" நிலக்கோளமெங்கும் வாழும் தமிழர்கள் அனைவருக்கும் நெஞ்சு நிறைந்த பொங்கல் வாழ்த்துகள் " -- தோழர் பெ. மணியரசன் வாழ்த்துச் செய்தி!
Saturday, January 14, 2017
========================== =============
நிலக்கோளமெங்கும் வாழும்
தமிழர்கள் அனைவருக்கும்
நெஞ்சு நிறைந்த பொங்கல் வாழ்த்துகள்!
========================== =============
தமிழ்த்தேசியப் பேரியக்கத் தலைவர்
தோழர் பெ. மணியரசன் வாழ்த்துச் செய்தி!
========================== =============
பழைமையான மரத்தில் புதிய பூக்கள் பூப்பதைப் போன்றதுதான் பொங்கல் விழாக்கள்!
பொங்கல் நாள், தமிழர் திருநாள், உழவர் திருநாள், தமிழ்ப் புத்தாண்டு நாள், திருவள்ளுவர் நாள், இவை அனைத்தும் பொங்கல் விழாவோடு பொருந்தியுள்ளன.
சுற்றுச் சூழல் தூய்மைக்குப் போகி நாள், மனிதர்களுக்குப் பொங்கல் நாள், வீட்டுக் கால் நடைகளுக்கு மாட்டுப் பொங்கல், மனிதர்களும் காளைகளும் விளையாடிடக் காணும் பொங்கல்!
இது பழைய மரபு; இன்றோ இவற்றுடன் பொங்கல் விழாவில் விளையாட்டுப் போட்டிகள், இலக்கிய நிகழ்ச்சிகள், கலை நிகழ்ச்சிகள், பட்டிமன்றங்கள், பாவரங்குகள்!
இப்படிப்பட்ட விழா தமிழர்களைத் தவிர வேறு யாருக்கும் இருக்கிறதா என்று தெரியவில்லை. பண்டைக்காலம் தொட்டே தமிழ்ச்சமூகம் கலை - அறிவியல் சமூகம்!
வரலாற்றுப் பெருமிதங்கள் எத்தனையோ இருக்கின்றன தமிழர்களுக்கு! ஆனால் இப்போது வரிசையாக உரிமைகளை இழந்து வருகிறோம்.
தமிழ், தமிழினம், தமிழர் தாயகம் மூன்றும் பிரிக்க முடியாதவை. இம்மூன்றிலும் உரிமைகள் அன்றாடம் பறிக்கப்படுகின்றன. இம்மூன்றின் உரிமைக் காப்பிற்கும் உரிமை மீட்பிற்குமான தத்துவம் தமிழ்த்தேசியம்!
எந்த இலட்சியமும் வெல்வதற்கான வழி - சரியான தத்துவமும் அதைச் செயல்படுத்திடத் தகுதியுள்ள தலைமை கொண்ட அமைப்பும் ஆகும்.
நிலக்கோளமெங்கும் வாழும் தமிழர்களுக்கு மரபு வழித் தாயகங்களாக தமிழ்நாடும் தமிழீழமும் விளங்குகின்றன. தமிழ்த்தேசியமும் தமிழீழத்தேசியமும் இரு கண்கள் போன்றவை. இவ்விரு தேசங்களின் இறைமை, இவ்விரு தேச மக்களுக்கு மட்டுமின்றி உலகெங்கும் வாழும் தமிழர்களுக்கும் பாதுகாப்பு அரண் ஆகும்!
நிலக்கோளமெங்கும் வாழும் தமிழர்கள் அனைவருக்கும் தமிழ்த்தேசியப் பேரியக்கம் சார்பில் நெஞ்சு நிறைந்த தமிழர் திருநாள் வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
Labels: அறிக்கைகள்
0கருத்துக்கள்:
Post a Comment
<< முகப்பு பக்கம்