<body><script type="text/javascript"> function setAttributeOnload(object, attribute, val) { if(window.addEventListener) { window.addEventListener('load', function(){ object[attribute] = val; }, false); } else { window.attachEvent('onload', function(){ object[attribute] = val; }); } } </script> <div id="navbar-iframe-container"></div> <script type="text/javascript" src="https://apis.google.com/js/platform.js"></script> <script type="text/javascript"> gapi.load("gapi.iframes:gapi.iframes.style.bubble", function() { if (gapi.iframes && gapi.iframes.getContext) { gapi.iframes.getContext().openChild({ url: 'https://www.blogger.com/navbar/6955529389241309188?origin\x3dhttp://thozharmaniyarasan.blogspot.com', where: document.getElementById("navbar-iframe-container"), id: "navbar-iframe" }); } }); </script>

"பேரியக்கம் நடத்திய டாட்டா போராட்டம் : ஆலையையும் அரசையும் நகர்த்தியுள்ளது! தமிழர் உரிமைப் போராட்டம் தொடரும்!"-----தமிழ்த்தேசியப் பேரியக்கத் தலைவர் பெ. மணியரசன் அறிக்கை!

Tuesday, December 27, 2022


பேரியக்கம் நடத்திய டாட்டா போராட்டம் :

ஆலையையும் அரசையும் நகர்த்தியுள்ளது!
தமிழர் உரிமைப் போராட்டம் தொடரும்!
==================================
தமிழ்த்தேசியப் பேரியக்கத் தலைவர்
பெ. மணியரசன் அறிக்கை!
==================================


ஓசூர் கெலமங்கலம் ஒன்றியத்தில் அமைந்துள்ள டாட்டா மின்னணுத் தொழிற்சாலை (TATA Electronics) திட்டமிட்டு வடநாட்டுப் பெண்களையும், ஆண்களையும் இறக்குமதி செய்து வேலையில் சேர்த்து வருவது வெட்ட வெளிச்சமானது. மேலும், 6,000 இந்திப் பெண்கள் இவ்வாலை வேலையில் சேர ஜார்கண்டில் பயிற்சி பெற்று வருகிறார்கள் என்ற செய்தியை இந்தியத் தொலைப்பேசித் துறை அமைச்சர் அஷ்வினி வைஷ்ணவ் அறிவித்தார்.

இந்திக்காரர்கள் உள்ளிட்ட வெளி மாநிலத்தவர்கள் வெள்ளம் போல் புகுந்து தமிழ்நாட்டில் உள்ள இந்திய அரசு நிறுவனங்களிலும் பெருங்குழும நிறுவனங்களிலும் பெரும் எண்ணிக்கையில் வேலையில் சேர்வதைத் தடுத்து, மண்ணின் மக்களாகிய தமிழர்களுக்கு இந்நிறுவனங்களில் 90 விழுக்காடு வேலை உறுதி செய்ய வேண்டும், 10 விழுக்காட்டிற்கு மேல் உள்ள வெளி மாநிலத்தவரை வெளியேற்ற வேண்டும் என்று தமிழ்த்தேசியப் பேரியக்கம் பல்லாண்டுகளாகத் தொடர்ந்து போராடி வருகிறது.

கடந்த 09.12.2022 அன்று, ஓசூர் டாட்டா ஆலை முன் முற்றுகைப் போராட்டம் நடத்தி, மண்ணின் மக்கள் வேலைக்கான கோரிக்கையை வலியுறுத்த முடிவு செய்து ஏற்பாடுகள் செய்தோம். ஆனால், தமிழ்நாட்டு ஆட்சியாளர்கள் டாட்டா நிறுவனத்திற்கு சேவை செய்து, அறவழியில் நடத்த இருந்த அந்த ஒருநாள் முற்றுகைப் போராட்டத்தை ஆலைக்கு வெளியே ஒன்றரை கிலோ மீட்டர் தொலைவில் கூட நடத்தக்கூடாது என்று தடுத்தனர். காவல்துறையினரை ஏவிவிட்டு, ஆலையைச் சுற்றியுள்ள கிராமங்களில் இருந்து யாரும் போராட்டத்திற்குப் போகக் கூடாது என்று மிரட்டித் தடுத்தனர். அப்பகுதிகளில் ஒட்டப்பட்டிருந்த போராட்டச் சுவரொட்டிகளைக் கிழித்தனர். வைக்கப்பட்டிருந்த பதாகைகளை எடுத்துச் சென்றனர்.

அப்போராட்டத்திற்கு வருவதற்காக தமிழ்நாட்டின் பல பகுதிகளில் இருந்து 08.12.2022 இரவு புறப்பட இருந்த ஊர்திகளையும், தோழர்களையும் தடுத்தனர், காவல்துறையினர். சில ஊர்களில் உள்ளூர்க் காவல் நிலையங்களில் பேரியக்கத்தின் முன்னணிப் பொறுப்பாளர்களை அடைத்து வைத்தனர். வேறு பலரை வீட்டுக் காவலில் வைத்தனர்.

டாட்டாவுக்காகத் தி.மு.க. ஆட்சி நடத்திய இத்தனை ஒடுக்குமுறைகளுக்கும், சனநாயகப் படுகொலைக்கும் இடையே டாட்டா ஆலைக்கு அருகில் உள்ள உத்தனப்பள்ளியில் சற்றொப்ப 1,000 பேர் கூடி முழக்கமிட்டுப் பேரணியாகப் புறப்பட்டபோது, ஆண்கள் – பெண்கள் அனைவரையும் கைது செய்து மண்டபத்தில் அடைத்தனர். அவ்வட்டாரத்தில் டி.ஐ.ஜி. தலைமையில் 750 காவல்துறையினர் டாட்டா ஆலைக்குப் பாதுகாப்பு என்ற பெயரால் சனநாயக வழிப்பட்ட அறப்போராட்டத்தைத் தடுக்கும் கெடுபிடிப் பணியில் ஈடுபட ஆட்சியாளர்களால் அங்கே நிறுத்தப்பட்டனர்.

இத்தனை அடக்குமுறைகளையும் எதிர்கொண்டு ஆண்களும் பெண்களும் டாட்டா ஆலைப் போராட்டத்தில் திரளாக மக்கள் பங்கேற்றனர். அந்த ஆலையைச் சுற்றியுள்ள கிராமவாசிகள் கணிசமாகப் பங்கேற்றனர்.

“வெளியாரை வெளியேற்று! மண்ணின் மக்களுக்கு வேலை கொடு!” என்ற நமது போராட்டம் கட்சி எல்லைகளை – அமைப்பு வேறுபாடுகளைக் கடந்து தமிழர் என்ற இன உணர்ச்சி அடிப்படையில் மக்களிடையே தாக்கத்தை உண்டாக்கியுள்ளது.

இப்பின்னணியில், டாட்டா நிறுவனம் ஆலை அமைந்துள்ள கிருட்டிணகிரி மாவட்டத்தைச் சேர்ந்த 69 பேருக்கு வேலை வழங்கும் நிகழ்ச்சியை ஆலை வளாகத்தில் ஆளுங்கட்சி – எதிர்க்கட்சிகளின் சட்டமன்ற, நாடாளுமன்ற உறுப்பினர்களையும், மாவட்ட ஆட்சியரையும் வைத்து 26.12.2022 அன்று நடத்தியுள்ளது. அ.தி.மு.க. சட்டப்பேரவை உறுப்பினர் கே.பி. முனுசாமி அவர்கள், “டாடா ஆலைக்கு எதிராக 09.12.2022 அன்று போராட்டம் இங்கு நடக்கவில்லை என்றால், எங்களைக் கூப்பிட்டிருக்க மாட்டீர்கள். தமிழ்நாடு அரசு சலுகை விலையில் நிலம் வாங்கிக் கொடுத்தும், சலுகைக் கட்டணத்தில் 5 ஆண்டுகளுக்க மின்சாரம் வழங்கியும் நீங்கள் எங்களையெல்லாம் சட்டை செய்வதில்லை. எங்கள் கோரிக்கைகளை ஏற்பதில்லை. இப்போது போராட்டங்கள் வந்தவுடன் கூப்பிடுகிறீர்கள்” என்று குத்திக்காட்டிப் பேசியுள்ளார். அக்கூட்டத்தில், டாட்டா நிறுவன நிர்வாக இயக்குநர் விவேகானந்தன், “இனி வெளி மாநிலத்திலிருந்து பணியாளர்களை எடுக்க மாட்டோம்” என்று உறுதி கொடுத்துள்ளார்.

அடுத்து, தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் இன்று (27.12.2022) இந்தியத் தலைமை அமைச்சர் மோடிக்கு ஒரு கடிதம் எழுதி, அதை ஊடகங்களுக்கு அனுப்பியுள்ளார். அதில், தமிழ்நாட்டில் உள்ள இந்திய அரசு மற்றும் பொதுத்துறை நிறுவனங்களின் வேலைகளில் தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்களுக்கு முன்னுரிமை தர வேண்டும் என்று கோரியுள்ளார்.

இதற்கு மற்ற மாநில அரசுகள் தாங்களே சட்டம் இயற்றியுள்ளன; அல்லது அரசாணை வெளியிட்டுச் செயல்படுத்துகின்றன. ஆனால், மு.க. ஸ்டாலின் தலைமை அமைச்சர்க்கு விண்ணப்பம் போடுவுது, அதுகூட விழுக்காடு (சதவீத) அடிப்படையில் கோரிக்கை வைக்காமல் கோருவது, தமிழர்களிடையே எழுந்து வரும் மண்ணின் மக்கள் கோரிக்கையை மடைமாற்றி திசைதிருப்பும் நோக்கமாகவே புரிந்து கொள்ள முடிகிறது.

அதேவேளை, இங்குள்ள இந்திய அரசு நிறுவனங்களிலும், அலுவலகங்களிலும் 90 விழுக்காடு வேலை தமிழர்களுக்கு ஒதுக்கீடு செய்து நிறைவேற்ற வேண்டும் என்று பல்லாண்டுகளாகப் போராடி வரும் தமிழ்த்தேசியப் பேரியக்கப் போராட்டம் ஸ்டாலினைக் கூட நகர்த்தி உள்ளது என்று நாம் கவனத்தில் கொள்ளலாம்.

தேர்தல் அறிக்கையில் தமிழ்நாட்டு வேலைகள் தமிழருக்கே என சட்டமியற்றுவோம் எனக் கூறிவிட்டு, தி.மு.க. ஆட்சி அமைந்த பிறகு, ஏன் சட்டமியற்றவில்லை என்று கேட்டு, கடந்த 22.10.2021 அன்று, சென்னை தலைமைச் செயலகம் முன் ஆர்ப்பாட்டம் நடத்தினோம். முதல்வரின் தனிச்செயலாளரிடம் இதைச் சுட்டிக்காட்டி மனு வழங்கினோம்.

கோவையில் 11.07.2022 அன்று, பேரியக்கப் பொதுச்செயலாளர் தோழர் கி. வெங்கட்ராமன் தலைமையில், அஞ்சல்துறை மண்டலத் தலைவர் (PMG) அலுவலகத்தை முற்றுகையிட்டுப் போராட்டம் நடத்தி 600க்கும் மேற்பட்டோர் கைதானோம்.

இப்பொழுது நமது கோரிக்கை –

1. 90 விழுக்காடு வேலை தமிழர்களுக்கே வழங்க வேண்டும். அதில் முன்னுரிமை கிருட்டிணகிரி மாவட்ட மக்களுக்கு! 10 விழுக்காட்டிற்கு மேல் உள்ள இந்திக்காரர்களை வெளியேற்ற வேண்டும்.

2. இப்போது மேற்படி ஆலையில் கிருட்டிணகிரி மாவட்டத்தைச் சேர்ந்த 3,500 பெண்கள் வேலையில் இருப்பதாக ஆலை நிர்வாகம் கூறுகிறது. இது உண்மையா என்றும், மொத்தத் தொழிலாளிகளில் எந்தெந்த மாநிலத்தைச் சேர்ந்தவர்கள் எவ்வளவு பேர் என்றும் கள ஆய்வு செய்து, உள்ளதை உள்ளபடி தமிழ்நாடு தொழிலாளர் நலத்துறை அறிக்கை வெளியிட வேண்டும்.

3. இந்திய அரசு அலுவலகங்கள் மற்றும் பொதுத்துறை நிறுவனங்கள், தனியார் துறைத் தொழிற்சாலைகள் ஆகியவற்றில் 90 விழுக்காடு வேலை தமிழ்நாட்டின் மண்ணின் மக்களுக்கு வழங்கவும், தமிழ்நாடு அரசுப் பணிகளில் 100 விழுக்காடு தமிழர்களுக்கு வழங்கவும் தமிழ்நாடு அரசு புதிதாகச் சட்டம் இயற்ற வேண்டும்.

மண்ணின் மக்கள் வாழ்வுரிமையைக் காக்கும் இக்கோரிக்கைகள் நிறைவேற தமிழ்நாடு முழுவதும் அனைவரும் தங்களால் இயன்ற மக்கள் திரள் போராட்டங்களை நடத்துமாறு கேட்டுக் கொள்கிறோம். தமிழ்த்தேசியப் பேரியக்கம் தொடர்ந்து போராடும் என்ற உறுதியையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

============================
தலைமைச் செயலகம்,
தமிழ்த்தேசியப் பேரியக்கம்
============================
பேச: 9443918095, புலனம் : +91 98419 49462
முகநூல் : www.fb.com/tamizhdesiyam
ஊடகம் : www.kannottam.com
இணையம் : www.tamizhdesiyam.com
சுட்டுரை : www.twitter.com/tamizhdesiyam
காணொலிகள் : youtube.com/tamizhdesiyam
===================================

0கருத்துக்கள்:

Post a Comment

<< முகப்பு பக்கம்


தோழர் மணியரசன்
அவர்களின் படைப்புகள் மற்றும் கருத்துக்களை இத்தளத்தில் காணலாம்.
வாசகர்களின் கருத்துக்களும் வரவேற்கப்படுகின்றன.

Web This Blog

தொகுப்பு

முந்தைய பதிவுகள்

தோழமைத் தளங்கள்