"தமிழ் - தமிழருக்கு எதிராக கர்நாடக ஆளுங்கட்சி உள்ளிட்ட கட்சிகளும் உயர் நீதிமன்றமும் ஓரணியில்! தமிழர்களே தற்காப்புக்கு ஒன்றிணைவீர்!" ---- தமிழ்த்தேசியப் பேரியக்கத் தலைவர் ஐயா பெ. மணியரசன் அறிக்கை!
Monday, June 2, 2025
தமிழ் - தமிழருக்கு எதிராககர்நாடக ஆளுங்கட்சி உள்ளிட்ட கட்சிகளும்
உயர் நீதிமன்றமும் ஓரணியில்!
தமிழர்களே தற்காப்புக்கு ஒன்றிணைவீர்!
==================================
தமிழ்த்தேசியப் பேரியக்கத்
தலைவர் பெ. மணியரசன் அறிக்கை!
==================================
தமிழ்நாட்டின் முதன்மையான திரைக் கலைஞரும், “மக்கள் நீதி மையம்” கட்சியின் தலைவருமான கமலஹாசன் அவர்கள், அண்மையில் அவரது “தக் லைஃப்” என்ற திரைப்படப்பாடல் வெளியீட்டு விழாவில், அப்படத்தில் நடித்தவரும், அவ்வெளியீட்டு விழாவில் கலந்து கொண்டவருமான கர்நாடகக் கதாநாயக நடிகர் சிவராஜ்குமார் அவர்களைப் பாராட்டும் வகையில், அவரின் தந்தை பிரபல கர்நாடக நடிகர் ராஜ்குமாரை நினைவு கூர்ந்து, நாமெல்லாம் உடன் பிறப்புகள் என்று கூறி - மொழிக் குடும்பமாகவும் நாம் உறவினர்கள் என்பதைக் குறிக்க, தமிழிலிருந்து பிறந்தது கன்னடம் என்றார். அது உறவுணர்ச்சியின் வெளிப்பாடே தவிர, கன்னடத்தைத் தாழ்வுபடுத்தும் நோக்கத்தில் கூறப்பட்ட கருத்து அல்ல!
ஆனால் கர்நாடகத்தில் எப்போதும் அங்கு வாழும் தமிழர்களைத் தாக்குவதைத் தங்கள் களியாட்டமாகக் கொண்டுள்ள கன்னட இனவெறி அமைப்புகளைச் சேர்ந்த சிலர், வீதிகளில் இறங்கி, கமலஹாசன் திரைப்படச் சுவரொட்டிகளைக் கிழித்து, கமலஹாசனைக் கொச்சையாகத் திட்டி முழக்கமிட்டு, கமலஹாசன் மன்னிப்புக் கேட்க வேண்டும் என்று இரைச்சல் போட்டனர். மன்னிப்புக் கேட்வில்லையெனில், “தக் லைஃப்” உட்பட கமலஹாசன் திரைப்படங்களைத் திரையிட அனுமதிக்க மாட்டோம் என்றனர்.
அதுபற்றி செய்தியாளர்கள் அம்மாநில முதலமைச்சர் சித்தராமையாவைக் கேட்டபோது, அவர், “கமலஹாசன் கூறியது வரலாறு அறியாதோர் கூற்று, ஆவேசம் வரத்தான் செய்யும்” என்ற பாணியில் பதில் கூறினார். அம்மாநிலத்தின் முதன்மை எதிர்க்கட்சியாகவும் இந்தியாவின் ஆளுங்கட்சியாகவும் உள்ள பா.ச.க.வின் கர்நாடக மாநிலத் தலைவர் விஜயவீரா, “கமலஹாசனைக் கண்டிக்கிறேன். அவர் மன்னிப்புக் கேட்க வேண்டும்” என்றார். கர்நாடகத் துணை முதலமைச்சராக உள்ள டி.கே. சிவகுமார், கமலஹாசனைக் கண்டித்துவிட்டு, “போராட்டம் கலவரமாகக் கூடாது” என்று கூறியுள்ளார்.
கர்நாடகத்தில் அமைதியாக வாழ்ந்து கொண்டிருக்கும் தமிழர்களையும், தமிழ் நாட்டிலிருந்து கர்நாடகம் செல்லும் தமிழர்களையும் காவிரிச் சிக்கலைச் சாக்காக வைத்து, கன்னடர்கள், 1991 நவம்பர் - டிசம்பர் போல், 2016 போல் மீண்டும் தாக்குவார்களோ என்ற அச்சம் ஏற்பட்டுள்ளது.
எரிகிற நெருப்பில் எண்ணெய் ஊற்றுவதுபோல், கர்நாடக உயர்நீதிமன்ற நீதிபதி நாகபிரசன்னா இன்று (3.6.2025) நீதிமன்றத்தில் கூறிய “தீர்ப்பு” அதிர்ச்சி அளிக்கிறது.
கர்நாடகத் திரையரங்குகளில் “தக் லைஃப்” படம் ஓடப் பாதுகாப்பளிக்க ஆணை இட வேண்டும் என்று கோரி போட்ட வழக்கில், இரு தரப்பையும் விசாரிக்காமல், “கன்னடம் தமிழிலிருந்து பிறந்தது என்று கமலஹாசன் கூறியது தவறு; அவர் என்ன மொழியியல் ஆய்வாளரா? கமலஹாசன் மன்னிப்புப் கேட்க வேண்டும். கமலஹாசன் கூறியுள்ள விளக்கம் ஆணவத்தோடு உள்ளது. சுற்றி வளைத்துப் பேசுகிறார். அவர் நேரடியாக மன்னிப்புக் கேட்க வேண்டும்” என்று தீர்ப்புக் கூறியுள்ளார். கன்னட இனவாதம் கர்நாடக உயர் நீதிமன்றத்தையும் கவ்விக் கொண்டுள்ளதைக் கவனிக்க வேண்டும்.
கன்னட இனவெறியர்கள் கமலஹாசனுக்கு எதிராக 27.5.2025 அன்று கலவரம் தொடங்கினார்கள். தமிழ்த்தேசியப் பேரியக்கம் 28.5.2025 அன்றே அதைக் கண்டித்து அறிக்கை வெளியிட்டது. அத்துடன் 29.5.2025 அன்று தஞ்சையில் கன்னட இனவெறியர்களைக் கண்டித்து ஆர்ப்பாட்டம் நடத்தினோம். அடுத்தடுத்து 30.5.2025 முதல் ஓசூர், பெண்ணாடம், புதுச்சேரி, திருச்சிராப்பள்ளி, உடுமலைப்பேட்டை, கோவை எனப் பல ஊர்களில் கண்டன ஆர்ப்பாட்டம் தமிழ்த்தேசியப் பேரியக்கம் நடத்தியது.
தமிழர்களுக்கு எதிராக கர்நாடகத்தில் இந்த அளவு கன்னட இனவெறி வீதிக்கு வந்து சதிராடும் நிலையில், தமிழ்நாட்டு முதலமைச்சர் மு.க. ஸ்டாலினும் எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமியும் (அ.தி.மு.க.) இதுபற்றி பேசாமல் ஒதுங்கிக் கொண்டு, கன்னட இனவெறியர்களுக்கு மறைமுக ஊக்கம் கொடுக்கிறார்கள். தமிழ்நாட்டின் பா.ச.க. முன்னணித் தலைவர் தமிழிசை அவர்களோ, கன்னட இனவெறியர்களின் பக்கம் நின்று கொண்டு, கமலகாசன் மன்னிப்புக் கேட்க வேண்டுமெனக் கூறி, பிறந்த தமிழினத்திற்கு துரோகம் செய்து கன்னடர்களுக்கு நேரடியாகவே ஊக்கம் கொடுக்கிறார்.
இந்நிலையில் கமலஹாசன் மேற்படி விளக்கத்திற்கு மேல் மன்னிப்புக் கேட்க வேண்டிய தேவை இல்லை. கர்நாடகத் தமிழர்களையும், கர்நாடகம் செல்லும் தமிழ்நாட்டுத் தமிழர்களையும் பாதுகாக்க, இந்திய – திராவிடக் கட்சிகளை நம்பாமல் - தமிழ்நாட்டுத் தமிழர்கள் அனைவரும் இதில் ஒருங்கிணைந்து தற்காப்பு நடவடிக்கைகள் எடுக்க அணியமாக வேண்டும் என்று தமிழ்த்தேசியப் பேரியக்கத்தின் சார்பில் கேட்டுக் கொள்கிறேன்.
===============================
தலைமைச் செயலகம்,
தமிழ்த்தேசியப் பேரியக்கம்
=================================
பேச: 9443918095, புலனம் : 9841949462
முகநூல் : www.fb.com/tamizhdesiyam
ஊடகம் : www.kannottam.com
இணையம் : www.tamizhdesiyam.com
சுட்டுரை : www.twitter.com/Tamizhdesiyam
காணொலிகள் : youtube.com/Tamizhdesiyam
==============================
Labels: அறிக்கைகள், கர்நாடகம், தமிழ்த்தேசியம், தமிழ்த்தேசியம்!, திராவிடம்

0கருத்துக்கள்:
Post a Comment
<< முகப்பு பக்கம்