<body><script type="text/javascript"> function setAttributeOnload(object, attribute, val) { if(window.addEventListener) { window.addEventListener('load', function(){ object[attribute] = val; }, false); } else { window.attachEvent('onload', function(){ object[attribute] = val; }); } } </script> <div id="navbar-iframe-container"></div> <script type="text/javascript" src="https://apis.google.com/js/platform.js"></script> <script type="text/javascript"> gapi.load("gapi.iframes:gapi.iframes.style.bubble", function() { if (gapi.iframes && gapi.iframes.getContext) { gapi.iframes.getContext().openChild({ url: 'https://www.blogger.com/navbar/6955529389241309188?origin\x3dhttp://thozharmaniyarasan.blogspot.com', where: document.getElementById("navbar-iframe-container"), id: "navbar-iframe" }); } }); </script>

"பாரதியாரைப் போல் அண்ணாமலை பார்ப்பனியத்தை எதிர்ப்பாரா..?"----தமிழ்த்தேசியப் பேரிக்கத் தலைவர் ஐயா பெ.மணியரசன் சிறப்புக் கட்டுரை!

Friday, January 21, 2022


 =========================================
பாரதியாரைப் போல் அண்ணாமலை பார்ப்பனியத்தை எதிர்ப்பாரா?
=========================================
தமிழ்த்தேசியப் பேரிக்கத் தலைவர் ஐயா பெ.மணியரசன் சிறப்புக் கட்டுரை!
=========================================
குடியரசு நாளான 26.1.2022 அன்று புது தில்லியில் நடைபெறவுள்ள வரலாற்றுப் படங்கள் கொண்ட ஊர்தி அணி வகுப்பில் தமிழ்நாடு, கேரளம், மேற்கு வங்கம் ஆகிய மாநிலங்களின் ஊர்திகளுக்கு அனுமதி மறுத்துள்ளது இந்திய அரசின் தெரிவுக் குழு. இது குறித்துத் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், தலைமை அமைச்சர் நரேந்திர மோடிக்கு மடல் எழுதி, தமிழ்நாட்டு ஊர்திகளை சேர்த்துக் கொள்ள வேண்டுகோள் வைத்தார். ஆனால் அதற்கு மறுப்புத் தெரிவித்துவிட்டார் இந்தியப் பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்!

அனுமதி மறுக்கப்பட்ட தமிழ்நாடு அரசின் ஊர்தியில் வரையப்பட்டிருந்த படங்கள் வீரமங்கை வேலுநாச்சியார், விடுதலைப்போராட்ட வீரர் – வெள்ளையருக்கு எதிராகக் கப்பலோட்டிய தமிழர், சிறையிலே செக்கிழுத்த செம்மல் வ.உ.சிதம்பரனார், இந்திய விடுதலைப் போராட்டப் பெரும் பாவலர் பாரதியார் ஆகியோரைப் பற்றிய சித்தரிப்புகளே!

ஊர்தி மறுப்புச் சிக்கலில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினையும், தி.மு.க.வையும் சாடி அறிக்கை வெளியிட்டுள்ள அண்ணாமலை, மேற்படி மூன்று படங்களையும் கொண்ட தமிழ்நாட்டு ஊர்திக்கு அனுமதி மறுக்கப்பட்டதற்கு வருத்தம் தெரிவிக்கவில்லை. அவர் அறிக்கையில் கூறுகிறார்:

“மகாகவி சுப்பிரமணிய பாரதி தலை சிறந்த தேசியவாதி; தீவிரமான ஆன்மிகப் பற்று மிக்கவர். அவர் கண்ட கனவு அகண்ட பாரதம். அதுவே பா.ச.க.வின் தாரக மந்திரம். இந்த ஒவ்வாமையால்தான் நீங்கள் (தி.மு.க.வினர்) பாரதியை விட பாரதிதாசனை அதிகம் கொண்டாடினீர்கள். மகாகவி சுப்பிரமணிய பாரதியார் தி.மு.க.வின் கொள்கைகளுக்கு எதிரானவர். இப்போது தி.மு.க. அரசு நடைமுறைப்படுத்தும் இனவாதம், மதவாதம், தேசிய எதிர்ப்பு, மொழிப்பிரிவினை, ஊழல் போன்ற கொள்கைகளை எல்லாம் அவர் எதிர்த்து நின்றார்”.

இளம் மாணவர்கள் அண்ணாமலை அறிக்கையைப் படித்தால் பாரதியார் வாழ்ந்த காலத்திலேயே தி.மு.க. செயல்பட்ட கட்சி என்பது போன்ற பொய்த் தோற்றம் ஏற்படும். பொய்த் தோற்றங்களைக் கற்பித்து ஆரியத்துவா ஆதிக்கத்தை நிலைநாட்டிக் கொள்வது, ஆரியவாதிகளின் பன்னெடுங்கால உத்தி. ஆரியப்படையின் இக்காலக் காலாட்படையினரான அண்ணாமலை போன்றோர் ஆர்.எஸ்.எஸ். தங்களுக்குக் கற்பித்ததைத் தமிழர்களுக்குக் கற்பிக்க முயல்கிறார்கள்.

=========================
பாவேந்தரைத் தாக்குவது ஏன்?
========================

இச்சிக்கலில் பாவேந்தர் பாரதிதாசன் அவர்களை கால் நீட்டி வம்புக்கு இழுக்கிறார் அண்ணாமலை.

பாவேந்தர் மீது ஆரியத்துவா வாதிகளுக்கு ஆத்திரம் வருவது ஏன்? ஆரியத்தின்-பிராமணியத்தின் வர்ணசாதி உயர்வு தாழ்வுக் கதையாடல்களையும், பிராமணர்கள் தமிழர்களை சூத்திரர்கள் என்றும் பஞ்சமர் என்றும் இழிவு படுத்தியதையும், தமிழை நீசபாஷை என்று தூற்றியதையும், சமற்கிருத ஆதிக்கத்தைத் திணித்த்தையும், தமிழன்னையை மறுத்துப் பாரதமாதா பசனையைப் பரப்பியதையும் கடுமையாக எதிர்த்துக் கவிதைகள் படைத்தார் பாவேந்தர்!

அதே வேளை பாரதியாரைத் தம் ஆசானாக மதித்தார் பாவேந்தர்.
பைந்தமிழ்த் தேர்ப்பாகன் அவனொரு
செந்தமிழ்த் தேனீ, சிந்துக்குத் தந்தை…
நீடுதுயில் நீக்கப்பாடி வந்த நிலா
காடு கமழும் கற்பூரச் சொற்கோ…
படரும் சாதிப் படைக்கு மருந்து
மண்டும் மதங்கள் அண்டா நெருப்பவன்

என்றெல்லாம் இறுதிவரைப் பாரதியாரைப் புகழ்ந்தார் பாவேந்தர். பிராமணர்களின் வர்ண-சாதி ஆதிக்கத்தை பாவேந்தருக்கு முன்னமே எதிர்த்தவர் பாரதியார்! இதோ அவரின் பாடல் வரிகள்!

“சுதந்திரப் பள்ளு” என்ற தலைப்பில் “பள்ளர் களியாட்டம்” என்ற உள் தலைப்பில் பராதியார் பாடினார்:

பார்ப்பானை ஐயரென்ற காலமும் போச்சே – வெள்ளை
பரங்கியைத் துரை என்ற காலமும் போச்சே…

“மறவன்பாட்டு” என்ற தலைப்பில் பின்வருமாறு பாடினார்:

இன்னாளிலே பொய்மைப் பார்ப்பார் – இவர்
ஏது செய்துங் காசு பெறப் பார்ப்பார்…
பேராசைக் காரனடா பார்ப்பான் – ஆனால்
பெரிய துரை எனில் வேர்ப்பான்
பிள்ளைக்குப் பூணூலாம் என்பான் – நம்மைப்
பிச்சுப் பணங்கொடெனத் தின்பான்
நாயும் பிழைக்கும் இந்தப் பிழைப்பு
நாளெல்லாம் மற்றிதிலே உழைப்பு
பாயும் கடிநாய்ப் போலீசுக்காரப்
பார்ப்பானுக்கு உண்டிதிலே பீசு!

என்றெல்லாம் பிராமணர்களின் கொடுமைகளைத் தோலுரித்தார் பாரதியார்.

===========================================
பாரதியாரைப் போல் பார்ப்பனியத்தை எதிர்ப்பார்களா?
==========================================

பாரதியாரின் இக்கவிதைகளை மேடையிலே மேற்கோள் காட்டிப் பேசி, பாரதியார்க்குப் புகழ் சேர்ப்பாரா அண்ணாமலை? அப்படிப்பட்ட நேர்மைப் பயிற்சியை அவருக்கு ஆர்.எஸ்.எஸ். தந்துள்ளதா?

பாரதியார் பிராமண வகுப்பிலே பிறந்தவர். ஆனால் பிராமணியத்தை மறுத்தவர்; எதிர்த்தவர். தமது மார்பிலே புரண்ட பூணூலை அறுத்து எறிந்தவர்! “பறையர்” வகுப்பில் பிறந்த கனகலிங்கம் என்ற இளைஞரைத் தம் வீட்டில் வளர்த்தவர். தமது பூணூலை அறுத்து மறுத்த பாரதியார், பறையர் பூணூல் அணியக் கூடாது என்ற பிராமண ஆதிக்கத்தைத் தகர்க்க, கனகலிங்கத்திற்குப் பூணூல் அணிவித்தார்!

வங்காள மறுமலர்ச்சிக்கு வித்திட்டவரும் பூணூலை விட்டெறிந்த சீர்திருத்தருமான இராசாராம் மோகன் ராயின் மரண காலத்தில் அவர் மார்பில் பூணூல் புரண்டது தவறு என்று சாடினார் பாரதியார்.

“ஸ்ரீபுத்த பெருமான், சங்கராச்சாரியார், கிறிஸ்து ஏசு முதலியவர்களைப் போல அத்தகைய உயர்ந்த நிலைமையில் ராம் மோஹனர் இருக்கவில்லை. ஜாதி, சமயக் கட்டுகளையெல்லாம் அவர் அறுத்து, வெளியேறிய போதிலும் மரண காலத்தில் அவர் மார்பின் மீது பிராமணர்கள் போடுகிற முப்புரி நூல் தவழ்ந்து கொண்டிருந்ததாம். ஐயோ பாவம்! இத்தேச ரக்ஷணையின் பொருட்டு முழு வீரன் ஒருனை அனுப்ப ஈசனுக்குக் கருணை பிறக்க வில்லை.”

-பாரதியார், “சக்கரவர்த்தினி,” 1906, ஆகஸ்ட்டு மாத இதழில் “ராஜாராம் மோஹன ராயர்” என்ற கட்டுரை.

பா.ச.க. தலைவர் அண்ணாமலை, பாரதியாரை ஒரேயடியாகப் புகழ்ந்து தள்ளுகிறார். பிராமணர்களின் பூணூல் பற்றி பாவேந்தர் பாரதிதாசன் பிற்காலத்தில் சாடியதை அவர்க்கு முன்பே பாரதியார் சாடியுள்ளார். பிராமணர்கள் பூணூல் அணிய வேண்டாம் என்று இப்போது வேண்டுகோள் வைக்க அண்ணாமலை அணியமா? அப்படி ஒரு வேண்டுகோள் வைத்தால் அண்ணாமலை அடுத்த நொடியே பா.ச.க.வை விட்டு வெளியேற்றப்படுவார்!

பாரதியாரை ஓகோ என்று புகழ்கின்ற பா.ச.க.வினர், ஆர்.எஸ்.எஸ். வகையினர். அவரின் பார்ப்பனிய எதிர்ப்புக் கருத்துகளை என்றைக்காவது பேசியதுண்டா? இல்லை! மறைக்கின்றனர்.

பிராமணர்கள் உருவாக்கிய வர்ணாசிரமமும் சாதிகளும் இந்தியாவில்தான் இருக்கின்றன மற்ற நாடுகளில் இல்லை என்று ஆங்கிலக் கட்டுரை ஒன்றில் பாரதியார் குறிப்பிடுகிறார்.

“தேசிய உணர்வில்லாமல் அரசியல் விடுதலை சாத்தியமில்லை. சாதிமுறை நடைமுறையிலிருக்கும் ஓரிடத்தில் தேசிய உணர்வு ஏற்பட முடியாது. ஓரு பிராமண இடைத்தரகனை விட ஒரு பறைய வகுப்பைச் சேர்ந்த வள்ளலைத் தாழ்வாக வைக்கும் விநோதமான அமைப்பு, இந்த சாதி அமைப்பு! தேவையான எல்லாத் தகுதிகளையும் உடைய ஒரு சக்கிலியப் பையன், இங்கிலாந்தில் பிரதம அமைச்சராகவதற்கு அந்நாட்டின் எந்தப் பகுதியிலாவது தடை ஏற்படும் என்ற சந்தேகம் அங்கு உண்டோ? ஆனால் சமஸ்கிருத வேதங்களில் எல்லையற்ற ஞானமும், குறை சொல்ல முடியாத குணங்களும், பக்தி உணர்வும் பொருந்திய ஒரு சூத்திரன் (பஞ்சமனைக் கூட விட்டு விடுங்கள்) சிருங்கேரி பீடத்தில் அமர ஆசைப்படலாம் என்று நினைப்பதே இந்தியாவில் ராஜ துரோகம் இல்லையா? கிரேட் பிரிட்டன் எங்கே? இந்தியா எங்கே? அந்தோ பரிதாபம்!”

-பாரதியாரின் கூற்று 1904 டிசம்பர் The Hindu, Ramasamy Parthasarathy “A Hundred years of The Hindu, Kasturi & Sons Ltd. Madras (1978) Page 77, தமிழாக்கம்: பேரா.அ.மார்க்ஸ், நூல்: பாரதி ஒரு சமூகவியல் பார்வை.

பாரதியாரை வரிக்கு வரி பின் பற்றுவது போல் பாசாங்கு செய்து கொள்ளும் பிராமண அறிவாளிகளும் அண்ணாமலை போன்ற பிராமண அடிவருடிகளும் பாரதியாரின் வர்ண-சாதி எதிர்ப்பை, பிராமணிய எதிர்ப்பை வெளிப்படுத்திப் பேசியதுண்டா? இல்லை. அப்பகுதியை தந்திரமாக மறைத்துவிடுவார்கள். புதுச்சேரியில் இருந்து மாமியார் ஊரான கடையத்திற்குப் போன பாரதியாரை அக்ரகாரத்தில் மாமியார் வீட்டில் நுழையவிடாமல் பிராமணர்கள் தடுத்து வைத்தனர். அக்ரகாரத்திற்கு வெளியே ஒரு பிள்ளையார் கோயிலில்தான் தங்கினார். பாரதியார் பாடிய வேதச் சிறப்புகள், பாரதப் பெருமைகள் முதலியவற்றைப் பற்றியே பேசி பாரதியாரின் இன்னொரு பக்கத்தை பிராமணவாதிகள் மறைத்து வருகிறார்கள்.

ஆங்கிலேயர் உருவாக்கிய இந்தியாவில் பாரதி காலத்தில் பாக்கித்தானும் இருந்தது. அதையும் சேர்த்து தான் பாரதம் என்றார் பாரதி! ஆனால் ஆர்.எஸ்.எஸ்.ஸின் இப்போதைய அகண்ட பாரதக் கோரிக்கை ஆப்கானித்தானத்திலிருந்து இந்தோனேசியா வரை விரிந்து கிடக்கிறது! இந்த அகண்ட பாரதத்தைப் பாரதி அன்றே சொன்னார் என்று அண்ணாமலை அளக்கிறார்.

“ஜெய் ஸ்ரீராம், ஜெய் ஸ்ரீஹனுமான், பாரத் மாத்தாகீ ஜே” அணிவகுப்பில் உள்ள “சூத்திர” அண்ணாமலை போன்றவர்கள் பாரதியாரின் தமிழ் மொழி வாழ்த்தை, தமிழ்நாட்டு வாழ்த்தை முதன்மைப்படுத்துவார்களா?
===========================
பாரதியாரின் தமிழ்ப் பற்று
==========================

“யாமறிந்த மொழிகளிலே தமிழ் மொழிபோல் இனிதாவதெங்கும் காணோம், யாமறிந்த புலவரிலே கம்பனைப் போல், வள்ளுவர் போல், இளங்கோவைப் போல் பூமிதனில் யாங்கணுமே பிறந்ததில்லை,” போன்ற வரிகள் பா.ச.க. மேடையில் ஒலிப்பதுண்டா?

வானமளந்த தனைத்தும் அளந்திடும்
வண்மொழி வாழியவே!
ஏழ்கடல் வைப்பினும் தன் மணம் வீசி
இசை கொண்டு வாழியவே!
எங்கள் தமிழ்மொழி எங்கள் தமிழ்மொழி
என்றென்றும் வாழியவே!“
என்றார் பாரதியார். இக்கொள்கையை பா.ச.க. ஏற்றுக் கொள்ளுமா?
“விதியே, விதியே தமிழச் சாதியை
என்செய நினைத்தாய் எனக்கு உரையாயோ?”

என்று கேட்டார் பாரதியார் “சாதி” என்ற சொல்லைத் தேசிய இனம் என்ற பொருளில் பயன்படுத்தினார். தமிழினம் என்பதைத் தமிழச் சாதி என்றார்.

“செந்தமிழ் நாடென்னும் போதினிலே இன்பத்
தேன் வந்து பாயுது காதினிலே எங்கள்
தந்தையர் நாடென்ற பேச்சினிலே – ஒரு
சக்தி பிறக்குது மூச்சினிலே” என்றார் பாரதியார்.

===============================
அண்டிக் கெடுத்து அழிக்கும் உத்தி
==============================

இந்தியா முழுவதும் வாழும் பிராமணர்களுக்கென்று, தனித் தாயகம் இல்லை;’ தனித் தாய்மொழி இல்லை. அவர்களின் “புனித” மொழியான சமற்கிருதம் யாருக்கும் தாய் மொழி இல்லை; அம்மொழிக்கும் சொந்தத் தாயகம் இல்லை.

நேரே நிமிர்ந்து தற்சார்பாய் வளர முடியாத கொடி ஏதாவதொரு மரத்தில் படர்ந்து வளர்வதைப் போன்ற நிலை பிராமணர்களுக்கும் சமற்கிருதத்திற்கும்! ஆனால் இந்த பிராமண, சமற்கிருதக் கொடிகள் வளர்த்த மரத்தையே மூடி மறைத்து, அதன் வளர்ச்சியைத் தடுத்துவிடும் சில நச்சுக் கொடிகள் போன்றவை!

பாரதியாரும், விவேகானந்தரும் பல முற்போக்குக் கருத்துகளை வழங்கினர். ஆனால் அவர்களிடம் ஆரியப் பெருமிதம் – சமற்கிருத வேதப் பெருமைகள் இருந்தன. அவற்றை வைத்துக் கொண்டு அவர்களை முற்றிலும் ஆரியத்துவாவாதிகளாகச் சித்தரிக்கின்றனர் ஆரியப் பிராமண அறிவாளிகள்!

தனக்கு எதிரான எதையும் பிராமணியம் தனதாக்கிக் கொள்ள முயலும். அது முடியாமல் போனால் எதிர்க்கும்!

தெலுங்கு, கன்னடம், மலையாள மொழிகளை ஆக்கிரமித்து அவை சமற்கிருதத்தை அண்டிப் பிழைக்கும் நிலைக்கு மாற்றினர்.

தமிழ் மொழியிடமும் தமிழரிடமும் அவர்களின் சூழ்ச்சி முழுமையான வெற்றியை பெற முடியவில்லை. தமிழை நீச பாக்ஷை என்றார்கள். தமிழரைத் தீண்டத் தகாதவர் என்றார்கள். இவையெல்லாம் பிராமணர்களுக்கும் சமற்கிருதத்திற்கும் எதிரான இயக்கங்களைத் தமிழர்களிடம் உருவாக்கின. அண்ணாமலையின் முன்னோர்களையும் தாய் மொழியையும் தான் ஆரியப் பிராமணர்கள் – அடிமைப்படுத்த முயன்றார்கள். அவர்களால் முழு வெற்றி பெற முடியவில்லை.

ஆரியத்தின் அடிவருடியாய் இருந்து அதனால் கிடைக்கும் – ஆரியத்திற்குக் கீழ்ப்படிதலுள்ள பதவிகளைத் துய்ப்பதற்காகப் பாவேந்தரை இழிவுபடுத்துகிறார் அண்ணாமலை! பாவேந்தரைப் போற்றுவதே குற்றம் என்கிறார்!
தி.மு.க. ஆட்சி வைத்துள்ள மனோன்மணியம் சுந்தரனாரின் தமிழ்த்தாய் வாழ்த்தில் நமக்கு மாறுபட்ட கருத்துண்டு. ஆனால் அதை எதிர்க்கும் அண்ணாமலை, “பல்லுயிரும் பல உலகும்” என்று தொடங்கி

“கன்னடமும் களி தெலுங்கும் கவின் மலையாளமும்
துளுவும் உன்னுதரத்தே உதித் தெழுந்து
ஒன்று பல ஆயிடினும்”

என்ற சுந்தரனாரின் பாடல் வரிகளை நீக்கியது ஏன் என்று இதே அறிக்கையில் கேட்கிறார். அவர் சுட்டிக் காட்டிய வரிக்குக் கீழே “ஆரியம் போல் உலக வழக்கு அழிந்து ஒழிந்து சிதையா” என்ற வரியையும் தி.மு.க. ஆட்சி சேர்க்காததை ஏன் சுட்டிக் காட்டவில்லை? அறியாமையா? ஆரியத்தில் கற்ற தந்திரமா?

வீரமங்கை வேலுநாச்சியார், கப்பலோட்டிய தமிழர் வ.உ.சி., பெரும்பாவலர் பாரதியார் ஆகியோரைச் சித்தரிக்கும் தமிழ்நாட்டு ஊர்தியைப் புறக்கணித்தது தவறு என்று, புதுதில்லியிடம் பேசி, மீண்டும் அவற்றைச் சேர்த்திடச் செய்யும் முயற்சியில் பா.ச.க.வின் அண்ணாமலை வகையறாக்கள் ஈடுபடவில்லை. தமிழர் வரலாற்றுக்கு இரண்டகம் செய்து, அடிமைப் பதவியை தக்கவைத்துக் கொள்ள ஆசைப்படுகிறார்கள்.

புதுதில்லியில் வேலுநாச்சியார்க்கும், வ.உ.சிக்கும், பாரதியார்கும் இழைக்கப்பட்ட தன்மானத்தகர்ப்பு ஒவ்வொரு தமிழர் நெஞ்சிலும் புலிக்கு ஏற்பட்ட காயம் போல் பதிந்திருக்க வேண்டும்.

====================================
தலைமைச் செயலகம்,
தமிழ்த்தேசியப் பேரியக்கம்
====================================
பேச: 9443918095, புலனம் : 9841949462
முகநூல் : www.fb.com/tamizhdesiyam
ஊடகம் : www.kannottam.com
இணையம் : www.tamizhdesiyam.com
சுட்டுரை : www.twitter.com/Tamizhdesiyam
காணொலிகள் : youtube.com/Tamizhdesiyam
====================================

Labels:

0கருத்துக்கள்:

Post a Comment

<< முகப்பு பக்கம்


தோழர் மணியரசன்
அவர்களின் படைப்புகள் மற்றும் கருத்துக்களை இத்தளத்தில் காணலாம்.
வாசகர்களின் கருத்துக்களும் வரவேற்கப்படுகின்றன.

Web This Blog

தொகுப்பு

முந்தைய பதிவுகள்

தோழமைத் தளங்கள்