<body><script type="text/javascript"> function setAttributeOnload(object, attribute, val) { if(window.addEventListener) { window.addEventListener('load', function(){ object[attribute] = val; }, false); } else { window.attachEvent('onload', function(){ object[attribute] = val; }); } } </script> <div id="navbar-iframe-container"></div> <script type="text/javascript" src="https://apis.google.com/js/platform.js"></script> <script type="text/javascript"> gapi.load("gapi.iframes:gapi.iframes.style.bubble", function() { if (gapi.iframes && gapi.iframes.getContext) { gapi.iframes.getContext().openChild({ url: 'https://www.blogger.com/navbar.g?targetBlogID\x3d6955529389241309188\x26blogName\x3d%E0%AE%A4%E0%AF%87%E0%AE%BE%E0%AE%B4%E0%AE%B0%E0%AF%8D+%E0%AE%AA%E0%AF%86.%E0%AE%AE%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B0%E0%AE%9A%E0%AE%A9%E0%AF%8D\x26publishMode\x3dPUBLISH_MODE_BLOGSPOT\x26navbarType\x3dBLUE\x26layoutType\x3dCLASSIC\x26searchRoot\x3dhttps://thozharmaniyarasan.blogspot.com/search\x26blogLocale\x3den_US\x26v\x3d2\x26homepageUrl\x3dhttp://thozharmaniyarasan.blogspot.com/\x26vt\x3d-8408640130511538487', where: document.getElementById("navbar-iframe-container"), id: "navbar-iframe" }); } }); </script>

"நீதித்துறை - காவல்துறையின் நீட்சியல்ல! - "ஐயா" பெ. மணியரசன் தலைவர், தமிழ்த் தேசியப் பேரியக்கம்

Saturday, September 2, 2023


 நீதித்துறை - காவல்துறையின் நீட்சியல்ல!

- "ஐயா" பெ. மணியரசன்
தலைவர், தமிழ்த் தேசியப் பேரியக்கம் 
============================================================

இந்தியாவில், தன்னாட்சி அதிகாரம் பறிக்கப்படாமல் இன்றும் ஓரளவு செயல்படுவது நீதித்துறை மட்டுமே! இதற்கு முதன்மையான காரணங்கள், உயர்நீதிமன்ற, உச்சநீதிமன்ற நீதிபதிகளின் பணியமர்த்தம் உச்ச நீதிமன்ற நீதிபதிகளால் – அதன் கொலிஜியத்தால் இறுதி செய்யப்படும் வாய்ப்பு இருப்பதும், இந்நீதிபதிகளின் பணிநீக்கம், நாடாளுமன்ற வாக்கெடுப்பால் முடிவு செய்யப்படுவதும்தான்!

கொலிஜியம் என்பது உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதி தலைமையில் அவருடன் சேர்த்து ஐந்து உச்சநீதிமன்ற நீதிபதிகளைக் கொண்டது.
உச்சநீதிமன்ற, உயர்நீதிமன்ற நீதிபதிகள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கும் அதிகாரம் நாடாளுமன்றத்திற்கு மட்டுமே உண்டு. நாடாளு மன்றத்தின் இரு அவைகளிலும் தனித்தனியே ஒழுங்கு நடவடிக்கைத் தீர்மானம் நிறைவேற வேண்டும்.

ஒவ்வொரு அவையின் மொத்த உறுப்பினர்களில் மூன்றில் இரு பங்கினர்க்குக் குறையாமல் அவையில் பங்கேற்று வாக்களிக்க வேண்டும். அத் தீர்மானம் ஒவ்வொரு அவையிலும் பெரும்பான்மை பெற வேண்டும்.

மாவட்டங்களில் உள்ள கீழமை நீதிமன்றங்களின் நீதிபதிகளை அந்தந்த மாநில உயர் நீதிமன்றத் தலைமை நீதிபதியின் பரிந்துரையுடன் மாநில அரசு (ஆளுநர்) அமர்த்த வேண்டும்.
இவ்வாறான நிபந்தனைகள் இருப்பதால் ஓரளவு தற்சார்புடன் நீதித்துறையால் செயல்பட முடியும்.

உச்ச நீதிமன்ற உயர் நீதிமன்ற நீதிபதிகள் பணியமர்த்தம் குடியரசுத் தலைவரால் செய்யப்பட வேண்டும். இதனால் இந்நீதிபதிகள் தேர்வில் இந்திய அமைச்சரவையால் உச்ச நீதிமன்றத்திற்கு அழுத்தம் கொடுக்க முடிகிறது. நீதிபதிகள் தேர்வில் கொலிஜியத்திற்கும் இந்திய ஆளுங்கட்சியின் அமைச்சரவைக்கும் இடையே சமரசம் ஏற்பட்டு, அமைச்சரவை கூறும் நபர்களையும் நீதிபதிகளாக அமர்த்த வேண்டியுள்ளது.

அதுபோல் இந்திய அமைச்சரவையால், நடைமுறையில் ஆளுங்கட்சியால் பரிந்துரைக்கப்படும் நீதிபதிகள் கொலிஜியத்தில் இடம் பெறும் போது, இந்திய ஆட்சியாளர்களின் பரிந்துரையால் நீதிபதிகள் ஆவோர் எண்ணிக்கையும் கணிசமாக இருக்கும். அந்த வழியில் நீதிபதிகள் ஆனோர் விருப்பமும் ஆட்சியாளர்களின் விருப்பமும் ஒன்றாக இருக்கிறது. நீதிபதிகள் பணி அமர்த்தலில் ஆட்சியாளர்கள் விருப்பமே மேலோங்கி வருகிறது.

உச்சநீதிமன்றம், உயர்நீதிமன்றம் ஆகியவற்றின் தன்னாட்சியைப் பறித்து, நிதிபதிகளை அமர்த்தும் அதிகாரத்தை நாடாளுமன்றத்திற்கு உட்பட்டதாக மாற்றிட பாசக ஆட்சி முயன்று வருகிறது.
இந்திய அரசு என்பது சாரத்தில் ஆரிய பிராமண-ஆரிய வைசிய –இந்தி இன ஆதிக்க அரசு! இந்த வர்ண-வர்க்கப் பிரிவுகளுக்கான பெருங்கட்சிகள் காங்கிரசு மற்றும் பாசக!
இப்பொழுது உச்ச நீதிமன்றத்தில் சற்றொப்ப 90 விழுக்காட்டினர் பிராமண வகுப்பைச் சேர்ந்த நீதிபதிகள் என்கின்றனர் விவரமறிந்தோர். எனவே, உயர்நீதிமன்ற நீதிபதிகள் பணி அமர்தத்திலும் இந்தத் தாக்கம் இருக்கிறது.

இந்த நிலையிலும், ஒப்பீட்டளவில் ஆட்சியாளர்களின் கைப்பாவையாக முழுதும் மாறிவிடாத் துறையாக நீதித்துறை இருக்கிறது. தேர்தல் ஆணையம் போன்றவை தன்னாட்சி அமைப்புகளாக இருந்தாலும், அதன் ஆணையர்களை அமர்த்துவது இந்திய அமைச்சரவை என்பதால், அவை இந்திய ஆளுங்கட்சியின் கைப்பவையாக மாறிவிட்டது.

கீழமை நீதிமன்றங்களும் காவல் துறையும்
======================================

நீதித்துறையில் தற்சார்புத் தன்னாட்சி ஒப்பீட்டளவில் கூடுதலாக இருந்தாலும், கீழமை நீதிமன்றங்கள் – மாவட்ட அமர்வு மற்றும் குற்றவியல் – நடுவர் நீதிமன்றங்கள் காவல் துறையின் கைப்பாவைபோல் ஆகிவிடுவது பெருந்துயரமாக உள்ளது. ஒரு குற்றவியல் வழக்கை இருபது ஆண்டுகளுக்குக் கூட முடிக்காமல் இந் நடுவர் நீதிமன்றங்கள், அமர்வு நீதிமன்றங்கள் நடத்திக் கொண்டுள்ளன.

வழக்குப் பதிவு செய்து நீதிமன்றத்தில் தாக்கல் செய்யும் காவல்துறையினர் பின்னர் அவ்வழக்கைக் கண்டுகொள்வதே இல்லை. அரசியல் கட்சிகள், மக்கள் இயக்கங்கள் நடத்தும் சனநாயகப் போராட்டங்களில் பங்குபெறுவோர் மீது வழக்குப் பதிவு செய்து, கைது செய்து சிறையில் அடைக்கின்றனர். அவர்கள் பிணையில் வெளி வருகின்றனர்.

பல ஆண்டுகளாக வாய்தாக்களுக்காக நீதிமன்றம் போய்க் கொண்டிருக்கிறார்கள். வழக்கு விசாரணை ½ சென்டிமீட்டர் கூட நகராது.
காரணம் என்ன? காவல் துறையினர் குற்ற அறிக்கை (charge sheet) தயாரிப்பதற்கு எல்லையற்ற காலம் எடுத்துக் கொள்வது.

குற்ற அறிக்கை தாக்கல் செய்த பின்னர், விசாரணைக்கு வராமலிருப்பது. குறிப்பாக வழக்குப் பதிவு செய்த காவல் அதிகாரி இடமாற்றம் அல்லது பதவி உயர்வு பெற்று வேறு காவல்நிலையங்களில் பணியில் சேர்ந்திருப்பார்.

அவர் பதிவு செய்த வழக்கில் சாட்சியம் அளிக்க நீதிமன்றம் அழைத்தாலும் அவர் வரமாட்டார்.
பத்து வாய்தாவுக்கு அவர் வரவில்லை என்றாலும் அவர்மீது பிடி ஆணை (வாரண்ட்) போடாது நீதிமன்றம்! குற்றம் சாட்டப்பட்டவர் ஒவ்வொரு வாய்தாவிற்கும் சென்று கூண்டில் ஏறி நின்று, நீதிபதிக்கு வணக்கம் தெரிவித்துவிட்டு வந்துவிட வேண்டும்.

அவர் போக முடியவில்லை என்றால் அவருக்கான வழக்கறிஞர் போய் நின்று ”யுவர் ஆனர்”, மை லாட்” என்று பேசி, குற்றம் சாட்டப்பட்டவர் வரமுடியாத சூழ்நிலையைக் கூறி வாரண்ட் வராமல் தடுத்துக் கொள்ள வேண்டும்.

இப்படி எத்தனை ஆண்டுகளுக்கு ஒரு வழக்கு தொடரலாம்? கணக்கே இல்லை!
ஈரோடு வழக்கு
ஈரோடு குற்றவியல் நீதிமன்றத்தில் என்மீது நடக்கும் வழக்கு 2005 லிருந்து 18 ஆண்டுகளாக நடந்து கொண்டுள்ளது. நான் செய்த குற்றம் என்ன? தமிழ்நாட்டில் மண்ணின் மக்கள் தொகையைச் சிறுபான்மை ஆக்கும் அளவிற்கு வெளிமாநிலத்தார் வெள்ளம் பெருகிக் கொண்டுள்ளது.

இங்குள்ள இந்திய அரசு நிறுவனங்களில் இந்திக் காரர்களையே பெரிதும் வேலைக்கு அமர்த்துகிறது இந்திய அரசு. தொழில், வணிகம், வேலை அனைத்தும் வெளிமாநிலத்தார் கைக்குப் போய்விட்டது.

”வெளியாரை வெளியேற்றுவோம்” என்ற தலைப்பில் காவல் துறையிடம் அனுமதி வாங்கி 21.5.2005 அன்று ஈரோட்டில் பேரணியும், ஈரோடு கருங்கல் பாளையத்தில் திறந்தவெளி மாநாடும் நடத்தினோம். அப்போது கட்சியின் பொதுச் செயலாளர் என்ற முறையில் இந்நிகழ்வுக்குத் தலைமைப் பொறுப்பு நான் என்ற முடிவுக்கு வந்தது காவல்துறை. அம்மாநாட்டில், நான் பேசியதை வைத்து என் மீது வழக்குப் போட்டார்கள்.

யாரும் எனக்கெதிராக ஈரோடு காவல் நிலையத்தில் புகார் கொடுக்கவில்லை. ஆட்சியாளர்களின் அறிவுறுத்தலை ஏற்று, கருங்கல்பாளையம் காவல் நிலைய அதிகாரிகள் என் மீது வழக்குப் பதிவு செய்தனர். இன்று வரை ஈரோடு நிதிமன்றத்திற்குச் சென்று வருகிறேன்.
என்மீது ஏற்றப்பட்ட பெருஞ்சுமையைக் குறைக்கும் வகையில் மக்கள் உரிமை சட்டக் காவலர் மூத்த வழக்கறிஞர் பவானி, ப.பா. மோகன் அவர்கள் இவ்வழக்கை நடத்தி வருகிறார்கள்.

அவரின் இளம் வழக்கறிஞர்கள் நான் போக இயலாத வாய்தாக்களுக்கு எனக்காக மனுப்போட்டு வருகின்றனர்.
ஏன் 18 ஆண்டுகளுக்கு மேல் இவ்வழக்கு தொடர்கிறது? இது நாதியற்ற வழக்கு! வழக்குக்குப் புகார் கொடுத்தவர் காவல் நிலைய ஆய்வாளர். அவர் பதவி உயர்வுகள் பெற்று பல இடங்களுக்கு மாற்றலாகி விட்டார்.

வழக்கு விசாரணைக்கு அவர் வருவதில்லை. நீதிமன்றம் அழைப்பாணை அனுப்பியும் பல ஆண்டுகள் சாட்சியம் அளிக்க அவர் வராத நிலையில் வழக்கைத் தள்ளுபடி செய்திருக்க வேண்டும். நீதிமன்றம் அவ்வாறு செய்யவில்லை. வேறு சாட்சிகளும் பலவாய்தாக்கள் வரவில்லை. பின்னர் வந்தவர்களும் இந்த வழக்கு பற்றியும் பெ. மணியரசன் பற்றியும் எங்களுக்குத் தெரியாது என்று கூறிவிட்டனர். ஆனால் இன்னும் வழக்கு முடியவில்லை. ஏன்?

1. வழக்குப் போட்ட காவல் துறை அதிகாரி நீதிமன்றம் வராதது. 2. சாட்சிகள் வராதது. 3. இந்த “வராமைகள்“ மீது நீதிமன்றம் தனக்குரிய சட்டப்படி நடவடிக்கை எடுக்காதது ஆகிய மூன்றுமே இன்னும் வழக்கு முடியாததற்குக் காரணங்கள். இவற்றை அனுமதிப்பது நடுநிலை தவறாத நீதி நடைமுறையா?
இந்த வழக்கில் என்மீது சாற்றப்பட்ட குற்றமே தவறானது. மதங்களுக்கிடையே மோதல் உண்டாகும்படி நான் பேசியதாகக் முதல் தகவல் அறிக்கை (FIR) மற்றும் குற்ற அறிக்கை (charge sheet) ஆகியவற்றில் உள்ளது. ஆனால் அதற்கான சான்று என் பேச்சில் இருந்து குற்ற அறிக்கையில் காட்டப்படவில்லை. இன மோதல் எனப்போட வேண்டிய இடத்தில் மத மோதல் என்று தவறாகப் போட்டுள்ளார்கள் என்றார் நீதிபதி. அப்போழுதாவது என்மீது உள்ள வழக்கைத் தள்ளுபடி செய்திருக்கலாம்.

குற்றவியல் நீதிமன்ற நீதிபதியே அத் தவறைத் திருத்திச் சரி செய்து கொள்கிறார். புதிய குற்ற அறிக்கையைத் தயாரிக்கிறார்.
இவ்வாறு பல ஆண்டுகளாக என்மீது நிலுவையில் உள்ள வேறு வழக்குகள்: சென்னை சைதாப்பேட்டை நீதி மன்றத்தில் ஒன்று; சென்னை எழும்பூர் நீதிமன்றங்களில் இரண்டு; சென்னை மாவட்ட கூடுதல் அமர்வு நீதிமன்றத்தில் (அல்லிகுளம்) ஒன்று; நான் ஏற்கெனவே அலைந்து முடிந்த தஞ்சை, திருவையாறு, எழும்பூர், திருவொற்றியூர், ஈரோடு நீதிமன்ற வழக்குகள் எனப் பல! வழக்கறிஞர்கள் தஞ்சை அ. இராமமூர்த்தி, சென்னை சி. விஜயகுமார், ப.பா.மோகன், சைதாப்பேட்டை வாசுதேவன், எழும்பூர் கதிர்க்குமரன் (இரவிக்குமார்) போன்றவர்களின் கட்டணமில்லாப் பேருதவியால் என் வழக்குகள் நடக்கின்றன.

இலட்சியத்திற்காகச் சிறை செல்லவும் வழக்குகளை ஏற்கவும் துணிந்து வந்த எனக்கு இவை பெருஞ்சுமைகள் அல்ல. சாதாரணத் தோழர்கள், மக்கள் – இவர்களின் கதி என்ன? நீதிமன்ற நடைமுறைகளில் உள்ள அலட்சியத்தால், குற்றவியல் நீதிமுறை (Criminal Justice System) கடைபிடிக்கப்படாமல் புறக்கணிக்கப்படுகிறது.

இதனால் இலட்சோபலட்சம் மக்கள் பாதிக்கப்படுகிறார்கள்!
தஞ்சை நீதிமன்றம்
இந்தச் சட்டப் புறக்கணிப்பால், குற்றவியல் நீதிமுறைப் புறக்கணிப்பால் இப்போது தஞ்சை காவல் துறையாலும் நீதிமன்றத்தாலும் பாதிக்கப்பட்டு அல்லலுறும் சற்றொப்ப 100 தோழர்கள் குறித்து ஒரு செய்தி இதோ:
தமிழ்நாட்டுத் தொழில் வணிகம் ஆகியவற்றில் வெளிநாட்டினரும், வெளி மாநிலத்தவரும் மேலாதிக்கம் செய்கின்றனர். மண்ணின் மக்களாகிய தமிழர்கள் புறக்கணிக்கப்பட்டு ஓரம் கட்டப்படுகின்றனர் என்ற அவலத்தை எடுத்துக்காட்டி அயலார் வணிக நிறுவனங்களின் முன் அடையாள மறியல் போராட்டம் நடத்துதென்று தமிழ்த்தேசியப் பேரியக்கம் முடிவு செய்தது.

தஞ்சைக் கீழ அலங்கத்தில் உள்ள மலையாள நிறுவனமான ஆலுகாஸ் நகைமாளிகை முன் 9.3.2011 அன்று மக்கள் திரள் மறியல் போராட்டம் நடைபெற்றது. 140 பேர் தளைப்படுத்தப்பட்டனர். அவர்களில் பெண்கள், சிறுவர் ஆகிய 16 பேர் விடுவிக்கப்பட்டு 124 பேர் திருச்சி நடுவண் சிறையில் அடைக்கப்பட்டனர்.

சிலநாள் கழித்து அனைவரும் பிணையில் எடுக்கப்பட்டனர். பிணையின்போது அடுத்த நீதிமன்ற அழைப்பாணை வரும்போது நீதிமன்றத்தில் நேர்நிற்க வேண்டும் என்று நிபந்தனை விதிக்கப்பட்டது.
இவ்வழக்கில் சிறை சென்று பிணையில் வந்தவர்கள் தஞ்சை மாவட்டம், திருவாரூர் மாவட்டம், புதுக்கோட்டை மாவட்டம், கடலூர் மாவட்டம், கிருட்டிணகிரி மாவட்டம், கோவை மாவட்டம் இராமநாதபுரம் எனப் பல மாவட்டங்களைச் சேர்ந்தவர்கள்.
சில ஆண்டுகள் கழித்து, தஞ்சை நகரத்தில் உள்ள ஆறு தோழர்களுக்கு மட்டும் நீதிமன்ற அழைப்பாணை (சம்மன்) காவல்துறையினரால் கொடுக்கப்பட்டது.

வெளி மாவட்டங்களைச் சேர்ந்த தோழர்களுக்குக் காவல் துறை அழைப்பாணை கொடுக்கவில்லை. எனவே, அவர்கள் நீதிமன்றம் போகவில்லை. அழைப்பாணை பெற்றுக் கொண்ட இந்த 6 தோழர்கள் மட்டும் நீதிமன்றம் சென்று நேர்நின்று, வழக்கு நடத்தி விடுதலை பெற்றுவிட்டார்கள். மற்ற தோழர்கள், தங்கள் மீதான வழக்கைக் காவல்துறை கைவிட்டுவிட்டது என்று கருதிக் கொண்டார்கள்.

அந்த மற்றவர்களை 2023-ஆம் ஆண்டில் அண்மையில்தான் காவல் துறையினர் அந்தந்த மாவட்டங்களுக்குப் போய் உங்கள் பேரில் ஆலுக்காஸ் வழக்கில் நீதிமன்ற பிடி ஆணை (வாரண்ட்) இருக்கிறது. நீதிமன்றத்திற்கு வாருங்கள் என்று வாய்மொழியாகக் கூறிவருகிறார்கள்.

அதை ஏற்றுத் தோழர்கள் தவணை, தவணையாகத் தஞ்சாவூர்க் குற்றவியல் நீதிமன்றம் -1 இன் நீதிபதி இளவரசி அவர்கள் முன் நேர்நின்றார்கள். இவர்களின் வழக்கறிஞர் இ.ரெ. சிவராசு அவர்கள். இவர்கள் அனைவர்க்கும் நீதிமன்ற அழைப்பாணை கொடுக்கப்படவில்லை.

கொடுத்தார்கள் என்பதற்கு நீதிமன்றத்தில் சான்று இருக்கிறதா என்று பாருங்கள். இவர்களுக்குத் தங்கள் மீது ஆலுக்காஸ் வழக்கு தொடர்கிறது என்றே தெரியாது. வழக்கும் வாய்தாவும் தெரிந்து தலைமறைவாகிவிட்டவர்கள் அல்லர் இவர்கள். காவல் துறையின் குறைபாடு. மற்றும் இதைக் கண்காணிக்கத் தவறிய நீதிமன்றத்தின் குறைபாடு ஆகியவைதான் இவர்கள் நீமன்றம் வராமல் இருந்ததற்கான காரணங்கள். இனி தொடர்ந்து வருவார்கள். எனவே, கடந்த பல ஆண்டுகளாக இவர்கள் நீதிமன்றத்தையும், காவல் துறையினரையும் ஏமாற்றித் தலைமறைவாக இருந்ததாகக் கருதக் கூடாது. இவர்களுக்கு உடனடியாக நிபந்தனையற்ற பிணை வழங்க வேண்டும் என்று வாதுரை செய்தார்.

ஆனால், நிதிபதி வழக்கறிஞரின் இந்த வாதத்தில் உள்ள உண்மையைப் பரிசீலிக்காமல், ஒவ்வாருவரும் ஓர் ஆயிரம் ரூபாய் தண்டத்தொகை செலுத்த வேண்டும், வாரம் ஒரு முறை திங்கட்கிழமை வந்து இதே நீதிமன்றத்தில் கையொப்பமிட வேண்டும் என்றும் நிபந்தகைள் விதித்துப் பிணை வழங்கினார். செய்தி தெரிந்தவுடன் தாங்களாக முன்வந்து நேர்நின்ற நேர்மையாளர்களுக்கு நீதிபதி இளவரசி வழங்கிய “பரிசு“ இது!
நீதிமன்ற அழைப்பாணைகளைக் குற்றம் சாட்டப்பட்டவர்களிடம் கொடுத்து, கையொப்பம் வாங்காத காவல்துறையினர், அழைப்பாணை கொடுக்கப்பட்டதை உறுதி செய்ய மறுத்து கெடுபிடியாகத் தண்டனை விதித்த நீதிபதி ஆகியோர் சட்டத்தின் வினாக்களுக்குப் பதில் சொல்ல வேண்டாமா? வாயில்லாப் பூச்சிகளாய் அகப்பட்டுக் கொண்ட அப்பாவிகளைச் சட்ட விதிமுறைகளைத் தவறாகப் பயன்படுத்தித் தண்டிக்கலாமா?
நீதிபதி இளவரசி அவர்களின் எதேச்சாதிகார மனப்பான்மைக்கு ஒரே ஓர் எடுத்துகாட்டு: இவ்வழக்கில் மேற்கண்டவாறு நின்றவர்களில் கடலூர் மாவட்டம், கிருட்டிணகிரி மாவட்டம், ஆகியவற்றைச் சேர்ந்த தோழர்கள் நேர்நிற்கும்போது சிதம்பரம் முனைவர் பட்ட ஆய்வு மாணவர் ஒருவர், “அம்மா நான் படிக்க வேண்டியிருப்பதால் எனக்கு சிதம்பரம் நீதிமன்றத்தில் கையெழுத்துப் போடும்படி நிபந்தனை விதித்து உதவுங்கள்” என்று கேட்டுவிட்டார்.

அவருக்கான வழக்கறிஞர் இருக்கும்போது அம்மாணவர் பேசி இருக்கக் கூடாது. அதைச் சுட்டிக்காட்டிக் கண்டித்துவிட்டு, விட்டிருக்கலாம். அப்படிப் பேசியதைக் கண்டித்த நீதிபதி இளவரசி, நீங்கள் அனைவரும் முப்பது வாரங்களுக்குத் தஞ்சையில் இந் நீதிமன்றத்தில் கையெழுத்துப் போட வேண்டும் என்று ஆணை இட்டார். அவர்களும் மற்றவர்களும் வாராவாரம் வந்து கொண்டிருக்கிறார்கள். காவல் துறையினரின் தவறும், நீதித் துறையினரின் கவனக் குறைவு மற்றும், அலட்சியமும் சேர்ந்துதான், 12 ஆண்டுகளுக்குப் பிறகு அவர்கள் நீதிமன்றத்திற்கு வரவழைக்கப்பட்டு அலைகிறார்கள். அது போதாதென்று வாராவாரம் தஞ்சை நீதிமன்றத்தில் கையெழுத்துப் போடும் உள்தண்டனை கொடுப்பது குற்றவியல் நீதிமுறையா? கொலைக் குற்றவாளிக்குக் கூடக் குற்றவியல் நடைமுறைச் சட்டம் நீதிவழங்குகிறது!

எங்கள் தோழர்களுக்கு அழைப்பாணை வழங்கப்பட்டு, அதை வாங்கிக் கொண்டு நீதிமன்றம் வராமல் இருந்தார்கள் என்று நீதித்துறையும் காவல்துறையும் நிலை நாட்ட முடியுமா? அப்படி மெய்பிக்க முடியாதபோது எங்கள் தோழர்கள் மீது கருணை காட்டியிருக்கலாம்.

பன்னிரெண்டு ஆண்டிற்குப் பிறகு அழைக்கப்பட்டு, தாமாகவே வந்து நேர்நின்றவர்களுக்கு நிபந்தனை விதிப்பதில் தமது விருப்புரிமை(discretion)யைப் பயன்படுத்தி அடிப்படையில் ஞாயம் வழங்கியிருக்க முடியாதா? இதுதான் குற்றவியல் நீதியைச் செயல்படுத்தும் முறையா? நாங்கள் நீதிக்குத் தலைவணங்கும் மரபினர்! நீதிக்குத் தலைவணங்குவோம்; ஆனால் நீதித்துறைக்குத் தலை கனத்துப் போகும்போது, மக்களால் தாங்க முடியவில்லையே!
பாவேந்தர் பாடினார்:
சிரம் அறுத்தல் மன்னருக்குச் சிறு பொழுது போக்கு
மக்களுக்கோ உயிரின் வாதை!
... ... ...
மண்டப வழக்குகளால் பாதிக்கப்பட்ட இளையோர்
=================================

இன்னொரு அநீதியும் நடக்கிறது. இப்பொழுதெல்லாம் சாதாரண ஆர்ப்பாட்டம் நடத்தினாலே, கைது செய்து மண்டபத்தில், வழக்குப் பதிவு செய்து கையெழுத்து வாங்கிக் கொண்டு மாலையில் விடுவிக்கிறார்கள்.

மண்டபத்திலிருந்து வெளியேறுபவர்களுக்குத் தங்கள் மீது குற்ற வழக்குப் போட்டுள்ளார்கள் என்ற செய்தியே தெரியாது. அவர்களில் இளையோர்க்கு எங்காவது வேலைக்கு நேர்காணல் நடந்தால், அவர்கள் பெயரில் வழக்கு நிலுவையில் இருக்கும், வேலை பெறும் தகுதியை இழப்பர். எப்படி? காவல் துறையினர் மண்டபத்தில் பதிவு செய்த பெயர்கள் மீது குற்ற எண், தண்டனைப் பிரிவுகள் எல்லாம் சேர்த்து வழக்குப் பதிவு செய்து கணிப் பொறியில் ஏற்றிவிடுகிறார்கள். அந்தக் கணிப்பொறி இவர்கள் மீது வழக்கு நிலுவையில் உள்ளது என்று காட்டுகிறது. அவர்களுக்கு வேலைகிடைக்காது; அவர்களுக்கு வெளிநாடு செல்லும் கடவுச் சீட்டும் கிடைக்காது!
காவிரித் தண்ணீர் வேண்டும் என்று கைகோத்துச் சாலை ஓரமாக மனிதச் சங்கிலி நடத்திய எத்தனை எத்தனை இளைஞர்கள் இப்படிப் பாதிக்கப்பட்டு வாழ்விழந்து தவிக்கிறார்கள்! இன்னும் எத்தனையோ கட்சிகள் மற்றும் அமைப்புகளின் சனநாயகப் போராட்டங்களில் பங்கேற்றதற்காக, மேற்கண்டவாறு பாதிக்கப்பட்டோர் ஏராளம்!

அண்மையில், மேற்கண்டவாறு வேலை பாதிக்கப்பட்ட ஓர் இளைஞர், சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் அவர்களின் முன் ஒரு வழக்கு தாக்கல் செய்தார். நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் ஒரு நல்ல தீர்ப்பு வழங்கினார். “சனநாயக நாட்டில் கோரிக்கைகள் வைத்து ஆர்ப்பாட்டம் நடத்துவது, சனநாயக வடிவில் போராட்டம் நடத்துவதெல்லாம் அரசமைப்புச் சட்டம் வழங்கும் உரிமைகள். அவற்றில் பங்கேற்றதற்காக வழக்குப் போடுவதும், அவ்வழக்கைக் காரணம் காட்டி வேலை பெறும் உரிமையை மறுப்பதும் அரசமைப்புச் சட்டத்திற்கு எதிரானது என்று தீர்ப்பு வழங்கி, அந்த இளையவருக்கு வேலை கிடைக்க நீதி வழங்கினார்.

தமிழ்நாடு அரசு தலையிட வேண்டும்
தமிழ்நாடு அரசு, கால்துறைக்கு இப்படியெல்லாம் வழக்குப் பதியக் கூடாது என்று ஆணையிட வேண்டும். மண்டபத்தில் கையெழுத்து வாங்கி உடனே கணிப்பொறியில் குற்றவாளிப் பெயர்பட்டியலை ஏற்றும் கெட்ட பழக்கத்தைக் கால்துறையைக் கைவிடச் செய்ய வேண்டும்.

நீதிமன்றம் சாட்சி சொல்ல அழைக்கும்போது உடனடியாகக் காவல் துறையினர் போவதற்கும், சாட்சிகளைக் காலம் தாழ்த்தாமல் நீதிமன்றங்களுக்கு அழைத்துச் செல்வதற்கும் உரிய ஏற்பாடுகளைத் தமிழ்நாடு அரசு செய்ய வேண்டும். குறிப்பாக, காவல் துறையினரின் எண்ணிக்கையை அதிகமாக்குவதும், காலிப் பணியிடங்களை உடனடியாக நிரப்புவதும் மிகமிகத் தேவை.

அதுபோல், 15 ஆண்டு 20 ஆண்டு என்று நீளும் வழக்குகளைக் குறிப்பிட்ட கால எல்லைக்குள் முடிக்க புதிய சட்ட ஏற்பாட்டினைத் தமிழ்நாடு அரசும் இந்திய அரசும் செய்ய வேண்டும்.
இதை ஒழுங்குபடுத்தினால் நீதித்துறைக்கும், காவல்துறைக்கும் இப்போதுள்ள வழக்குச் சுமைகளில் 50 விழுக்காடு குறைந்து விடும்.

மனித உரிமையும் நிலைநாட்டப்படும்!
நீதித்துறைதான் இன்று இந்தியாவில் மக்களுக்கான கடைசி நம்பிக்கை! அதன் தன்னாட்சி அதிகாரம் நீதிக்காகவும் மக்களுக்காகவும் செயல்பட வேண்டும். தன் ஆணவத்திற்கும், மந்தப் போக்கிற்கும் அல்ல!
நீதித்துறை - காவல் துறையின் நீட்சி ஆகிவிடக் கூடாது!

================================
தலைமைச் செயலகம்,
தமிழ்த்தேசியப் பேரியக்கம்
=================================
பேச: 9443918095, புலனம் : 9841949462
முகநூல் : www.fb.com/tamizhdesiyam
ஊடகம் : www.kannottam.com
இணையம் : www.tamizhdesiyam.com
சுட்டுரை : www.twitter.com/Tamizhdesiyam
காணொலிகள் : youtube.com/Tamizhdesiyam
================================= 

Labels: , ,

0கருத்துக்கள்:

Post a Comment

<< முகப்பு பக்கம்


தோழர் மணியரசன்
அவர்களின் படைப்புகள் மற்றும் கருத்துக்களை இத்தளத்தில் காணலாம்.
வாசகர்களின் கருத்துக்களும் வரவேற்கப்படுகின்றன.

Web This Blog

தொகுப்பு

முந்தைய பதிவுகள்

தோழமைத் தளங்கள்