<body><script type="text/javascript"> function setAttributeOnload(object, attribute, val) { if(window.addEventListener) { window.addEventListener('load', function(){ object[attribute] = val; }, false); } else { window.attachEvent('onload', function(){ object[attribute] = val; }); } } </script> <div id="navbar-iframe-container"></div> <script type="text/javascript" src="https://apis.google.com/js/platform.js"></script> <script type="text/javascript"> gapi.load("gapi.iframes:gapi.iframes.style.bubble", function() { if (gapi.iframes && gapi.iframes.getContext) { gapi.iframes.getContext().openChild({ url: 'https://www.blogger.com/navbar/6955529389241309188?origin\x3dhttp://thozharmaniyarasan.blogspot.com', where: document.getElementById("navbar-iframe-container"), id: "navbar-iframe" }); } }); </script>

“காவிரி டெல்டா மாவட்டங்களில் ஒரு வார காலத் தொடர்வண்டி மறியல்!” -- காவிரி உரிமை மீட்புக் குழுவின் புதிய போராட்ட வடிவம்!

Sunday, April 16, 2017
===================================
“காவிரி டெல்டா மாவட்டங்களில் 
ஒரு வார காலத் தொடர்வண்டி மறியல்!”
===================================
காவிரி உரிமை மீட்புக் குழுவின்
புதிய போராட்ட வடிவம்!
===================================

காவிரி உரிமை மீட்கவும் உழவர்கள் வறட்சி நிவாரணத்திற்கும் கோரிக்கைகள் முன் வைத்து, வரும் மே 15 முதல் ஒரு வார காலத்திற்கு காவிரி டெல்டா மாவட்டங்களில் தொடர்வண்டி மறியல் போராட்டம் நடத்தப்படும் என காவிரி உரிமை மீட்புக் குழு அறிவித்துள்ளது.
கடந்த 28.3.2017லிருந்து தஞ்சை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பாக – இரவு பகலாக சாலையோரத்திலேயே தங்கிக் கொண்டு - காவிரி உரிமை மீட்புக் குழுவினர் நடத்தி வரும் தொடர் முழக்க அறப்போராட்டத்தின் பத்தொன்பதாவது நாளான இன்று (15.04.2017), போராட்டத்தை வேறு வடிவத்திற்கு மாற்றுவது குறித்து போராட்டப் பந்தலில் விரிவான அளவில் கலந்துரையாடல் நடைபெற்றது.
அதன் முடிவில், வரும் மே 15 முதல் ஒரு வார காலத்திற்கு காவிரி டெல்டா மாவட்டங்களான தஞ்சை, திருச்சி, திருவாரூர், நாகை, கடலூர் மாவட்டங்களில் உழவர்களையும் பொதுமக்களையும் பெருந்திரளாகத் திரட்டி தொடர்வண்டி மறியல் போராட்டம் நடத்துவதென்றும், இப்போராட்டத்திற்குப் பெருந்திரளான மக்களைத் திரட்ட விரிவான அளவில் பரப்புரைகள் மேற்கொள்ள ஏதுவாக - மாவட்ட ஆட்சியர் அலுவலக முற்றுகை அறப்போராட்டத்தை இன்றோடு நிறைவு செய்து கொள்வதென்றும் முடிவெடுக்கப்பட்டது.
இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய காவிரி உரிமை மீட்புக் குழு ஒருங்கிணைப்பாளர் திரு. பெ. மணியரசன், “நமது காவிரித்தாய் காப்புப் போராட்டம் ஒரு முதல் கட்ட வெற்றியை ஈட்டியுள்ளது. காவிரித் தீர்ப்பாயத்தின் இறுதித் தீர்ப்பையும், காவிரித் தீா்ப்பாயத்தையும் காலி செய்யும் வகையில் இந்திய அரசு கொண்டு வந்துள்ள ஒற்றைத் தீர்ப்பாயத்திற்கான புதிய சட்டத் திருத்தம், நாடாளுமன்றத்தின் விவாதப்பட்டியலில் இருந்தும், நம் போராட்டம் காரணமாக அது விவாதத்திற்கு எடுத்துக் கொள்ளப்படவில்லை. கூட்டத்தொடரும் முடிந்து விட்டது. இது முதல் கட்ட வெற்றி!
ஒற்றைத் தீர்ப்பாயம் குறித்து மக்களிடமும் அரசியல் கட்சிகளிடமும் முதன் முதலாக விழிப்புணர்வு ஏற்படுத்தி, அதை ஒரு போராட்டக் கோரிக்கையாக முன்வைத்துதான் தஞ்சைத் தொடர் போராட்டத்தை நாம் தொடங்கினோம்.
அ.தி.மு.க., தி.மு.க., காங்கிரசு, த.மா.க., சி.பி.ஐ., சி.பி.எம். உள்ளிட்ட அரசியல் கட்சிகளுடன் நமக்குப் பல்வேறு கருத்து வேறுபாடுகள் இருப்பினும், தமிழ்நாட்டின் முகாமையான சிக்கலான காவிரிச் சிக்கலில் – நாம் போராடிப் பெற்ற காவிரித் தீர்ப்பிற்கே ஒரு பேராபத்து வந்துள்ள சூழலில், நாம் அனைவரும் ஒற்றைக் கோரிக்கையின் கீழ் ஒன்றுபட்டு நிற்கிறோம் – ஒற்றைத் தீர்ப்பாயத்திற்கு எதிராக நிற்கிறோம் என்று இந்திய அரசுக்கும் கர்நாடக அரசுக்கும் உணர்த்தும் வகையில், இப்போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து வந்த அரசியல் கட்சியினரை நாம் வரவேற்றோம்.
நாம் ஒன்றுபட்டு நின்றதன் விளைவாக, அனைத்துக் கட்சிகளும் ஒற்றைத் தீர்ப்பாயத்திற்கு எதிரான கருத்துகளை முன்வைத்தன. அதன் விளைவாகவே, நாடாளுமன்றத்தில் அச்சட்டதிருத்தம் விவாதப் பட்டியலில் இருந்தும்கூட, கூட்டத்தொடர் முடியும் வரை விவாத்திற்குக் கொண்டு வரப்படவில்லை. இல்லையெனில், பத்தோடு பதினொன்றாக இந்தச் சட்டதிருத்தம் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டிருக்கும். தற்போது அது தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. எனவே, அந்த வகையில் இது முதல் கட்ட வெற்றி!
எனினும், இது முழுமையான வெற்றி அல்ல! நம் கோரிக்கைகள் எவையும் நிறைவடையவும் இல்லை. நம் போராட்டமும் ஓயப்போவதில்லை! பத்தொன்பது நாட்களாக வெயிலிலும் குளிரிலும் நாம் நடத்தி வரும் அறவழிப் போராட்டத்திற்கு இந்திய அரசும், தமிழ்நாடு அரசும் உரிய அளவில் செவி கொடுத்துக் கேட்கவில்லை. தமிழ்நாடு அரசின் சார்பில் வேளாண் அமைச்சரும் முன்னாள் அமைச்சரும் வந்து பேசிவிட்டதோடு சரி, முதலமைச்சர் அறிக்கை வெளியிடுவார் என்றனர். அதையும் அவர்கள் இந்நேரம் வரை வெளியிடவில்லை.
எனவே, நம் போராட்டத்தை வேறு வடிவத்திற்கு – கோரிக்கைகளை இன்னும் வீரியமாக் கொண்டு செல்லும் வகையில் மாற்ற வேண்டுமென இங்கு நாங்கள் கலந்துரையாடினோம். காவிரி உரிமை மீட்புக் குழுவில் உறுப்பு வகிக்கும் அரசியல் கட்சிகள், இயக்கங்கள், உழவர் இயக்கங்கள், குழுவில் உறுப்பு வகிக்காத பிற உழவர் அமைப்புகள் எனப் பலரிடமும் கருத்துகள் கேட்டோம்.
அதன் முடிவில், இதே கோரிக்கைகளை வலியுறுத்தி - போராட்டத்தின் வடிவத்தை மாற்றிக் கொண்டு, வரும் மே 15 முதல் ஒரு வார காலத்திற்கு காவிரி டெல்டா மாவட்டங்களில் தொடர்வண்டி மறியல் போராட்டத்தை நடத்த முடிவெடுத்துள்ளோம். வழக்கமான தொடர்வண்டி மறியல் போராட்டங்களைப் போல் அல்லாமல், தொடர்வண்டிப் பாதை செல்லும் ஊர்களில் உள்ள கிராம மக்களை, உழவர்களை, இளைஞர்களைத் திரட்டி அவரவர் பகுதிகளிலேயே தொடர்வண்டியை எடுக்க முடியாத அளவிற்கு பெருந்திரளாக மறியல் செய்யும் போராட்டத்தை நடத்த முடிவெடுத்துள்ளோம்.
அதற்காக இன்றிலிருந்து மே 15 வரை விரிவான அளவில் பரப்புரைகள் மேற்கொள்ள ஏதுவாக, தஞ்சை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தின் முன்பு கடந்த மார்ச்சு 28 முதல் பத்தொன்பது நாளாக நடைபெற்று வரும் தொடர் அறப்போராட்டத்தை இன்றோடு நிறைவு செய்து கொள்ளவும் தீர்மானித்துள்ளோம்.
இதுநாள் வரை தஞ்சை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு நடைபெற்று வந்த தொடர் அறப்போராட்டத்தில் பங்கேற்ற அனைவருக்கும் எமது நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறோம். போராட்டத்தில் பங்கேற்றோர்க்கு நாள்தோறும் உணவளித்த உழவர் பெருமக்கள், வணிகர்கள், தமிழின உணர்வாளர்கள் அனைவருக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறோம்”.
இவ்வாறு தோழர் பெ. மணியரசன் தெரிவித்தார்.
பெண்ணாடம் - தென்றல் தப்பாட்டக் குழுவின் எழுச்சிப் பறையிசை போராட்ட அரங்கை அதிரச் செய்தது. மன்னார்குடி வட்டம் – கனியாக்குறிச்சி கிராமத்திலிருந்து திரு. வீரய்யா தலைமையில் திரளான உழவர்கள் ஊர்திகளில் வந்து பங்கு கொண்டனர்.
முன்னதாக, இன்று காலை – காவிரித்தாய் காப்பு முற்றுகைப் போராட்டத்திற்கு தி.மு.க. முன்னாள் நடுவண் அமைச்சர் திரு. டி.ஆர். பாலு, முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் திரு. எல். கணேசன், முன்னாள் அமைச்சர் திரு. எஸ்.எஸ். பழனிமாணிக்கம் உள்ளிட்ட திரளான தி.மு.க.வினரும், காவிரி விவசாயிகள் பாதுகாப்புச் சங்கத் தலைவர் திரு. காவிரி தனபாலன் உள்ளிட்ட பல்வேறு உழவர் அமைப்புத் தலைவர்களும் போராட்டப் பந்தலுக்கு நேரில் வருகை தந்து ஆதரவு தெரிவித்தனர்.
போராட்டத்தில், தமிழக விவசாயிகள் சங்கத் தஞ்சை மாவட்டத் தலைவர் திரு. த. மணிமொழியன், தமிழர் தேசிய முன்னணி பொதுச் செயலாளர் திரு. ஐயனாபுரம் சி. முருகேசன், தமிழ்த்தேசியப் பேரியக்கப் பொதுச் செயலாளர் தோழர் கி. வெங்கட்ராமன், தமிழர் தேசிய முன்னணி திருவாரூர் மாவட்டச் செயலாளர் மருத்துவர் இலரா. பாரதிச்செல்வன், இந்திய சனநாயகக் கட்சி தஞ்சை மாவட்டத் தலைவர் திரு. சிமியோன் சேவியர்ராசு, விடுதலைத் தமிழ்ப்புலிகள் கட்சி நிறுவனத்தலைவர் திரு. குடந்தை அரசன், மனித நேய சனநாயகக் கட்சி தஞ்சை மாவட்டத் தலைவர் திரு. அகமது கபீர் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

Labels:

0கருத்துக்கள்:

Post a Comment

<< முகப்பு பக்கம்


தோழர் மணியரசன்
அவர்களின் படைப்புகள் மற்றும் கருத்துக்களை இத்தளத்தில் காணலாம்.
வாசகர்களின் கருத்துக்களும் வரவேற்கப்படுகின்றன.

Web This Blog

தொகுப்பு

முந்தைய பதிவுகள்

தோழமைத் தளங்கள்