<body><script type="text/javascript"> function setAttributeOnload(object, attribute, val) { if(window.addEventListener) { window.addEventListener('load', function(){ object[attribute] = val; }, false); } else { window.attachEvent('onload', function(){ object[attribute] = val; }); } } </script> <div id="navbar-iframe-container"></div> <script type="text/javascript" src="https://apis.google.com/js/platform.js"></script> <script type="text/javascript"> gapi.load("gapi.iframes:gapi.iframes.style.bubble", function() { if (gapi.iframes && gapi.iframes.getContext) { gapi.iframes.getContext().openChild({ url: 'https://www.blogger.com/navbar/6955529389241309188?origin\x3dhttp://thozharmaniyarasan.blogspot.com', where: document.getElementById("navbar-iframe-container"), id: "navbar-iframe" }); } }); </script>

"கோட்சேவாதிகளை முறியடிப்பது எப்படி..?" தோழர் பெ.மணியரசன் கட்டுரை.

Sunday, February 1, 2015

"கோட்சேவாதிகளை முறியடிப்பது எப்படி..?" 
--தோழர் பெ.மணியரசன் கட்டுரை.

“காந்தியடிகளைக் கொலை செய்த கொலைகாரன் நாதுராம் கோட்சேவுக்குச் சிலை எழுப்ப வேண்டும் என்ற ஆர்.எஸ்.எஸ் பரிவாரங்களின் திட்டம், கோட் சேயை மதிக்க வேண்டும் என்ற நோக்கில் உருவா னதாக இருக்காது. ஏனெனில் “பயன்படுத்து, தூக்கி எறி” (USE AND THROUGH) என்பதுதான் பார்ப்பனியப் பண்பாடு. கோட்சேக்கு சிலை எழுப்பும் அவர்களது அறிவிப்பு வன்முறைக்குத் தயாராகுங்கள் என்று நாடுமுழுவதுமுள்ள ஆர்.எஸ்.எஸ் பரிவாரங்களுக்கு அவர்கள் காட்டும் சைகையாகும். மாற்றுக் கருத்து டைய மக்களை வன்முறை மூலம் தாக்கிப் பணிய வைக்கும் பார்ப்பனிய ஆர்.எஸ்.எஸ் உத்தியின் முன்னோட்டம் ஆகும்.
நரேந்திர மோடி தலைமை அமைச்சர் ஆனவுடன், மும்பையிலிருந்து வெளிவரும் “இந்து வாய்சு”(HINDU VOICE) என்ற ஆங்கில இந்துத்துவா ஏடு, மோடிக்கு வேண்டுகோள் கடிதம் அனுப்பி அதனை அவ்வேட்டி லும் பதிவிட்டது. அதில், ரூபாய்த் தாள்களிலும் நாணயங்களிலும் உள்ள காந்தியின் படத்தை நீக்கி விட்டு, அவற்றில் மாதா இலட்சுமியின் படத்தை அச்சிட வேண்டும் என்பது உட்பட பல கோரிக்கைகள் எழுப்பப்பட்டி ருந்தன. அவற்றுள் ஒன்று, சட்டீஸ்கட் மாநிலத் தில் மாவோயிஸ்ட்டுகளைத் தாக்க நிலக்கிழார்கள் ‘சல்வா சுடும்’ என்ற சொந்தப் படையை வைத்துக் கொள்ள நடு வண் அரசும் மாநில அரசும் அனுமதித் தன. அதுபோல், இந்துத்துவா அமைப் புகள் இந்துக்களைப் பாதுகாக்க ஆயுதங்களுடன் உள்ள சொந்தப் படைகள் வைத்துக் கொள்ள அனுமதி வழங்க வேண்டும் என்பதாகும்.
சனநாயக வழியில் இப்போது இந்தியாவை ஆளும் அதிகாரத்தை இந்துத்துவ வெறியர்கள் பெற்றுள் ளார்கள். இதுபோதாது, ஆயுதக்குழுக்கள் மூலம் மாற்றுக் கருத்துடையோரை ஒடுக்கி, தீர்த்துக் கட்டி இந்துத்துவா பாசிச ஆட்சியை நிரந்தரப்படுத்திக் கொள்ள வேண்டும் என்ற அவர்களின் திட்டத்தின் கருத்துப் பரப்பல் நோக்கம்தான் கோட்சேக்கு சிலை எழுப்பும் கோரிக்கை.
எனவே, நாம் கருத்து நிலைப் போராட்டங்கள் மட்டும் நடத்திக் கொண்டிருக்க முடியாது. மக்கள் திரள் களப் போராட்டங்களையும் நடத்த வேண்டிய தேவை உள்ளது என்பதைத்தான் கொலைகாரன் கோட்சேக்கு சிலை எழுப்பும் ஆர்.எஸ்.எஸ். பரிவாரங் களின் அறிவிப்பு நமக்கு அறிவுறுத்துகிறது.
நாம் இந்துத்துவா என்பதில் பொதிந்துள்ள உட்கூறுகளைப் புரிந்து கொள்ள வேண்டும். இந்துத் துவா என்பது மதவாதம் மட்டு மன்று; அதில் மதவாதம் இருக்கி றது; பார்ப்பன வர்ணாசிரம தருமம் இருக்கிறது; ஆரிய இனவாதம் இருக்கிறது. ஆரியப் பார்ப்பனிய மேலாதிக்கம் கொண்ட “இந்து தேசம்” இருக்கிறது.
இந்த நான்கு கூறுகளின் குவி மையமாகத்தான் பாரதிய சனதாக் கட்சி உள்ளிட்ட ஆர்.எஸ்.எஸ். பரி வாரங்கள் ‘இந்துத்துவா’ என்ற முழக்கத்தை முன் வைக்கின்றன. இந்நான்கையும் எதிர் கொள்ளும் திட்டம் நமக்குத் தேவை!
நம்முடைய குப்புசாமி, கோவிந்தசாமி உள்ளிட்ட அப்பாவி மக்களை “நீயும் இந்து நானும் இந்து. நீ என்னோடு இந்து மதம் காக்க வந்திடு” என்று கூறுகின்றனர். இது ஓர் உத்தி!
ஒரு மதம் என்ற பொருளில் இந்து மதத்தை நாம் எதிர்க்க வேண்டியதில்லை. இந்து என்ற சொல்லின் தாய்ச் சொல் சிந்து நதிதான். மேற்கே இருந்து இந்தப் பகுதிக்குள் நுழைந்தவர்களுக்கு, இம் மண்டலத்தில் உள்ள மக்களை என்ன இனம் சொல்லி அழைப்பது, என்ன மதம் சொல்லி அழைப்பது என்று புரியவில்லை. பல இனங்கள், பல வழிபாட்டுமுறைகள் இருந்தன. புத்தத்திற்கு, கிறித்துவத்திற்கு, இசு லாத்திற்கு இருப்பது போல், ஒற்றைத் தலைமை ஆசான்- ஒற்றைப் புனித நூல் சிந்து நதிக்குக் கிழக்கே உள்ள பெருமண்டலத்தில் வாழ்ந்த பெருமக்களுக்கு இல்லை. எனவே, சிந்து நதியை அடையாள மாக வைத்து ‘இந்து’ என்று அழைத்தனர். மக்களினப் பெயரும் “இந்து”தான். மதப்பெயரும் இந்து தான். இந்தியா என்ற பெயரும் சிந்து நதியை அடிப்படையாய்க் கொண்டு உருவான பெயர்தான்.
இந்தியா குறித்துப் பல கட்டு ரைகள் எழுதினார் காரல் மார்க்சு. அவர் இந்திய மக்களை ஹின்டூஸ் (Hindoos) என்றே அழைத்தார். அதன் பொருள் இந்து மதத்தைச் சேர்ந்தவர்கள் என்பதன்று. இந்திய மண்டலத்தில் வாழும் மக்கள் என்று பொருள்.
மதப்பெயராக “இந்து” என்ற சொல் சமற்கிருத வேதங்கள, உபநி டங்கள், காவியங்கள், புராணங்கள் எதிலும் வரவில்லை. ஏனெனில், அந்தப் பெயரில் ஒரு மதம் இருக்க வில்லை. இந்தியத் துணைக் கண்டம் முழுவதும் ஒற்றைத் தலைமை கொண்ட ஒரு மதம் என்ற அளவில், இந்துமதம் அப் போதும் இல்லை. இப்போதும் இல்லை.
காலஞ்சென்ற பெரிய சங்கராச் சாரியார் சந்திரசேகரேந்திரர், “இந்து” பற்றிக் கூறியது மிக முக்கியமான ஒப்புதல் வாக்குமூலம் ஆகும்.
“நமக்குள் சைவர்கள், வைஷ்ண வர்கள் என்று வேறாகச் சொல்லிக் கொண்டிருந்தாலும் வெள்ளை க்காரன் நமக்கு ஹிந்துக்கள் என்று பொதுப் பெயர் வைத்தானோ நாம் பிழைத்தோம். அவன் வைத்த பெயர் நம்மைக் காப்பாற்றியது. அவன் மட்டும் 'ஹிந்து' என்று பெயர் வைத்திருக்காவிட்டால், ஒவ்வொரு ஊரிலும் சைவர், வைஷ்ணவர், சாக்தர், முருக பக்தர், பிள்ளையார் உபாசகர், ஐயப்பன் பக்தர், எல்லையம்மனைக் கும்பிடு கிறவர் என்று நம்மைப் பிரித்துக் கொண்டு தனித்தனி மதமாக நினைத்துக் கொண்டிருப்போம்”. (தெய்வத்தின் குரல், முதல் பாகம்).
எனவே, இந்து என்ற சொல் லுக்கு நம்மை இழிவுபடுத்தும் எந்த உட்பொருளும் கிடையாது. மேற் கத்தியர் வழங்கிய “இந்து” என்ற பெயரை சுவீகரித்துக் கொண்ட ஆரியப் பார்ப்பன ஆற்றல்கள், வைதிக மதம், பிராமண மதம் என்ற பெயரில் தாங்கள் ஏற்கெனவே கொண்டிருந்த வர்ணாசிரம தருமச் சமயங்களுக்கு இந்து என்ற பெயரைச் சூட்டிக் கொண்டனர்.
நாம் பார்ப்பன ஆதிக்கத்தை, பார்ப்பனியத்தை, வர்ணாசிரம தருமத்தை எதிர்த்துப் போரிட வேண்டும். ஆரியம், பார்ப்பனியம், வர்ணாசிரம தர்மம் என்ற சொற் கோவைகளைப் பயன்படுத்தி எதிர்க்க வேண்டும். “இந்துத்துவா” என்று தலைப்பிட்டு எதிர்க்க வேண்டும். மொட்டையாக “இந்து மத எதிர்ப்பு” என்று நமது போர் முறையை வைத்துக் கொள்ளக் கூடாது.
ஏனெனில், சாதாரண மக்கள் தங்களை இந்து என்று கருதுகி றார்கள். இந்து மத ஒழிப்பு - இந்து மத எதிர்ப்பு என்ற தலைப்புகளில் நமது போராட்டம் நடந்தால்- எதிரி மிக எளிதாக நம் மக்களைத் தன் பக்கம் - இழுத்துக் கொள்வான். இந்து மதக்காவலன் என்ற வேட மிட்டு, நம் மக்களை ஆரியப் பார்ப்பனிய சக்திகள் இழுத்துக் கொள்ளும்.
அடுத்து, மதங்கள் குறித்த ஒரு சமத்துவ அணுகுமுறை மதச்சார் பற்ற சக்திகளுக்கு வேண்டும். மதச்சார்பின்மை என்பது மதமறுப் பல்ல; அனைத்து மதங்களையும் திறனாய்வின்றி ஏற்றுக் கொள்வது மல்ல. மதச்சார்பின்மை என்பது, அரசு - அரசியல் - கல்வி மூன்றிலும் மதம் தலையிடக்கூடாது என்பதா கும். அவரவர் மத வழிபாட்டுரி மையை - சடங்குகளைப் பாதுகாத் துக் கொள்ளும் உரிமை எல்லா மதத்தினர்க்கும் வேண்டும். சமூகத் திற்குக் கேடு விளைவிக்கும் மூட நம்பிக்கைகள், அடுத்த மதத்தாரை இழிவுபடுத்தல் போன்றவை மத உரிமை என்ற பெயரில் எந்த மதப்பிரிவார்க்கும் இருக்கக்கூடாது.
காந்தியடிகளைக் கொலை செய்த குற்றத்திற்காகக் கூண்டில் நின்ற போது, கோட்சே பல கருத் துகளைப் பேசினான். அவற்றுள் ஒரு கருத்து நமது கவனத்திற் குரியது. ”தில்லியில் ஒரு இந்துக் கோயிலில் காந்தியடிகள் நடத்தி வந்த பிரார்த்தனை கூட்டத்தில் தொடர்ந்து - திருக்குர்ரான் நூலில் இருந்து ஒரு பகுதியைப் படிக்கச் சொன்னார். இதே போல், பள்ளி வாசலில் இந்து மந்திரங் களைப் படிக்கச் சொன்னாரா என்றால் இல்லை. இந்தப் பாகுபாடு ஏன்?” என்று கோட்சே கேட்டான்.
இந்த வினாவுக்கு விடை சொல் லியாக வேண்டும். ஒரு பொதுத் திடலில் காந்தியடிகள் பிரார்த்த னைக் கூட்டம் நடத்தும்போது, திருக்குர்ரான் வரிகளைப் படித்துச் சொன்னால் தவறில்லை. ஒரு இந்துக் கோயிலில் நடக்கும் பிரார்த்தனைக் கூட்டத்தில் திருக்குர்ரான் வரிகளைப் படிக்கச் சொன்னது முரண்பாடானது. பள்ளி வாசல் தொழுகையில் இந்து மத சுலோகங்களை அல்லது பாடல் களை முஸ்லிம்கள் படிக்க மாட் டார்கள். அவர்கள் இந்து சுலோகங்களைப் படிக்காதது தவறல்ல. ஆனால், இந்துக் கோயி லில் திருக்குர்ரானைப் படிக்கச் சொன்னது சரியல்ல. அப்படியான மதச்சகிப்புத்தன்மையோ - பக்கு வமோ இப்போது எந்த மதத்திலும் இல்லை.
இந்த எடுத்துக்காட்டு, தமிழக அரசியலில் நமக்கும் படிப்பினை வழங்கக்கூடியது. முசுலிம் அல்லாத அரசியல் தலைவர்கள் பள்ளி வாசலில் நோன்புக் கஞ்சி குடிக்கி றார்கள். மதச்சார்பற்ற சக்திகள் இவ்வாறு செய்யும் போது, இந்துத்துவாவாதிகள்- இதைச் சுட்டிக்காட்டி, மதச்சார்பின்மை என்பது இந்துமத எதிர்ப்பை உள்ளடக்கமாகக் கொண்டிருக் கிறது என்கிறார்கள். அப்பாவி இந்து மக்களை இழுத்துக் கொள்ள பள்ளி வாசல் நோன்புக் கஞ்சி குடிக்கும் தலைவர்களின் செயலை இந்துத்துவா வெறியர்கள் பயன் படுத்திக் கொள்கிறார்கள்.
இதற்காக மதச்சார்பற்ற சக்தி கள் இந்து மத விழாக்களுக்குப் போக வேண்டும் என்று நான் கூற வில்லை. எல்லா மதங்களுக்கும் பொதுவாக நடந்து கொள்ள வேண்டும். முஸ்லிம் அல்லாத மதச்சார்பற்ற கட்சித் தலைவர்கள் நோன்புக் கஞ்சிகுடிக்கப் போக வேண்டியதில்லை.
இந்தத் தலைவர்கள் நோன்புக் கஞ்சி குடிக்கச் செல்வது மெய்யா கவே இஸ்லாத்தை - திருக்குர் ரானை ஏற்றுக் கொண்டு என்று கருத முடியாது. சிறுபான்மை மத மக்களின் வாக்குகளைக் கவருவதற் காகத் தந்திரமாக அப்படிச் செய்கிறார்கள். நோன்புக்கஞ்சி குடிக்கச் செல்லும் தலைவர்களில் பலர், இந்துக்களின் வாக்குகளை ஈர்த்திட சாதியைப் பயன்படுத்திக் கொள்கிறார்கள்.
நான் கடவுள் மறுப்பாளன்; இந்துக் கடவுகளையும் ஏற்க வில்லை. இசுலாமியக் கடவுகளை யும் ஏற்கவில்லை; கிறித்துவக் கடவுகளையும் ஏற்கவில்லை. புத்தக் கடவுளையும் ஏற்கவில்லை. ஆனால், கடவுள் ஒழிப்பை எனது முதன்மை வேலைத் திட்டமாகவும் வைத்துக் கொள்ளவில்லை.
கடவுள் மறுப்பை மாணவர் களுக்குப் பாடத்திட்டத்தில் 72 ஆண்டுகள் சோவியத் ஒன்றியம் சொல்லிக் கொடுத்தது. அங்கு கடவுள் ஒழிந்துவிட்டதா? இல்லை! சீனாவில் பாடத் திட்டத்தில் கடவுள் மறுப்பை வைத்துச் சொல்லிக்கொடுத்தார்கள். அங்கு கடவுள் ஒழிந்து விட்டதா? இல்லை. கடவுள் என்பது ஓர் உளவியல் சிக்கல். கடவுள் உண்டா - இல்லையா என்பது ஓர் ஆராய்ச்சி! பன்னெடுங்காலமாக இது நடந்து வருகிறது. கடவுள் உண்டு என்போரும் இருக்கி றார்கள்; இல்லை என்போரும் இருக்கிறார்கள். அந்த ஆராய்ச்சி நடக்கட்டும். நாளைக்கே இரண்டி லொன்று என முடிவு கட்டிவிடப் போவதாக அவசரப்பட வேண்டி யதில்லை. இரு தரப்பாரும் ஒருவரை ஒருவர் இழிவுபடுத்தும் வகையில் வாதமிட வேண்டாம்.
ஆய்வுப்பூர்வமாக - தருக்க அடிப்படையில் கடவுள் உண்டா - இல்லையா என்ற விவாதம் நடக் கட்டும். நாங்கள் தமிழ்த் தேசியத் தில் கடவுள் ஏற்பாளரும் இருக்க லாம்; கடவுள் மறுப்பாளரும் இருக்கலாம் என்கிறோம்.
அடுத்து, இந்துத்துவா கோட் பாட்டில் உள்ள ஆரிய இனம் குறித்து நாம் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். ஆரிய இனம் எங்கே இருக்கிறது என்றால், அது நேரடியாகக் கண்ணுக்குத் தெரி யாது. கண்ணுக்குத் தெரியாத காற்று இயங்குவதை உணர்கி றோம். அதுபோல், கண்ணுக்குத் தெரியாமல், ஆனால் வலுவாக இயங்கிக் கொண்டுள்ள ஆரிய இனத்தை - ஆரிய இன ஆதிக்க முயற்சிகளை நாம் அடையாளம் கண்டு கொள்ள வேண்டும்.
நரேந்திர மோடி ஆட்சி சமற்கிருதத் திணிப்பைத் தீவிரப் படுத்தியுள்ளது. சமற்கிருதம் யாருக்குத் தாய்மொழி? யாருக்கும் தாய்மொழி இல்லை. ஆரியர் களுக்கு - ஆரியப் பார்ப்பனர்களுக்கு சமற்கிருதம் புனித மொழி! அவர் களுக்கு சமற்கிருதம் வேத மொழி! ஆனால், அவர்களுக்கும் அது தாய் மொழி இல்லை.
இந்தியாவின் பெருமிதங்களாக வேத காலப் பழக்க வழக்கங்களை, வேதகால சமற்கிருத நூல்களைச் சொல்வார்கள். தமிழகக் கோயில் களில் தமிழில் அர்ச்சனை செய்வ தைப் பார்ப்பனர்கள் ஏற்க மாட் டார்கள். சமற்கிருதத்தில்தான் அர்ச்சனை செய்ய வேண்டும். பார்ப்பனர்கள்தாம் அர்ச்சகர்களாக இருக்க வேண்டும் என்பர். இந்திய அரசின் விருதுகள், விண்வெளி ஆய்வுகள், விளையாட்டுகள் என அனைத்திற்கும் சமற்கிருதப் பெயர் சூட்டுவார்கள். இவை யெல்லாம் தான் ஆரிய மேலாதிக்கவாதம். தமிழர்களை ஆரிய இனத்திற்குக் கீழ்ப்பட்டவர்களாகவும், தமிழை சமற்கிருதத்திற்குக் கீழ்ப்பட்ட தாகவும் வைத்திருக்க வேண்டும் என்பது இந்துத்துவாவின் உத்தி களில் ஒன்று.
இந்துத்துவாவை எதிர்ப்ப வர்கள் ஒளிவு மறைவின் றிப் பெயர் சொல்லி ஆரிய இன மேலாதிக்க வாதத்தை எதிர்க்க வேண்டும். வெறுமனே இந்துத் துவா எதிர்ப்பு என்று கூறுவது ஆரியப் பார்ப்பனிய சக்திகளை அடையாளம் காட்டாது.
இந்துத்துவா என்பது ஆரிய இனத்தை மட்டுமல்ல, ஆரிய தேசத்தையும் உள்ளடக்கமாகக் கொண்டது. நாதுராம் கோட்சே நடத்திய ஏட்டின் பெயர் இந்து ராஷ்ட்ரா! இந்து ராஷ்டிரா என்றால் இந்துதேசம் என்று பொருள்!
காந்தியடிகளை சுட்டுக் கொன் றதை ஞாயப்படுத்தி நீதிமன்றத்தில் பேசிய கோட்சே, தன் செயலுக்குப் பல காரணங்களைக் கூறுகிறான். தனது தேசக்கடமை என்று முத்தாய்ப்பாகக் கூறுகிறான்.
“வலிமையான தேசம் உருவாவ தற்குத் தேவை என்று நான் நினைக்கிற அறிவார்ந்த வழிமுறை களைக் கடைபிடிப்பதற்கு உரிய உரிமை கிடைத்துவிடும். இதைப் பற்றியெல்லாம், முழுமையாக எண்ணிய பிறகே, நான் இறுதியாக முடிவெடுத்தேன்.
”பிர்லா மாளிகையில், பிரார்த்த னைத் திடலில் 1948 சனவரி 30ஆம் நாள் துப்பாக்கியால் காந்தியைச் சுட்டேன்”
“இனி நான் சொல்வதற்கு எதுவுமில்லை. மனிதர்களால் அமைக்கப்பட்டுள்ள நீதிமன்றத் திற்கு அப்பால் வேறொரு நீதி மன்றம் இருக்குமானால், என்னு டைய செயல் அநீதியானது என்று சொல்லபடமாட்டாது என்ற நம்பிக்கை எனக்கு முழுமையாக உள்ளது”.
நாதுராம் கோட்சே சொல்லும் வலிமையான தேசம் எது? இந்தியா வில் ஆரியதேசம் அமைப்பது தான்.
வலிமையான ஆரியதேசம் அமைக்கும் கனவு கோட்சேயோடு முடிந்து போனதா? இல்லை. பா.ச.க. தலைவர்கள், ஆர்.எஸ்.எஸ். தலை வர்கள் பாரத தேசிய வெறி பேசும் தலைவர்கள் அனைவர் நெஞ்சத் திலும் கோட்சே குடி கொண்டிருக் கிறான்.
இந்துத்துவாவின் பெயரால் முன்வைக்கப்படும் ஆரிய தேசக் கனவை முறியடிப்பது எப்படி?
இந்தியா ஒரு தேசமல்ல; இந்தி யாவில் பல தேசங்கள் இருக்கின் றன என்ற உண்மையை உரத்துச் சொல்வதன் மூலம்தான் இந்துத் துவா தேசியத்தை முறியடிக்க முடியும். இங்கே தோழர் கண.குறிஞ்சி பேசும்போது, காந்தியை “Father of Pakistan” என்று கோட்சே கேலி செய்தான் என்று குறிப்பிட்டார். காந்தி இந்தி யாவின் தந்தை இல்லை என்பது கோட்சேவின் குற்றச்சாட்டு!
உண்மையில், வரலாற்றை உள்ளது உள்ளபடி பார்த்தால் இந்தியாவின் ‘தந்தைமார்கள்’ இராபர்ட்கிளைவும் வெல்லெஸ்லி பிரபுவும் தான்! அவர்களே பாகிஸ் தானின் தந்தைமார்களும் ஆவர். வெள்ளைக்காரனின் கிழக் கிந்தியக் கம்பெனியார்தான் இந்தியா என்ற புதிய நாட்டை வடிவமைத்தார்கள். அவர்கள் தங்களின் வணிகக் கொள்ளைக்காக அதை ஒட்டிய நிர்வாக வசதிக்காக இந்தியா என்ற பெயரில் பல்வேறு நாடுகளை, தேசிய இனங்களை - பல்வேறு தேசங்களை ஒரே நாடாக்கி னார்கள்.
வெள்ளைக்காரன் உருவாக்கித் தந்த ஒற்றை நிர்வாக எல்லையை வைத்துக் கொண்டு, இந்தியத்தேசம் - பாரத தேசம் என்பது எத்தனை பகட்டு வேலை! எத்தனை பம் மாத்து வேலை! அதை வைத்துக் கொண்டு தேசிய வெறியைக் கிளப்பி உண்மையான தேசிய இனங்களின் அடையாளங்களை - வரலாற்றுப் பெருமிதங்களை மறுக்கிறார்கள்; அழிக்கிறார்கள்.
ஆர்.எஸ்.எஸ். பரிவாரங்கள் இந்தியத் தேசியம் - பாரத தேசியம் என்று செயற்கையான உணர்ச்சி ஊட்டி மக்களை மயங்கச் செய்து, தன்பக்கம் திரட்டிக் கொள்ள உத்தி வகுத்துள்ளன. மக்களுக்கு இயல் பாகத் தாய்நாட்டுப் பற்றும் தங்கள் இனப்பற்றும் இருக்கும். இந்த இயற்கை உணர்ச்சியைத் தந்திர மாகத் திரிபு வேலை செய்து பயன் படுத்திக் கொள்கிறது பார்ப்பனியம்!
மதச்சார்பற்ற சக்திகள் அந்த உத்தியை எதிர்கொள்வது எப்படி? நாம் உண்மையைச் சொன்னால் போதும். இந்தியா ஒரு தேசமல்ல என்ற உண்மையைச் சொன்னால் போதும். இந்திய அரசமைப்புச் சட்டத்தில் உள்ளதைச் சொன் னால் போதும். இந்திய அரசமைப் புச் சட்டம் இந்தியாவை ஒரு தேசம் என்று கூறவில்லை. இந்தியா அதாவது பாரதம் அரசுகளின் ஒன்றியம் (India that is Bharat shall be a Union of States) என்கிறது.
இந்திய அரசமைப்புச் சட்டம் இந்தியாவை தேசம் என்று சொல் லாத போது, மதச்சார்பற்ற சக்திகள் இந்தியாவைத் தேசம் என்று ஏன் சொல்ல வேண்டும்? இந்திய அரசமைப்புச் சட்ட உருவாக்கத் தின்போது அரசமைப்பு அவையில் விவாதங்கள் நடந்து கொண்டி ருந்தது. அப்போது, இந்தியாவுக்குப் ‘பாரதவர்ஷம்’ என்று பெயர் சூட்ட வேண்டும், “இந்தியா” என்று பெயர் சூட்டக்கூடாது என்று கோரிக்கை வைத்து இந்து மகாசபையினர் தில்லியில் உண்ணாப் போராட் டம் நடத்தினர். அவர்களோடு சமரசம் செய்து கொண்டுதான், “இந்தியா அதாவது பாரதம்” என்று அரசமைப்பு அவை இந்த நாட்டுக்குப் பெயர் சூட்டியது.
சோவியத் ஒன்றியத்தில் இரண் டாவது உலகப் போரில் இட்லர் படையின் ஆக்கிரமிப்பைத் தடுக்க இரசியர்கள், பைலோ இரசியர்கள், ஜார்ஜியர்கள், உக்ரைனியர்கள், அஜர்பைஜானியர்கள் எனப் பல்வேறு தேசிய இனத்தவர்கள் ஒன்று சேர்ந்து போராடினர். அத்தனை இனத்தவர்களின் குருதி யும் தாய்நாட்டைக் காக்கும் போரில் ஒன்றாகக் கலந்து ஓடியது. இரண்டு இலட்சம் சோவியத் மக்கள் கொல்லப்பட்டனர். ஆனால், அதன் பின்னர்கூட அங்கு சோவியத் தேசியம் உருவாகி விட்டதாகக் கம்யூனிஸ்ட்த் தலைவர்கள் கூறவில்லை. தேசங் களின் ஒன்றியம் - Union of Nations என்றே சோவியத் ஒன்றியத்தை அழைத்தனர்.
இங்கே பார்ப்பனியத் தேசியத் தைக் கட்டமைப்பதற்காக, ஆரிய தேசத்தை உருவாக்குவதற்காக- இந்தியத் தேசியம் என்று முதலில் சொன்னதைப் பின்னர் பாரத தேசியம் என்று மாற்றிக் கொண் டனர். இந்தியர் என்று ஒரு தேசிய இனத்தைக் கற்பித்தவர்கள் இப் போது, பாரதீயர்கள் என்று கூறு கின்றனர்.
இந்திய அரசமைப்புச் சட்டம் இந்தியாவை ஒரு தேசம் என்று கூறவில்லை. இந்தியர் அல்லது பாரதீயர் என்ற பெயரில் ஒரு தேசிய இனம் இருப்பதாகவும் கூறவில்லை. தேசிய இனம் (Nationaliity) பற்றி இந்திய அரசமைப்புச் சட்டம் எதுவும் கூறவில்லை. இந்தியாவின் குடிமக்கள் யார் - Citizen of India என்பது பற்றி மட்டுமே அரசமைப் புச் சட்டம் கூறுகிறது.
அரசமைப்புச் சட்ட வரையறுப் பிற்குப் புறம்பாக நாம் ஏன் இந்தியத் தேசம் என்றும் இந்தியத் தேசிய இனம் என்றும் இந்தியன் என்றும் கூற வேண்டும்?
தேசம் என்பதற்கும் நாடு என்பதற்கும் வேறுபாடு இருக்கி றது. ஆங்கில அகராதியில் நேஷன் (Nation)) என்ற சொல்லுக்கும், கன்றி (Country) என்ற சொல்லுக் கும் உள்ள பொருளைப் பார்த்தால் இது விளங்கும். ஓர் ஆட்சி நிர்வா கத்தின் எல்லைக் குட்பட்ட பரப் பிற்கு, நாடு என்று பெயர். ஒரு பொது மொழி பேசும் மக்களைக் கொண்ட நிலப்பரப் பிற்குத் தேசம் என்று பெயர். ஒரு தேசிய இனம் என்பது ஒரு தாயகம், ஒரு பொது மொழி, பொதுப் பண்பாடு, பொது வான வரலாறு, பொதுவான உள வியல் கொண்ட மக்களைக் குறிக் கிறது.
நாடு என்பது ஓர் ஆட்சி எல்லைக் குட்பட்ட நிலப்பரப்பை யும் மக்களையும் குறிக்கிறது. இந் தியா ஒரு நாடே தவிர தேசமல்ல. தன்னல சக்திகள் - பார்ப்பனிய மற்றும் பெரு முதலாளிய சக்திகள் தங்களின் ஆதிக்க நலனுக்காகவும் சுரண்டல் நலனுக்காகவும் இந்தி யாவை ஒரு தேசம் என்றும் இந்தியாவில் வாழும் பல்வேறு தேசிய இன மக்கள் இந்தியர் என்ற ஒற்றைத் தேசிய இனத்தைச் சேர்ந்தவர்கள் என்றும் புனைவு களை உருவாக்கிவிட்டனர். மதச் சார்பற்ற சக்திகள் பார்ப்பனிய மற்றும் பெருமுதலாளிகளின் இந் தப் புனைவுகளை ஏற்கக் கூடாது.
இந்தியாவில் பல தேசங்கள் இருக்கின்றன. தமிழர், தெலுங்கர், குசராத்திகள், வங்காளிகள் போன்ற பல்வேறு தேசிய இனங்கள் இருக் கின்றன என்ற உண்மையை மதச் சார்பற்ற சக்திகள் பேச வேண்டும். இவ்வாறான உண்மைகள் மீது நாம் நின்று போராடினால்தான் ஆரியப் பார்ப்பனிய ஆர்.எஸ்.எஸ். பரிவாரங்களின் பாசிச நோக்கி லான கருத்தியல் புனைவு களைத் தகர்க்க முடியும்.
கொலைக் குற்றவாளி கோட் சேக்கு சிலை எழுப்புவதைத் தடுக்க நாம் தோளோடு தோள் சேர்ந்து போராடுவோம்! வெல்வோம்!

Labels:

0கருத்துக்கள்:

Post a Comment

<< முகப்பு பக்கம்


தோழர் மணியரசன்
அவர்களின் படைப்புகள் மற்றும் கருத்துக்களை இத்தளத்தில் காணலாம்.
வாசகர்களின் கருத்துக்களும் வரவேற்கப்படுகின்றன.

Web This Blog

தொகுப்பு

முந்தைய பதிவுகள்

தோழமைத் தளங்கள்