<body><script type="text/javascript"> function setAttributeOnload(object, attribute, val) { if(window.addEventListener) { window.addEventListener('load', function(){ object[attribute] = val; }, false); } else { window.attachEvent('onload', function(){ object[attribute] = val; }); } } </script> <div id="navbar-iframe-container"></div> <script type="text/javascript" src="https://apis.google.com/js/platform.js"></script> <script type="text/javascript"> gapi.load("gapi.iframes:gapi.iframes.style.bubble", function() { if (gapi.iframes && gapi.iframes.getContext) { gapi.iframes.getContext().openChild({ url: 'https://www.blogger.com/navbar/6955529389241309188?origin\x3dhttp://thozharmaniyarasan.blogspot.com', where: document.getElementById("navbar-iframe-container"), id: "navbar-iframe" }); } }); </script>

"திராவிடமா? தமிழ்த் தேசியமா?" தோழர் பெ.மணியரசன் பேச்சு.

Monday, March 16, 2015

"திராவிடமா? தமிழ்த் தேசியமா?"
====================================
-- தோழர் பெ.மணியரசன் பேச்சு (பகுதி 2)

(சென்னை சங்கம்-4 தமிழ்த் திருவிழாவில் 16.02.2015 அன்று, “இன்றையத் தேவை திராவிடமா? தமிழ்த் தேசியமா?” என்ற தலைப்பில் நடந்த விவாதத்தில் திராவிடம்’என்ற தலைப்பில் பேராசிரியர் சுப. வீரபாண்டியன் அவர்களும், ‘தமிழ்த் தேசியம்’என்ற தலைப்பில் தமிழ்த் தேசியப் பேரியக்கத் தலைவர் தோழர் பெ. மணியரசன் அவர்களும் பேசினர். தோழர் பெ. மணியரசன் வாதத்தின் நிறைவுப் பகுதியின் எழுத்து வடிவம்).

"பெரியாரியம் என்பது ஒரு தத்துவமாக, சிந்தனை யாக உருவாக்கப்படவில்லை. அதற்கான அடிப்படைக் கூறுகளோ, தரவுகளோ அதில் இல்லை (ஆய்வு முறை யியலும் இல்லை). அதனால்தான் பெரியாரியம் தமிழ் நாட்டைத் தாண்டி வேறு மாநிலங்களிலோ, வேறு நாடுகளிலோ ஏற்கப்படவில்லை. நமக்கு மாறுபட்ட கருத்து இருந்தாலும், காந்தியம் இந்தியா முழுவதும் மட்டுமின்றி வெளி நாடுகளிலும் பரவியுள்ளது. மார்க் சியம் உலகெங்கும் பரவியுள்ளது. அப்படிப்பட்ட பரவல் பெரியாரியத்துக்கு இல்லை
பெரியார் பேசியது, பெரும்பாலும் எதிர்வினைக் கருத்துகள். எதிரிகளின் கருத்துகளுக்கு எதிராகப் பேசி னார், செயல்பட்டார். தனக்கான நேர்வகைக் கருத்தி யலை அவர் உருவாக்கவில்லை
திராவிடம் என்பதற்குப் புத்துயிர் கொடுத்தது, கால்டுவெல். இந்திய மொழிகளை ஆய்வு செய்த ஐரோப்பியர், இந்திய மொழிகள் அனைத்தும் சமற்கிருத மொழிக் குடும்பத்தைச் சேர்ந்தவை என்ற னர். தமிழும் சமற்கிருத மொழியிலிருந்து பிறந்ததே என்றனர்
இதில், குறிப்பிடத்தக்கவர் மாக்ஸ் முல்லர். அவரைப் பார்ப்பனர்கள் கொண்டாடுவார்கள். ஆனால், எல்லீஸ் என்ற வெள்ளைக்கார அதிகாரிதான் - 1812 வாக்கில் - சமற்கிருத மொழிக் குடும்பத்தைச் சேராதவை தமிழ், தெலுங்கு போன்ற தென்னிந்திய மொழி கள் என்றார். அவர் திருக்குறளை ஆங்கிலத் தில் மொழிபெயர்த்தார். திருவள்ளுவர் படம் பொறித்த நாணயத்தை வெளியிட்டார்
அயோத்திதாசப் பண்டிதர், “எல்லீஸ் துரையிடம் பட்லராக இருந்த என் தாத்தா கந்தப் பிள்ளைதான் அவருக்குத் தமிழ் கற்றுக் கொடுத்தார்”என்று பெருமையாகக் குறிப்பிடுகிறார்.
தமிழ், தெலுங்கு உள்ளிட்ட மொழி களைத் தென்னிந் திய மொழிகள் என்று பெயர் சூட்டினார் எல்லீஸ். ஆனால் அவருக் குப் பின் வந்த கால்டுவெல் - தமிழ் உள்ளிட்ட தென்னிந் திய மொழிகளை விரிவாக ஆய்வு செய்து, சமற்கிருதத் தின் துணை இன்றித் தனித்து இயங்கக் கூடியது தமிழ் என்ற உண்மையை நிலை நாட்டினார்
வடக்கே உள்ள மொழிகள் சமற்கிருத மொழிக் குடும்பம் என்று சொல்லப்படுவது போல் தெற்கே உள்ள மொழிகளை தனிமொழிக் குடும்பமாகச் சொல்ல வந்த கால்டுவெல் - இந்த மொழிக் குடும்பத் திற்கு ஒரு பெயர் சூட்ட விரும்பினார். தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், துளு ஆகிய மொழிகளில் தமிழே மூத்த மொழி, சமற்கிருதமின்றித் தனித்தி யங்கும் ஆற்றல் பெற்றது என்பதால் தமிழ் மொழிக் குடும்பம் என்று பெயர் சூட்டலாம் என்று முதலில் கால்டுவெல் சிந்தித்தார். ஆனால் அதை தெலுங்கு, கன்னட, மலையாள மொழியினர் ஏற்றுக் கொள்வார் களா என்ற ஐயம் கால்டுவெல்லுக்கு ஏற்பட்டது
எனவே, வடமொழிகளில் தேடினேன் என்கிறார் கால்டுவெல். மனுஸ்மிரிதியில் த்ராவிட”என்ற சொல் இருக்கிறது. குமாரிலபட்டர், “ஆந்த்ர - த்ராவிட பாஷா”என்கிறார். எனவே, தமிழ் உள்ளிட்ட தென்னிந்திய மொழிகளுக்குப் பொதுப் பெயராக திராவிட“என்பதைச் சூட்டினேன் என்கிறார் கால்டுவெல்
கால்டுவெல் பிறந்த இருநூறாம் ஆண்டுக்கு கருத்தரங்குகள் நடந்து கொண்டுள்ளன. நான் தமிழறி ஞர்கள் சிலரிடம் கேட்டேன். தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் ஆகிய மொழிகளுக்குத் தமிழல்லாத மூலமொழி ((Proto Language) ஒன்று இருந்ததாகக் கூறுகிறார் கால்டுவெல். அது அவரின் ஊகமாக இருக்கிறதே தவிர, அதற்கான தரவுகள் எதுவும் தரவில்லையே என்றேன். அவர்களும் தரவுகள் கூறவில்லை
தமிழல்லாத ஒரு மூலமொழி இருந்ததற்கான சான்று எதுவும் தராமல், தமிழே மூலமொழியாக இருந்திருக்கலாம்; ஆனால், அப்படிச் சொன்னால் தெலுங்கு, கன்னடம், மலையாளம் பேசுவோர் அதை ஏற்றுக் கொள்வார்களா என்பது ஐயமாக உள்ளது என்கிறார். எனவே, எல்லாருக்கும் பொதுவான ஒரு மூலமொழியைத் தேடினேன். சமற்கிருத இலக்கியங் களில் உள்ள திராவிட”என்ற சொல்லை எடுத்துக் கொண்டேன் என்கிறார். இது மொழியியல் ஆய்வா? இல்லை.
கால்டுவெல் குறிப்பிடும் மூலமொழி தமிழ்தான். திராவிடம் என்ற பெயரில் ஒரு மொழியும் இருந்த தில்லை. ஒரு இனமும் இருந்ததில்லை. ஒரு நாடும் இருந்ததில்லை. திராவிடம் என்பது ஆரிய உருவாக்கம்.
கிளைமொழி(Dialect)யும் தமிழே! வளர்ச்சி யடைந்த பொது மொழியும் (Standard Language) தமிழே! இன்று தேசிய மொழியும் ((National Language) தமிழே!
திராவிட மொழி இருந்தது என்பதில் கால்டு வெல்லுக்கே சந்தேகம் இருந்ததால்தான் அவர் தமது நூலுக்கு, “திராவிட மொழிகளின் அல்லது தென்னிந்திய மொழிகளின் ஒப்பிலக்கணம்” (Comparative grammar of Dravidian Languages or South Indian Languages)) என்கிறார். இந்தியாவுக்கு இந்தியா அல்லது பாரதம் என்று இரு கற்பனைப் பெயர்களை வைத்தது போல் இது இருக்கிறது
இப்படிப்பட்ட வலுவற்ற கால்டுவெல் கற்பனையை வைத்துக் கொண்டுதான் திராவிடம்”என்பதைக் கட்டியுள்ளார்கள்இவர்கள் தெலுங்கர், கன்னடர், மலையாளி ஆகியோர் திராவிடர் என்கிறார்கள். அவர்கள் யாரும் தங்களைத் திராவிடர்கள் என்று சொல்லிக் கொள்வ தில்லை. ஆனால், அவர்கள் தெலுங்கர், கன்னடர், மலையாளி என்ற இன உணர்ச்சியில் ஒன்று சேர்ந்து கொள்கிறார்கள். நம்மைவிட அவர்கள் இன உணர்ச்சி யில் தீவிரமாக உள்ளார்கள்.
தமிழர்கள் என்ற அடிப்படையில் நாம் இன உணர்ச்சி கொள்வதில் -பலவீனம் இருக்கிறது.   திராவிடர் என்று இல்லாத ஒன்றைப் புகுத்தி திராவிட இயக்கம் தமிழர்களின் உளவியலில் ஊனத்தை ஏற்படுத்திவிட்டன. அந்த உளவியல் ஊனம் காரண மாகத்தான் தமிழர்கள் இன்று இன உணர்ச்சியில் பின்தங்கி உள்ளார்கள்
இதே திராவிட இயக்கத்தினர் ஈழத் தமிழர்களை ஈழத் திராவிடர் என்று அழைப்பதில்லை. ஈழத் தமிழர் என்றே அழைக்கின்றனர். ஏனெனில், ஈழத் தமிழர்கள் தங்களைத் திராவிடர் என்று அழைப்பதை ஏற்றுக் கொள்ள மாட்டார்கள். ஏமாந்தவர்கள் தமிழ்நாட்டுத் தமிழர்கள்தான்
திராவிடர் எனத் திராவிடர் கழகம் சொல்கிறது; பெரியார் சொன்னார். ஆனால், தி.மு.. திராவிடர் கிடையாது; திராவிடம் தான் உண்டு என்கிறது.
கவிஞர் தணிகைச் செல்வன் கவிதை நூல் வெளி யீட்டு விழாவில் கலைஞர் இக்கருத்தைக் கூறியுள்ளார். கலைஞர் கூறியது 2001 அக்டோபர் 2ஆம் நாள் முரசொலியில் வந்துள்ளது
எனவேதான் அண்ணா அவர்கள் மிகுந்த எச்சரிக்கையாக ஆரியர், திராவிடர் என்று பகுத்துக் குறிப்பிடவில்லை. ஆரியம் - திராவிடம் என்று கலாச் சாரங்களை வேறுபடுத்திக் காட்டினார்கள். இப் பொழுது தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் ஆகிய நான்கு மொழிகளுக்குட்பட்டப் பகுதி திராவிடம் என்று அழைக்கப்பட்டாலுங்கூட தனித்தனிப் பகுதிகளாக அவை இயங்கிக் கொண்டிருக் கின்றன. அங்கே தனித்தனி ஆட்சிகள் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன. இருந்தபோதிலும், நாம் தமிழ் மொழிக்குரியவர்கள். தமிழ்த் தேசிய உணர்வை வெறுத்துவிடவில்லை. ஏற்றுக் கொள்கிறோம்”

பெரியார் திராவிடர் என்கிறார். அண்ணா திராவிடர் இல்லை, திராவிடம்தான் இருக்கிறது என் கிறார். உங்களுக்குள்ளேயே திராவிடர்”பற்றி ஒருமித்த ஒரு கருத்து இல்லாத போது - திராவிடர் என்பதையும் திராவிடம் என்பதையும் ஏன் தமிழர்கள் மீது திணிக்கிறீர்கள்?
அதே பேச்சின் முற்பகுதியில், கலைஞர் சொல் கிறார், “நான் மொழியால் தமிழன், இனத்தால் திராவிடன், நாட்டால் இந்தியன், உலகத்தால் மனிதன்”என்கிறார். அதே முரசொலியில் இதுவும் வந்துள்ளது

அண்ணா மிகவும் எச்சரிக்கையாகத் திராவிடர் என்று சொல்லவில்லை,- திராவிடம் என்றுதான் சொன் னார் என்கிறார். அதே பேச்சில், “நான் இனத்தால் திராவிடன்”என்கிறார். ஏன் இந்தக் குழப்பம்? இல்லாத திராவிடத்தை - எடுத்துக் கொண்டதால் இந்தக் குழப்பம். அடுத்த கேள்வி, மொழியால் தமிழன், இனத் தால் திராவிடன், நாட்டால் இந்தியன் என்று மூன்று வகை இனங்களைச் சொல்கிறாரே, இப்படிப்பட்ட இன வரையறுப்பு உலகத்தில் எங்காவது உண்டா? சமூக அறிவியலுக்கு இது பொருந்துமா?
பெரியாரின் பார்ப்பன ஆதிக்க எதிர்ப்பு, சாதி ஒழிப்பு, பெண்ணுரிமைப் போராட்டங்களை நான் பாராட்டுகிறேன். ஆனால், அவரின் இனக்கொள்கை, -மொழிக் கொள்கைகளை, கருத்துகளை முற்றிலுமாக எதிர்க்கிறேன்

பெரியாரை விமர்சித்தால் உடனே அப்படி விமர்சிப்பவர்களைப் பார்ப்பன ஆதரவாளர்கள் என்று முத்திரை குத்துகிறீர்கள். எங்களது தமிழ்த் தேசியப் பேரியக்கம், இந்திய அரசுக் கட்டமைப்பில் பார்ப்ப னியம் இருக்கிறது என்கிறது. எங்கள் கொள்கை அறிக் கையில் இந்திய அரசு என்பது பெருமுதலாளிகள் தலைமையிலான ஆரியப் பார்ப்பனிய - இந்தி ஆதிக்க அரசு என்கிறது. இவ்வாறு இந்திய அரசை வரையறை செய்து எந்த திராவிடக் கட்சியாவது, திராவிட இயக்கமாவது இந்திய அரசு பார்ப்பனிய அரசு என்று கூறியதுண்டா? இல்லை

நாங்கள் இந்திய அரசு இனப்பகை அரசு என் கிறோம். இந்திய அரசிலிருந்து தமிழ்நாடு விடுதலை அடைய வேண்டும் என்கிறோம். எந்தத் திராவிடக் கட்சியாவது, தேர்தலில் நிற்காத திராவிட இயக்க மாவது தமிழ்நாட்டு விடுதலையை தனது இலட்சி யமாக அறிவித்திருக்கிறதா? இல்லை! பிறகு உங்களை விமர்சிக்கிற எங்களைப் பார்த்துப் பார்ப்பனிய ஆதரவாளர் என்று எந்த வகையில் கூறுகிறீர்கள்? நாங் கள் கூறுகிறோம், திராவிடர்கள்தான் பார்ப்பனர்களின் ஒன்றுவிட்ட சகோதரர்கள்

சங்க இலக்கியத்திலோ, காப்பியங்களிலோ, தமிழர் கள் தங்களைத் திராவிடர்கள் என்று கூறிக் கொண்ட தில்லை. திராவிடர் என்று கூறிக் கொள்வதைத் தமிழர்கள் இழிவாகக் கருதினார்கள். முத்தமிழ் அறிஞர் கலைஞர் திராவிடர் என்பதற்கு சங்க இலக்கியங்க ளிலிருந்து சான்று காட்டாமல், தாகூரின் ஜன கன பாட்டிலிருந்தும், .வே. சாமிநாதய்யர் சிலையின் கீழ் அவரை திராவிட வித்வத்வ என்று எழுதியிருப்ப தையும்தானே சான்றாகக் காட்டுகிறார். இவையெல் லாம் ஆரியச் சான்றுகள்தானே! தமிழர்களின் அகச் சான்று இருக்கிறதா? இல்லை!
நாங்கள் கூறும் தமிழ்த் தேசியம் தெளிவானது

எமது தேசியம் இனம் தமிழர்! - நான் இந்தியனும் இல்லை; திராவிடனும் இல்லை.
எமது தேசிய மொழி தமிழ்! - இந்தியோ அல்லது ஆங்கிலமோ எமது தேசிய மொழி அல்ல!
எமது தேசம் தமிழ்த் தேசம் - இந்தியாவோ திராவிடமோ எமது தேசம் அல்ல.

இறையாண்மையுள்ள தமிழ்த் தேசக் குடியரசு அமைப்பது எமது இலக்கு!
இந்த நான்கு கூறுகளையும் கொண்டதுதான் தமிழ்த் தேசியம். இதுதான் நாங்கள் முன்வைக்கும் தமிழ்த் தேசியம்! இந்தத் தமிழ்த் தேசியம்தான் இன்றையத் தேவை

தோழர் பெ.. இவ்வாறு பேசி முடித்தபின் இருவருக்கும் இறுதிவாதம் செய்ய பத்து, பத்து நிமிடங்கள் தந்தார்கள். அப்போது பேரா. சுப.வீ. எழுப்பிய வினாக்களுக்கு தோழர் பெ.. அளித்த விடை வருமாறு :
கேரளாவில் ஐயப்பன் கோயிலுக்குப் போன தமிழர்களை மலையாளிகள் தாக்கினார்கள் என்று நான் சொன்னதற்கு, தமிழ்நாட்டிலிருந்து அங்கே ஐயப்பன் கோயிலுக்கு ஏன் போனார்கள் என்று சுப.வீ. கேட்டார்கள். அங்கே போயிருக்கக்கூடாது என்கிறார். அப்படியென்றால், ஈழத்தில் சிவன் கோயிலைச் சிங்கள அரசு இடித்ததை நாம் குற்றமாகச் சொன்னால், சுப.வீ. தமிழர்கள் ஏன் கோயில் கட்டினார்கள் என்று கேட்பாரோ?
தமிழ்நாட்டில் உள்ள பக்தர்களுக்கு திராவிடம் பாதுகாப்புத் தராது என்கிறாரா?
தருமபுரியில் தமிழர்களுக்குள்ளேயே சாதிச் சண்டை நடந்ததே, பிறகு எங்கே தமிழர் ஒற்றுமை இருக்கிறது என்று சுப.வீ. கேட்டார். தருமபுரியில் ஒடுக்கப்பட்டத் தமிழர்கள் வீடுகள் எரிக்கப்பட்ட போது, நான் அங்கே போய்ப் பார்த்தேன். அந்த வன்முறையைக் கண்டித்து ஆர்ப்பாட்டங்கள் நடத்தினோம். நான் எங்களது தமிழர் கண்ணோட்டம் இதழில், ஈழத்தில் சிங்களர்கள் தமிழர்கள் வீடுகளை எரித்ததற்கும் நாயக்கன் கொட்டாய் பகுதியில் ஒடுக்கப்பட்டத் தமிழர்கள் வீடுகள் எரிக்கப் பட்டதற்கும் எந்த வேறுபாடும் இல்லை என்று ஆசிரிய உரை எழுதினேன். நமக்குள் இருக்கிற சாதி அழுக்கை நாம் போக்கியாக வேண்டும்! அதற்காக, எதிரிக்கு நாம் இடம் கொடுக்கக் கூடாது. தமிழினம் இல்லை என்று சொல்ல முடியாது

தமிழீழத் தலைவர் பிரபாகரனும் உமா மகேசுவரனும் ஒரு கட்டத்தில் பாண்டி பசாரில் சண்டையிட்டுக் கொண்டார்கள் என்பதற்காக, சிங்கள அரசு உங்களுக்குள்ளேயே ஒற்றுமை இல்லை; உங்களுக்குத் தனி நாடு ஏன்”என்று கேட்டால் அதை ஒப்புக் கொள்வோமா

பார்ப்பனர்களைக் கட்சியில் சேர்ப்பதில்லை என்று கட்சியில் விதி வைப்பதற்குப் பதிலாக - தமிழர் என்ற இனத்தையே கைவிடச் சொன்னார் பெரியார். இது தவறு; காலுக்குச் செருப்புப் போட்டுக் கொள்வதற்குப் பதில் காட்டுக்கே செருப்புப் போட்டுவிட்டது போல் ஆகிவிட்டது என்று நான் சொன்னதற்கு, மணியரசன் தன் கட்சியில் பார்ப்பனரைச் சேர்க்காமல் இருக் கிறாரா என்று சுப.வீ. கேட்டார்

பார்ப்பனியத்தை மறுத்த பார்ப்பனர்களைக் கட்சியில் சேர்த்துக் கொள்ளலாம் என்பதுதான் எங்கள் நிலைபாடு. பூணூலை அறுத்து எறிந்துவிட்டு, துப்புரவுத் தொழிலாளர்களுக்கான சங்கத்தில் செயல்பட்டு, அவர்கள் வீட்டில் தங்கி, அவர்கள் வீட்டில் மாட்டுக்கறியும், பன்றிக்கறியும் சாப்பிட்டு, இப்போது தமிழ்த் தேசியப் புரட்சிக்கு முழுவதுமாகத் தன்னை ஒப்படைத்துக் கொண்டிருக்கும் ஒருவரைத் தமிழ்த் தேசிய இயக்கத்தில் சேர்த்துக் கொள்வது தவறு இல்லை

பெரியார்கூட பார்ப்பனர்கள் தங்களின் ஆச்சார அனுஷ்டானங்களையும் பேத உணர்ச்சியையும் கைவிட்டு நானும் திராவிடன் என்று கூறினால் சேர்த்துக் கொள்வோம் என்று தானே கூறியிருக்கிறார்

உடனே, சுப.வீ. குறிக்கிட்டு, பெரியார் மனிதநேயம் உள்ளவர். யாரையும் பிறப்பால் வெறுப்பவர் இல்லை. அப்படி வருபவர்களை சேர்த்துக் கொள்ளலாம் என்றார்

பெ.. : பார்ப்பனர்களைப் பெரியார் சேர்த்துக் கொண்டால் மனித நேயம். மணியரசன் சேர்த்துக் கொண்டால் பார்ப்பனியமா?
அடுத்து, சுப.வீ. இங்கு பேசும் போது, மணியரசன் தமிழ்நாடு விடுதலை கேட்பதாகச் சொல்கிறார். அவர் இந்திய அரசின் கடவுச்சீட்டு (இந்தியன் என்ற அடிப்படையில்) வைத்துள்ளாரா இல்லையா? அவர் கடவுச்சீட்டு வைத்திருந்தால் அவர் தனித் தமிழ்நாடு கேட்பதில் முரண்பாடில்லையா என்று கேட்டார்

தமிழீழ விடுதலைப்புலிகள் உலகம் வியக்க விடுதலைப் போராட்டம் நடத்தினார்கள். அவர்களும் இலங்கை அரசின் கடவுச்சீட்டைத்தான் பயன்படுத் தினார்கள். ஆன்டன் பாலசிங்கம் தமது சிகிச்சைக்காக இலங்கை அரசின் கடவுச்சீட்டை வைத்துத்தான் வெளி நாடுகளுக்குப் போனார். அது குற்றம் இல்லை.

எங்கள் மண்ணை ஆக்கிரமித்து ஆட்சி நடத்துபவன்தான் எங்களுக்கான கடவுச்சீட்டை வழங்க வேண்டும். உலகில் எந்த விடுதலை இயக்கம், தான் எதிர்த்துப் போராடுகின்ற அரசிடமிருந்து கடவுச்சீட்டு பெறாமல் போராடுகின்றன?

விசயநகர, நாயக்கர் கால ஆட்சியில்தான் தமிழ்நாட்டில் வர்ண சாதி ஆதிக்கம் பார்ப்பன ஆதிக்கம், சமற்கிருதம் மற்றும் தெலுங்கு ஆதிக்கம் கொடி கட்டிப் பறந்தது. அதை திராவிட இயக்கத்து அறிஞர்கள் விமர்சிப்பதில்லை. இராசராசன், இரா சேந்திரச்சோழன் ஆட்சியை மட்டுமே விமர் சிப்பார்கள் என்றேன். அதற்கு சுப.வீ. பெரியாரை தெலுங்கர் என்ற சாதிச் சிமிழுக்குள் அடைக்கப் பார்க்கிறார் மணியரசன் என்றார்

பெரியார் தெலுங்கர் இல்லை, கன்னடர். கன்னடர் என்பதற்காகப் பெரியாரை நான் ஒருபோதும் விமர்சித்ததில்லை. பெரியாரை மட்டுமல்ல, 1956 நவம்பர் 1 மொழிவழி தமிழர் தாயகமாக - தமிழ்நாடு அமைக்கப்படுவதற்கு முன் தமிழ்நாட்டில் வசிக்கும், தெலுங்கு பேசுவோர், கன்னடம் பேசுவோர், உருது பேசுவோர், சௌராட்டிரம் பேசுவோர், மராத்தி பேசுவோர் உள்ளிட்ட அனைவரும் தமிழக மண்ணின் தமிழ்த் தேசிய மக்கள் - தமிழர்களைப் போல் சம உரிமை உள்ள மக்கள் என்பதே நாங்கள் முன்வைக்கும் தமிழ்த் தேசியம்

விசய நகர மன்னர்கள் பார்ப்பனியத்திற்கு ஆதர வாக இருந்ததைத் தான் விமர்சித்துப் பேசியிருப்பதாக சுப.வீ. சொன்னார். ஒரு சுப.வீ.யைத்தான் அவரால் சொல்ல முடிகிறது. தெலுங்கு மன்னர்கள் மீது - தெலுங்கர்கள் மீது திராவிட இயக்கத்திற்கு ஒரு soft corner- ஒரு மென்மை அணுகுமுறை இருக்கிறது என்பதைத்தான் நான் சொல்கிறேன். பெரியாரை சாதிச் சொல்லி விமர்சிக்கவில்லை.
நன்றி வணக்கம்!

(இக்கட்டுரை, தமிழ்த் தேசியத் தமிழர் கண்ணோட்டம் - 2015 மார்ச் 16 இதழில் வெளியானது.)

Labels: ,

0கருத்துக்கள்:

Post a Comment

<< முகப்பு பக்கம்


தோழர் மணியரசன்
அவர்களின் படைப்புகள் மற்றும் கருத்துக்களை இத்தளத்தில் காணலாம்.
வாசகர்களின் கருத்துக்களும் வரவேற்கப்படுகின்றன.

Web This Blog

தொகுப்பு

முந்தைய பதிவுகள்

தோழமைத் தளங்கள்