"வ.உ.சி., பாரதியார், வேலுநாச்சியார் பட ஊர்தியை அனுமதிக்கக் கோருவது அவர்களின் தன்மானத்திற்கு இழுக்கு!"-- தமிழ்த்தேசியப் பேரியக்கத் தலைவர் ஐயா பெ.மணியரசன் அறிக்கை!
Monday, January 17, 2022
வ.உ.சி., பாரதியார், வேலுநாச்சியார் பட
ஊர்தியை அனுமதிக்கக் கோருவது அவர்களின்
தன்மானத்திற்கு இழுக்கு!
=================================================================================
தமிழ்த்தேசியப் பேரியக்கத் தலைவர் ஐயா பெ.மணியரசன் அறிக்கை!
==================================================================================================
புதுதில்லியில் 26.01.2022 அன்று இந்திய அரசு நடத்தும் குடியரசு நாள் பேரணியில் தமிழ்நாடு, மேற்குவங்கம், கேரளம் ஆகிய மாநில அரசுகளின் ஊர்திகளுக்கு இந்திய அரசு அனுமதி மறுத்துள்ளது. வெளிநாட்டுப் பார்வையாளர்களுக்கு அறிமுகம் இல்லாதவர்களின் உருவங்கள் தீட்டப் பெற்றுள்ளதால், இந்த மாநிலங்கள் சார்பான காட்சி ஊர்திகளை அரசு புறக்கணித்துள்ளது.
இந்திய விடுதலைப் போராட்டத்தில் வீரஞ்செறிந்த பங்காற்றி இரட்டை வாழ்நாள் தண்டனை விதிக்கப்பட்டு சிறைச்சாலையில் செக்கிழுத்த செம்மல் கப்பலோட்டிய தமிழர் வ.உ.சிதம்பரனாரை யாருக்கும் தெரியாதாம். அவரை தெரியாது என்றால் அது அவர்களின் போதாமை! அவர்களைத் தெரியாதவர்களுக்கும், இளம் தலைமுறையினருக்கும் தெரிவிக்கவே காட்சி ஊர்வலம் நடைபெறுகிறது.
இந்திய விடுதலைப் போராட்டக் களத்தில் பங்கேற்றவர்கள் வாயிலும், பங்கேற்காத ஆதரவாளர்கள் வாயிலும் விடுதலை மந்திரம் போல் ஒலித்தவை பெரும்பாவலர் பாரதியாரின் எழுச்சிமிகு பாடல்வரிகள். அவரையும் வெளியாருக்குத் தெரியாதாம்.
வெள்ளைக்காரக் கிழக்கிந்திய கம்பெனியின் படையினரை எதிர்த்துப் போரிட்டு விரட்டி அடித்த சிவகங்கைச் சீமை அரசி வீரமங்கை வேலுநாச்சியாரை பலருக்குத் தெரியாதாம்.
எனவே இவர்களின் காட்சிப்படங்கள் இடம் பெற்ற தமிழ்நாடு அரசின் ஊர்வல ஊர்திகளை இந்தியக் குடியரசு நாள் விழாக்குழுவினர் முற்றிலுமாக மறுத்து விட்டார்களாம். அவர்களுக்கு வடநாட்டு ஜான்சிராணியைத் தெரியும் வீரமங்கை வேலுநாச்சியாரைத் தெரியாது. காரணம் வேலுநாச்சியார் தமிழ் இனத்தில் பிறந்த குற்றம்தான்!
இந்திய தேசிய காங்கிரசு வெளியிட்ட அதன் விடுதலை போராட்ட வரலாற்று நூலில் வ.உ.சி. பெயர் இல்லை என்பதை கவனத்தில் கொள்ளவேண்டும்.
தமிழ்நாடு அரசும், தமிழ்நாட்டுக் கட்சிகளும், அமைப்புகளும் இந்திய அரசின் மேற்படி இன ஒதுக்கல் கொள்கைக்குக் கண்டனம் தெரிவிக்கவேண்டுமே தவிர, குடியரசு நாள் பேரணியில் தமிழ்நாட்டு ஊர்திக்கு இடம் அளிக்க வேண்டும் என்று கோரக்கூடாது. அப்படிக் கோருவது மேற்கண்ட தலைவர்களின் தன்மானத்திற்கு இழுக்காகும் என்று தமிழ்த்தேசியப் பேரியக்கத்தின் சார்பில் தெரிவித்துக்கொள்கிறேன்.
====================================
தலைமைச் செயலகம்,
தமிழ்த்தேசியப் பேரியக்கம்
====================================
பேச: 9443918095, புலனம் : 9841949462
முகநூல் : www.fb.com/tamizhdesiyam
ஊடகம் : www.kannottam.com
இணையம் : www.tamizhdesiyam.com
சுட்டுரை : www.twitter.com/Tamizhdesiyam
காணொலிகள் : youtube.com/Tamizhdesiyam
====================================
Labels: அறிக்கைகள், தமிழ்நாடு_புறக்கணிப்பு
0கருத்துக்கள்:
Post a Comment
<< முகப்பு பக்கம்