<body><script type="text/javascript"> function setAttributeOnload(object, attribute, val) { if(window.addEventListener) { window.addEventListener('load', function(){ object[attribute] = val; }, false); } else { window.attachEvent('onload', function(){ object[attribute] = val; }); } } </script> <div id="navbar-iframe-container"></div> <script type="text/javascript" src="https://apis.google.com/js/platform.js"></script> <script type="text/javascript"> gapi.load("gapi.iframes:gapi.iframes.style.bubble", function() { if (gapi.iframes && gapi.iframes.getContext) { gapi.iframes.getContext().openChild({ url: 'https://www.blogger.com/navbar/6955529389241309188?origin\x3dhttp://thozharmaniyarasan.blogspot.com', where: document.getElementById("navbar-iframe-container"), id: "navbar-iframe" }); } }); </script>
Monday, June 16, 2025


முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அவர்களே!

தஞ்சையில் நின்று நெஞ்சாரப் பொய்யுரைக்கலாமா?
==========================================
பெ. மணியரசன்,
தலைவர் - தமிழ்த்தேசியப் பேரியக்கம்
==========================================

தமிழ்நாட்டில் இன்றைக்குள்ள அரசியல் கட்சிகளின் பரப்புரை உத்தி பிரம்மாண்டங்களைக் காட்டி மக்களைப் பிரமிக்க வைத்து ஈர்ப்பது என்பதாகும்! அந்தத் தந்திரத்தில் தி.மு.க.வும் அ.தி.மு.க.வும் ஒரே தன்மையானவையே! மற்ற சின்ன தி.மு.க.களும் சின்ன அ.தி.மு.க.களும் தங்களின் வலிமைக்கு ஏற்ப ஆடம்பரங்களை அரங்கேற்றி வருகின்றன.

கடந்த 2025 சூன் 15 – 16 ஆகிய இருநாட்களும் தமிழ்நாடு முதலமைச்சரும் தி.மு.க. தலைவருமான மு.க. ஸ்டாலின் தஞ்சையில் தன் பரிவாரங்களுடன் முகாமிட்டு பல்வேறு பிரம்மாண்டங்களை மக்களிடம் நிகழ்த்திக் காட்டினார்.

திருச்சியிலிருந்து அவர் தஞ்சைக்கு மகிழுந்தில் வந்த நெடுஞ்சாலையில், சற்றொப்ப 70 கி.மீ தொலைவுக்கும் இடைவிடாமல் இருவரிசையாக தி.மு.க. கொடிகளை நெருக்கமாக இரும்புத் தடிகளால் நட்டிருந்தார்கள்.

தஞ்சையை நெருங்கும்போது சாலையில் மக்களைத் திரட்டி “வாழ்க” முழங்கி வரவேற்புக் கொடுத்தனர். அதற்கு முன்பாகவே, மு.க. ஸ்டாலின் படமும் உதயநிதி படமும் பொறிக்கப்பட்ட மிகப்பெரிய “பலூன்” வானத்தில் பறக்கவிடப்பட்டது.

இதற்கு முன்பெல்லாம் அரசியல் கட்சிகளின் தலைவர்களும், பேச்சாளர்களும் மேடை நாடகம் (சொற்பொழிவு) மட்டுமே நடத்துவார்கள். அவர்களின் ஆதரவாளர்கள், மைக் மதன காமராசர்களின் செயற்கையான பேச்சுப் புயலை - பேச்சு நாட்டியத்தை - பேச்சு நகைச்சுவையை - மற்றமற்ற சுவைகளை இரசிப்பார்கள்! அது இப்போது பழைய கவர்ச்சியை இழந்து விட்டது! இப்போது அரசியல் தலைவர்கள் சாலை நாடகம் (Road Show) நடத்த மக்களிடம் இறங்கி வந்துவிட்டார்கள். இந்த அரசியல் சாலை நாடகத்தை அரங்கேற்றிப் பிரபலப்படுத்தியவர் இந்தியத் தலைமை அமைச்சர் நரேந்திரமோடி! மு.க. ஸ்டாலின் மோடியிடமிருந்து அதைக் கற்றுக் கொண்டார்.

தஞ்சை மணிமண்டபத்திலிருந்து கீழ்ப்பாலம் வழியாகப் பழைய பேருந்து நிலையம் வரை முதல்வர் மு.க. ஸ்டாலின் நடந்து - மக்களிடம் மனுக்கள் வாங்கியுள்ளார். மக்கள் தன்னுடன் தற்படம் (செல்ஃபி) எடுக்க முகம் கொடுத்துள்ளார். ஆனால் அம்மக்களில் பெரும்பாலோர்க்குக் கட்டணம் செலுத்தி அழைத்து வந்துள்ளார்கள்.

வாடகைக்கு அழைக்கப்பட்டவர்களாக இருந்தாலும், வெளியில் பார்ப்பவர்களுக்கு முதலமைச்சரின் மக்கள் - “செல்வாக்கு” பெரிதாக்கப்பட்ட காட்சியாக இருக்கும் அல்லவா, அது போதும்!

தஞ்சை பழைய பேருந்து நிலையம் அருகில், நாடகம், மாநாடு, கருத்தரங்கம், இசை நிகழ்ச்சி என நடந்துவந்த வரலாற்றுச் சிறப்புமிக்க “இராமநாதன் மன்றம்” இடிக்கப்பட்டுவிட்டது. அந்த இடத்தில் கருணாநிதி சிலையைத் திறந்தார் ஸ்டாலின்!

எல்லாவற்றுக்கும் சிகரம் வைத்த நிகழ்ச்சி 16.6.2025 முற்பகல் தஞ்சை சரபோஜி அரசினர் கலைக்கல்லூரி விளையாட்டுத் திடலில் நடந்த அரண்மனை விழாவாகும்! சக்ரவர்த்தி தன் குடிபடைகளுக்கு நலத்திட்டங்கள் வழங்கும் விழா!

பலகோடி ரூபாய் செலவில் போடப்பட்டிருந்த மிகமிகப் பெரும் தகரக் கொட்டகை! கூரையின் உட்பகுதி முழுதும் ஒப்பனைகள். பத்தாயிரம் பேர் உட்காரக் கூடிய அளவு மிகமிகப் பெரிய கட்டுமானம் அது!

அதன் நுழைவாயில் முகப்பு அரண்மனை போன்றது. தஞ்சை நாயக்க - மராத்திய அரண்மனைக் கோபுரம் போலவே ஒரு கோபுரம் முகப்பில் எழுப்பப்பட்டிருந்தது. கோபுரத்திற்குக் கீழ் - அம்முகப்பின் நடுவில் கருணாநிதி படம். அதன் இடது முனையில் மு.க. ஸ்டாலின் படம். கருணாநிதியின் வலது ஓரத்தில் உதயநிதி படம்! வேறு யார் படமும் இல்லை! முன்னாள் முதல்வர் கருணாநிதி படம் இருந்தது. ஆனால் முன்னாள் முதல்வர் அண்ணாவின் படம் அதில் இல்லை.

அதில் கருணாநிதி படத்திற்குப் பக்கத்தில், தஞ்சை தலையாட்டிப் பொம்மைகள் இரண்டு தீட்டப்பட்டிருந்தன! இது ஒரு தத்துவத்தை அடையாளப்படுத்தியது. “தி.மு.க. எங்களின் குடும்பச் சொத்து; அதனால் அதன் ஆட்சியில் உள்ள தமிழ்நாடு அரசும் எங்கள் குடும்பச் சொத்து. எங்கள் வாரிசு அரசியல்தான் தொடரும். கழகக் கண்மணிகளும் தமிழ்நாட்டு மக்களும் எங்களுக்குத் தஞ்சை தலையாட்டிப் பொம்மைகள்!”. இந்தத் தத்துவம் அந்த படச்சித்தரிப்பில் உள்ளார்ந்த மெய்யியலாக (தத்துவமாக) இருந்தது என்று உய்த்துணர்ந்து (ஊகித்துக்) கொள்ளலாம்.

அதே முகப்புச் சித்தரிப்பில் அதன் வலது ஓரத்தில் ஆடவல்லான் (தில்லை நடராசர்) படமும், இடது ஓரத்தில் தஞ்சை பெரிய கோயிலும் இடம் பெற்றிருந்தன.

இன்று (17.6.2025) காலை அந்த அரண்மனை வளாகத்தைப் போய்ப் பார்த்துவிட்டு வெளியே வரும்போது, “அந்தக் கல்லூரி திடல் வளாகத்தின் நுழைவாயிலுக்கு வெளியே, சாலை ஓரமாக தேநீர், மூக்கரட்டைச்சாறு போன்ற மூலிகைச் சாறுகள் ஆகியவற்றைத் தள்ளுவண்டியில் வைத்து விற்றுக் கொண்டிருந்தார் ஓர் இளம் பெண். பார்த்தால் கல்லூரிப் படிப்பு படித்தவர் போல் தோற்றம் கொண்டிருந்தார். “என்னம்மா நேற்று கடைபோட முடிந்ததா என்று கேட்டேன். எப்படி ஐயா நேற்று போட முடியும்” என்றார். என்னம்மா படித்திருக்கிறீர்கள் என்று கேட்டேன். ”எம்.எஸ்.சி.” என்றார்.

வேலை கிடைக்கவில்லை. வேறு வழியில்லாமல், காலை நேரம் நடைப்பயிற்சிக்கு வருவோர்க்காக தள்ளுவண்டி விற்பனையாளராக உள்ளேன். இதற்கு உரிமையாளர்கள் இருக்கிறார்கள். நான் அவர்களிடம் வேலை செய்கிறேன். என் படிப்புக்கேற்ற வேலை கிடைத்தால் சொல்லுங்களய்யா” என்றார் அப்பெண்!

படித்த, பட்டம் பெற்ற, தொழிற்கல்வி கற்ற கோடிக்கணக்கான இளம் ஆண்களும் பெண்களும் உரிய வேலையின்றி - அத்துக் கூலிகளாகவோ, அதுவும் இல்லாமலோ - தமிழ்நாட்டில் தவிக்கிறார்கள்.

தமிழ்நாடு அரசுப் பணிகளில் - மருத்துவ மனைகளில் - பள்ளிக் கூடங்கள் முதல் பல்கலைக் கழகங்கள்வரை, காவல்துறையில், சிறைத்துறையில், மின்சார வாரியத்தில், தமிழ்நாடு அரசு துறைகளில் நிரப்பப்படாமல் காலியாக உள்ள நிரந்தரப் பணி இடங்களின் எண்ணிக்கை பத்து இலட்சத்திற்கும் மேல்! தமிழ்நாடு அரசுக்குள்ள கடன் பத்து இலட்சம் கோடி ரூபாய்!

மேற்படி காலி பணியிடங்களைத் தமிழ்நாடு அரசு ஏன் நிரப்பவில்லை? நிதி இல்லை! ஏன் இவ்வளவு பெருந்தொகை தமிழ்நாடு அரசுக்குக் கடன் இருக்கிறது? ஏழ்மை நிலையில் தமிழ்நாடு அரசு உள்ளது! ஆனால் பழங்கால மொகலாயச் சக்கரவர்த்திபோல் அரசு பணத்தில் ஆடம்பர விழாக்களை மு.க. ஸ்டாலின் நடத்துவது ஏன்? மக்களை மயக்க, மறுபடியும் 2026 தேர்தலில் வெற்றிபெற்று ஆட்சி அதிகாரத்தைப் பிடிக்க!

மக்களைத் தட்டி எழுப்ப, மக்களை ஈர்க்க தி.மு.க. போன்ற கட்சிகளுக்கு உண்மையான இலட்சியங்களோ, கோரிகைகளோ இல்லை! அக்கட்சிகளின் தலைவர்களுக்கான உயிர் இலட்சியங்கள் மூன்று; பதவி - பணம் - பகட்டு!

இவர்கள் பொய் சொல்வதை - இராசதந்திரம் என்று வர்ணித்துக் கொள்வார்கள்!

தஞ்சை நிகழ்ச்சியில், “கலைஞர்தான் காவிரி உரிமைகளை மீட்டார்” என்று மு.க. ஸ்டாலின் முழுமையாகப் பொய்யுரைத்தார்.

உச்ச நீதிமன்றத் தீர்ப்பின்படி மாதவாரியாகத் திறக்க வேண்டிய மிகக் குறைந்த தண்ணீரைக்கூடத் திறந்துவிட தொடர்ந்து மறுத்து வருகிறது கர்நாடக அரசு! கர்நாடக அணைகள் நிரம்பி வெளியேறும் வெள்ளம்தான் அங்கிருந்து மேட்டூர் வருகிறது.

தஞ்சாவூரில் நின்று கொண்டு, நெஞ்சாரப் பொய் சொல்லும் முரட்டுத் துணிச்சல் மு.க. ஸ்டாலின் போன்றவர்களுக்குக் கைவந்த கலை!

===============================
தலைமைச் செயலகம்,
தமிழ்த்தேசியப் பேரியக்கம்
=================================
பேச: 9443918095, புலனம் : 9841949462
முகநூல் : www.fb.com/tamizhdesiyam
ஊடகம் : www.kannottam.com
இணையம் : www.tamizhdesiyam.com
சுட்டுரை : www.twitter.com/Tamizhdesiyam
காணொலிகள் : youtube.com/Tamizhdesiyam
==============================

Labels: , , , ,

0கருத்துக்கள்:

Post a Comment

<< முகப்பு பக்கம்


தோழர் மணியரசன்
அவர்களின் படைப்புகள் மற்றும் கருத்துக்களை இத்தளத்தில் காணலாம்.
வாசகர்களின் கருத்துக்களும் வரவேற்கப்படுகின்றன.

Web This Blog

தொகுப்பு

முந்தைய பதிவுகள்

தோழமைத் தளங்கள்