"வி.கே.டி. பாலன் அண்ணன் விடை பெற்றார்! வீரவணக்கம்! " ---- தமிழ்த்தேசியப் பேரியக்கத் தலைவர் பெ. மணியரசன் அறிக்கை!
Tuesday, November 12, 2024
வி.கே.டி. பாலன் அண்ணன் விடை பெற்றார்!வீரவணக்கம்!
===================================
தமிழ்த்தேசியப் பேரியக்கத் தலைவர்
பெ. மணியரசன் அறிக்கை!
===================================
இன்று (12.11.2024) காலை 9.30 மணி இருக்கும். சென்னை மந்தைவெளி வீட்டில் மதுரா பயணக நிறுவனர் அண்ணன் விகே.டி. பாலன் அவர்களின் உடல் ஒரு கண்ணாடிப் பேழைக்குள் தூங்குவது போல் படுத்திருந்தது. குமுறி விட்டேன்; அழுகையை அடக்க முடியவில்லை. குலுங்கிக் குலுங்கி அழுதேன்!
விடுதலைப் புலிகள் வெளிநாடுகளில் நடத்தும் மாவீரர் நாள், திலீபன் நினைவேந்தல், ஆனை இரவு வெற்றி விழா போன்றவற்றில் உரையாற்றுவதற்காக விசா வாங்கப் போன போதுதான், 1991 வாக்கில் அண்ணன் வி.கே.டி. பாலன் அவர்களுடன் தொடங்கியது அறிமுகம்! அது நட்பானது, பாசமானது. “அண்ணா” என்று அவர் என்னை அழைக்கும்போது, அடிமனப் பாசம் வெளிப்படும்.
என்னைப் போல் அண்ணன் பாலனும் ஒரு பட்டிக்காட்டான். திருச்செந்தூர் பகுதி கிராமத்திலிருந்து சிறு அகவையிலேயே பிழைப்புத் தேடி சென்னை வந்து, எழும்பூர் தொடர்வண்டி நிலைய நடைமேடைகளில் (பிளாட்பாரத்தில்) இரவு படுத்துறங்கி, பகலில் வேலைகள் பார்த்து, கற்றுக் கொண்டு, பொருள் சேர்த்து, மதுரா பயணகம் (Madura Travels) என்ற நிறுவனத்தை அதே எழும்பூரில் தொடங்கி, உலக நாடுகளின் வானூர்தி நிலையங்களை உள்ளங்கையில் வைத்திருந்த மேதை அண்ணன் வி.கே.டி. பாலன்!
பாட்டாளிகள் முதல் படித்த மேதைகள் வரை – அத்துக்கூலி முதல் ஆடம்பரப் பணக்காரர்கள் வரை அனைவர்க்கும் தகுந்தாற்போல் அவர்களுடன் பழகும் பண்பு பாலன் அண்ணாவின் தனிச்சிறப்பு!
நூல்கள் படித்தார்; நூலிலும் வாழ்விலும் கற்றார்! கற்றவற்றைப் பயனுள்ள வகையில் மற்றவர்களுக்குத் தெரிவிக்கும் ஆற்றல் பெற்றார். தொலைக்காட்சிகளிலும், கட்டுரைகளிலும், மேடைகளிலும் தெரிவித்தார்!
நேற்று (11.11.2024) முன்னிரவில் திடீரென்று அண்ணன் பாலனின் இறப்புச் செய்தி ஊடகங்களில் வெளி வந்தது பேரதிர்ச்சி! உடல் நலக் குறைவாய் இருந்து, மருத்துவம் பார்த்து, பின்னர் மறைந்தார் என்பது போல் நிகழ்வுகள் தொடர்ந்திருந்தால் கூட, இந்த அளவு நெஞ்சு பதைக்காது. மாலையிட்டு நாங்கள் மரியாதை செலுத்தும் போது, “மாரடைப்பு” என்றார் அண்ணன் மகள்!
மாரடைப்பு கொடிய நோய்! திடீரென்று எதிர்பாரா நேரத்தில் உயிரைத் தட்டிப் பறித்து விடும்! அதே சமயம் தொடர் துன்பம் தராத – சித்திரவதை செய்யாத கருணை நோய்! ஆறுதல் அடைந்து கொள்ள வேண்டியது தான்!
வீரவணக்கம் செலுத்தி விடை தருவோம், அண்ணனுக்கு!
===============================
தலைமைச் செயலகம்,
தமிழ்த்தேசியப் பேரியக்கம்
=================================
பேச: 9443918095, புலனம் : 9841949462
முகநூல் : www.fb.com/tamizhdesiyam
ஊடகம் : www.kannottam.com
இணையம் : www.tamizhdesiyam.com
சுட்டுரை : www.twitter.com/Tamizhdesiyam
காணொலிகள் : youtube.com/Tamizhdesiyam
=================================
Labels: அறிக்கைகள், இரங்கல்
0கருத்துக்கள்:
Post a Comment
<< முகப்பு பக்கம்