"மறைந்து கிடந்த – மறைக்கப்பட்ட தமிழர் பெருமைகளை வெளிப்படுத்திய ஆய்வறிஞர் ஐயா புலவர் செ. இராசு அவர்கட்கு வீரவணக்கம்!--- பெ. மணியரசன் தலைவர், தமிழ்த்தேசியப்பேரியக்கம்
Tuesday, August 8, 2023
மறைந்து கிடந்த – மறைக்கப்பட்ட தமிழர் பெருமைகளை வெளிப்படுத்திய ஆய்வறிஞர் ஐயா புலவர் செ. இராசு அவர்கட்கு வீரவணக்கம்!
பெ. மணியரசன்
தலைவர், தமிழ்த்தேசியப்பேரியக்கம்
==============================================================
தமிழ்த் தொல்லியல் துறை ஆய்வறிஞரும் தமிழ்ப் பல்கலைக்கழக மேனாள் கல்வெட்டியல் துறைத் தவைருமான பேராசிரியர் முனைவர் புலவர் செ. இராசு ஐயா அவர்கள் இன்று (9.8.2023) விடியற்காலை கோவைத் தனியார் மருத்துவ மனையில் காலமானார் என்ற செய்தி பெருந்துயர் அளிக்கிறது.
1982-ஆம் ஆண்டு முதல் தஞ்சை தமிழ்ப் பல்கலைக் கழகத்தில் தொல்லியல் – கல்வெட்டியல் துறையில் ஆய்வறிஞராகப் பணியாற்றிப் பின்னர் அத்துறையின் தலைவரானார். அக்காலத்திலிருந்து ஐயா அவர்களுடன் எனக்கு அறிமுகம் ஏற்பட்டு நல்ல நட்பாக மலர்ந்தது. அவ்வப்போது ஐயங்களை ஐயாவிடம் கேட்டுத் தெளிவு பெறுவேன்.
தமிழ்த்தேசியப் பேரியக்கத்தின் ஏடான ”தமிழர் கண்ணோட்டம்“ இதழில் அவ்வப்போது ஆய்வுக்கட்டுரைகள் எழுதியுள்ளார். தமிழ்க் கடவுளான பழனி முருகன் கோயிலில் காலங்காலமாகத் தமிழினத்தைச் சேர்ந்த “பண்டாரம்” என்ற அறிவுத்துறை வகுப்பினரே அர்ச்சனை செய்து வந்தார்கள். பிற்காலத்தில் திருமலைநாயக்க மன்னரின் படைத்தலைவரும் தெலுங்கு பிராமண வகுப்பைச் சேர்ந்தவருமான ராமப்பையன் என்ற படைத்தளபதியே பழனி முருகன் கோயிலில் பூசை செய்து வந்த தமிழ்ப் பண்டாரங்களை நீக்கி, சமற்கிருதப் பிராமணர்களை அமர்த்தினார் என்ற செய்தியைத் தரவுகளோடு ஐயா புலவர் இராசு அவர்கள் எழுதிய கட்டுரையைத் தமிழர் கண்டோட்டத்தில் வெளியிட்டோம். கடந்த சூலை 2023 தமிழர் கண்ணோட்டம் இதழில், இராசராசச் சோழன் அண்ணன் ஆதித்த கரிகாலனைக் கொன்றவர்கள் மூன்று பார்ப்பனர்களே என்றும், பட்டமேற்ற பின் இராசராசன் கேரளப் பகுதியான காந்தளூர்ச்சாலை மீது படையெடுத்துச் சென்று அங்கு பதுங்கியிருந்த அம்மூவரையும் கொன்றான் என்றும் சான்றுகளுடன் எழுதியிருந்தார். ஆதித்த கரிகாலனைக் கொன்றவர்கள் யாரென்று தெரியவில்லை என்று நீலகண்ட சாத்திரியார் சோழர்கள் வரலாற்று நூலில் எழுதியிருந்தார். அதே கதையைக் கல்கியும் ”பொன்னியன் செல்வன்” புதினத்தில் கூறியிருந்தார்.
அதற்கு முன் வந்த இதழ் ஒன்றில் இராசராசனின் இயற்பெயர் ”அருமொழி” என்பது மட்டுமே என்றும், “அருண்மொழி வர்மன்“ என்பது பின்னர் பிராமண எழுத்தாளர்கள் புகுத்திய பின்னொட்டு என்றும் எழுதியிருந்தார் புலவர்.
தமிழ்ப் பல்கலைக் கழகத்தில் புலவர் இராசு ஐயா பணியாற்றிய போது ”கச்சத்தீவு” என்ற அரிய ஆய்வு நூலை எழுதினார். அதன் வெளியீட்டு விழா தஞ்சை பெசண்ட் அரங்கில் மிகச் சிறப்பாக நடந்தது. கச்சத்தீவு காலங்காலமாகத் தமிழ் நாட்டைச் சேர்ந்தது. இராமநாதபுரம் இராசா காலத்தில் அவர்கள் ஆட்சியின் கீழ் இருந்தது. ஆங்கிலேய நிர்வாகத்தில் அதற்கான புல எண்கள் இருந்தன என்பன போன்றவற்றைச் சான்றுகளுடன் கூறி இருந்தார்.
ஆந்திரத் தலைமையைக் கொண்ட நீதிக்கட்சியின் சாதனைகளாகப் பலவற்றைத் திராவிட அரசியலர் பேசி வருகின்றனர். ஆனால், அவற்றில் பெரும்பான்மைச் சாதனைகளை – நடைமுறையில் சட்டம் இயற்றி நிகழ்த்தியவர் தமிழ்நாட்டைச் சேர்ந்த முதலமைச்சர் பா. சுப்பராயன் (1926-1930) அவர்களே என்பதைச் சான்றுகளுடன் “பாரதப் பெருமகன் டாக்டர் பா. சுப்பராயன்” என்ற நூலில் எழுதினார். சுப்பராயன் அமைச்சரவை கட்சி சார்பற்ற சுயேச்சை அமைச்சரவை என்று அழைக்கப்பட்டது. அந்நூலை ”மறைக்கப்பட்ட பெருந்தமிழர் டாக்டர் பா. சுப்பராயன்” என்ற புதுத்தலைப்பில் எமது பன்மைவெளிப் பதிப்பகம் ஐயா அவர்களின் ஒப்புதல் பெற்று வெளியிட்டது.
முதன்முதலாக, வகுப்புவாரி இடஒதுக்கீட்டிற்குரிய சரியான சட்டம் இயற்றிச் செயல்படுத்தியது, முதன்முதலாக இந்து சமய அறநிலையத்துறையை உருவாக்கியது, சென்னை மாகாண அரசுப் பணியாளர் தேர்வாணையத்தை உருவாக்கிச் செயல்படுத்தியது போன்ற பல சாதனைகளைச் செய்தவர் பா. சுப்பராயன். அவர் அமைச்சரவையில் அமைச்சராக இருந்தவர்தாம் முத்தையா முதலியார்!
ஐயா புலவர் செ. இராசு அவர்கள் எழுதியுள்ள ஆய்வு நூல்கள் ஏராளம்! கொடுமணல் போன்ற அகழாய்வுகளில் ஐயாவின் தனிமுத்திரை பதிந்துள்ளது. அதேபோல் வெளிவராத செப்பேடுகள், கல்வெட்டுகள் பலவற்றைக் கொணர்ந்தவர் புலவர் ஐயா! “கண்ணகி கோட்டம்“ முதல் ”காளிங்கராயன் கால்வாய்” வரை பலவற்றின் வரலாற்றை சமகாலத் தமிழர்களுக்குத் தந்தவர்.
ஐயா அவர்கள் நடமாட முடியாத நிலையில் ஈரோட்டு இல்லத்தில் படுக்கையில் இருந்தார். ஐயா அவர்களின் அன்பான இல்லத்தரசியார் அம்மா அவர்களுடனும் அவர்கள் மருமகள் அவர்களுடனும் தொலை பேசியில் பேசித்தான் ஐயா அவர்களுடன் நூல்கள், கட்டுரைகள் தொடர்பாகத் தகவல் பரிமாற்றம் செய்து வந்தேன்.
இன்று (9.8.2023) ஐயா அவர்கள் காலமான செய்தி பெருந்துயர் அளித்தது எனக்கு மட்டுமா, இல்லை! உலகெங்கும் வாழும் தமிழ் உணர்வாளர்களுக்கும்தான்!
தமிழ்த்தேசியப் பேரியக்கத்தின் சார்பில் ஐயா புலவர் ஈராசு அவர்களுக்கு வீரவணக்கம் தெரிவித்துக் கொள்கிறேன். இல்லத்தார்க்கு ஆழ்ந்த இரங்கல் தெரிவித்துக் கொள்கிறேன்.
===============================
தலைமைச் செயலகம்,
தமிழ்த்தேசியப் பேரியக்கம்
=================================
பேச: 9443918095, புலனம் : 9841949462
முகநூல் : www.fb.com/tamizhdesiyam
ஊடகம் : www.kannottam.com
இணையம் : www.tamizhdesiyam.com
சுட்டுரை : www.twitter.com/Tamizhdesiyam
காணொலிகள் : youtube.com/Tamizhdesiyam
=================================
Labels: அறிக்கைகள், இரங்கல்
0கருத்துக்கள்:
Post a Comment
<< முகப்பு பக்கம்