" இந்திய ஏகாதிபத்தியமே, நீயே எங்கள் மாணவர்களைப் போராளி ஆக்கினாய் " -- தோழர் பெ. மணியரசன் அறிக்கை
Friday, January 13, 2017
========================== =========
இந்திய ஏகாதிபத்தியமே, நீயே எங்கள்
மாணவர்களைப் போராளி ஆக்கினாய்!
========================== =========
தோழர் பெ. மணியரசன்
========================== =========
விழித்துக் கொண்ட தமிழர்கள் வீரத்தமிழர்களாகவே இருப்பார்கள் என்பதற்கு எடுத்துக்காட்டாக ஆண்களும் பெண்களும் – மாணவர்களும் மாணவிகளும் தமிழ்நாடெங்கும் போர் முழக்கமிடுகிறார்கள்.
“தடையை மீறுவோம்! சல்லிக்கட்டு நடத்துவோம்”
இந்திய ஏகாதிபத்தியமே, நீதான் எங்கள் இளைஞர்களைப் போராளிகளாய் மாற்றுகிறாய்!
தமிழ் மொழியை அழிக்க இந்தியை ஏவினாய்! தழலுக்கு உடல் தந்து இந்தியை எதிர்த்தார்கள் எம் இளைஞர்கள் 1965-இல்! இந்திப் பேயை விரட்டிட வீதிக்கு வந்த தமிழர்கள் மீது இந்திய ஏகாதிபத்தியமே, உன் இராணுவத்தை ஏவினாய்! முந்நூறுக்கும் மேற்பட்ட தமிழர்களை சுட்டு வீழ்த்தினாய்!
அப்போதும் எம் தமிழர்கள் பின் வாங்கவில்லை. ஆதிக்க இந்தியின் இடுப்பொடிக்க அன்றிலிருந்து இன்று வரை போராடுகிறார்கள்!
கச்சத்தீவைப் பிடுங்கி சிங்களர்க்குக் கொடுத்தாய், காவிரியைக் கன்னடர் பறிக்கத் துணை நிற்கிறாய்! முல்லைப் பெரியாறு உரிமையை முடக்க மலையாளிகளுக்கு முட்டுக் கொடுக்கிறாய்! பாலாற்றைத் தெலுங்கர்கள் பறித்திடப் பார்த்து மகிழ்ந்தாய், எம் தமிழை வீழ்த்திட இந்தியால் மட்டும் முடியாது என்று கணித்து, இப்போது சமற்கிருதத்தை ஏவி விட்டுள்ளாய்!
எங்கள் இனத்தை அழிக்க அடுக்கடுக்காய் அணு உலைகளை அமைக்கிறாய்! எங்கள் வேளாண் நிலங்களில் கெய்ல் குழாய் பதிக்கிறாய்! வளம் கொழிக்கும் எங்கள் வயல்களை அமிலச் சேறாக்க மீத்தேன் குழாய்களை இறக்குகிறாய்!
இவை எல்லாவற்றையும் விஞ்சும் கொடுமையாக, எங்கள் மக்கள் ஒன்றரை இலட்சம் பேரை ஈழ மண்ணில் இன அழிப்பு செய்ய கூட்டுத் தொழிலாகக் கொலைத் தொழில் புரிந்தாய்!
இப்போது எங்கள் மண்ணில் எங்கள் காளைகளுடன் நாங்கள் விளையாட, எங்கோ இருந்து கொண்டு நீ தடை போடுகிறாய்!
சிந்து வெளியில் மட்டுமல்ல, அதற்கு முந்திய வெளியிலும் காளை, தமிழர்களின் தோழன்! தமிழர்களின் உடன்பிறப்பு!
இன்றும் சாதி, மதம் கடந்த தமிழர்களின், தேசியப் பண்பாடாக வீர விளையாட்டாக காளை விளையாட்டுத் தொடர்கிறது. இப்போது அதற்குத் தடை போடுகிறாய்!
இப்படியாக, இப்படியாக, இந்திய ஏகாதிபத்தியமே, நீ எங்கள் பகைவன் என்பதை நீயாகவே அடையாளம் காட்டிக் கொண்டாய்; நீயே எங்கள் இளைஞர்களை போராளிகளாகவும் ஆக்கி விட்டாய்!
நீயே, எங்கள் மாணவர்களை வீதிக்குக் கொண்டு வந்தாய்!
Labels: அறிக்கைகள், சல்லிக்கட்டு
0கருத்துக்கள்:
Post a Comment
<< முகப்பு பக்கம்