இந்திரா காந்தியின்சனநாயகப் படுகொலை நாள் – சூன் 25.
ஐம்பதாண்டு தொடக்கம் – சில நினைவுகள்!
=============================================================
பெ. மணியரசன்
தலைவர், தமிழ்த்தேசியப் பேரியக்கம்இன்று 2024, சூன் 25! இதே நாளில்தான், 49 ஆண்டுகளுக்கு முன் 1975 சூன் 25 அன்று அன்றைய காங்கிரசுக் கட்சித் தலைமை அமைச்சர் இந்திராகாந்தி, அன்றைய குடியரசுத் தலைவர் பக்ருதின் அலி அகமது மூலம் நெருக்கடி நிலையை அறிவிக்கச் செய்து, இந்திய அரசமைப்புச் சட்டத்தையும், நாடாளுமன்றத்தையும் முடக்கி, ஏடுகளின் உரிமையைப் பறித்து முன்தணிக்கை முறையைத் திணித்து, தொழிற்சங்க உரிமைகளைப் பறித்து, பொதுக் கூட்டம், கருத்தரங்கம், ஊர்வலம், உண்ணாப் போரட்டம், வேலைநிறுத்தம் போன்ற உரிமைகளுக்குத் தடைவிதித்தார்.இந்திராகாந்தியின் ஊழல் மற்றும் சர்வாதிகார ஆட்சியை எதிர்த்து மக்கள் திரள் போராட்டம் நடத்திவந்த செயப்பிரகாசு நாராயணன், நிறுவனக் காங்கிரசுத் தலைவர் மொரார்ஜி தேசாய், பாசக தலைவர் (அப்போது சனசங்கம்) வாஜ்பாய், அத்வானி, சிபிஎம் மக்களவை உறுப்பினர் ஜோதிர்மாய் பாசு எனப் பல்வேறு எதிர்க்கட்சிகளின் தலைவர்களும், அடுத்தநிலைப் பொறுப்பாளர்களும், தொண்டர்களும், இந்தியா முழுவதும் பல்லாயிரக்கணக்கானோர் அந்த நாளில் சிறைகளில் அடைக்கப்பட்டனர்.தமிழ்நாட்டில் அப்போது தி.மு.க. ஆட்சி; கலைஞர் கருணாநிதி முதலமைச்சர். இந்திராகாந்தியின் நெருக்கடி நிலை அறிவிப்பை, தி,மு.க.வும் அதன் ஆட்சியும் எதிர்த்தன. நெருக்கடிநிலையை எதிர்த்ததற்காக எவரையும் தி.மு.க. ஆட்சி கைது செயவில்லை.1971 மக்களவை மற்றும் தமிழ்நாடு சட்டப் பேரவைத் தேர்தலில் இந்திரா காங்கிரசுடன் கூட்டணி சேர்ந்து போட்டியிட்ட திமுக வுக்கும் இந்திரா காங்கிரசுக்கும் இடையே பின்னர் பிளவு ஏற்பட்டது. குறிப்பாக, திமுகவிலிருந்து விலகி எம்ஜிஆர் தனிக்கட்சி தொடங்குவதன் பின்னணியில் தலைமை அமைச்சர் இந்திராகாந்தியும் தமிழ்நாட்டில் இந்தியக் கம்யூனிஸ்டுக் கட்சித் தலைவர் எம். கலியாணசுந்தரமும் இருந்தனர்.இப்பின்னணியில்தான் திமுக-இந்திரா கங்கிரசுக் கூட்டணி முறிந்தது. இந்த நிலையில்தான் காங்கிரசின் நெருக்கடிநிலை அறிவிப்பை தி.மு.க. எதிர்த்தது.ஆட்சியில் உள்ள தி.மு.க. எதிர்த்ததால் சிபிஎம் கட்சியில் பணியாற்றிய நாங்களும் மாநிலத் தலைவர்களும் தளைப்படுத்தப்படவில்லை. நெருக்கடி நிலையை எதிர்த்து தமிழ்நாட்டில் கூட்டங்கள் நடத்தினோம். அப்போது ஆகத்து 15 விடுதலை நாள் வந்தது. 14.8.1975 இரவு தஞ்சை நகரில் மருத்துவக் கல்லூரியில் படித்து வந்த தோழர் கே. மணி போன்ற மாணவத் தோழர்களும் நான் உட்பட சில தோழர்களும் சேர்ந்து, நெருக்கடி நிலையைக் கண்டித்து கையால் அழகாக எழுதப்பட்ட சுவரொட்டிகளை ஒட்டினோம்.“சுதந்திரம் – இரவில் வாங்கினோம்; இன்னும் விடியவே இல்லை”, “சர்வாதிகாரி இந்திராவே ஜனநாயகத்தைக் கொலைசெய்யாதே”, “காங்கிரஸ் சோசலிசம் – நாய்க்கும் மனிதனுக்கும் ஒரே எச்சில் இலையில் உணவு”, “சர்வாதிகாரி இந்திரா ஒழிக!”, “ஜனநாயகம் மீட்போம்” – இப்படிப்பல முழக்கங்கள்!மறுநாள் தஞ்சை அரண்மனைக் காவல் நிலையத்தில் என்மீது வழக்குப் பதிவு! சில நாள் கழித்துத் தற்செயலாகக் கண்ட காவல் துறையின் உளவுப்பிரிவு தலைமைக் காவலர், என்னைக் கைது செய்யக் காவல் நிலையத்துக்குக் கையைப் பிடித்து அழைத்தார். உதறிவிட்டு மிதிவண்டியில் வேகமாகச் சென்று தப்பினேன்.அந்நாட்களில் காங்கிரசார் “இந்திராவே இந்தியா – இந்தியாவே இந்திரா” என்று முழக்கம் கொடுத்தனர். இந்திராகாந்தி தன் இளைய மகன் சஞ்சய்காந்தியை இறக்கிவிட்டு, ஆட்சிப் பணியில் இல்லாமலே அதிகார அட்டூழியங்கள் செய்ய வைத்தார். சஞ்சய் காந்தி புதுதில்லியில் நடத்திய வன்முறை தர்பார் கொஞ்சநஞ்மல்ல!தொழிலாளர்கள் – இலாபக் கணக்குக் காட்டாத தொழிற்சாலைகளில் போனஸ் கேட்கக் கூடாது. இலாபமுள்ள தொழிற்சாலையில் 8.33 விழுக்காட்டிற்கு மேல் போனஸ் கேட்டுப் போராடக் கூடாது. ஆனாலும் இந்திய கம்யூனிஸ்டுக் கட்சியின் அன்றைய குருபீடமான சோவியத் ஒன்றியம் (இரசியா) இந்திராவின் நெருக்கடி நிலையை ஆதரித்தது. எனவே, சிபிஐ கட்சியும் இந்திராகாந்தியின் நெருக்கடி நிலையை ஆதரித்தது.கருணாநிதி எதிர்ப்பை முதன்மைப்படுத்தி, 1972-இல் அதிமுகவைத் தொடங்கிய எம்ஜியார், இந்திரா காங்கிரசின் நெருக்கடி நிலையை ஆதரித்தார்.1976 சனவரி 31 அன்று தமிழ்நாட்டின் திமுக ஆட்சியைக் கலைத்து, திமுக தலைவர்களையும் ஆயிரக்கணக்கான தொண்டர்களையும் (கருணாநிதியையும் மற்றும் சில தலைவர்களையும் தவிர்த்து), சிபிஎம் தலைவர்களையும் ஆளுநர் ஆட்சியில் தளைப்படுத்தி சிறையில் அடைத்தார்கள். ஆர்.எஸ்.எஸ். காரர்களையும் சிறையில் அடைத்தார்கள்.கைதாகாமல் தப்பித்து, தலைமறைவாகக் கட்சிப்பணிகள் செய்ய வேண்டிய தோழர்கள் பட்டியலில் நானும் ஒருவன். எனவே நான் கைதாகவில்லை. ஏராளமான சிபிஎம் தோழர்களைப் பிடித்து, “உங்கள் தலைவர் வெங்கடாசலம் எங்கே” என்று கேட்டு அடித்துத் துன்புறுத்தினர். சிலரைச் சிறையில் அடைத்தனர்.செய்தித்தாள்கள் முன்கூட்டியே தணிக்கை அதிகாரிகளிடம் மாதிரி நகலைக் கொடுத்து, அவர்கள் மறுக்கும் செய்திகளை நீக்கிவிட்டுத்தான் நாளிதழ் உட்பட வெளியிடமுடியும். நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் பேசியதை ஏடுகள் வெளியிடக் கூடாது. தணிக்கை செய்து நாடாளுமன்ற அலுவலகம் வெளியிடும் பேச்சுகளை மட்டுமே வெளியிட முடியும்.பொதுக் கூட்டங்கள், ஊர்வலங்களுக்குத் தடை!இன்றைய தலைமுறை இளையோர் எண்ணிப் பாருங்கள்! எனவே காங்கிரசு சனநாயகப் பறிப்பில் எப்போதும் இச்சை கொண்ட கட்சிதான்! நேருவின் சனநாயகப் பகைச் செயல்களை வேறொரு வாய்ப்பில் அடுக்கலாம்.1976-இல் நடத்த வேண்டிய மக்களவைத் தேர்தலை இந்திரா காந்தி நடத்தவில்லை. மக்களவையின் வாழ்நாளை நீட்டிக் கொண்டார். பன்னாட்டு அழுத்தங்கள் மூலம் 1977-இல் மக்களவைத் தேர்தல் நடத்தினார். படுதோல்வி கண்டார் இந்திரா காந்தி. சனதாக் கட்சி என்ற பலகட்சிக் கூட்டமைப்பு வென்றது.காங்கிரசும் இப்போது ஆளும் பாசகவும் சாரத்தில் இந்தி மண்டலத்தின் ஆரியத்துவா அரசியல் கட்சிகள். அவற்றின் குருதியில் சர்வாதிகாரம் உள்ளது. இப்போது 49 ஆண்டுகளுக்கு முன் இந்திரா காந்தி நடத்திய சனநாயகப் படுகொலைகளை மோடி பேசி, சனநாயக வேடம் போடுகிறார். சம்மு-காஷ்மீர் மாநிலத்தையே சிதைத்து ஒன்றியப் பிரதேசங்களாக மாற்றி – அரசமைப்புச் சட்டம் அதற்கு வழங்கிய சிறப்புரிமையைப் பறித்தவர் மோடி! இவர் அரசமைப்புச் சட்ட பாதுகாவலர் போலவும், காங்கிரசு அரசமைப்புச் சட்டத்தைச் சிதைத்த கட்சி என்றும் தந்திரமாக இப்போது பேசுகிறார். சம்முகாஷ்மீர் சிறப்புரிமை 370ஐ மோடி அரசு பறித்ததை, சோனியா – ராகுல்காந்தி காங்கிரசு எதிர்க்கவில்லை. பறித்த வழிமுறையைத்தான் எதிர்ப்பதாகக் கூறினார்கள்.இந்திய சனநாயகம் முழுமையானது போல காங்கிரசு பாசக மட்டும் அல்ல, இடதுசாரிகள், திராவிடவாதிகள் எனப் பலரும் நடிக்கின்றனர். பலநாடுகளில் உள்ள சனநாயகமும் கூட்டாட்சியும் இந்தியாவில் இல்லை என்பதை ஒப்பிட்டு உணர வேண்டும்!மாநில அரசுகளுக்கிருந்த விற்பனை வரி உரிமையை இரத்துச் செய்து, இந்திய அரசு ஜிஎஸ்டி வரியைத் திணிப்பதற்கு, அனைத்துத் தயாரிப்புகளையும் செய்தது மன்மோகன் சிங் தலைமையிலான காங்கிரசு ஆட்சி. அதைச் செயல்படுத்தியது பாசக ஆட்சி. மருத்துவக் கல்லூரி மாணவர் சேர்க்கைக்கு நுழைவுத் தேர்வாக நீட் தேர்வைத் தயார் செய்தது மன்மோகன் சிங் ஆட்சி. அதைச் செயல்படுத்தியது மோடியின் பாசக ஆட்சி. மாநில அரசின் ஒப்புதல் இல்லாமலும், அதற்குத் தகவல் தெரிவிக்காமலும் ஒரு மாநிலத்தில் புகுந்து, இந்திய அரசின் காவல்துறை யாரை வேண்டுமானாலும் கைது செய்து கொண்டு போக அனுமதி வழங்கும் என்ஐஏ என்ற தேசிய புலனாய்வு முகமையை உருவாக்கியது காங்கிரசு ஆட்சி. அதைத்தான் பாசக செயல்படுத்தி வருகிறது.ஆட்சியிலிருந்த காங்கிரசும், ஆட்சியில் இல்லாத பாசகவும் இணைந்துதான் ஈழத்தமிழர்களை இன அழிப்புச் செய்ய சிங்கள வெறியர்களுக்குத் துணைபோயின!மக்களுக்கு என்னென்ன சனநாயக உரிமைகள் வேண்டும் என்பதை முன்வைத்துதான் 2024 சூலை – ஆகத்து மாதங்களில் “தமிழ்நாட்டைக் காப்போம் - தன்னாட்சி மீட்போம்” என்று பரப்புரை செய்ய உள்ளோம்!இந்தியாவில் மிகக் கொடூரமாக இந்திரா காந்தி சனநாயகப் பறிப்பு செய்த 50-ஆம் ஆண்டு தொடக்கத்தில் அந்நினைவுகளை உங்களுடன் பகிர்ந்து கொண்டேன்! நன்றி, வணக்கம்!===============================தலைமைச் செயலகம்,தமிழ்த்தேசியப் பேரியக்கம்=================================பேச: 9443918095, புலனம் : 9841949462முகநூல் : www.fb.com/tamizhdesiyamஊடகம் : www.kannottam.comஇணையம் : www.tamizhdesiyam.comசுட்டுரை : www.twitter.com/Tamizhdesiyamகாணொலிகள் : youtube.com/Tamizhdesiyam=================================Labels: எமெர்ஜென்சி, கட்டுரைகள், காங்கிரஸ், நெருக்கடி_நிலை