"புதுச்சேரி ஜெயங்கொண்ட மாரியம்மன் கோயில் தமிழ்க் குடமுழுக்கைத் தடுப்பது சட்டவிரோதமானது!"---தெய்வத் தமிழ்ப் பேரவை ஒருங்கிணைப்பாளர் பெ. மணியரசன் கண்டனம்!
Wednesday, January 4, 2023
புதுச்சேரி ஜெயங்கொண்ட மாரியம்மன் கோயில்
தமிழ்க் குடமுழுக்கைத் தடுப்பது சட்டவிரோதமானது!
==========================================
தெய்வத் தமிழ்ப் பேரவை ஒருங்கிணைப்பாளர்
பெ. மணியரசன் கண்டனம்!
==========================================
புதுச்சேரி குயவர்பாளையம் லெனின் வீதியில் அமைந்துள்ள 600 ஆண்டுகள் பழமையான அருள்மிகு செல்வவிநாயகர் – அருள்மிகு ஜெயங்கொண்ட மாரியம்மன் திருக்கோவிலின் திருக்குடமுழுக்கு, வரும் 27.01.2023 அன்று, மயிலம் பொம்மபுர ஆதினம் அவர்களின் தலைமையில் தெய்வத்தமிழில் நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டு அதற்கான ஏற்பாடுகள் சிறப்புற நடைபெற்று வந்த நிலையில், “தமிழில் குடமுழுக்கு நடைபெறுவது ஆகம விதிகளுக்கு எதிரானது” என்று கூறி சிலர் அதைத் தடுக்க முற்படுவது கடுமையாகக் கண்டிக்கத்தக்கது.
இன்று (04.01.2023), அத்திருக்கோயிலில் தமிழ்க் குடமுழுக்குக்கான தொடக்கநிலை ஏற்பாடுகள் நடந்த நிலையில், நெல்லித்தோப்பு முன்னாள் சட்டமன்ற உறுப்பினரும், அ.தி.மு.க. – ஓ. பன்னீர்செல்வம் அணியைச் சேர்ந்தவருமான ஓம்சக்தி சேகர் தலைமையில் வந்த சிலர், பந்தல் கால் நடுவதை அத்துமீறித் தடுத்து நிறுத்தியுள்ளனர். இந்த வன்செயல் ஆன்மிக மக்களுக்குக் கடும் அதிர்ச்சியளிக்கிறது. இறைவனுக்கு நடைபெறும் திருப்பணியைக் கூட அநாகரிகமாகத் தடுக்கும் இச்செயலை தெய்வத் தமிழ்ப் பேரவை சார்பில் வன்மையாகக் கண்டிக்கிறேன்.
ஆகமவிதிகள் தமிழ்க் குடமுழுக்கைத் தடுப்பதாக இவர்கள் கூறுவது முழுப்பொய் என்பதோடு மட்டுமின்றி, இந்தக் கூற்று சட்டவிரோதமானதும் ஆகும்!
தமிழர்கள் உருவாக்கிய பல்வேறு திருக்கோயில்களிலும் காலங்காலமாக தமிழ் மொழி தான் வழிபாட்டு மொழியாக இருந்தது. ”தேவாரம்” பாடிய சுந்தரர், “அர்ச்சனைப் பாட்டும் தமிழே” என்றார். மலரால் தம்மை வணங்கிய சுந்தரரிடம், இறைவனே இறங்கி வந்து தம்மை “சொற்றமிழால் பாடுக” என்றதாகக் கூறுகிறது பெரியபுராணம்! “என்னை நன்றாய் இறைவன் படைத்தனன்; தன்னை நன்றாய்த் தமிழ் செய்யுமாறே” என்றார் திருமந்திரத்தில் திருமூலர்.
அயலார் ஆட்சிக்காலத்தில் தமிழர்கள் கட்டிய கோயில்களில் நாளடைவில் வழிபாடுகள் யாவும், வடமொழி மயமாகிவிட்டன. இந்நிலையில், பக்தர்களின் வழிபாடுகள், திருக்குட நன்னீராட்டு விழா நிகழ்வுகள் முதலிய யாவற்றிலும் தெய்வத்தமிழ் இடம் பெற வேண்டும் என்பது அடியார்கள் மற்றும் பக்திமை உள்ளம் கொண்ட பெரியோர்களது கோரிக்கையாக இருந்து வருகிறது. அதை எந்த ஆகமும் தடுக்கவில்லை. இதனை ஏற்றுத்தான், நீதிமன்றங்கள் பல்வேறு தீர்ப்புகளை வழங்கியுள்ளன.
கடந்த 2015 டிசம்பர் 15இல், அனைத்துச் சாதியினரும் அர்ச்சகராவது குறித்த வழக்கில் (மனு எண் - W.P. (MD) No. 354 of 2006) தீர்ப்பளித்த உச்ச நீதிமன்றம், “கருவறை அர்ச்சனை நடத்த குறிப்பிட்ட ஒரு மொழிக்கும், குறிப்பிட்ட ஒரு வகுப்பாருக்கும் மட்டுமே உரிமை உண்டு என்று எந்த ஆகமும் முன் நிபந்தனை விதிக்கவில்லை” என்று உறுதிபடத் தெரிவித்தது.
இந்தத் தீர்ப்புக்கு பல்லாண்டுகளுக்கு முன்பே, கோயில் கருவறையில் தமிழ் மந்திரம் ஓதி பூசை (அர்ச்சனை) செய்வதற்கு தமிழ்நாடு அரசு 29.08.2006இல் சட்டம் இயற்றியது. அதன்படி, கோயில்களின் கருவறையிலும், கலசத்திலும், வேள்வியிலும் ஓதுவதற்கான தமிழ் மந்திரங்களைத் தமிழ்நாடு அரசு (இந்து சமய அறநிலையத் துறை) அச்சிட்டு நூல்களாக வெளியிட்டது. அதற்கென தகுதியுள்ள அனைத்துச் சாதியாருக்கும் அர்ச்சகர் பயிற்சியும் கொடுத்து வருகிறது.
கடந்த 2020ஆம் ஆண்டில், தமிழ்ப் பேரரசன் இராசராசன் கட்டிய தஞ்சைப் பெருவுடையார் திருக்கோயிலுக்கு நடந்த குடமுழுக்கின் போது (05.02.2020), நானும் (பெ. மணியரசன்) பிறரும் தொடுத்த வழக்கில் (மனு எண் - W.P. (MD) No. 1644 of 2020), திருக்கோயில் திருக்குடமுழுக்கு நன்னீராட்டு விழாவில் கருவறை - வேள்விச்சாலை - கோபுரக் கலசம் ஆகியவற்றில் தமிழிலும் வழிபாடு நடத்த சென்னை உயர் நீதிமன்ற மதுரைக்கிளை ஆணையிட்டது. ஆகமம் தமிழைத் தடுப்பதாகக் கூறவில்லை. அத்தீர்ப்பின்படி பெருவுடையார் கோயில் குடமுழுக்கு தமிழில் நடந்து பக்தர்களை பரவசத்தில் ஆழ்த்தியது.
இதனைத் தொடர்ந்து, கரூர் ஆநிலையப்பர் (பசுபதீசுவரர்) திருக்கோயில் குடமுழுக்கைத் தமிழில் நடத்தக் கோரி, சென்னை உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில், தெய்வத் தமிழ்ப் பேரவை செயற்குழு உறுப்பினர் சித்தர் மூங்கிலடியார் அவர்களும், மற்றவர்களும் தொடுத்த வழக்கில் (மனு எண் - WP(MD)/0017750/2020), கடந்த 03.12.2020 அன்று தீர்ப்பு வழங்கிய நீதிபதிகள் கிருபாகரன் - புகழேந்தி அமர்வு, அக்குடமுழுக்கை தமிழில் நடத்த வேண்டுமென மீண்டும் ஆணையிட்டது. அவ்வாறு தமிழைப் பயன்படுத்த முன்வராத கோயில்களுக்கு 10 இலட்ச ரூபாய் தண்டத்தொகை விதிக்க வேண்டும் என்றும் கடுமையாக வாய்மொழி எச்சரிக்கை விடுத்தது.
புதுச்சேரிக்கு மேல் முறையீட்டு நீதிமன்றம், சென்னை உயர் நீதிமன்றமே என்பதால், தமிழ் நாட்டுக் கோயில்களுக்கு வழங்கப்பட்டுள்ள இத்தீர்ப்புகள் தமிழர்களின் இன்னொரு தாயகமாக விளங்கும் புதுச்சேரிக்கும் பொருந்தக்கூடியதாகும். தமிழ்நாட்டிலும், புதுச்சேரியிலும் திருக் கோயில் வழிபாடு பொதுவான நடைமுறையையே கொண்டது.
இத்தீர்ப்புகளைப் பின்பற்றியே விராலிமலை அருள்மிகு சுப்பிரமணியர் திருக்கோயில், விருத்தாச்சலம் அருள்மிகு விருத்தகிரீசுவரர் திருக்கோயில் ஆகியவற்றுக்கு நடைபெற்ற குடமுழுக்குகளில் தமிழை அரங்கேற்ற தெய்வத் தமிழ்ப் பேரவை பாடாற்றியது. அங்கெல்லாம் கருவறை தொடங்கி கோபுரக் கலசம் வரை தமிழ் மொழி ஒலித்து, பக்தர்களும், மக்களும் மகிழ்ச்சியாக அதை ஏற்றனர்.
எனவே, இன நீதியின் படியும், சைவ நெறிப்படியும், சட்ட நீதியின் படியும், தமிழர்கள் கட்டிய திருக்கோயில்களின் திருக்குடமுழுக்கை தமிழில் நடத்துவதே சரியானதும், பொருத்தமானதும் ஆகும்! நீதிமன்றமே ஆகமவிதி தடுக்கவில்லை எனக் கூறிவிட்ட பிறகும், “ஆகமவிதி தமிழைத் தடுக்கிறது” எனப் பொய் பரப்பும் ஓம்சக்தி சேகர் குழுவினரின் செயல் நீதிமன்ற அவமதிப்பும் ஆகும். எனவே, புதுச்சேரி காவல்துறை அவர்கள் மீது வழக்குப்பதிவு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.
தமிழ்க் குடமுழுக்கைத் தடுக்க வரும் ஓம்சக்தி சேகர், எந்த ஆகமத்தில் – எந்த ஆகம விதியில் தமிழில் வழிபாடு கூடாது, குடமுழுக்குக் கூடாது என சொல்லியிருக்கிறது என்பது குறித்து வாய் திறப்பதில்லை. தனது பெயரில் “ஓம்சக்தி” என முன்னொட்டு போட்டுள்ள ஓம்சக்தி சேகர் அவர்கள், தாம் வழிபடும் மேல்மருத்தூரிலுள்ள ஆதிபராசக்தி திருக்கோயிலின் கருவறை வழிபாட்டு மொழியாகத் தமிழ் மொழி விளங்குவதால்தான், அது பல இலட்சம் பக்தர்களை ஈர்த்து வளர்ந்து கொண்டுள்ளது என்பதைக்கூட அறியாமல் உள்ளது வேதனையானது.
தமிழ்க் குடமுழுக்கைத் தடுக்க நினைக்கும் ஓம்சக்தி சேகர் குழுவினர், உண்மையில், ஆகமவிதியை நிலைநாட்ட இவற்றையெல்லாம் செய்யவில்லை. தங்களை இத் திருக்கோயிலின் நிர்வாகம் மற்றும் திருப்பணிக் குழுவில் இணைக்கவில்லையே என்ற ஆத்திரத்திலேயே, இந்தத் தமிழ் விரோதச் செயலில் அவர்கள் ஈடுபட்டு வருவதாக புதுச்சேரி மக்கள் தெரிவிக்கின்றனர்.
கடந்த 2007 சூலை மாதம், இத்திருக்கோயிலின் அறங்காவலர் குழுவில் தம்மை அமர்த்த வில்லை எனக் கூறி போராட்டத்தில் ஈடுபட்ட இவர், சாலை நடுவில் தீக்குளிக்கவும் முயன்றார். இதனையடுத்து, இவர் மீது காவல்துறை வழக்குப் பதிவு செய்து இன்றும் அது நிலுவையில் உள்ளது. 2016இல் இத்திருக்கோயிலின் அறங்காவலர் குழு மாற்றியமைக்கப் பட்டபோது, அதனைக் கண்டித்து, திருப்பணிக் குழுப் பொறுப்புகளிலிருந்து விலகி, இவரே தான் விலகல் கடிதம் கொடுத்தார் என்று விவரம் தெரிந்த புதுவை மக்கள் கூறுகிறார்கள். கடைசியாக, கடந்த 2020 பிப்ரவரியில், இக்கோயிலின் திருப்பணிக் குழுவின் மீது பல்வேறு குற்றச்சாட்டுகளை சுமத்தி, புதுச்சேரி துணைநிலை ஆளுநருக்கு இவர் கடிதமும் எழுதியுள்ளார்.
இவ்வாறு இத்திருக்கோயிலின் நிர்வாகத்திற்கு எதிராகத் தொடர்ந்து செயல்பட்டு வரும் ஓம்சக்தி சேகர், தான் இல்லாமல் இத்திருக்கோயிலின் குடமுழுக்கு நடக்கக்கூடாது என்ற தனது தனிப்பட்ட காழ்ப்புணர்வை முன்வைத்து, “ஆகமவிதி” என ஓலமிட்டுக் கொண்டு, தமிழ் மொழிக்கே எதிராகச் செயல்படுவது கண்டிக்கத்தக்கது. தமிழர்களின் ஓட்டு இனிக்கிறது! ஆனால், தமிழ் மொழி மட்டும் கசக்கிறதா?
எனவே, புதுச்சேரி அரசின் இந்து சமய அறநிலையத்துறையும், திருக்கோயில் நிர்வாகமும், வரும் 27.01.2023 அன்று நடைபெறவுள்ள அருள்மிகு செல்வ விநாயகர் – ஜெயங்கொண்ட மாரியம்மன் திருக்கோயில் குடமுழுக்கை திட்டமிட்டபடி தமிழிலேயே நடத்த உரிய ஏற்பாடுகளைச் செய்ய வேண்டும்! இதைத் தடுக்க முற்படும் தமிழ் – தமிழர் விரோத சக்திகளை மக்களிடம் அம்பலப்படுத்தி, முழுவதுமாகப் புறக்கணிக்கச் செய்ய வேண்டும் என தெய்வத் தமிழ்ப் பேரவை சார்பில் கேட்டுக் கொள்கிறேன்.
================================
தெய்வத் தமிழ்ப் பேரவை
================================
முகநூல்: www.fb.com/theivathamizh
சுட்டுரை: www.twitter.com/TheivigaThamizh
பேச: 9841949462, 9443918095
================================
Labels: அறிக்கைகள், தமிழர்_ஆன்மீகம், தமிழர்_மெய்யியல்
0கருத்துக்கள்:
Post a Comment
<< முகப்பு பக்கம்