<body><script type="text/javascript"> function setAttributeOnload(object, attribute, val) { if(window.addEventListener) { window.addEventListener('load', function(){ object[attribute] = val; }, false); } else { window.attachEvent('onload', function(){ object[attribute] = val; }); } } </script> <div id="navbar-iframe-container"></div> <script type="text/javascript" src="https://apis.google.com/js/platform.js"></script> <script type="text/javascript"> gapi.load("gapi.iframes:gapi.iframes.style.bubble", function() { if (gapi.iframes && gapi.iframes.getContext) { gapi.iframes.getContext().openChild({ url: 'https://www.blogger.com/navbar/6955529389241309188?origin\x3dhttp://thozharmaniyarasan.blogspot.com', where: document.getElementById("navbar-iframe-container"), id: "navbar-iframe" }); } }); </script>

"பெண்ணுரிமை வளர்க! மண்ணுரிமை வெல்க!" ---- பெ.மணியரசன் தலைவர், தமிழ்த்தேசியப் பேரியக்கம.

Sunday, March 12, 2023


பெண்ணுரிமை வளர்க!

மண்ணுரிமை வெல்க!
==============================
பெ.மணியரசன்
தலைவர், தமிழ்த்தேசியப் பேரியக்கம்
==============================


உலக மகளிர் நாள் மார்ச்சு 8 (2023) வந்து சில நாட்கள் கழித்து வாழ்த்துகளைச் சொல்கிறேன்; பொறுத்தருள்க. ஒரு வரியில் வாழ்த்துச் சொல்லி விடலாம். வழிகாட்டலாகக் கருத்துகள் சொல்ல விரும்பியதால் தாமதம்!

இந்திக்காரர்கள்தான் தமிழ்நாட்டின் தலைமைக் குடிமக்கள் என்பது போன்ற தமிழ்நாடு அரசின் அணுகுமுறைகள்; இந்திக்காரர்கள் தமிழ்நாட்டில் இனப்படுகொலை செய்யப்படுகிறார்கள்; தொடர்ந்து தமிழர்களால் தாக்கப்படுகிறார்கள் என்பன போன்ற ஆரியத்துவாவாதிகளின் அவதூறுப் பரப்புரைகள்; அதுவும் புதுதில்லியிலிருந்து புறப்பட்டு உ.பி, பீகார் வழியே தமிழ்நாட்டில் வலம் வரும் கொடுமை! இவற்றிற்கெல்லாம் எதிர்வினை ஆற்ற வேண்டி இருந்ததால் மகளிர் நாளுக்கான வாழ்த்துக் கட்டுரை எழுதத் தாமதம் ஏற்பட்டது.

வட அமெரிக்காவிலும் ஐரோப்பாவிலும் இருபதாம் நூற்றாண்டின் தொடக்க காலத்தில் எழுந்த பெண்ணுரிமைப் போராட்டங்களின் வழியே பெண்ணுரிமைகள் சிறிதுசிறிதாக மேம்பட்டன. நிகரமை (சோசலிக)க் கொள்கை கொண்ட பெண்கள் இக்களத்தில் முன்நின்றனர். குறிப்பாகப் பொதுவுடைமையரான கிளாரா ஜெட்கின் அம்மையாரின் பங்களிப்பு பெரிது.

1908-ஆம் ஆண்டு நியுயார்க் நகரத்தில் வேலைநேரக் குறைப்பு, ஊதிய உயர்வு, பெண்களுக்கு வாக்குரிமை என்ற முழக்கங்களை வைத்து 15 ஆயிரம் பெண்கள் பேரணி நடத்தினர்.

1910-இல் டென்மார்க் தலைநகர் கோபன்ஹேகனில் நடந்த பன்னாட்டு உழைக்கும் பெண்கள் மாநாட்டில் பேசிய கிளாரா ஜெட்கின், உலக மகளிர் உரிமை நாளாக ஒரு நாளை கடைபிடிக்க வேண்டும் என்ற கருத்தை முன்வைத்தார்.

பின்னர், அந்த “ஒருநாள்” என்பது இரசியப் புரட்சியுடன் தொடர்புடைய நாள் ஆனது. முதல் உலகப் போர் நடந்து கொண்டிருந்தபோது, பொதுவுடைமையரின் இரசியப்புரட்சி தொடங்கியது. 1917-இல் உலகப் போரிலிருந்து இரசியா விலகிக் கொள்ள வேண்டும் என்று ஜார் மன்னனுக்குக் கோரிக்கை வைத்து கம்யுனிஸ்ட்டுக் கட்சி போராடியது.

மக்களுக்குத் தேவை “உணவு-அமைதி; போர் அல்ல” என்று முழுக்கமெழுப்பி ஆண்களும் பெண்களும் போராடினர். ஜார் மன்னன் அரசுப் பதவியிலிருந்து விலகினார். அப்போது பதவி ஏற்ற தற்காலிக அரசு பெண்களுக்கு வாக்குரிமை அளித்தது. அந்தநாள் பழைய ஜூலியன் நாட்காட்டிப்படி பிப்ரவரி 23; திருத்தப்பட்ட கிரிகோரியன் நாட்காட்டிப்படி மார்ச்சு – 8.

இந்த மார்ச்சு 8-ஐத் தான் பன்னாட்டு மகளிர் நாளாகக் கடைபிடிக்க வேண்டும் என்று பெண்ணுரிமைப் போராளிகள் முடிவு செய்தனர். ஐ.நா. மன்றம் இதனை உலக மகளிர் நாளாக ஏற்று 1975-இல் அறிவித்தது.

இந்தப் பெண்ணுரிமைப் பன்னாட்டு நாளை ஆரியத்துவா வாதிகளில் ஒரு சாரார் ஏற்றுக் கொள்வதில்லை. மனுதர்மவாதிகள் பெண்ணுரிமையை ஏற்க மாட்டார்கள். பெண்களை எவ்வளவு முடியுமோ அவ்வளவு இழிவு படுத்திய நூல் மனுதர்ம நூல்! இப்போது கூட தினமணி நாளிதழில் 7.3.2023 அன்று வந்த நடுப்பக்கக் கட்டுரையின் தலைப்பு “நமக்கு எதற்கு மகளிர் தினம்?” என்பதாகும். இக்கட்டுரையை எழுதியவர் கோதை ஜோதிலட்சுமி என்ற பெண் எழுத்தாளர்! மகளிர் நாள் கடைபிடிப்பதை எதிர்த்து எழுதியுள்ளார்.

தமிழ்த்தேசியர்களாகிய நாம் மார்ச்சு 8 மகளிர் நாளைக் கடைபிடிக்கிறோம். அயல் நாடுகளில் உருவான நாள் என்று இதனை நாம் புறக்கணிப்பதில்லை. “உள்ளதை உள்ளபடி பார்” என்பது நமது வழிகாட்டும் மொழி! நம் தமிழ்ச் சமூகத்தில் பெண்ணுரிமையை முற்றிலுமாக மீட்க பன்னாட்டு மகளிர் நாள் பயன்பட வேண்டும் என்பது தமிழ்த்தேசியப் பேரியக்கத்தின் நிலைபாடு.

கடந்த காலத்தில் நடந்த மகளிர் உரிமைப் போராட்டத்தை ஏன் கொண்டாட வேண்டும் என்ற வினாவுக்கு விடையாக ஐ.நா. மன்றம் 1996-இல் ஒரு முழக்கத்தை உருவாக்கியது. “கடந்த காலத்தைக் கொண்டாடுதல், வருங்காலத்திற்கான திட்டமிடல்” என்பதே அம் முழக்கம்.

நாமும் மகளிர் நாள் கடைபிடிக்கும் போது, தமிழ்ச் சமூகத்தில் பெண்ணுரிமை மீட்டல் குறித்த வேலைத் திட்டங்களை வகுத்துக் கொள்ள வேண்டும்; புதுப்பித்துக் கொள்ள வேண்டும். நம்முடைய தமிழ்மரபு என்பது முற்போக்குக் கருத்துக்கள் எங்கிருந்தாலும் ஈர்த்துத் தன்மயமாக்கிக் கொள்ள வேண்டும் என்பதாகும். வெறும் நகலெடுக்காமல் நமது சமூக உள்ளடக்கம், பண்பாட்டிற்கேற்பத் தன்மயமாக்கிக் கொள்ள வேண்டும். உண்ட உணவு தன்மயமாதல் போல்!

தமிழர் மரபில் பெண்கள்
----------------------------------
உலகெங்கும் நடந்தது போல் தமிழ்ச் சமூகத்திலும் பெண்ணுரிமைப் பறிப்புகள் நடந்துள்ளன. அதே வேளை ஆண்-பெண் சமநிலைக் கருத்துகளும் பெண்ணுரிமைக் கருத்துகளும் செயல்பாடுகளும் தமிழர்களிடையே மேலோங்கி இருந்துள்ளன. வேறு எந்த மொழியிலும் இல்லாத அளவிற்கு இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன் பெண்கல்வி நம் சமூகத்தில் ஓங்கி இருந்திருக்கிறது. நாற்பதுக்கும் மேற்பட்ட பெண்பாற் புலவர்கள் சங்கஇலக்கியங்களில் பாடல்கள் படைத்துள்ளார்கள். களச் செயல்பாடுகளிலும் இருந்துள்ளார்கள். பெண்களை தலைமைப்படுத்தி சிலப்பதிகாரம், மணிமேகலை என்ற இரு காப்பியங்கள் எழுந்துள்ளன.

காதலன்-காதலியை, கணவன் மனைவியை, தலைவன்-தலைவி என்று நம் முன்னோர்கள் சமநிலையில் அழைத்துள்ளார்கள். மனைவியை இல்லத்தரசி என்றும் அழைத்துள்ளார்கள். ஆனாலும் அந்நிலையிலும் ஆணுக்கு நிகராக முழு அளவில் பெண்ணுரிமை இருந்ததாகச் சொல்ல முடியாது. பிற்காலத்தில் ஏற்பட்ட கொடுமையான பெண்ணடிமைத்தனம் அக்காலத்தில் இல்லை. இக்காலத்தில் பெண்ணுரிமை மீட்பில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது. அது தமிழ்நாட்டில் மட்டுமின்றி, இந்தியாவின் எல்லா மாநிலங்களிலும் ஏற்பட்டிருக்கிறது. ஆனால் மிகக் கொடுமையான பெண்ணுரிமை மறுப்புகள் இக்காலத்திலும் இருக்கின்றன.

தனக்குரிய கணவனைத் தேர்வு செய்யும் உரிமை பெருமளவில் பெண்களுக்கு இல்லை. அதில் காதல் உரிமை என்பது பெரிதும் மறுக்கப்படுகிறது. பட்டியல் வகுப்பு இளைஞனை இதர வகுப்புப் பெண் காதலித்துத் திருமணம் செய்து கொண்டால், இருவரையுமோ அல்லது இருவரில் ஒருவரையோ கொலை செய்யும் போக்கு அண்மைக் காலங்களில் பேரதிர்வுகளை உண்டாக்கின.

சமூக இலட்சியமில்லாத பதவி-பணவேட்டை அரசியல் நிலவுகிறது. சமூகத்தைச் சீர்திருத்துவதோ, மாற்றி அமைப்பதோ இன்றைய தமிழ்நாட்டு அரசியலின் இலட்சியம் அல்ல. சமூகத்தில் உள்ள பலவீனங்களைப் பயன்படுத்திக் கொண்டு பதவிகள் அடைவது, பணக் கொள்ளை நடத்துவது என்பதுதான் பெரிதும் இன்றைய அரசியல்வாதிகளின் இலக்கு!

நேரடியாகப் பதவி அரசியலில் ஈடுபடாமல் கருத்துப் பரப்புரைக் களத்தில் செயல்படும் “முற்போகாளர்” மற்றும் “இடது சாரிகள்” எனப்படுவோர் பெரும்பாலும் மேற்கண்ட பதவி-பண வேட்டை அரசயில்வாதிகளின் ஏதோ ஒரு பிரிவுக்குப் பக்கவாத்தியம் வாசிப்பவர்களாக செயல்படுகின்றனர்.

இவர்கள் எல்லோரும் பெண்ணுரிமை மீட்பில் இதுவரை ஏற்பட்ட முன்னேற்றங்களையே இமயச் சிகரச் சாதனைகளாக வர்ணித்துக்கொண்டு பரப்புரை செய்வோர் ஆவர். “இந்தச் சாதனைகளுக்கு” எல்லாம் யாராவது ஓர் தலைவரை, கட்சியை முழுக்காரணமாக்கி மக்களுக்கு மூளைச் சலவை செய்வர்!

சமூகத்தில் சமகாலத்தில் நடைபெறும் இவ்வாறான திருகல்-மருகல்களைப் புரிந்து கொண்டு தமிழ்த்தேசியர்கள் செயல்பட வேண்டும். அதே வேளை பெண்ணுரிமை மீட்பில் தமிழ்த்தேசியர்கள் நடைமுறை வேலைத் திட்டங்களை வகுத்துக் கொண்டு அவற்றைக் கடைபிடிக்க வேண்டும்.

“மக்கள் அனைவரும் சமம்; தமிழர்கள் அனைவரும் சமம்; ஆணும் பெண்ணும் சமம்” என்பது தமிழ்த்தேசிய அறம்!

இது மேடை முழக்கமாய், வெளிப்பகட்டு வெற்று ஆரவாரமாய் நீர்த்துப் போகக் கூடாது. தமிழ்த்தேசியத்தை ஏற்றுக் கொண்ட ஒவ்வொரு ஆணும் தங்கள் செயல்பாட்டின் வழி பெண்ணுரிமை மீட்புக்கு பங்களிக்க வேண்டும். பெண்ணுரிமை மீட்பு ஒவ்வொரு வீட்டிலிருந்து தொடங்க வேண்டும்.

தமிழ்நாட்டில் பெண்களை நன்கு படிக்க வைக்கிறார்கள். அது மகிழ்ச்சியான செய்தி. அதே வேளை அப்பெண்கள் வீட்டிற்குள் ஆணுக்கு நிகரான சமஉரிமையை இன்னும் முழுமையாய்ப் பெறவில்லை. சமையல் வேலைகளில் ஆண்களும் இயல்பாகப் பங்கெடுக்கும் போதுதான் ஆண்-பெண் சமநிலைக்கான அடிப்படைகள் அமையும். சமையலும், குழந்தை வளர்ப்பும் பெண்களுக்கு மட்டுமே உரியவை என்பதில் மாற்றம் வரவேண்டும். இவற்றை ஆணும் பெண்ணும் பகிர்ந்து கொள்ள வேண்டும்.

ஏதாவது புதிய பாணியில் பெண் பிள்ளைகள் உடை உடுத்தினால் உடனே ‘ஆபாசம்’ என்று வசைபாடாமல், பொறுமையாகக் கவனித்துப் பின் கருத்துச் சொல்லலாம். இறுக்கமான முழுக்கால் சட்டை (leggings) இளம் பெண்கள் அணியத் தொடங்கிய காலத்தில் “ஆபாசம்” என்ற ஆணோசை அதிர்வுகளை உண்டாக்கியது. இப்போது அவ்வுடை இயல்பாகிவிட்டது.

மனிதர்கள் தங்களை அழகுபடுத்திக் கொள்வது ஆணுக்கும் பெண்ணுக்கும் உள்ள பொது உளவியல். பிறர் கண்ணில் நாம் அழகாகத் தெரிய வேண்டும் என்பதே இதன் சாரம். இது தவறில்லை. ஆனால் மிகை ஈர்ப்புக்காக மிகை ஒப்பனை தேவை இல்லை.

இந்த மகளிர் நாளை ஒட்டி (2023 மார்ச்சு 😎 நடிகை குஷ்பு ஒரு செய்தி குறிப்பிட்டிருந்தார். அவர் இப்போது பாசகவில் இருக்கிறார். அவரை அனைத்திந்திய மகளிர் ஆணையத்தின் உறுப்பினராக மோடி அரசு அமர்த்தியுள்ளது. அந்நாளை ஒட்டி குஷ்பு பேசியது அது. அவருடைய தந்தையார் குஷ்புவுக்கு 8 அகவையிலிருந்து 15 அகவை வரை பாலியல் தொல்லைகள் தந்தார் என்றார். அதே வேளை குஷ்புவின் தாயார் தன் கணவரைத் தெய்வமாகப் போற்றினார் என்றும் கூறினார்.

குஷ்புவின் அரசியல் தேர்வு குறித்து அவர்மீது, எனக்குத் திறனாய்வுண்டு. ஆனால் அவர் சொன்ன இச்செய்தியை நாளேட்டில் படித்தபோது குஷ்புவின் மீது ஆழந்த இரக்கமும் மதிப்பும் ஏற்பட்டது.

வீட்டில் தொடங்கி வீதிவெளி வரை நிலவும் ஆணாதிக்கத்தின் வடிவங்களில் அதுவும் ஒன்று!

மனைவியின் விருப்பம் இல்லாமல் கணவனே கட்டாயப் பாலுறவு கொள்ளக் கூடாது, அப்படிச் செய்தால் அது வன்முறை என்று உச்சநீதிமன்றத் தீர்ப்பு அண்மையில் வந்தது. இது சரியான தீர்ப்புதான்!

தமிழ்த்தேசியர்கள் இவற்றில் எல்லாம் கவனம் செலுத்தி பெண்ணுரிமை அடிப்படை மனித உரிமை என்றுணர்ந்து பேணவேண்டும்.

ஆணும் பெண்ணும் இணைந்துதான் பெண்ணுரிமை மீட்புப் போராட்டம், உழைப்புப் பகிர்வுக் களப்பணிகள் முதலியவற்றைச் செய்ய வேண்டும். ஒருவரை ஒருவர் வீழ்த்தும் பகை முரண்பாடல்ல இது! பெண்ணுரிமை மீட்புப் போராட்டத்தின் இந்தச் சிக்கல்களை ஆணும் புரிந்து கொள்ள வேண்டும், பெண்ணும் புரிந்து கொள்ள வேண்டும். இப்போராட்டத்தில் இருபால் இணக்கம் ஏற்பட வேண்டுமாயின் முதலில் ஆண்கள் பெண்ணுரிமைப் போராட்டங்களுக்கும் செயல்பாடுகளுக்கும் முன்கை எடுக்க வேண்டும். இதை முன்நிபந்தனையாகக் கூறவில்லை. ஆணின் பங்களிப்பு அதிகமாக வேண்டும் என்பதற்காகக் கூறுகிறேன்.

பெண்களின் சமூகப் பொறுப்பு
-------------------------------------------
பிள்ளைகளை ஆங்கில வழியில் படிக்க வைத்து, தமிழைப் புறக்கணிக்கும் போக்கு தமிழ்நாட்டுக் குடும்பங்களில் பெருகிவிட்டது. தமிழ் உரிமை பேசும் ஆண்களிடம் “உங்கள் பிள்ளைகளையே தமிழ்ப்புறக்கணிப்பில் ஈடுபடுத்தலாமா” என்று கேட்டால் பெரும்பாலோர் சொல்லும் விடை “வீட்டில் துணைவியார் வற்புறுத்தல்” என்பதுதான். “குடும்ப அமைதியைக் கெடுக்க வேண்டாம் என்று நானும் ஒத்துப் போய்விட்டேன்” என்கிறார்கள்.

தமிழ் இனம், தமிழ்மொழி, தமிழர் தாயகம் முதலிய சமூக இலட்சியங்களில் பெண்கள் தங்களை இணைத்துக் கொள்ள வேண்டும். இதுதான் புதுமைப் பெண்ணின் அடையாளம்!

அதேபோல் பிள்ளைகளுக்குத் தூய தமிழ்ப்பெயர்கள் சூட்டுவதைத் தவிர்த்து, சமற்கிருதப் பெயர்களைச் சூட்டும் இழிவு, கொள்ளை நோய்போல் தமிழ்ச் சமூகத்தில் பரவிவிட்டது. பிராமணப் புரோகிதரிடம் போய், பிள்ளைக்குப் பெயர் வைக்க முதலெழுத்து அல்லது முழுப்பெயர் கேட்பது, அவர்கள் ஆரிய சமற்கிருதப் பெயர்களைச் சொல்வது, அவற்றைச் சூட்டுவது என்ற நடைமுறை பெருகிவிட்டது. திராவிட மாடல் ஆட்சிகள்தாம் ஐம்பதாண்டுகளுக்கு மேல் இங்கு நடக்கின்றன. இக்காலத்தில் ஆரிய ஊடுருவல் எல்லாத் துறையிலும் அதிகமாகிவிட்டது.

ஆரிய ஊடுருவலைத் தடுத்தால்தான் தமிழ்ச்சமூகம் தற்சார்புள்ள தனித்தன்மையுள்ள இனமாக நீடிக்க முடியும். ஆரிய ஊடுருவலை அடையாளம் காண்பதில் ஆண்களுக்கும் பெண்களுக்கும் சமமான பொறுப்பு வேண்டும். ஆண்களில் சிலர் பெண்களின்மீது பொறுப்புக் கூறி நழுவிக் கொள்ளும்போக்கும் உண்டு.

“பெண்ணடிமை தீரும் மட்டும், பேசும் திருநாட்டின் மண்ணடிமை தீர்ந்து வருதல் முயற்கொம்பே” என்றார் பாவேந்தர். தமிழ்த்தேசியத்தை முன்னெடுப்பதில் பெண்கள் தன்முயற்சியுடன் செயற்களம் வரவேண்டும்.

அடுத்து குடும்ப உறவுகளில் விரிசல் வரும்போது பெண்களையே காரணமாகக் கூறுகிறார்கள். பழைய கூட்டுக் குடும்பங்களை மீட்க முயல வேண்டியதில்லை. கணவனுடைய பெற்றோர் அல்லது மனைவியுடைய பெற்றோர் கைவிடப்படக் கூடாது. கணவன் தாய்-தந்தையைக் குடும்பத்தோடு இணைத்துப் பாதுகாக்க மனைவி துணையாக இருக்க வேண்டும். அதேபோல் மனைவியின் தாய்-தந்தையைப் பாதுகாக்க வேண்டிய சூழல்களில் அவர்களை அழைத்து வந்து குடும்பத்தில் வைத்துப் பராமரிக்க கணவன் துணையாக இருக்க வேண்டும். அகவை முதிர்ந்த அன்னை தந்தையரை அனாதைகள் போல் ஆக்கிவிடக் கூடாது.

பெண்ணுரிமை வளர்க! பேசுந் தமிழ்நாட்டின் மண்ணுரிமை வெல்க!

=====================================
தலைமைச் செயலகம்,
தமிழ்த்தேசியப் பேரியக்கம்
=====================================
பேச: 9443918095, புலனம் : 9841949462
முகநூல் : www.fb.com/tamizhdesiyam
ஊடகம் : www.kannottam.com
இணையம் : www.tamizhdesiyam.com
சுட்டுரை : www.twitter.com/Tamizhdesiyam
காணொலிகள் : youtube.com/Tamizhdesiyam
=====================================

Labels: , ,

0கருத்துக்கள்:

Post a Comment

<< முகப்பு பக்கம்


தோழர் மணியரசன்
அவர்களின் படைப்புகள் மற்றும் கருத்துக்களை இத்தளத்தில் காணலாம்.
வாசகர்களின் கருத்துக்களும் வரவேற்கப்படுகின்றன.

Web This Blog

தொகுப்பு

முந்தைய பதிவுகள்

தோழமைத் தளங்கள்