"மூன்று வேளாண் சட்டங்கள் நீக்கம் : மோடி அறிவிப்பைப் பொறுத்திருந்து பார்ப்போம்! "-- தமிழ்த்தேசியப் பேரியக்கத் தலைவர் பெ. மணியரசன் அறிக்கை!
Friday, November 19, 2021
மூன்று வேளாண் சட்டங்கள் நீக்கம் :மோடி அறிவிப்பைப் பொறுத்திருந்து பார்ப்போம்!
=======================================
தமிழ்த்தேசியப் பேரியக்கத் தலைவர்
பெ. மணியரசன் அறிக்கை!
=======================================
இன்று (19.11.2021) இந்தியத் தலைமை அமைச்சர் நரேந்திர மோடி அவர்கள், ஊடகங்கள் வழியாக நாட்டு மக்களுக்கு ஆற்றிய உரையில், மூன்று வேளாண் சட்டங்களையும் நீக்கிவிடுவோம் என்று சொல்லி இருக்கிறார். இந்திய ஒன்றிய அமைச்சர்களோடு நடத்திய பேச்சுவார்த்தையில் நம்முடைய போராடும் உழவர் அமைப்புத் தலைவர்கள் வலியுறுத்திச் சொன்ன மூன்று சட்டங்களும் இரத்து செய்யப்படும் (நீக்கப்படும் – Repealed) என்று உறுதி கொடுத்தால்தான் போராட்டத்தை இடைக்காலத்திற்குக்கூட நிறுத்தி வைப்போம் என உறுதிபட தெரிவித்தார்கள். இன்று, இந்தியத் தலைமை அமைச்சர் அந்தச் சொல்லையே பயன்படுத்தி மூன்று சட்டங்களையும் நீக்குவோம் என்று கூறியிருக்கிறார்.
இந்திய அரசை இந்த அளவிற்கு நகர்த்திய பெருமை – சாதனை, ஓராண்டாக தில்லியை முற்றுகையிட்டுப் போராடிக் கொண்டிருக்கும் உழவர் பெருந்தலைவர்களையும், உழவர்களையும் சாரும்! அந்த உழவர் பெருமக்களுக்கும், தலைவர்களுக்கும் தமிழ்த்தேசியப் பேரியக்கத்தின் சார்பில் நெஞ்சு நிறைந்த வாழ்த்துகளையும், பாராட்டுகளையும் தெரிவித்துக் கொள்கிறேன். அந்த அறப்போர் களத்தில், உயிரீகம் செய்த நூற்றுக்கும் மேற்பட்ட கள வீரர்களுக்குத் தலைதாழ்த்தி புகழ் வணக்கம் தெரிவித்துக் கொள்கிறேன்.
மோடி அவர்களுடைய அறிவிப்பின் ஆழம் – அகலம் – உறுதித்தன்மை ஆகியவற்றை ஆராயாமல், உடனே “வெற்றி! வெற்றி!” என ஆராவாரம் செய்யாமல், உழவர் போராட்டக் குழுத் (Samyukt Kisan Morcha) தலைவர்கள் இந்த அறிவிப்பை நிதானமாக ஆய்வு செய்து சரியான முடிவுக்கு வந்திருக்கிறார்கள். இந்திய அரசு நாடாளுமன்றத்தில் இதற்கான சட்டத்தை நிறைவேற்றிய பிறகு, அதன் தன்மையைப் பார்த்துவிட்டுத்தான் போராட்டத்தைக் கைவிடுவது பற்றி முடிவு செய்வோம் என்று உடனடியாக அறிவித்திருக்கிறார்கள்.
பகட்டில்லாத இந்தத் தெளிவும், உறுதியும் போராட்டக் குழுத் தலைவர்களுக்கு இருப்பது மிகவும் பாராட்டிற்குரியது! இந்தப் பக்குவத்தை – பண்பை பல்வேறு உரிமைகளுக்குப் போராடும் முன்னணிச் செயல்வீரர்கள் முன்னெடுத்துக்காட்டாக மனத்தில் நிறுத்திக் கொள்ள வேண்டும். தமிழ்த்தேசியப் பேரியக்கம் உழவர் போராட்டக்குழுவின் இந்த அறிவிப்பை வரவேற்கிறது. தலைமை அமைச்சர் மோடியின் அறிவிப்பையும் வரவேற்கிறது.
தலைமை அமைச்சர் மோடியின் அறிவிப்பில் இன்னொரு செய்தியும் இருக்கிறது. வேளாண்மை மற்றும் உழவர்கள் நன்மை கருதி எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் குறித்து ஆராய்ந்து பரிந்துரைகள் வழங்க, புதிய ஆய்வுக்குழு அமைக்கப்படும் என்றும், அதன் பரிந்துரைகளைப் பெற்று செயல்படுத்துவோம் என்றும் கூறியிருக்கிறார். இதில்தான் சூட்சுமம் இருக்கிறது!
இந்த ஆய்வுக்குழுவில் இந்திய அரசின் விசுவாசிகள் இடம்பெறும் அபாயமிருக்கிறது. மோடி அரசின் விருப்பத்தை நிறைவேற்றும் பரிந்துரையை அது வழங்கலாம். நம் நாக்கில் தேன் தடவும் சொற்களோடு இந்த மூன்று உழவர் ஒழிப்புச் சட்டங்களும் புதிய வடிவம் எடுக்கும் அபாயமிருக்கிறது. இதையெல்லாம் பகுப்பாய்வு செய்யக்கூடிய ஆற்றலும், போர்க் குணமும் உழவர் போராட்டக் குழுவுக்கு இருக்கிறது.
மோடியின் இந்த திடீர் அறிவிப்புக்குப் பின்னணியில் சில மாதங்களில் நடக்க இருக்கும் உத்தரப்பிரதேச சட்டப்பேரவைத் தேர்தல் இருக்கிறது. இப்போது அங்குள்ள பா.ச.க. ஆட்சியின் மீது அவர்களின் வாக்குவங்கியாக இருந்த மக்களிடமே எதிர்ப்பும், பிணக்கும், பிளவும் ஏற்பட்டிருக்கின்றன. உத்தரப்பிரதேசத்தின் பிராமணர்களுக்கும், இராஜபுத்திரர்களுக்கும் முரண்பாடு தோன்றி, அவர்கள் வெளிப்படையாக உ.பி. முதல்வர் யோகி ஆதித்தியநாத் அமைச்சரவையைச் சாடும் போக்குகளையும் பார்த்தோம்.
இந்த உழவர் போராட்டத்தில் உத்தரப்பிரதேச உழவர்களின் பங்களிப்பு மகத்தானது. அவர்கள் தில்லி முற்றுகைக்குத் தனி இடம் தேர்வு செய்து, உழவர் பெருந்தலைவர் ராகேஷ் திகாயத் தலைமையில் ஓராண்டாகப் போராடிக் கொண்டிருக்கிறார்கள். இதனால், உழவர் பெருமக்கள் மற்றும் சனநாயக ஆற்றல்களின் வாக்குகள் பா.ச.க.வுக்குக் கிடைக்க முடியாமல் போகும் சூழ்நிலை இருக்கிறது.
இந்தியாவிலேயே உ.பி. பெரிய மாநிலம். 80 மக்களவை உறுப்பினர்களைக் கொண்டது. இந்தி மாநிலங்களுக்குத் தலைமை மாநிலம். இப்படிப்பட்ட உ.பி. சட்டப்பேரவையில் இப்போது தோல்வி ஏற்பட்டால் இதன் தாக்கம் இந்தியா முழுவதும் இருக்கும். 2024இல் நடக்கும் மக்களவைத் தேர்தலில் இது பாதிப்பை உண்டாக்கலாம்.
மூன்றாவது முறையாகத் தலைமை அமைச்சர் பதவியைப் பிடித்தே ஆக வேண்டுமென்று கங்கணம் கட்டி வேலை செய்து கொண்டிருக்கும் மோடி – அமித்சா குழுவினருக்கு இந்நிலைமை பற்றிக் கவலை ஏற்பட்டிருக்கும். அதேபோல், பஞ்சாபிலும் வரக்கூடிய சட்டப்பேரவைத் தேர்தலில் காங்கிரசை வீழ்த்தி பா.ச.க. ஆட்சியை நிலைநாட்ட சீக்கியர்கள் மற்றும் உழவர்களின் வாக்குகள் தேவை.
இந்த உத்திகளோடுதான், சீக்கிய மத குரு – குரு நானக் அவர்களின் பிறந்தநாளில் மூன்று வேளாண் சட்டங்களை நீக்கும் அறிவிப்பை மோடி வெளியிட்டிருக்கிறார். இந்த எச்சரிக்கைகளை உழவர் போராட்டக் குழு (SKM) நாமெல்லாம் சொல்வதற்கு முன்பே புரிந்து கொள்ளும் ஆற்றல் படைத்தது.
நம்முடைய தமிழ்நாட்டில் இந்த ஓராண்டுப் போராட்டத்தில், இங்குள்ள விவசாயிகள் சங்கங்கள் தொடர்ந்து உறுதிபட போராடி இருக்கின்றன. காவிரி உரிமை மீட்புக் குழுவும் தன்னால் இயன்ற அளவுக்கு இப்போராட்டங்களில் பங்கெடுத்திருக்கிறது. நம்முடைய உழவர்களும், சனநாயக ஆற்றல்களும் தில்லி முற்றுகைக்கே போய் நேரடியாகப் பங்கெடுத்திருக்கிறார்கள். எனவே, நாம் கூடுதல் எச்சரிக்கையோடு இதைப் பார்க்க வேண்டும் என்பதற்காகவே இக்கருத்துகளை முன்வைக்கிறோம்.
உலகத்தில் முன்னெடுத்துக்காட்டு இல்லாத அளவுக்கு ஓராண்டாக இலட்சக்கணக்கான உழவர்களையும், சனநாயக ஆற்றல்களையும் ஒருங்கிணைத்து தில்லி முற்றுகைப் போராட்டத்தை நடத்திக் கொண்டிருக்கும் போராட்டக் குழுவிற்கும், அதன் தலைவர்களுக்கும், பங்கெடுத்த மக்களுக்கும் நெஞ்சு நிறைந்த பாராட்டுகளை – வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்!
இந்தப் போராட்டத்தை வெகுமக்கள் அறப்போராட்டமாக நடத்தி, ஒத்துழையாமையைக் கடைபிடித்து, இந்திய ஏகாதிபத்திய அரசை இந்த மக்கள் உலுக்கி இருக்கிறார்கள். போராட்டக் குழு வன்முறை எதையும் கடைபிடிக்கவில்லை. மக்கள் பங்கெடுக்கும் அறப்போராட்டத்தின் ஆற்றலை நமக்கு மீண்டும் கற்றுத் தருவதாக இப்போராட்டம் அமைந்திருக்கிறது. போராட்டத்தில் உயிரீகம் செய்த முன்னணி வீரர்களுக்கு மீண்டும் புகழ் வணக்கம்!
====================================
தலைமைச் செயலகம்,
தமிழ்த்தேசியப் பேரியக்கம்
=====================================
பேச: 9443918095, புலனம் : 9841949462
முகநூல் : www.fb.com/tamizhdesiyam
ஊடகம் : www.kannottam.com
இணையம் : www.tamizhdesiyam.com
சுட்டுரை : www.twitter.com/Tamizhdesiyam
காணொலிகள் : youtube.com/Tamizhdesiyam
=====================================
Labels: அறிக்கைகள், வேளாண்_சட்டங்கள்
0கருத்துக்கள்:
Post a Comment
<< முகப்பு பக்கம்