<body><script type="text/javascript"> function setAttributeOnload(object, attribute, val) { if(window.addEventListener) { window.addEventListener('load', function(){ object[attribute] = val; }, false); } else { window.attachEvent('onload', function(){ object[attribute] = val; }); } } </script> <div id="navbar-iframe-container"></div> <script type="text/javascript" src="https://apis.google.com/js/platform.js"></script> <script type="text/javascript"> gapi.load("gapi.iframes:gapi.iframes.style.bubble", function() { if (gapi.iframes && gapi.iframes.getContext) { gapi.iframes.getContext().openChild({ url: 'https://draft.blogger.com/navbar/6955529389241309188?origin\x3dhttp://thozharmaniyarasan.blogspot.com', where: document.getElementById("navbar-iframe-container"), id: "navbar-iframe" }); } }); </script>

"பழைய பக்தவத்சலம் ஆட்சியைத்தான் புதிய ஸ்டாலின் நடத்துகிறார்!" ----- பெ.மணியரசன், தலைவர், தமிழ்த்தேசியப் பேரியக்கம்.

Friday, March 17, 2023


==========================================

பழைய பக்தவத்சலம் ஆட்சியைத்தான்

புதிய ஸ்டாலின் நடத்துகிறார்!
==========================================
பெ.மணியரசன்,
தலைவர்,
தமிழ்த்தேசியப் பேரியக்கம்.
==========================================

இந்திரா காந்தியின் நெருக்கடி நிலைபோல்தான் தமிழ்நாட்டில் மு.க.ஸ்டாலின் ஆட்சிக்காலம் இருக்கிறது. பொதுக்கூட்டங்கள், ஊர்வலங்கள், ஆர்ப்பாட்டங்கள் நடத்தக் கண்மூடித்தனமாகத் தடை போடுகிறது தி.மு.க. அரசு.

அடுத்து இந்திக்காரர்களிடம் பாராட்டுப் பெறுவதற்காகத் தமிழ்நாட்டிலேயே தமிழர்களின் அடிப்படை சனநாயக உரிமைகளைப் பறிக்கிறது தி.மு.க. ஆட்சி!

தி.மு.க.வின் அடிப்படைக் கொள்கையே தமிழின மறைப்புத் திராவிட இனக் கொள்கை! இப்போது அதன் அடுத்த கட்ட வளர்ச்சியாக “இந்தியன்” என்ற இனக்கொள்கையில் தீவிரம் காட்டி தமிழின உணர்வாளர்களைத் தாக்குகிறது.

தமிழ்நாட்டின் ஆட்சித் துறை அதிகாரிகள், காவல்துறை அதிகாரிகள் எல்லாம், இங்கு புலம் பெயர்ந்து வாழும் இந்திக்காரர்களுக்குக் கீழ்ப்படிதல் உள்ள சேவகர்கள் என்று மாற்றியுள்ளது. மண்ணின் மக்களாகிய தமிழர்களை இந்திக்காரர்களுக்கு இடையூறு தருவோர் என்று சந்தேகப் பட்டியலில் வைத்துள்ளது.

ஆர்ப்பாட்டம், ஊர்வலம், மறியல், முற்றுகை என்பவை சனநாயகத்தில் ஏற்கப்பட்ட போராட்ட வடிவங்கள். ஆனால் இவற்றைத் தமிழ்நாட்டில் பல அமைப்புகளால் நடத்த முடியவில்லை. பா.ச.க. மட்டுமே நினைத்த நேரத்தில் இப்படிப்பட்ட வடிவங்களில் போராட்டம் நடத்த முடிகிறது. தமிழ்த் தேசியப் பேரியக்கத்தின் அண்மைக் கால அனுபவங்களையே சான்றுகளாக எடுத்துக் கொள்ளலாம்.

தி.மு.க.தேர்தல் அறிக்கையில் கொடுத்த வாக்குறுதிப்படி 75 விழுக்காடு வேலை தனியார் துறையில் தமிழர்களுக்கு வழங்கிடச் சட்டம் இயற்றக் கோரித் தஞ்சை மாவட்டம் செங்கிப்பட்டியில் 15.03.2023 அன்று நடந்த ஆர்பாட்டத்தைத் தடைசெய்து தோழர்களைத் தலைப்படுத்தியது காவல்துறை.

கடந்த 12.07.2022 அன்று கோவையில், தமிழ்நாட்டில் உள்ள இந்திய அரசு அலுவலகங்கள், நிறுவனங்கள், தொழிற்சாலைகளில் 90 விழுக்காடு வேலை தமிழர்களுக்கு வழங்கிடக் கோரியும் தமிழ்நாடு அரசு அதற்குச் சட்டம் இயற்றிட வலியுறுத்தியும் ஓர் ஆர்ப்பாட்டம் நடத்தியது தமிழத்தேசியப் பேரியக்கம். அஞ்சல் துறைத் தலைவர் (PMG) அலுவலகத்திற்கு அருகில், யாருக்கும் இடையூறின்றி சாலை ஓரத்தில் நடத்திய அதற்குத் தடை! சற்றொப்ப 700 பேரை தளைப்படுத்தி மண்டபத்தில் அடைத்தனர். மாலை 6:00 மணிக்கு மேல் விடுவித்தனர். இப்பொழுதெல்லாம் இந்திய அரசு நிறுவனங்களில், தமிழ்நாட்டில் 95% வேலைகள் இந்திக்காரர்களுக்கும் இன்னபிற வெளிமாநிலத்தவர்க்கும் தருகிறார்கள். அவர்கள் நடத்தும் தேர்வுகள் சூழ்ச்சியானவை!

ஓசூர் கெலமங்கலம் டாட்டா மின்னணுத் தொழிற்சாலையில் பல்லாயிரக் கணக்கில் வடநாட்டு இந்திப் பெண்களை வேலையில் சேர்க்கிறார்கள். தகுதியுள்ள தமிழ்ப் பெண்களை இன அடிப்படையில் புறக்கணிக்கிறார்கள். இந்த இன ஒதுக்கலை எதிர்த்தும் மண்ணின் மக்களுக்கு 90% வேலை கோரியும் 09.12.2022 அன்று அந்த டாட்டா ஆலை வாயிலுக்கு வெளியே முற்றுகைப் போராட்டம் நடத்தத் தமிழ்த் தேசியப் பேரியக்கம் அறிவிப்பு வெளியிட்டது. முறைப்படி அனுமதியும் கோரியது.

அந்த முற்றுகைப் போராட்டத்தைத் தடை செய்து பேரியக்கத்திற்கு எதிரான ஒடுக்குமுறைகளைக் கட்டவிழ்த்து விட்டது தி.மு.க.ஆட்சி! எந்தெந்த ஊர்களில் இருந்து ஊர்திகளில் அந்த முற்றுகைக்கு ஆண்களும் பெண்களும் புறப்படுகிறார்களோ, அங்கங்கே முன்னணித் தோழர்களைக் காவல் நிலையங்களில் கொண்டு போய் உட்கார வைத்து விட்டார்கள். ஊர்த்திகளுக்கு முன் மறித்துக் கொண்டு காவல்துறையினரை நிறுத்திவிட்டனர். இது போன்ற ஒடுக்கு முறைகள் மு.க.ஸ்டாலினின் திராவிட மாடல் ஆட்சியில்தான் அரங்கேறி இருக்கின்றன.

டாட்டா ஆலை வாயிலுக்கு வெளியே நடத்த இருந்த போராட்டத்தை இரண்டு கிலோ மீட்டர் தள்ளி பக்கத்து ஊரில் நடத்த தமிழ்தேசியப் பேரியக்கம் ஒப்புக் கொண்டு – காவல்துறையும் ஒப்புக் கொண்டு அப்போராட்டம் நடந்தது. ஆனால் அங்கே காவல் துறையினர் ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்றோரைத் தளைப்படுத்தி பத்து கிலோ மீட்டருக்கு அப்பால் உள்ள ஒரு மண்டபத்தில் கொண்டு போய் சற்றொப்ப 600 பேரை – ஆண்களையும் பெண்களையும் அடைத்தனர்.

டாட்டாவுக்குத்தாள் பணிந்து சேவகம், தமிழர்களுக்குத் கோல் கொண்டு தாக்குதல்! இதுதான் தி.மு.க.வின் திராவிட மாடல்! இதே மு.க.ஸ்டாலின் 2021 சட்டப்பேரவைத் தேர்தல் அறிக்கையில், ஆட்சிக்கு வந்தால் தனியார் துறையில் தமிழர்களுக்கு 75 விழுக்காடு வேலை வழங்கிடச் சட்டம் இயற்றுவோம் என்று வாக்குறுதி அளித்தார்.

அண்மையில் 27.01.2023 அன்று தமிழ்க் கடவுள் பழனி முருகன் கோயில் குடமுழுக்கு வந்தது. அக்குடமுழுக்கை உயர்நீதி மன்றத் தீர்ப்பின் படி 50 விழுக்காடு தமிழ் மந்திரம் ஓதி நடத்த வேண்டும் என்று கோரிக்கை வைத்து 20.01.2023 அன்று பழனியில் நமது தெய்வத் தமிழ்ப் பேரவை ஆர்ப்பாட்டம் அறிவித்தது. அந்த ஆர்ப்பாட்டத்திற்குத் தடை விதித்தது காவல் துறை! ஒலி பெருக்கி வைக்காமல் தடுத்தது. காவல் துறையினரைக் குவித்திருந்தது. அதையும் மீறி ஆர்ப்பாட்ட முழக்கமெழுப்பினர் ஆன்மிகச் சான்றோர்கள்; பூசைகள் செய்வோர்! அவர்கள் கணிசமாகத் கலந்து கொண்டு முழக்கம் எழுப்பியதால் யாரையும் தளைப்படுத்தவில்லை காவல்துறை!

அத்தோடு பழனி முருகன் கோயில் குடமுழுக்கைக் கருவறை, வேள்விச்சாலை, கோயில் கலசம் என மூன்று இடங்களிலும் பிராமண புரோகிதர்களைக் கொண்டு சமற்கிருதத்திலேயே நடத்தியது மு.க.ஸ்டாலின் ஆட்சி! தமிழ் மந்திரம் புறக்கணிக்கப்பட்டது.

“வீழ்வது நாமாக இருக்கட்டும் வாழ்வது தமிழாக இருக்கட்டும்” என்று சொல்லிச் சொல்லித் தமிழை வீழ்த்தி வருகிறது தி.மு.க.! தலைவர்கள் குபேர வாழ்க்கை வாழ்கிறார்கள்.

கடந்த பிப்ரவரி (2023) இறுதியில், புது தில்லி தொடங்கி இந்தி மண்டலங்களில் பா.ச.க.வின் தகவல் தொழில் நுட்பப்பிரிவினர் (IT group) ஒரு வதந்தியைத் திட்டமிட்டு பரப்பினர். தமிழ்நாட்டில் வேலைபார்க்கும் இந்திக்காரர்களைத் தமிழின வெறியர்கள் தாக்குகிறார்கள். இதோ எட்டுப்பேர் பிணங்களாகக் கிடப்பதைப் பாருங்கள் என்று ஊடகங்களில் காட்டினார்கள்.தமிழ்நாட்டில் இந்திகாரர்கள் உயிருக்குப் பாதுகாப்பில்லை” என்றனர்.

வட இந்தியா கொந்தளித்தது. பீகார் சட்டப்பேரவையில் பா.ச.க.வினர், “தமிழ்நாட்டில் எங்கு பார்த்தாலும் பிணங்கள் கிடக்கின்றன. இந்திக்காரர்கள் தமிழ் வெறியர்களால் தாக்கப்பட்டு குருதிக் காயங்களுடன் துடித்துக் கொண்டு கிடக்கிறார்கள்.” என்று ஆவேசமாகத் கத்தி, பேரவை நிகழ்சிகளை முடக்கினார்கள். அடுத்த நாளும் இதே போல் சட்டப்பேரவையைப் பா.ச.க.வினர் முடக்கினர்.

உடனே நிதிஷ்குமார் – தேஜஸ்வி அரசு தமிழ்நாட்டில் ஆய்வு செய்ய பீகார் அதிகாரிகளைக் கொண்ட குழுவை அனுப்பியது. அக்குழுவுக்குச் சேவகம் செய்ய தமிழ்நாட்டு உயர் அதிகாரிகளை அனுப்பினார் மு.க.ஸ்டாலின். மிச்சம் மீதியுள்ள தமிழ்நாட்டின் இறையாண்மையைக் காலி செய்தார்.

இந்திக்காரர்கள் தங்கியுள்ள, வேலை செய்கின்ற எல்லா இடங்களுக்கும் இண்டு இடுக்குகளுக்கும் பீகார் குழுவினரும், தமிழ்நாட்டு ஆட்சித் துறை மற்றும் காவல்துறையினரும் சென்று இந்திக்காரர்களைத் தமிழர்கள் தாக்குகிறார்களா, மிரட்டுகிறார்களா என்று கேட்டார்கள். “நாங்கள் எப்போதும் போல் இயல்பாக உள்ளோம்; யாரும் எங்களைத் தாக்கவில்லை” என்று இந்திக்காரர்கள் கூறினார்கள்.

ஆனால் அதன்பிறகும் தமிழ்நாடு காவல் துறைத் தலைமை இயக்குநர் முனைவர் சி.சைலேந்திரபாபு, காவல் உயர் அதிகாரிகளுடன் காணொலிக் கூட்டம் நடத்தி, அதில், இந்திக்காரர்கள் தங்கியுள்ள பகுதிகளில் 24 மணிநேரமும் காவல் துறையினர் ரோந்து சுற்றிப் பாதுகாப்பு தரவேண்டும். அவர்களுடன் புலனக் (வாட்ஸ் ஆப்) குழு உருவாக்கித் தொடர்பு வைத்துக் கொள்ள வேண்டும், அவர்கள் புகார் சொன்னால் உடனுக்குடன் நடவடிக்கை எடுக்க வேண்டும், அதை உடனுக்குடன் மேலதிகாரிகளுக்குத் தெரிவிக்க வேண்டும். அவர்களுக்குக் காவல் துறை தொலைபேசி எண்களை அந்தந்தப் பகுதிக் காவல்துறையினர் போய்க் கொடுக்க வேண்டும் என்பன போன்ற கட்டளைகள் இட்டார்.

“இந்திக்காரர்களுக்கு எதிராக எந்தத் தாக்குதலும் நடைபெறவில்லை என்று கள ஆய்வு செய்து நீங்கள்தான் (காவல்துறை தலைமை இயக்குநர்) அறிக்கை கொடுத்தீர்கள். பீகார் குழுவும் விசாரணை நடத்தி அதையே சொன்னது. பின்னர் ஏன் இத்தனை தீவிரக் கெடுபிடிகள் செய்கிறீர்கள். இதனால், தமிழ்நாட்டில் தனிச் சலுகை உள்ளவர்கள் இந்திக்காரர்கள்; சந்தேகப் பட்டியலில் உள்ளவர்கள் தமிழர்கள் என்ற மனநிலை இந்திக்காரர்களிடமும் தமிழர்களிடமும் உருவாகும்.

ஈரோடு, திருப்பூர், சூளகிரி, சூலூர் போன்ற இடங்களில் இந்திக்காரர்கள்தான் தமிழர்களைத் தாக்கியுள்ளார்கள். இனிமேல் இந்திக்காரர்கள் தாக்கினால் காவல்நிலையத்தில் புகார் கொடுக்கக் கூடத் தமிழர்கள் அச்சப்படும் சூழ்நிலையை உருவாக்கி விட்டீர்கள். அத்துடன் இந்திக்காரர்கள் வேலை செய்யும் இடங்களில் வேலை கொடுத்த தமிழர்களை மதிக்காத – அச்சுறுத்துகிற அபாயம் ஏற்பட்டுள்ளது. அருள் கூர்ந்து இந்தக் கெடுபிடிகளைக் கைவிடுங்கள். குற்றம் நடந்தால் நடவடிக்கை எடுங்கள் என்று காவல் தலைமை இயக்குநருக்கு எழுதிய கடிதத்தில் கூறியிருந்தேன்.

இவ்வாறான கெடுபிடிகளைக் கைவிடக் கோரியும், ஸ்டாலின் அவர்களின் தேர்தல் வாக்குறுதிப்படி – தமிழ்நாட்டில் தனியார் துறையில் 75 விழுக்காடு வேலை தமிழர்களுக்கு வழங்கும் சட்டம் இயற்றக் கோரியும் 08.03.2023 அன்று தஞ்சையில் எமது தமிழ்த்தேசியப் பேரியக்க அலுவலகத்தில் செய்தியாளர் சந்திப்பு வைத்திருந்தேன்.

தஞ்சைக் கீழவாசல் காவல் நிலைய ஆய்வாளர் தலைமையில் காவல்துறையினர் எங்கள் அலுவலகத்திற்குள் வந்து செய்தியாளர் சந்திப்புக்கு அனுமதி இல்லை நிறுத்திவிடுங்கள் என்றார்கள். சொந்த அலுவலகத்தில் செய்தியாளர்கள் சந்திப்புக்கு அனுமதி கோரும் புதிய முறையை உருவாக்கியுள்ளார்கள். தொலைக்காட்சி, அச்சு ஊடகச் செய்தியாளர்கள் நிறையப் பேர் வந்து விட்டதால் பின்வாங்கிப் போய்விட்டார் காவல் ஆய்வாளர்.

அன்று (08.03.2023) மாலை குடந்தை சாமிமலையில் தி.மு.க. தேர்தல் அறிக்கைப்படி 75 விழுக்காடு வேலை தமிழர்களுக்கென்று சட்டம் இயற்றக்கோரி ஆர்ப்பாட்டம் செய்த தமிழ்த்தேசியப் பேரியக்கத் தோழர்களைத் தளைப்படுத்தி ஆர்ப்பாட்டத்தைக் கலைத்தனர் காவல்துறையினர்.

அதே போல் 15.03.2023 அன்று மாலை 6:00 மணியளவில் தஞ்சை மாவட்டம் பூதலூர் வட்டம் செங்கிப்பட்டி – சாணூரப்பட்டியில், மேற்கண்ட 75% வேலைச்சட்டத்திற்காக நடக்க இருந்த ஆர்ப்பாட்டத்திற்குத் தடை விதித்து அதில் கலந்து கொள்ள முன் வந்தோரை தளைப்படுத்தினர் காவல்துறையினர். என்னையும், தஞ்சை மாவட்டச் செயலாளர் தோழர் நா.வைகறை, பூதலூர் ஒன்றியச் செயலாளர் தோழர் பி.தென்னவன் உட்பட சற்றொப்ப 50 பேர்களைத் தளைப்படுத்தினர்.

மேற்கண்ட எல்லாக் கைதுகளிலும் எங்கள் மீது வழக்குகள் பதிவு செய்துள்ளனர். அவற்றைக் கைவிடாமல் நீதிமன்றங்களுக்கு அனுப்பினால் தமிழ்நாட்டின் பல்வேறு ஊர்களில் எங்கள் மீது வழக்கு நடக்கும். நாங்கள் அலைய வேண்டும். ஒவ்வொரு ஊரிலும், ஒவ்வொரு வழக்கிலும் நீதிமன்ற படிகள் ஏறி இறங்கும் போது அவர்கள் மு.க.ஸ்டாலினை “வாழ்த்துவார்கள்”.

அப்படி என்ன குற்றம் அல்லது வன்முறை நாங்கள் செய்தோம்? மண்ணின் மக்களாகிய தமிழர்களுக்கும், தாய்மொழியான தமிழுக்கும் சட்டப்படி உள்ள உரிமைகளைக் கோருகிறோம். இது குற்றமா? இவையெல்லாம் குற்றம் என்கிறது ஸ்டாலின் ஆட்சி! தமிழ் இனத் தற்காப்பு உணர்வுகளைக் குற்றம் என்கிறது. தமிழ்த்தாயை முடக்குகிறது! அன்னை மண்ணிலேயே தமிழர்களை அயலார்க்கு அடிமை ஆக்குகிறது தி.மு.க. ஆட்சி!

1960களில் பக்தவத்சலம் நடத்திய காங்கிரசு ஆட்சியைத்தான் 2020களில் மு.க.ஸ்டாலின் நடத்துகிறார். அப்போது இந்தித் திணிப்பை எதிர்த்து கூடமுடியாது. போராட முடியாது. வீடுகளில் கூட கருப்பு கொடி ஏற்ற முடியாது. 1965-இல் மாணவர்களும் மக்களும் போராடிய போது சற்றொப்ப 400 பேரை சுட்டுக் கொன்றது பக்தவத்சலம் ஆட்சி! அந்த பக்தவத்சலத்திற்கு ஸ்டாலின் அப்பா சென்னையில் மணி மண்டபம் கட்டித் திறந்தார். மகனோ அதே பக்தவத்சலம் ஆட்சியை நடத்தத் தொடங்கியுள்ளார். இந்தியும் இந்திக்காரர்களும் தமிழ்நாட்டில் தனிச்சிறப்பு பெறுகின்றனர்.

அந்தக் காலத்தில் – ஆரிய ஆதிக்கத்தை வீழ்த்த இளந்தமிழர்களை அழைத்தார் பாவேந்தர்! இப்போது ஆரிய ஆதிக்கத்தை மட்டுமல்ல, அதன் புதிய பரிவாரங்களையும் எதிர்த்திட உங்களை அழைக்கிறார்!

பூட்டிய இரும்புக் கூட்டின் கதவு
திறக்கப்பட்டது! சிறுத்தையே வெளியில் வா!
எலி என உன்னை இகழ்ந்தவர் நடுங்கப்
புலியெனச் செயல் செய்யப் புறப்படு வெளியில்!
*****
மனிதரில் நீயும் ஓர் மனிதன் மண்ணன்று!
இமை திற; எழுந்து நன்றாய் எண்ணுவாய்!
தோளை உயர்த்து; சுடர் முகம் தூக்கு!
மீசையை முறுக்கி மேலே ஏற்று!
*****
எங்கள் வாழ்வும் எங்கள் வளமும்
மங்காத தமிழென்று சங்கே முழங்கு!
எங்கள் பகைவர் எங்கோ மறைந்தார்
இங்குள்ள தமிழர்கள் ஒன்றாதல் கண்டே!
-பாவேந்தர்
=====================================
தலைமைச் செயலகம்,
தமிழ்த்தேசியப் பேரியக்கம்
=====================================
பேச: 9443918095, புலனம் : 9841949462
முகநூல் : www.fb.com/tamizhdesiyam
ஊடகம் : www.kannottam.com
இணையம் : www.tamizhdesiyam.com
சுட்டுரை : www.twitter.com/Tamizhdesiyam
காணொலிகள் : youtube.com/Tamizhdesiyam
===================================== 

Labels: , ,

0கருத்துக்கள்:

Post a Comment

<< முகப்பு பக்கம்


தோழர் மணியரசன்
அவர்களின் படைப்புகள் மற்றும் கருத்துக்களை இத்தளத்தில் காணலாம்.
வாசகர்களின் கருத்துக்களும் வரவேற்கப்படுகின்றன.

Web This Blog

தொகுப்பு

முந்தைய பதிவுகள்

தோழமைத் தளங்கள்