"கூடலூரில் பள்ளி மேலாண்மைக் குழுவினரை குடிபோதையில் தாக்கிய தி.மு.க.வினரைக் கைது செய்ய வேண்டும்!"------- தமிழ்த்தேசியப் பேரியக்கத் தலைவர் ஐயா பெ. மணியரசன் கண்டன அறிக்கை!
Monday, April 1, 2024
கூடலூரில் பள்ளி மேலாண்மைக் குழுவினரைகுடிபோதையில் தாக்கிய
தி.மு.க.வினரைக் கைது செய்ய வேண்டும்!
=====================================
தமிழ்த்தேசியப் பேரியக்கத் தலைவர்
ஐயா பெ. மணியரசன் கண்டன அறிக்கை!
=====================================
நீலகிரி மாவட்டம் – கூடலூரில், பந்தலூர் வட்டத்திலுள்ள தேவாலா கிராமத்தில் (அட்டி), அங்குள்ள தேவாலா ஊராட்சி ஒன்றிய அரசு நடுநிலைப்பள்ளியில், பொது மக்கள் தங்கள் பிள்ளைகளைச் சேர்க்க வேண்டுமென அப்பள்ளின் தலைமை ஆசிரியர் திருமதி. வசந்தகுமாரி, பள்ளி மேலாண்மைக் குழுத் தலைவர் திருமதி. இராஜாமணி, கற்றல் தொடர்பு மையம் (Learning Links Foundation - LLF) தன்னார்வத் தொண்டு அமைப்பின் செயல்பாட்டாளர் ஆசிரியர் பா. தமிழ்ச்செல்வன் ஆகியோர், நேற்று (31.03.2024) மாலை 4 மணியளவில், ஒரு குழுவாகச் சென்று, தேவாலா அட்டி பாலமுருகன் கோயில் அருகில் வீடு வீடாகத் துண்டறிக்கைகள் வழங்கி, விழிப்புணர்வுப் பரப்புரை மேற்கொண்டனர்.
அந்த நேரத்தில் அங்கு குடிபோதையில் வந்த தி.மு.க. வார்டு கவுன்சிலர் திரு. ஆலன், தி.மு.க. கவுன்சிலர் திருமதி. யோகேசுவரியின் கணவர் திரு. செல்வராஜ் உள்ளிட்ட தி.மு.க.வினர், அரசுப் பள்ளியில் சேருங்கள் என இக்குழுவினர் வழங்கிய துண்டறிக்கைகளை படித்துக் கூடப் பார்க்காமல், அ.தி.மு.க.வுக்கு இவர்கள் வாக்குக் கேட்பதாகக் பொய்க் குற்றம்சாட்டி அடித்துத் துன்புறுத்தி யுள்ளனர்.
தேவாலா பகுதியில் தி.மு.க. பிரமுகர் இராயன் என்பவருக்குச் சொந்தமாக உள்ள பி.ஆர்.சி.சி. (PRCC’) தார் ஆலை நச்சுக்கழிவை வெளியேற்றி வந்தது. அந்த ஆலையை மூட வேண்டுமென்று மக்கள் நடத்திய அறப்போராட்டத்திற்கு பகுதிநேர ஆசிரியர் பா. தமிழ்ச் செல்வன் ஆதரவாக இருந்தார் என்ற காழ்ப்புணர்வுடன் இருந்த தி.மு.க.வினர், அவரையும், அவருடன் வந்தவர்களையும் தாக்கியுள்ளனர்.
மாவட்டக் கல்வித்துறையின் சுற்றறிக்கை்கு ஏற்ப வீடு வீடாகச் சென்று மாணவர் சேர்க்கைக்கு வேண்டுகோள் துண்டறிக்கைகள் வழங்கிய தமிழ்ச்செல்வனைத் தாக்கி, அவரது சட்டையைக் கிழித்ததுடன், அவரது நெஞ்சின் மீது கீறல் விழும் வகையில் அவரை அடித்துத் தள்ளியுள்ளனர். கடுமையான வார்த்தைகளில் இழிவுபடுத்திப் பேசியுள்ளனர். அவரது ஏ.டி.எம். கார்டு மற்றும் கையிலிருந்து 500 ரூபாய் பணம் ஆகியவற்றையும் தி.மு.க.வினர் திருடிச் சென்றுள்ளனர். அவர்கள் பறித்த கைப்பேசியை மட்டும் மீண்டும் அளித்துள்ளனர்.
தாக்கப்பட்ட ஆசிரியர் தமிழ்ச்செல்வன், பந்தலூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றார். அங்கு வந்த தேவாலா காவல் நிலையக் காவலர்களிடம் ஆசிரியர் தமிழ்ச்செல்வன் எழுத்துப்பூர்வமாகப் புகார் அளித்தார். இத்தனைக்கும் இவற்றுக் கெல்லாம் அப்பகுதி மக்களே சாட்சியாக உள்ளனர். ஆசிரியர் தமிழ்ச்செல்வன் காவல்துறையில் புகார் அளித்த நிலையில், தி.மு.க.வினர் தாங்களும் தாக்கப்பட்டதாக ஒரு பொய்ப் புகார் அளிக்க முயற்சித்து வருகின்றனர்.
ஆளுங்கட்சியினரான தி.மு.க.வினர் ஆசிரியர்கள் மீது நடத்தியிருக்கும் இத்தாக்குதல் மீது காவல்துறை உரிய குற்றப்பிரிவின் கீழ் வழக்குப் பதிவு செய்து, குற்றச் செயலில் ஈடுபட்டவர்களைக் கைது செய்ய வேண்டுமென்றும், காவல்துறையின் மேலதிகாரிகள் தலையிட்டு, பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதி கிடைக்க செய்ய வேண்டும் என்றும் தமிழ்த்தேசியப் பேரியக்கம் சார்பில் வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறேன்.
===============================
தலைமைச் செயலகம்,
தமிழ்த்தேசியப் பேரியக்கம்
=================================
பேச: 9443918095, புலனம் : 9841949462
முகநூல் : www.fb.com/tamizhdesiyam
ஊடகம் : www.kannottam.com
இணையம் : www.tamizhdesiyam.com
சுட்டுரை : www.twitter.com/Tamizhdesiyam
காணொலிகள் : youtube.com/Tamizhdesiyam
=================================
Labels: அறிக்கைகள்
0கருத்துக்கள்:
Post a Comment
<< முகப்பு பக்கம்