"மேக்கேதாட்டு அணைக்கு இடைக்காலத் தடை கோரித் தமிழ்நாடு அரசு உச்ச நீதிமன்றத்தில் புது வழக்குத் தொடுக்க வேண்டும்! " காவிரி உரிமை மீட்புக் குழு ஒருங்கிணைப்பாளர் பெ. மணியரசன்.
Monday, January 10, 2022
மேக்கேதாட்டு அணைக்கு இடைக்காலத் தடை
கோரித் தமிழ்நாடு அரசு உச்ச நீதிமன்றத்தில்புது வழக்குத் தொடுக்க வேண்டும்!
=======================================
காவிரி உரிமை மீட்புக் குழு ஒருங்கிணைப்பாளர்
பெ. மணியரசன் அறிக்கை!
=======================================
மேக்கேதாட்டு அணை கட்டுவதற்கான கால்கோள் விழா போல் 09.01.2022 அன்று கர்நாடகக் காங்கிரசார் மேக்கேதாட்டுப் பகுதியில் உள்ள சங்கமத்தில் 11 நாள் நடைப்பயணப் பேரணியின் தொடக்க விழா நடத்தியுள்ளார்கள். அதில் 20 ஆயிரம் பேர் கலந்து கொண்டதாக ஏடுகள் கூறுகின்றன.
பா.ச.க.வின் கர்நாடக ஆட்சியும் அனைத்திந்திய ஆட்சியும் மேக்கேதாட்டு அணை கட்டாமல் கன்னட மக்களை ஏமாற்றுகின்றன என்று கண்டனம் செய்வதே 11 நாள் நடைப்பயணத்தின் நோக்கம்!
காங்கிரசாரின் இவ்வாறான தொடர் குற்றச்சாட்டுக்குக் கர்நாடகத்தின் பா.ச.க. முதலமைச்சர் பசவராஜ் பொம்மை 22.12.2021 அன்று சட்டப்பேரவையில், “விரைவில் மேக்கேதாட்டு அணையின் கட்டுமான வேலைகள் தொடங்கப்படும். ஒன்றிய அரசின் நீர்வளத்துறை ஏற்கெனவே அனுமதி அளித்து விட்டது. காவிரி மேலாண்மை ஆணையம் விரைவில் அனுமதி அளித்துவிடும்” என்றார்.
காங்கிரசாரின் மேக்கேதாட்டு நடைப்பயணப் பேரணி குறித்து, 09.01.2022 அன்று செய்தியாளர்கள் கேட்ட வினாவுக்கு விடையளித்த கர்நாடக அரசின் உள்துறை அமைச்சர் ஞானேந்திரா, “மேக்கேதாட்டு அணைக்குத் தடை கோரித் தமிழ்நாடு அரசு உச்ச நீதிமன்றத்தில் போட்டுள்ள வழக்குகளையும், இந்திய அரசின் சுற்றுச்சூழல் துறை இன்னும் அனுமதி கொடுக்காததையும் கடந்து செல்வதற்கான புறவழிச் சாலையாக காவிரி ஆற்றுநீர் மேலாண்மை ஆணையத்தின் முடிவு வர உள்ளது. தன்னாட்சி அதிகாரம் உள்ள மேலாண்மை ஆணையம் அனுமதி கொடுத்து விட்டால், உடனே கட்டுமான வேலைகளைத் தொடங்கிவிடுவோம். விரைவில் மேலாண்மை ஆணையம் அனுமதி கொடுக்கும்” என்று நம்பிக்கையோடு கூறினார்.
கர்நாடக முதல்வர் சட்டப்பேரவையில் 22.12.2021 அன்று இதே புறவழிச் சாலை உத்தியைப் பயன்படுத்தித்தான், “காவிரி ஆணையம் விரைவில் அனுமதி கொடுக்கும். அது வந்தவுடன் அணை வேலைகளைத் தொடங்குவோம்” என்றார்.
அரசமைப்புச் சட்டப்படி அமைக்கப்பட்டுள்ள சட்டப்பேரவையில் அம்மாநில முதல்வர் உச்ச நீதிமன்றத்தில் உள்ள மேக்கேதாட்டு வழக்கைப் பொருட்படுத்தாமல், ஆணைய முடிவு வந்தால் உச்ச நீதிமன்ற வழக்குத் தங்களைக் கட்டுப்படுத்தாது என்று கூறியுள்ளார். அதே உச்ச நீதிமன்ற மீறலை ஞாயப்படுத்தி அம்மாநில உள்துறை அமைச்சர் 09.01.2022 அன்று ஊடகத்தாரிடம் கூறியுள்ளார்.
அண்மையில் ஊழல் வழக்கில் முன்னாள் அமைச்சர் இராஜேந்திர பாலாஜியைத் தமிழ்நாடு காவல்துறையினர் கைது செய்தபோது, “முன்பிணை கோரும் அவரது மேல் முறையீட்டு மனு உச்ச நீதிமன்ற விசாரணையில் இருக்கும்போது அவரைக் கைது செய்தது தவறு” என்று உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதி என்.வி. இரமணா தலைமையிலான அமர்வு கண்டனம் செய்தது. உச்ச நீதிமன்றத்தின் இதே அணுகுமுறை மேக்கேதாட்டு அணைச் சிக்கலுக்கும் பொருந்தும் அல்லவா!
உச்ச நீதிமன்றத் தீர்ப்பு வருவதற்கு முன், அதன் விசாரணையில் உள்ள மேக்கேதாட்டில் அணை கட்டுவதற்குத் தடை ஆணை கேட்டு, தமிழ்நாடு அரசு உச்ச நீதிமன்றத்தில் அவசர மனுத் தாக்கல் செய்ய வேண்டும் என்று தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களைக் காவிரி உரிமை மீட்புக் குழு சார்பில் கேட்டுக் கொள்கிறேன்.
==========================
செய்தித் தொடர்பகம்,
காவிரி உரிமை மீட்புக் குழு
==========================
பேச: 98419 49462, 94432 74002
==========================
Fb.com/KaveriUrimai
#SaveMotherCauvery
www.kaveriurimai.com
==========================
Labels: அறிக்கைகள், காவிரி_உரிமை
0கருத்துக்கள்:
Post a Comment
<< முகப்பு பக்கம்