Thursday, June 13, 2024
"தமிழ்நாட்டைக் காப்போம்- தன்னாட்சி மீட்போம்!"
மக்கள் பரப்புரை இயக்கம்!
===============================
எனது திறந்த மடல்!
===============================
பெ. மணியரசன்,
தலைவர், தமிழ்த்தேசியப் பேரியக்கம்
===============================
பேரன்புடையீர் வணக்கம்!
உங்களிடம் ஓர் ஊக்கச் செய்தியைப் பகிர்ந்துகொள்ள விரும்புகிறேன். உடல்நலக் குறைவால் ஓரிரு மாதங்களாக வெளிப்பயணமின்றி பெரிதும் வீட்டிலேயே இருந்த எனக்கு ஓசூர்ப் பயணம் மனநல மருந்தாகப் பயன்பட்டு மகிழ்ச்சியைத் தந்தது.
தமிழ்த்தேசியப் பேரியக்கத்தின் பொதுக்குழுக் கூட்டம் கிருட்டிணகிரி மாவட்டம் ஓசூரில் 2024 சூன் 8, 9 (காரி, ஞாயிறு) இரு நாட்கள் நடந்தது.
சற்றொப்ப அறுபது பொதுக்குழு உறுப்பினர்களைக் கொண்ட ஒரு குழுக் கூட்டம்தான்! ஆனால் ஒரு மாநாட்டிற்கான தயாரிப்புகளைப்போல் ஏற்பாடுகள் செய்து தமிழ்த்தேசியப் பேரியக்கத் தலைமைச் செயற்குழு உறுப்பினர், தோழர் ஓசூர் கோ. மாரிமுத்து அவர்களும், தமிழ்த்தேசியப் பேரியக்கக் கிளைகளின் பொறுப்பாளர்களும், நமது தொழிற்சங்கப் பொறுப்பாளர்களும் தோழர்களும் சிறப்பாக, இருநாள் பொதுக் குழுக் கூட்டத்தை நடத்தித் தந்தார்கள்.
அருமையான மண்டபம், சிறப்பான உணவு ஏற்பாடுகள், தங்கும் வசதிகள்! பொதுக்குழு நடக்காத நேரங்களில் மற்ற தோழர்களுடன் உரையாடுதல் எனப் பலவகையிலும் பொதுக்குழுக் கூட்டம் சிறப்பாக நடந்தது.
இவற்றையெல்லாம் விட சிறப்பான திருப்புமுனை, பேரியக்கத்தின் வளர்ச்சி குறித்து எடுக்கப்பட்ட முடிவுகள்!
தலைமையிலிருந்து கிளைவரை திறந்த மனதுடன் தன்திறனாய்வு செய்து கொண்டோம். “உள்ளதை உள்ளபடி பார்” என்பது நமது ஆய்வு வழிகாட்டிக் கோட்பாடாகும். நமது அமைப்பின் பணிகள், வளர்ச்சி, கூட்டு உழைப்பு, அவற்றில் உள்ள குறைகள், செய்ய வேண்டிய புதிய மாற்றங்கள் அனைத்தும் பேசி முடிவுகள் எடுக்கப்பட்டன.
கிளைக் கூட்டங்கள் மாதந்தோறும் நடக்க வேண்டும். மாதந்தோறும் உறுப்பினர்கள் பேரியக்கத்திற்குத் தாங்களாக முன்வந்து ஒப்புக் கொண்ட நன்கொடைகளைத் தரவேண்டும். நடந்த வேலைகளைத் தன்திறனாய்வுடன் ஆய்வு செய்ய வேண்டும். குறைகள் காணின் அவற்றைக் களைய உறுதி பூணவேண்டும். செயலில் குறைகளைந்து செயல்திறனை வளர்க்க வேண்டும்.
இளையோரைப் புதிதுபுதிதாய் அமைப்பில் ஈர்க்க இடைவிடா முயற்சிகள் எடுக்க வேண்டும். பேரியக்கத்தின் பணிகளை - இயங்கு முறையைக் கண்காணிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இந்தியாவில் எழும் இன அரசியல்!
----------------------------
இந்தியாவெங்கும் இன உணர்ச்சிகள் வீச்சுப் பெற்றிருக்கும் காலம் இது! ஒடுக்குவோரிடம் இருந்துவந்த இன உணர்ச்சி இப்போது ஒடுக்கப்பட்டோரிடம் வேர்விட்டு, விழுதுகள் விட்டு வளர்ந்துள்ளது. நடந்து முடிந்த நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் 2024-இல் இதைப் பார்த்தோம்!
இந்திய ஏகாதிபத்திய இனவாதத்தால் பாதிக்கப்பட்ட இனங்கள், திமிறி எழுகின்றன. இன உரிமை மீட்பு முழக்கங்கள் எழுப்புகின்றன! தன்மொழி, தன் தாயகம், தன் இனம் என்று வெளிப்படையாகப் பேசுகின்றன.
எப்பொழுதும் தமிழ்நாட்டில் தமிழ் இனம், தமிழ்மொழி, தமிழர் தாயகம் என்ற முழக்கங்கள் தெள்ளத் தெளிவாக வெளிவராமல் இனக்குழப்பம் செய்யும் திராவிட இருபிறப்பாளர்கள் இப்போதும் திராவிட மாடல் குழப்பங்களை உருவாக்கிக் கொண்டுள்ளார்கள்.
இந்திய ஏகாதிபத்திய வாதிகள், பாரத்தீயன் (இந்தியன்) என்று ஓர் இனம் இருப்பதாக புராணக்கட்டுக் கதைகளை அவிழ்த்து விடுகிறார்கள். இந்திய அரசமைப்புச்சட்டம் “இந்தியன்” என்ற பெயரிலோ அல்லது பாரத்தீயன் என்ற பெயரிலோ ஓர் இனம் இருப்பதாகக் கூறவில்லை. இந்தியக் குடிமகன் (Citizen of India) என்று மட்டும்தான் பேசுகிறது.
ஆரியத்தின் பாரத்தீயன் கட்டுக் கதைகளுக்குச் சற்றும் குறையாதது, திராவிடத்தின் “திராவிடன்” கட்டுக்கதை! பாரத்தீயனின் இளைய பங்காளி திராவிடன்! இவ்விரண்டும் தமிழன் என்ற இயற்கையான இனத்தை மறைப்பதில், மடைமாற்றுவதில் போட்டி போடும்! அவை இரண்டும் (பாரத்தீயன், திராவிடன்) ஒன்றுவிட்ட உடன்பிறப்புகள்! கற்பனைக் கதா பாத்திரங்கள்! இயற்கையான தமிழ் இனத்தைச் சிதைக்கும் கருத்தியல் வில்லன்கள்!
இந்தியாவில் வேறு எந்த இனத்திற்கும் தமிழர்களுக்கு வந்து வாய்த்ததைப்போல் இரட்டை வில்லன்கள் இல்லை. இந்திய ஏகாதிபத்தியவாதம், அதை எதிர்த்த இயற்கையான சொந்த இனவாதம், என இருமுகாம்கள் மட்டுமே மற்ற மாநிலங்களில் இருக்கும். தமிழ்நாட்டில், இந்திய ஏகாதிபத்திய வாதத்தை எதிர்ப்பது போல் போலிக்குரல் கொடுத்துவிட்டு, இந்திய ஏகாதிபத்தியத்தின் இளைய பங்காளியாய்ச் செயல்படும் அயல் இனவாதமான “திராவிட” இனவாதம் செழித்துப் படர்ந்துள்ளது.
கல் (மலை) தோன்றி மண் தோன்றாக் காலத்தே முன்தோன்றிய உலகின் மூத்த குடிகளைக் கொண்ட தமிழ் இனம் மாற்றுக் குறைந்தது, ஆரியக் கலப்புள்ளது என்று வஞ்சகர்கள் திரித்துப்பேசி, தங்களுக்கு உகந்தவாறு புனையப்பட்ட திராவிட இனத்தைத் திணித்தார்கள்! இந்தத் திராவிட அநீதி அந்த வஞ்சகர்கள் சொந்தம் கொண்டாடும் ஆந்திரப் பிரதேசத்தில், தெலுங்கானாவில், கர்நாடகத்தில், கேரளத்தில் உண்டா? இல்லவே இல்லை! இவர்களிடம் ஏமாந்தவர்கள், இவர்களால் ஏமாற்றப்பட்டவர்கள் தமிழர்கள் மட்டுமே!
என் அன்புத் தமிழர்களே, இங்கு ஏன் இவ்வளவு மனவலியோடு இதைச் சுட்டிக் காட்டுகிறேன்?
இந்தியாவெங்கும் உத்திரப்பிரதேசம் உட்பட அவரவர் சொந்த இன எழுச்சி ஏற்பட்டிருக்கிறது. நரேந்திர மோடி, அமித்சா வகையாறாவின் குசராத்தி ஆதிக்கம் உத்திரப்பிரதேசத்தில் கூடாது என்று உத்திரப்பிரதேச இந்திக்காரர்களிடையே அவர்களின் பாசக கட்சிக்குள்ளேயேஇன எழுச்சி ஏற்பட்டிருக்கும்போது, தமிழ்நாட்டில் மட்டும் சொந்தத் தமிழ் இன எழுச்சியை மடைமாற்றும் திராவிடம் வெற்றி பெற்றுள்ளது. இந்தியா முழுவதும் மாநிலத் தன்னாட்சி வேண்டும் என்ற உரிமைக் குரல் ஓங்கி வருகிறது. காங்கிரசு மற்றும் பாசக தலைமை என்பது இந்திய ஏகாதிபத்தியத்தின் இன அரசியல் தலைமைகள்! இவற்றில் ஒன்றுடன் கூட்டணி வைப்பது இந்திய ஏகாதிபத்திய வாதத்தை மேலும் வளர்க்கும், மேலும் உறுதிப்படுத்தும் செயலாகவே முடியும்.
1970களில் இருந்து தன்னாட்சி உரிமை கோரிய திமுக, ஒன்றிய அரசு-மாநில அரசுக்கிடையே மறு அதிகாரப் பகிர்வுக்கு இராசமன்னார் குழு அமைத்து, அதன் ஆய்வறிக்கையைப் பெற்று, அதை 1970 களிலேயே தமிழ்நாடு சட்டப்பேரவையிலும், தமிழ்நாடு சட்ட மேலவையிலும் (MLC அவை) நிறைவேற்றி, இந்திய அரசுக்கு அனுப்பி அதைச் செயல்படுத்தக் கோரியது! அதில் ஒரு உரிமையையாவது மீட்டதா? இல்லை! ஆளும் காங்கிரசுடன், பாசகவுடன் எனப்பல ஆண்டுகள் இந்தியாவின் கூட்டணி ஆட்சிகளில் அமைச்சர் பதவிகள் வகித்த திமுக, புதிதுபுதிதாக மாநில உரிமைகளைப் பறிகொடுப்பதற்குத்தான் பக்கத் துணையாக இருந்தது. எப்போதாவது குறைந்த்து ஓர் உரிமையையாவது மீட்டதுண்டா? இல்லை!
எனவேதான் காங்கிரசுடன், அல்லது பாசகவுடன் கூட்டணி வைத்துக் கொண்டு தமிழ்நாட்டுக்குத் தன்னாட்சி பெறுவோம் என்று அவ்வப்போது திமுக பேசுவது இன உணர்ச்சிமிக்க தமிழர்களை ஏமாற்றி இழுத்துக் கொள்ளும் சூழ்ச்சி தவிர வேறல்ல!
ஓசூர் உறுதி!
-----------
ஓசூர் பொதுக்குழுவில் நாம் ஓர் உறுதி ஏற்றுள்ளோம்! “தமிழ்நாட்டைக் காப்போம், தன்னாட்சி மீட்போம்” என்பதே அந்த உறுதிமொழி! இந்த முழக்கத்தின் கீழ், உடனடிக் கோரிக்கைகளைாக - இந்திய அரசமைப்புச் சட்டத்தில் என்னென்ன மாற்றங்கள் செய்ய வேண்டும் - என்னென்ன வகைகளில் மாநிலங்களுக்குத் தன்னாட்சி வழங்க வேண்டும் என்று கோருகிறோம்!
இந்தித் தேசிய இனம் உட்பட எல்லாத் தேசிய இனங்களுக்கும் உரியவையாகவே கீழ்வரும் கோரிக்கைகளைத் தமிழ்த்தேசியப் பேரியக்கம் முன்வைக்கிறது. நம்மைப் பொறுத்தவரை, தமிழ்நாட்டிற்குரிய - தமிழர்களின் தன்னாட்சி முழக்கங்களாக நமது பொதுக்குழு எடுத்த முடிவுகளை உங்கள் முன்வைக்கிறோம்! ஒரு வேளை ஏதேனும் சில மாநிலங்கள் நாம் முன் வைக்கும் சட்டத் திருத்தங்களை ஏற்கவில்லை என்றால், எங்களுக்கு - தமிழ்நாட்டிற்கு - இவற்றைச் செயல்படுத்தும் வகையில் இந்திய அரசமைப்புச் சட்டத்தைத் திருத்துங்கள் என்பதே இந்திய ஆட்சியாளர்களிடம் நாம் முன் வைக்கும் கோரிக்கை!
மக்களிடம் செல்வோம்!
கீழ்வரும் கோரிக்கைகளைச் செயல்படுத்திட இந்திய ஆட்சியாளர்களிடமும் இந்திய எதிர்க்கட்சிகளிடமும் கோரிக்கை எழுப்புவோம்!
இக்கோரிக்கைகளை கட்சி வேறுபாடின்றி, இன அடிப்படையில் தமிழ்நாட்டு மக்கள் எழுப்பிட வேண்டும். இவை மக்கள் முழக்கங்களாக வேண்டும். இன உணர்வாளர்களும், நம் பேரியக்கத் தோழர்களும் தங்களுக்குள் பேசி, சரியான புரிதலுக்கும், ஒருமித்த முடிவுக்கும் வாருங்கள் அடுத்து மக்களிடம் கொண்டு செல்லுங்கள்! பொதுக்கூட்டங்களாக, தெருமுனைக் கூட்டங்களாக, கலை நிகழ்ச்சிகளாக கருத்தரங்குகளாக, துண்டறிக்கைப் பரப்பலாக, சுவரெழுத்து முழக்கங்களாக மக்களிடம் செல்லுங்கள்!
நமது முழக்கங்கள்
-----------------
"தமிழ்நாட்டைக் காப்போம், தன்னாட்சி மீட்போம்!"
1. அரசமைப்புச் சட்டத்திலிருந்து ஆளுநர் பதவியை நீக்கு!
2. இந்திய அரசின் இரண்டாவது அதிகாரப்பட்டியலான பொதுப்பட்டியலை (Concurrent List) அரசமைப்புச் சட்டத்திலிருந்து நீக்கு! அந்த அதிகாரங்களை மாநில அரசு அதிகாரப் பட்டியலில் சேர்த்திடு!
3. மாநில ஆட்சிகளைக் கலைக்கும் அரசமைப்புச் சட்ட உறுப்பு 356-ஐ நீக்கு!
சனநாயகக் கூட்டாட்சி நாடுகள் எதிலும் மாநில அரசைக் கலைக்கும் அதிகாரம் கூட்டாட்சி அரசுக்கு இல்லை.
4. இந்தியாவின் அலுவல் மொழி இந்தி என்னும் அரசமைப்புச் சட்ட உறுப்பு 343 மற்றும் அதன் துணை உறுப்புகள் அனைத்தையும் நீக்கிட வேண்டும். எட்டாவது அட்டவணையில் உள்ள அத்தனை மொழிகளும் இந்தியாவின் அலுவல் மொழிகள் என்று சேர்த்திட வேண்டும்.
5. சரக்கு சேவை வரி (GST) மருத்துவ படிப்பிற்கான நுழைவுத் தேர்வு இரண்டையும் நீக்கு! வணிகவரி விதிக்கும் அதிகாரம் மீண்டும் மாநில அரசுக்கு வேண்டும்! வரிகள் அனைத்தையும் மாநில அரசுகள் விதித்து, வசூலிக்க வேண்டும். இதில், குறிப்பிட்ட விகிதத் தொகையை இந்திய அரசுக்கு மாநிலங்கள் அளிக்க வேண்டும் என அரசமைப்புச் சட்டத்திருத்தம் செய்க.
6. தமிழ்நாட்டுத் தொழில் வணிகம், வேலை மூன்றும் தமிழர்களுக்கே!
வெளிநாட்டு மற்றும் வெளிமாநிலத் தொழில், வணிக நிறுவனங்களில் தவிர்க்க முடியாத சிலவற்றைத் தவிர மற்றவற்றை வெளியேற்ற வேண்டும்.
வெளிநாட்டினரோ அல்லது வெளிமாநிலத்தவரோ தமிழ்நாட்டில் தொழில் வணிகம் செய்ய அனுமதிக்கும்போது, அவை ஒவ்வொன்றின் மொத்த முதலீட்டில் 35 விழுக்காடு முதலீடு தமிழர்கள் செய்தால்தான் அனுமதி வழங்க வேண்டும்.
தமிழ்நாட்டில் உள்ள இந்திய அரசு நிறுவனங்கள், தனியார் துறை நிறுவனங்கள் அனைத்திலும் தலா 90 விழுக்காடு வேலைகள் தமிழர்களுக்கு வழங்க வேண்டும். தமிழ்நாடு அரசுத் துறையில் 100 விழுக்காடு வேலையும் தமிழர்களுக்கே வழங்க வேண்டும். இதற்கான புதிய சட்டங்கள் தேவை.
7. அனைவர்க்கும் அவரவர் கல்வித் தகுதிக்கேற்ப வேலை வழங்க வேண்டும். அவ்வாறு வேலை வழங்கும் வரை அவர்களுக்குத் தங்களின் உணவு, உடை, வீடு முதலியவற்றிக்குத் தேவைப்படும் முழுநிதியை வாழ்வூதியமாகத் தமிழ்நாடு அரசு வழங்க வேண்டும். இது இப்போது ஒரு சாரார்க்குக் கொடுக்கப்படும் மிகமிகக் குறைவான மூன்றாண்டு உதவித் தொகை போல் அல்ல. வேலை கிடைக்கும் வரையிலான வாழ்வூதியம்!
தமிழ்நாட்டைக் காக்க இப்போது நாம் முன்வைக்கும் தன்னாட்சி முழக்கங்கள் இவை!
===============================
தலைமைச் செயலகம்,
தமிழ்த்தேசியப் பேரியக்கம்
=================================
பேச: 9443918095, புலனம் : 9841949462
முகநூல் : www.fb.com/tamizhdesiyam
ஊடகம் : www.kannottam.com
இணையம் : www.tamizhdesiyam.com
சுட்டுரை : www.twitter.com/Tamizhdesiyam
காணொலிகள் : youtube.com/Tamizhdesiyam
=================================
Labels: கட்டுரைகள், தமிழ்த்_தேசியம், தமிழ்த்தேசியம், தன்னாட்சி_மீட்போம்
0கருத்துக்கள்:
Post a Comment
<< முகப்பு பக்கம்