர்ந்து இரவு பகலாக - தஞ்சை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு நடைபெற்று வரும் காவிரித்தாய் காப்பு முற்றுகைப் போராட்டம், இன்று பதினாறாவது நாளாகத் தொடர்கிறது.
இன்று காலை தமிழ்நாடு அரசு சார்பில், மாண்புமிகு வேளாண் அமைச்சர் திரு. துரைக்கண்ணு, அ.தி.மு.க. மக்களவை உறுப்பினர் திரு. வைத்திலிங்கம், தஞ்சை சட்டப்பேரவை உறுப்பினர் திரு. ரெங்கசாமி, மாவட்ட ஆட்சியர் திரு. அண்ணாதுரை உள்ளிட்டோர் போராட்டப் பந்தலுக்கு வருகை தந்தனர். அவர்களிடம் எமது கோரிக்கைகளை விளக்கினோம்.
இந்திய அரசின் நீர்வளத்துறை அமைச்சர் உமாபாரதி கொண்டு வந்துள்ள ஒற்றைத் தீா்ப்பாய சட்டத் திருத்தத்தின் நகலை அவர்களிடம் வழங்கினோம்.
தமிழ்நாடு அரசு, இதுவரை இந்த சட்டத்திருத்தம் குறித்த தனது கருத்தை வெளியிடாதது குறித்தும், கடந்த மார்ச் மாதம் 21ஆம் நாள் – மூன்றாம் முறையாக உச்ச நீதிமன்ற அமர்வு காவிரியிலிருந்து தமிழ்நாட்டுக்கு நாள்தோறும் 2,000 கன அடி தண்ணீர் திறந்துவிட கர்நாடகத்திற்கு ஆணையிட்டும் – அவர்கள் அதை செயல்படுத்த மறுக்கும்போது, தமிழ்நாடு அரசு அச்சட்டவிரோதச் செயலை எதிர்த்து சட்ட நடவடிக்கையும் எடுக்கவில்லை – அரசியல் நடவடிக்கையும் எடுக்காதது வருத்தமளிக்கிறது என்ற எங்கள் கவலையையும் வெளியிட்டோம்.
எங்கள் கோரிக்கைகளைக் கேட்டுக் கொண்ட வேளாண் அமைச்சரும், முன்னாள் அமைச்சரும், தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களுக்கு எங்கள் கோரிக்கைகள் குறித்து விளக்குவதாகவும், விரைவில் தமிழ்நாடு அரசு இக்கோரிக்கைகளை நிறைவேற்றும் வகையில் செயல்படும் என்றும் தெரிவித்தனர். போராட்டத்தைக் கைவிடக் கோரியும் வேண்டுகோள் விடுத்தனர்.
மத்திய அரசை வலியுறுத்தி தமிழ்நாடு முதலமைச்சர் அறிக்கை கொடுத்த பின், நாங்கள் எங்கள் போராட்டம் குறித்து விவாதித்து முடிவுக்கு வருகிறோம். போராட்டம் தொடர்கிறது”.
இவ்வாறு தோழர் பெ. மணியரசன் தெரிவித்தார்.
இன்றைய போராட்டத்தின்போது, மூவேந்தர் முன்னேற்றக் கழகத் தலைவர் திரு. ஸ்ரீதர் வாண்டையார், இந்திய யூனியன் முசுலீம் லீக் பொதுச் செயலாளரும், கடையநல்லூர் சட்டப்பேரவை உறுப்பினர் திரு. கே.எம். முகமது அபுபக்கர், மக்கள் கலை இலக்கியக் கழக இணைச் செயலாளர் தோழர் காளியப்பன், காவிரி ஆறு பாதுகாப்பு இயக்க ஒருங்கிணைப்பாளர் தோழர் கே.ஆர்.எஸ். மணி, பேராசிரியர் க. நெடுஞ்செழியன் உள்ளிட்ட பல்வேறு அமைப்புத் தலைவர்கள் நேரில் வருகை தந்து போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்தனர்.
தமிழக விவசாயிகள் சங்கத் தஞ்சை மாவட்டத் தலைவர் திரு. த. மணிமொழியன், தமிழர் தேசிய முன்னணி பொதுச் செயலாளர் திரு. ஐயனாபுரம் சி. முருகேசன், தமிழர் தேசிய முன்னணி திருவாரூர் மாவட்டச் செயலாளர் மருத்துவர் இலரா. பாரதிச்செல்வன், இந்திய சனநாயகக் கட்சி தஞ்சை மாவட்டத் தலைவர் திரு. சிமியோன் சேவியர்ராசு, விடுதலைத் தமிழ்ப்புலிகள் கட்சி மாநில அமைப்புச் செயலாளர் திரு. அருண் மாசிலாமணி, மனித நேய சனநாயகக் கட்சி தஞ்சை மாவட்டத் தலைவர் திரு. அகமது கபீர் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
போராட்டம் பதினாறாவது நாள் இரவிலும் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. போராட்டச் செய்திகள், காவிரி உரிமை மீட்புக் குழுவின் முகநூல் பக்கமான FB.COM/KaveriUrimai என்ற பக்கத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டு, சமூக வலைத்தளங்களில் பகிரப்பட்டு வருகின்றது.#SaveMotherCauvery என்ற குறிச்சொல்லை (Hashtag) இளைஞர்கள் உருவாக்கி, இப்போராட்டத்திற்கு சமூக வலைத்தளங்களில் ஆதரவு திரட்டி வருகின்றனர்.
Labels: காவிரி உரிமை, போராட்டங்கள்
0கருத்துக்கள்:
Post a Comment
<< முகப்பு பக்கம்