<body><script type="text/javascript"> function setAttributeOnload(object, attribute, val) { if(window.addEventListener) { window.addEventListener('load', function(){ object[attribute] = val; }, false); } else { window.attachEvent('onload', function(){ object[attribute] = val; }); } } </script> <div id="navbar-iframe-container"></div> <script type="text/javascript" src="https://apis.google.com/js/platform.js"></script> <script type="text/javascript"> gapi.load("gapi.iframes:gapi.iframes.style.bubble", function() { if (gapi.iframes && gapi.iframes.getContext) { gapi.iframes.getContext().openChild({ url: 'https://www.blogger.com/navbar/6955529389241309188?origin\x3dhttp://thozharmaniyarasan.blogspot.com', where: document.getElementById("navbar-iframe-container"), id: "navbar-iframe" }); } }); </script>

ஜோசப் ஸ்டாலினை மறுக்கிறோம்! குடித்தேசிய மறுப்பு - எதிர்வினைக்கு மறுவினை!" ----- பெ. மணியரசன், தலைவர் – தமிழ்த்தேசியப் பேரியக்கம்

Sunday, April 23, 2023


ஜோசப் ஸ்டாலினை மறுக்கிறோம்!

குடித்தேசிய மறுப்பு - எதிர்வினைக்கு மறுவினை!
=======================================
பெ. மணியரசன்,
தலைவர் – தமிழ்த்தேசியப் பேரியக்கம்
=======================================

நம்முடைய “கண்ணோட்டம்” வலையொளியில், “குடித்” தேசியம் கூடாது என்ற தலைப்பில் நான் ஓர் உரை நிகழ்த்தியிருந்தேன். நண்பர்கள் பேசும் குடித்தேசியம் என்பது சாரத்தில் சாதித் தமிழ்த்தேசியம்!

நம்முடைய தமிழ்த்தேசியர்களில் ஒரு சாரார் தமிழ்ச் சாதியை - தமிழ்க்குடி என்ற பெயரில் ஞாயப்படுத்தி - முதன்மைப் படுத்தி பேசுகின்றனர். அவர்கள் இவ்வாறு செய்வதற்கு தமிழ்நாட்டில் வாழும் தெலுங்கைத் தாய்மொழியாகக் கொண்டவர்களைத் தமிழரல்லாதார் என்றும், தமிழர்களுக்குப் பகையானவர்கள் என்றும் அடையாளம் காட்டவே என்கின்றனர்.

தமிழ்த்தேசியத்தின் முதல் பெரும் பகை ஆற்றலாகத் தெலுங்கைத் தாய்மொழியாகக் கொண்டவர்களைக் கூறுவது இரண்டு வகைகளில் பிழையான கருத்தியல்.

ஆயிரக் கணக்கான ஆண்டுகளாகத் தமிழர்களைச் சூத்திரர்களாக்கி, பஞ்சமர் ஆக்கி, தமிழ் மொழியையும் தமிழர்களையும் தீண்டத் தகாதோர் ஆக்கி வைத்துள்ள ஆரிய-பிராமணிய ஆற்றல்களையும், அவர்களது இந்திய ஏகாதிபத்திய அரசையும், இந்தி ஆதிக்கக்காரர்களையும் முதன்மைப் பகை ஆற்றல்களாகப் பார்க்க மறுப்பதாகும்.

மரபுவழித் தமிழ்க் குடிகளைப் போலவே, தெலுங்கைத் தாய்மொழியாகக் கொண்ட மக்களும் ஆரியப் பிராமணிய வர்ணாசிரம ஆதிக்கத்தால், இந்திய ஏகாதிபத்திய ஆட்சியாளர்களால், இந்திக்காரர்களால் தமிழ்நாட்டில் ஒடுக்கப்பட்ட மக்களாவர்! அம்மக்களைத் தமிழர்களின் முதற்பெரும் பகைவர்களாக சித்தரித்துப் பகைமை காட்டினால், இவர்கள் ஆரியத்துவா - இந்திய ஏகாதிபத்திவாத அரசியல் பக்கமே சேர்வர். பாசக, காங்கிரசு போன்ற கட்சிகளில் சேர்வார்கள். அவற்றை ஆதரிப்பார்கள் அல்லது தமிழர் அடையாளத்தை மறைத்துத் திராவிடத்தைத் திணிப்பார்கள். திமுக - அதிமுக போன்ற திராவிடத் திரிபுக் கட்சிகளிடம் திரள்வார்கள்.

தமிழ்த் தேச இறையாண்மை மீட்பை - தமிழ்த் தேசக் குடியரசு அமைப்பதை முதன்மை இலட்சியமாக்கிக் களப் போராட்டங்களில் நிற்போர் முதன்மைப் பகை ஆற்றல்களைச் சரியாக அடையாளம் கண்டு நமக்கான அணிவகுப்பைப் பெருக்கிக் கொள்ள வேண்டும்.

குமுகப் (சமூகப்) புரட்சியானாலும், நாட்டு விடுதலைப் புரட்சியானாலும், அதில் நண்பர்களைப் பெருக்கிக் கொள்ள வேண்டும், பகைவர்களைச் சுருக்கிக் கொள்ள வேண்டும் என்று ஏற்கெனவே மார்க்சியப் புரட்சியாளர்கள் சரியாகவே கூறியுள்ளார்கள்.

பகைவர்களை வீழ்த்துவதற்கு நாம் நடத்தும் போராட்டம், பகைவர்களை விரட்டுவது மட்டுமல்ல, நம்மிடம் உள்ள அழுக்குகளையும் களைந்துவிடும் என்றார்கள் புரட்சியாளர்கள்!

தமிழர்களாகிய நம்மிடம் உள்ள அழுக்குகள் யாவை?

சாதி, மத உயர்வு தாழ்வு பார்ப்பது, பெண்ணுரிமை மறுப்பு, அயல்மொழி மோகம், நுகர்வு வாழ்வியல் போன்றவை நம்மிடம் உள்ள அழுக்குகள்!

தமிழ்த்தேச இறையாண்மை மீட்பை முதன்மை இலக்காகக் கொண்டும், தமிழர் வாழ்வியல் மறுவார்ப்பை இணைக் குறிக்கோளாகக் கொண்டும் களத்தில் நிற்கிறது எமது தமிழ்த்தேசியப் பேரியக்கம்! போராட்டங்கள், கைதுகள், சிறை செல்லல், வழக்குகள் எனத் தொடர்ந்து இயங்கி வருகிறது. அதே வேளை, தமிழ்த்தேசியக் கருத்தியலைத் தனிச் சிறப்பான மெய்யியல் ஆக்கும் பணிகளிலும் காத்திரமான பங்களிப்புகளை வழங்கி வருகிறது. நாங்களெல்லாம் பிறவி மேதைகள் அல்லர். முயன்று, தவறி, கற்றுக் கொள்ளும் புரட்சியாளர்கள். ஒத்த கருத்துடையோருடன் கூட்டு முயற்சிகளில் பங்கெடுத்து வருகிறது தமிழ்த்தேசியப் பேரியக்கம்!

அகமன ஆத்திரங்களுக்குப் பலியாகி அவற்றையே தமிழ்இனக் கொள்கைகளாக்கிவிடக் கூடாது என்பதில் எச்சரிக்கையாக இருக்கிறோம்.

எதிர்வினைக்கு மறுவினை!
-------------------------------------
நான் பேசியிருந்த “குடித் தமிழ்த்தேசியம்” கூடாது என்ற உரைக்கு நம்முடைய தமிழறிஞர் பெங்களூர் குணா அவர்கள் எதிர்வினை ஆற்றியிருந்தார்கள். அது வருமாறு:

“ஒரு பொது மொழியையும் தனி நிலப் பரப்பையும் பொருளியல் வாழ்க்கையையும் தழுவிய ஓர் உளத்தியலின் வழிவந்த ஒரு பொதுப் பண்பாட்டையும் அடியொற்றி வரலாற்று வழியில் தோன்றிய ஒரு நிலையான மக்கட் குமுகமே ‘தேசம்’ எனப்படும். (A nation is a historically constituted, stable community of people, formed on the basis of common language, territory, economic life and psychological make-up manifested in a common culture - J.V. Stalin; Marxism and the National Question - 1913) என்பது தேயம் அல்லது தேசம் என்பதற்கு யோசேப்பு இசுடாலின் எனும் பொதுவுடைமையர் தந்த வரையறை.

“இந்த வரையறையை மறுத்தோ, மாற்றியோ எந்தப் புதிய வரையறையும் இதுவரை தோன்ற வில்லை.

“இந்நிலையில், பொதுவுடைமையராயிருந்த தோழர் பெ. மணியரசன் அவர்கள் இந்த வரையறையைப் புறக்கணித்துவிட்டு (அல்லது மறுக்கும் வண்ணம்) ‘1956 க்கு முன் தமிழகத்தில் வந்தேறியவர்கள் எல்லாம் தமிழர்; அதற்குப்பிறகு வந்தோரெல்லாம் தமிழரல்ல’ என்று கூறுவது மேற்சொன்ன வரைமுறைக்கு முரணானது. ‘தேசிய இனம்’ எனும் கருதுகோளையே அது நகைப்புக் குரியதாக்குகிறது. என்ன செய்ய!” என்று முடித்துள்ளார் தோழர் குணா!

1956க்கு முன் தமிழகத்தில் வந்தேறியவர்கள் எல்லாம் தமிழர்கள் என்றும் அதற்குப் பின்வந்தவர்கள் எல்லாம் தமிழர்கள் அல்லர் என்றும் ஒரு போதும் நான் கூறியதில்லை!

வெளியார் யார், மண்ணின் மக்கள் யார் என்ற வரையறைபற்றிக் கூறும்போது, ஒரு நாட்டில் 100க்கு 100 ஒரே இனத்தவர் மட்டுமே வாழ்வது என்பது எங்கும் நடைமுறையில் இல்லை. சிறுபான்மை இனத்தவர் வெளியிலிருந்து வந்திருப்பார்கள். அதுபோல் 400, 500 ஆண்டுகளாகத் தமிழ்நாட்டில் வந்து குடியேறி வாழும் தெலுங்கு, கன்னடம், உருது. சௌராட்டிரம், மராத்தி போன்ற மொழிகளைப் பேசுவோர் எல்லாம் வெளியார் அல்லர். அவர்கள் தமிழ் மண்ணின் மக்களே! மரபுவழித் தமிழர்களுக்குள்ள உரிமைகள் அனைத்தும் இவர் களுக்கும் உண்டு. ஆனால் தமிழ்நாட்டில் தமிழ் மட்டுமே ஆட்சிமொழி, கல்வி மொழி. இதில் மாற்றம் கூடாது என்று கூறியிருந்தேன்.

மேலும் ‘400, 500 ஆண்டுகளுக்கு முன் தமிழ்நாட்டில் குடியேறிய பிற இனத்தாரில் தங்களது தாய்மொழி மறந்து தமிழையே தாய்மொழியாக ஆக்கிக் கொண்டவர்களும் உண்டு. குறிப்பாக ஒரு காலத்தில் தெலுங்கை வீட்டில் பேசிவந்த பலருக்கு இப்போது தெலுங்கு பேசத் தெரியாது; படிக்கத் தெரியாது. மிஞ்சிப்போனால் “அவ்வா”, “நாயினா” என்ற தெலுங்குச் சொற்களைத் தவிர அவர்களுக்கு வேறு தெலுங்குச் சொற்கள் தெரியாது’ என்று சொல்லியிருக்கிறேன். ‘அப்படிப்பட்டவர்கள் விரும்பினால் அவர்கள் தங்களைத் தமிழர்களாக அழைத்துக் கொள்ளலாம். தமிழர்களும் அதை ஏற்றுக் கொள்ள வேண்டும். விரும்பாதவர்கள் அவரவர் தாய்மொழியில் பேசிக் கொள்வதை நாம் மதிக்க வேண்டும். நாடோடி மக்களாக வாழ்ந்து வரும் நரிக் குறவர்களுக்குக் கூட எழுத்து வடிவம் இல்லாத அவர்களின் தாய்மொழிதான் தேவ மொழி! ஆரியப் பிராமணர்களைப் போல் சமற்கிருதம் தேவபாஷை, தமிழ் நீச பாஷை என்ற பார்வை தமிழர்களாகிய நமக்கு வேறு வடிவில் வந்துவிடக் கூடாது’ என்று கூறி வருகிறேன்.

1956 வரையறை என்பது, தமிழ்நாட்டில் யார் மண்ணின் மக்கள்; யார் வெளியார் என்று பிரிப்பதற்காகக் கூறப்படுகிறதே தவிர, யார் தமிழர், யார் தமிழரல்லாதார் என்ற வரையறைக்குக் கூறப்பட்டது அன்று.

யார் வெளியார், யார் மண்ணின் மக்கள் என்பதற்கு தமிழ்த்தேசியப் பேரியக்கம் வைத்துள்ள வரையறையை - காலவரம்பை - மறுக்கும் உரிமை எல்லோருக்கும் உண்டு. ஆனால், அதை யார் தமிழர், யார் தமிழர் அல்லாதார் என்பதற்குச் சொன்னதாகத் திரித்துப் பேசுவது சரியன்று; நேர்மையன்று!

வெளியார் யார் - மண்ணின் மக்கள் யார் என்பதற்குப் பல நாடுகளில் ஆண்டு வரம்பு வைத்துள்ளார்கள்.

இந்தியாவில் அசாமில், அயலார் யார் மண்ணின் மக்கள் யார் என்பதை வரையறுக்க, 1971-ஆம் ஆண்டு மக்கள் தொகைக் கணக்குப் பதிவை வரம்பு ஆண்டாக வைத்தனர். இது அப்போதைய தலைமை அமைச்சர் இராசீவ்காந்தி, வெளியாரை வெளியேற்றும் போராட்டம் நடத்திய அசாமிய மாணவர்கள் - இளைஞர்கள் அமைப்புடன் போட்ட ஒப்பந்தத்தில் உள்ள ஆண்டு வரம்பு. இதை உச்சநீதிமன்றம் அப்படியே ஏற்றதுடன் செயல்படுத்தும் பொறுப்பையும் ஏற்றுக் கொண்டது.

நாங்கள் ஏன் 1956-ஐ வரம்பு ஆண்டாக வைக்கிறோம்? இந்திய அரசமைப்புச் சட்டப்படி 1956-இல் இயற்றப் பட்ட மாநில மறுசீரமைப்புச் சட்டம், மொழி-இன அடிப்படையில் மாநிலங்களைப் பிரித்தும், புதிதாக உருவாக்கியும் அமைத்தது. அதன்படிதான் தமிழ்நாடு தமிழர்களின் தாயக மாநிலமாக 1956 நவம்பர் 1-இல் உருவாக்கப்பட்டது. அரசு ஆவணத்தில் இருந்து 1956-இல் பதிவான தமிழ்நாட்டின் குடிமக்களைக் கணக்கெடுக்க வேண்டுமெனில், 1961 மக்கள் தொகைக் கணக்குப் பதிவேடே அதற்குப் பயன்படும். 1961-மக்கள்தொகைப் பதிவேட்டில் உள்ள தமிழ்நாட்டுக் குடிமக்களும் அவர்களின் வாரிசுகளும் மண்ணின் மக்கள்! அப்பதிவேட்டில் இல்லாதவர்களும் அவர்களின் வாரிசுகளும் தமிழ்நாட்டில் - வெளியார்; வெளியேற்றப் பட வேண்டியவர்கள் என்கிறோம்! தமிழர் என்பதற்கும் மண்ணின் மக்கள் என்பதற்கும் இன அடிப்படையில் வேறுபாடு இருக்கிறது.

வெளியார் குறித்த எங்களது இந்த நிலைபாட்டை உள்ளதை உள்ளபடி புரிந்து கொண்டு - இதை ஒருவர் எதிர்த்தால் அது அவரது கருத்துரிமை! அதில் எங்களுக்கு வருத்தமில்லை. ஆனால் யார் தமிழர், யார் தமிழர் இல்லை என்பதற்கு 1956 வரம்பு வைக்கிறோம் என்று சொன்னால் அது தருக்கமன்று, குதர்க்கம்!

பல நூற்றாண்டுகளுக்கு முன் தமிழ்நாட்டில் குடியேறி தொடர்ந்து வாழ்ந்து வருவோர் தங்களின் பழைய இனத்தைக் கைவிட்டு, தமிழினத்தை ஏற்றுக் கொண்டு தமிழராய் தங்களை அடையாளப்படுத்திக் கொண்டால் அதை வரவேற்போம் என்கிறோம். இவ்வாறு, கால ஓட்டத்தில் ‘ஒரு தாயக இனம் புதிதாக வந்தோரை தன்னியல்புடன் இணைத்துக் கொள்ளும் “குமுகாயத் தன்மயமாதல்” (Social Assimilation) நடப்பதுண்டு. அப்படியும் தேசம் உள்வாங்கிக் கொள்ளும்’ என்று தோழர் குணா மேற்கோள் காட்டியுள்ள நூலில் (Marxism and the National Question - J.V. Stalin) ஜோசப் ஸ்டாலின் கூறுகிறார்.

ஒரு தேசிய இன வரையறுப்பில் - மொழிக்கும், வரலாற்றுத் தாயகத் தொடர்ச்சிக்கும் முகாமையான பாத்திரம் உண்டு. இவ்விரண்டும் - தமிழ்நாட்டில் வாழும் தெலுங்கு பேசுவோர்க்கு பல நூறாண்டுகளாக மாறிவிட்டது என்பதைக் கவனத்தில் கொள்ள வேண்டும்.

பொதுவுடைமையராய் இருந்த மணியரசன் ஸ்டாலின் வரையறையை மறுத்து புதிதாகத் தமிழரைச் சேர்ப்பது என்ன ஞாயம் என்று கேட்கிறார் குணா. தோழர் குணாதான் மேற்படி ஸ்டாலின் நூலை முழுமையாக மீண்டும் படிக்க வேண்டும்.

ஸ்டாலினை மறுக்கிறோம்
-------------------------------------
ஜே.வி. ஸ்டாலின் அவர்களது தேச வரையறுப்பைத் தமிழ்த்தேசியப் பேரியக்கம் மறுக்கிறது. தோழர் குணா சுட்டிக் காட்டியிருக்கும் ஸ்டாலின் மேற்கோளை மீண்டும் ஒருமுறை வாசகர்கள் (இக்கட்டுரையின் முற்பகுதியில்) படித்துப் பார்த்துக் கொள்ளுங்கள். ஸ்டாலின் தேச (Nation) வரையறை பற்றிப் பேசுகிறார். மரபினம் (Race), இனக்குழு (Ethnic, Ethnicity) குறித்து எதுவும் பேசவில்லை. ஏன், தேசிய இனம் குறித்த வரையறுப்பைக் கூட உரியவாறு அவர் விளக்கவில்லை. தேசம் (Nation) குறித்துதான் அவர் வரையறை தருகிறார். அதே பத்தியில் சமூகம் (Community) பற்றிப் பேசுகிறார். அப்பத்தியில் தேசிய இனம் (Nationality) குறித்துப் பேசவில்லை. அதேபோல் நிலஎல்லை, ஆட்சிப்பகுதி (Territory) குறித்து அப்பத்தியில் பேசுகிறார். தாயகம் (Homeland, Motherland) பற்றி அவர் எதுவும் பேசவில்லை.

ஏன் பேசவில்லை? ஏனெனில், தேசிய இனம் என்பது, ஸ்டாலின் உள்ளிட்ட கம்யூனிஸ்ட்டுகளில் பலருக்கு, அவர்கள் நடத்தவிருக்கும் உலகப் பாட்டாளி வர்க்கப் புரட்சிக்கு இடைஞ்சலாய் இருக்கிறது என்பதுதான். உலகத் தொழிலாளிகளை ஒன்றிணைக்கும் அவர்களின் கற்பனையான பாட்டாளி வர்க்க சர்வதேசியத்திற்கு இடையூறு என்பதால்தான்!

ஸ்டாலின் கேட்கிறார்: “தேசம் (Nation) என்றால் என்ன?”

அவரே விடை தருகிறார்:

“ஒரு தேசம் என்பது முதன்மையாக ஒரு சமூகம்; வரையறுக்கப்பட்ட ஒரு மக்கள் சமூகம்.”

“இந்த சமூகம், இனம் (Racial) சார்ந்தது அல்ல; இது பழங்குடியும் (Tribal) அல்ல. புதிய இத்தாலி தேசம் என்பது ரோமானியர்கள் (Romans), ட்யூட்டானியர்கள் (Tuetons), எட்ருஸ்கன்ஸ் (Etruscans), கிரேக்கர்கள் (Greeks), அராபியர்கள் (Arabs) போன்ற இனங்களின் சேர்க்கையால் உருவானது. பிரஞ்சு தேசம் கால்ஸ் (Gauls), ரோமானியர் (Romans), பிரிட்டன்ஸ் (Britons), டியூட்டன்ஸ் போன்ற இனங்களால் உருவானது. இதேபோல் பிரித்தானியர்களும், செர்மானியர்களும் மற்றவர்களும் வெவ்வேறு இனங்கள் மற்றும் பழங்குடிகளின் சேர்க்கையால் உருவானவர்கள்.

“எனவே, ஒரு தேசம் என்பது ஓர் இனம் மற்றும் பழங்குடி சார்ந்தது அல்ல. ஆனால் வரலாற்று வழியில் கட்டமைக்கப்பட்ட சமூக மக்கள்.”

- ஜே.வி. ஸ்டாலின், மேற்படி நூல் பக்கம் 8.

ஸ்டாலின் அவர்களின் மேற்படி வரையறுப்புகளை வைத்து தமிழ்த்தேசம் என்பது எந்தெந்த இனங்கள், பழங்குடிகள் இணைந்து உருவானது என்பதை விளக்குவாரா தோழர் குணா?

தேசிய இன உணர்ச்சி நாடுகளிடையே பரவி வருவதைக், “கொள்ளை நோய் (epidemic) போல்” பரவுகிறது என்று கிலி பிடித்துப் பேசுகிறார் ஸ்டாலின்.

“கூடுதல் வேகத்துடன் தேசியம் என்ற அலை இப்போது அடிக்கிறது. பெருந்திரள் தொழிலாளி களை இது விழுங்குவிடும்போல் உள்ளது. (தொழிலாளர்களை) விடுதலை செய்யும் இயக்கம் பின்னடைவைக் கண்டுள்ளது. “தேசியம்” என்பது கூடுதல் அழுத்தத்துடன் தொழிலாளர் உரிமைப் போராட்டங்களை அரும்ப விடாமல் தள்ளி விடுகிறது.

“இந்த இக்கட்டான தருணத்தில் தேசிய வாதத்தை எதிர்த்துத் தடுப்பதற்கும், அந்தப் பொதுவான கொள்ளை நோயிலிருந்து (epidemic) மக்கள் திரளைக் காப்பதற்கும் சமூக சனநாயகத்திற்கு (SD கட்சிக்கு) மிகப்பெரும் சமூகப்பணி (high mission) இருக்கிறது. சமூக சனநாயகம், சமூக சனாயகம் மட்டுமே, இக்கடைமையைச் செய்ய முடியும். ஏனெனில் அதனிடம் மட்டுமே தேசியவாதத்தை எதிர் கொள்வதற்கான சர்வதேசியம் என்ற பட்டுத் தேறிய ஆயுதம் (tried weapon) இருக்கிறது. இதுதான் ஒற்றுமையையும், பிரிக்க முடியாத வர்க்கப் போராட்டத்தையும் கொண்டிருக்கிறது.”
- ஜே.வி. ஸ்டாலின், மேற்படி நூல், பக்கம் 6.

தமிழ்நாட்டு இடதுசாரித் தோழர்கள் பேரணிகளில் “பாடுபடும் பாட்டாளிக்கு இனமில்லை மொழியில்லை” என்று முழக்கம் போடுவார்கள். கம்யூனிச ஆசான் களிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு முழக்கம்தான் அது. இந்தியத் துணைக் கண்டத்தை ஒரு “தேசம்” என்று இன்றும் இடது சாரிகள் வர்ணிக்கிறார்கள். இதுவும் அவர்கள் ஆசான்களான ஸ்டாலின் போன்றவர் களிடமிருந்து கற்றுக் கொண்டதுதான். இயற்கையான தமிழ்த்தேசத்தைத் தமிழ் மாநிலம் என்றும் பிராந்தியம் என்றும் அவர்கள் கொச்சைப்படுத்துகிறார்கள்.

ஒரு குறிப்பிட்ட தேசத்திற்கான அடிப்படை அந்தத் தேசத்திற்குரிய இனம் அல்லது தேசிய இனம் எது என்பதும் அதன் தாய்மொழி எது என்பதும்தான்! அதை ஒட்டியே அந்தத் தேசத்திற்கான பெயரும் பெரிதும் அமைகிறது. அது அந்த இனத்தின் தாயகப் பெயராகும்.

மரபு இனம் (Race) வேறு; தேசிய இனம் (Nationality) வேறு என்று மார்க்சியர்கள் சொல்வார்கள். இதில் உண்மை உண்டு. ஆனால் இது மட்டுமே உண்மை அன்று. ஐயாயிரம் ஆண்டுகளுக்கு முன்பும் நம் இனம் தமிழர்தான்; இது மரபினம். இன்றும் நம் இனம் தமிழர்தான் இது தேசிய இனம்! இந்தத் தேசிய இனத்தில், வெளியிலிருந்து வந்து குடியேறி, பல நூறு ஆண்டுகளாகத் தமிழ் இனத்தோடு, அதன் தாய்மொழியோடு, அதன் உளத்தியலோடு ஒருங்கிணைந்தவர்களும் தமிழர்கள் ஆதல் உண்டு.

இரண்டாயிரம் ஆண்டு ஆனாலும் வேறுவழியின்றித் தமிழைத் தாய்மொழியாகக் கொண்டாலும் ‘தமிழ்த் தேசிய இனத்தோடு இணையமாட்டேன் என்னும் பிராமணர்களும் உண்டு. நான் கங்கைச் சமவெளி ரிஷி கோத்திரத்தைச் சேர்ந்தவன், எனக்குப் புனித மொழி சம்ஸ்கிருதம்; தமிழில் சம்ஸ்கிருதம் கலந்தால் தமிழ் உயர்வு பெறும்’ என்று சிந்தித்துச் செயல்படுவர். தங்களின் ஆரியப் பெருமைகளை உரத்துப் பேசியும் வந்தனர். தமிழர்களிடையே ஆரிய எதிர்ப்பு வலுப்பட்ட பின்னர், திராவிடவாதிகள் ஆரிய எதிர்ப்பை முதன்மைப் படுத்திய பின்னர், இந்தியர், பாரத்தீயர் என்ற செயற்கை இன அடையாளங்களைப் புனைந்து கொண்டனர். நேர்முக அல்லது மறைமுக ஆரிய மேலாதிக்கவாதத்தைக் கைவிட்டு, தமிழ்மொழியை முழுமையாக ஏற்று, தங்களைத் தமிழர்கள் என்று கருதி, நடைமுறையில் வாழ்ந்தால் பிராமணர்களையும் தமிழர்களாக ஏற்கலாம். ஆரிய மேலாதிக்க உளத்தியல் அவர்களைத் தடுக்கிறது.

ஆரியத்தை எதிர்த்த அதே திராவிடவாதிகள் இன்றுவரைத் தமிழின அடையாளத்தை மறைத்து, தமிழர்களுக்குத் தொடர்பில்லாத திராவிட முகமூடியைத் தமிழர் முகங்களில் மாட்டி வருகின்றனர். பிராமணர் களும் வடவர்களும் இந்தியன், பாரத்தீயன் என்ற முகமூடியைத் தமிழர் முகங்களில் மாட்டி வருகின்றனர். தமிழர் முகங்களை இரண்டு முகமூடிகள் மறைத்துள்ளன. இந்த இரு முகமறைப்புகளையும் அகற்ற வேண்டும்.

தமிழர் என்ற இன அடையாளம் 15 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே தோன்றிவிட்டது என்று அண்மைக்கால ஆய்வுகள் கூறுகின்றன. திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழக ஆய்வாளர் சே. இராமசாமி அவர்கள் தலைமையிலான ஆய்வுக்குழுவினர் பூம்புகாருக்குக் கிழக்கே கடலுக்குள் 15 ஆயிரம் ஆண்டு பழைமையான தமிழர் நகரக் கட்டடங்கள், வணிக வீதிகள், புதையுண்டு கிடக்கின்றன என்று கண்டறிந்து அண்மையில் அறிவித்தனர். இந்திய அரசுத் தொல்லியல் துறை அதற்கு மேல் அவ்வாராய்ச்சி தொடராமல் தடுத்துவிட்டது. அதுபற்றி மேற்படி ஆய்வாளர்கள் பேசக்கூடாது என்றும் தடுத்துவிட்டது.

இவ்வாறான இனப்பழைமை வேறு சில இனங்களுக்கும் இருக்கிறது. பால்லாயிரக்கணக்கான ஆண்டுகளுக்கு முன்பே சீனர்கள் (ஹான்), கிரேக்கர்கள், யூதர்கள் போன்ற இனத்தவர்கள் இருந்தனர். இன்றும் இதே இனப் பெயருடன் உள்ளனர். இவர்களின் மரபு இனமும் (Race) தேசிய இனமும் (Nationality) ஒன்றாக இருக்கிறது. இவற்றுடன் வேறு சில இனக் குழுக்கள் பிற்காலத்தில் கலந்திருக்கலாம். ஆனால் அவ்வின மக்கள் அந்தப் பழம்பெரும் இன அடையாளங்களுக்குள் இயைந்து தங்களின் இனக்குழு அடையாளங்களை இழந்திருப்பர்!

இப்படிப்பட்ட இனங்களை - தேசிய இனங்களை எல்லாம் இளம் முதலாளிகளின் கண்டுபிடிப்பு என்று கொச்சைப்படுத்தி விட்டார் ஸ்டாலின்.

“இளம் முதலாளிகளின் முதன்மைச் சிக்கல் சந்தை (Market)! வெவ்வேறு தேசிய இனங்களுடன் சந்தையில் போட்டி போட்டு, தங்கள் சரக்குகளை விற்க வேண்டிய சிக்கல் இம்முதலாளிகளுக்கு ஏற்பட்டது. எனவே, இவர்களின் (இளம் முதலாளி வர்க்கத்தின்) ஆசை, தனது “சொந்த”, தனது தாயக (home) சந்தையைப் பாதுகாத்துக் கொள்வதில் சென்றது. முதலாளி வர்க்கம் தனது தேசிய இனத்தைக் கற்றுக் கொள்வதற்கான முதல்பள்ளி சந்தையாக இருந்தது.”
- ஜே.வி.ஸ்டாலின், மேற்படி நூல், பக்கம் 19.

ஸ்டாலினது இவ்வாராய்ச்சி மிகவும் அகநிலை சார்ந்தது; கொச்சையானது.

தாய்மொழி, பண்பாடு, தாயகம் மூன்றும்தான் இன அடையாளத்தின், இனத்தாயகத்தின் தொடக்கம்! இவை இயற்கையான மனித குல வளர்ச்சியில் ஏற்பட்டவை. யாரும் திட்டமிட்டு உருவாக்கிக் கொண்டவை அன்று! இவை ஒரு வகை குருதி உறவிலிருந்து தொடர்ந்து பின்னர் விரிவடைந்திருக்கும். மரபணு ஆய்வுகள் இப்போது இவைகளை அடையாளம் காண்கின்றன. ஒரு தேசிய இனத்தின் தாய்மொழியை வெறும் பொது மொழி என்றும், ஒரு தேசிய இனத்தின் தாயகத்தை வெறும் வாழும் நிலப்பரப்பு என்றும் ஸ்டாலின் கொச்சைப் படுத்துகிறார். இக்கருத்தியலை சிறப்பானது என்று தோழர் குணா ஏற்றுக் கொள்வது அதிர்ச்சி அளிக்கிறது.

தெலுங்கர் எதிர்ப்பு
-----------------------------------
அடுத்து, தெலுங்கர் எதிர்ப்பை முதன்மைப்படுத்தும் ஒரு சார் தமிழ்த்தேசியர்களுக்குச் சில கூற விரும்புகிறேன்.

களப்பிரர் ஆட்சிக் காலத்திலிருந்து, பல்லவர் ஆட்சிக்காலத்திலிருந்து, பிற இனத்தவர் தமிழ்நாட்டில் குடியேறுவது தொடர் நிகழ்வாகி இருக்கும். ஆனால் அவர்கள் எல்லாம் காலப் போக்கில் முழுத்தமிழர்களாக, தமிழ்ச் சாதிகளில் கலந்திருப்பர். கி.பி. பத்தாம் நூற்றாண்டிற்குப் பிறகு வந்தவர்கள் சௌராட்டிரர்களாக, தெலுங்கர்களாக, உருது பேசுவோராக, மராத்தியராகத் தங்கள் மொழி, இன அடையாளங்களோடு நிலைத் துள்ளனர். இவர்களிலும் பலர் தமிழர் அடையாளங் களோடு சங்கமித்துவிட்டனர்.

இருபதாம் நூற்றாண்டு அரசியலில், சூழ்ச்சியாகத் திராவிட இனம் என்று கூறி, தமிழர்கள் அனைவரையும் கலப்பின அடையாளத்துக்குள் கொண்டு வந்தவர்கள் பெரியாரும் அவரின் அரசியல் வாரிசுகளும் ஆவர்! இந்த சூழ்ச்சியை முறியடிக்க வேண்டிய தேவை உள்ளது. அதே வேளை தெலுங்கு உள்ளிட்ட அயல்மொழி பேசுவோரை அயலாராகப் பார்ப்பதும், தமிழர் பகைவர்களாகப் பார்ப்பதும் முறையன்று; சரியன்று! அவர்களையும் மண்ணின் மக்களாகவும் தமிழ்த்தேசியர்களாகவும் இணைத்துக் கொள்வது என்பது மனித நேயப்பார்வை மட்டுமல்ல, தேசிய இனங் குறித்த சமூக அறிவியலும் ஆகும்! தமிழ்த்தேசியத்தை வெற்றி நோக்கி அழைத்துச் செல்லும் பாதையும் ஆகும்!

மறைமலை அடிகளாரால் தொடங்கப்பட்டு, பாவாணர், பாவலரேறு பெருஞ்சித்திரனார் போன்ற வர்களால் வளர்க்கப்பட்ட தனித்தமிழ் இயக்கத்தில் தெலுங்கைத் தாய்மொழியாகக் கொண்ட பலர் இருந்தனர், இருக்கின்றனர்.

1965-இல் பற்றி எரிந்த இந்தி எதிர்ப்புப் போராட்ட மாணவர்களுக்குத் தலைமை தாங்கிய விருதுநகர் சீனிவாசன் (சட்டக்கல்லூரி) தெலுங்கைத் தாய்மொழி யாகக் கொண்டவர்தான். ஈழத்தில் தமிழர்கள் இனப் படுகொலை செய்யப்பட்டபோது தீக்குளித்து உயிரீகம் செய்தவர்களில் தெலுங்கைத் தாய்மொழியாகக் கொண்டவர்களும் உண்டு. கடைசியாகத் தீக்குளித்து உயிர் நீத்த சேலத்து இளம் தம்பி அருந்ததியர் வகுப்பைச் சேர்ந்தவர்!

இன்றைக்குத் தமிழ்த் தேசியத்தில் தெலுங்கு உள்ளிட்ட பிறமொழி பேசும் பலர் இணைந்து செயல் படுகின்றனர்.

இவ்வாறான தமிழ்த்தேசிய ஒற்றுமைதான் வெற்றி இலக்கை அடையும். தமிழ்த்தேசத்தின் ஆட்சி மொழியும், கல்வி மொழியும் தமிழ் மட்டுமே! விரும்பியோர் விரும்பிய மொழியைக் கற்கலாம் என்பதே நமது கொள்கை! ஆனால், தமிழ்மொழி தவிர வேறு எந்த மொழியும் தமிழ்நாட்டின் பொது ஆட்சி மொழியாகவும், கல்வியில் பயிற்று மொழியாகவும், கட்டாயப் பாடமொழியாகவும் ஆகா!

குடி என்ற பெயரில் கூறப்படும் “சாதி”யின் அடிப்படை இருப்பு - மனித உயர்வு தாழ்வு என்ற உளத்தியலில் இருக்கிறது. மனிதச் சமநிலை கடைபிடிப்போம். தமிழ்த்தேசியத்தின் பெயரால் சாதிக்குப் புத்துயிர் ஊட்ட வேண்டாம்.

திராவிடத்தை எதிர்ப்பதற்காக ஒட்டுமொத்தமாகப் பிற மொழியினரை எதிர்ப்பது தவறு! தி.க., திமுக, அதிமுக போன்ற திராவிடக் கட்சிகளில் பிறமொழியினரைவிடத் தமிழைத் தாய்மொழியாகக் கொண்டவர்களே மிக அதிகம் உள்ளனர் என்ற உண்மையை உணருங்கள்.

தமிழ்த்தேசியத்தின் உண்மையான முதன்மையான பகை ஆற்றல்கள் இந்திய ஆளும் இனத்தவரே! ஆரிய - பிராமண - இந்தி ஆற்றல்களே ஆளும் இனத்தவர். அதற்கு அடுத்த நிலையில் உள்ள சீர்குலைப்பாளர்கள் திராவிடவாதிகள்!

வடவர் உள்ளிட்ட வெளியார் ஆக்கிரமிப்பை எதிர்த்துப் போராட்டக் களத்தில் இயங்கிக் கொண்டிருப்பது எமது தமிழ்த்தேசியப் பேரியக்கம். இதில் வெளியார் யார் என்று வரையறுக்கத்தான் 1956 வரம்பு ஆண்டு - 1961 மக்கள் தொகைக் கணக்கெடுப்பு ஆவணம். நமது தமிழர் தாயகத்தைச் சூழ்ந்துவரும் பேராபத்து வடவர் உள்ளிட்ட வெளியார் ஆக்கிரமிப்பு! அவர்களை வெளியேற்றும் களப் போராட்டங்களில் பங்கெடுக்காதோர் தெலுங்கர் எதிர்ப்புக் கருத்தியலை மட்டும் முதன்மைப்படுத்திப் பேசுவதால் என்ன பயன்? இதனால் பாதகமான விளைவுகள் தாம் அதிகம் ஆகும்!

அதேபோல் திராவிடஇனத் திரிபு வாதத்தை எதிர்த்துக் கூர்மையான கருத்துப் போராட்டத்தையும் நடத்தி வருகிறது தமிழ்த்தேசியப் பேரியக்கம்!

பல நூறாண்டுகளாகத் தமிழ்நாட்டைத் தாயகமாகக் கொண்டு வாழும் தெலுங்கு பேசுவாரை அயலாராய், ஆபத்தானவர்களாய்ப் பேசாதீர்கள் என்று நான் சொன்ன உடன் “இவர் தெலுங்கர்” என்று நம் இளையோர் சிலர் எதிர்வினை புரிகின்றனர். இவ்வாறு நான் சொல்வது என்னென்ன வகையில் தவறு என்று தருக்கம் செய்யுங்கள். அதைவிடுத்து ‘மணியரசன் தெலுங்கர்’ என்று அவதூறு பேசுவது உங்கள் அறியாமையைத்தான் வெளிப்படுத்தும். என்னை விடுங்கள்! நான் ஊரறிந்த பட்டிக்காட்டான். ஆச்சாம்பட்டிக்காரன்! என் பெற்றோர், முன்மரபினர் தமிழரா இல்லையா என்பதை ஊரறியும். தெலுங்கைத் தாய்மொழியாகக் கொண்ட ஒருவர், சரியான திறனாய்வுகளை வைக்க உரிமை உண்டா? இல்லையா? உரிமை உண்டு.

சில தீவிரத் திராவிடவாதிகளும் ஆர்.எஸ்.எஸ்.காரர்களும்கூட தமிழ்த்தேசிய முகமூடி அணிந்து கொண்டு நம்மிடையே தமிழ் இன உணர்ச்சி வளராமல் சாதி உணர்ச்சி வளர இவ்வாறு “சாதி அரசியல்” பேசுகின்றனர்.

எச்சரிக்கையாய் இருப்போம்; தமிழ்த் தேசியம் வளர்ப்போம்!

=================================
தலைமைச் செயலகம்,
தமிழ்த்தேசியப் பேரியக்கம்
=================================
பேச: 9443918095, புலனம் : 9841949462
முகநூல் : www.fb.com/tamizhdesiyam
ஊடகம் : www.kannottam.com
இணையம் : www.tamizhdesiyam.com
சுட்டுரை : www.twitter.com/Tamizhdesiyam
காணொலிகள் : youtube.com/Tamizhdesiyam
=================================

Labels: , , , ,

0கருத்துக்கள்:

Post a Comment

<< முகப்பு பக்கம்


தோழர் மணியரசன்
அவர்களின் படைப்புகள் மற்றும் கருத்துக்களை இத்தளத்தில் காணலாம்.
வாசகர்களின் கருத்துக்களும் வரவேற்கப்படுகின்றன.

Web This Blog

தொகுப்பு

முந்தைய பதிவுகள்

தோழமைத் தளங்கள்