<body><script type="text/javascript"> function setAttributeOnload(object, attribute, val) { if(window.addEventListener) { window.addEventListener('load', function(){ object[attribute] = val; }, false); } else { window.attachEvent('onload', function(){ object[attribute] = val; }); } } </script> <div id="navbar-iframe-container"></div> <script type="text/javascript" src="https://apis.google.com/js/platform.js"></script> <script type="text/javascript"> gapi.load("gapi.iframes:gapi.iframes.style.bubble", function() { if (gapi.iframes && gapi.iframes.getContext) { gapi.iframes.getContext().openChild({ url: 'https://www.blogger.com/navbar/6955529389241309188?origin\x3dhttp://thozharmaniyarasan.blogspot.com', where: document.getElementById("navbar-iframe-container"), id: "navbar-iframe" }); } }); </script>

"தமிழ்க் குடமுழுக்கு கோரி தடையை மீறி பழனியில் ஆர்ப்பாட்டம்! ஆட்சியாளர்களை நோக்கி சில வினாக்கள்!"---- தெய்வத் தமிழ்ப் பேரவை ஒருங்கிணைப்பாளர் பெ. மணியரசன் அறிக்கை!

Saturday, February 25, 2023


தமிழ்க் குடமுழுக்கு கோரி

தடையை மீறி பழனியில் ஆர்ப்பாட்டம்!
ஆட்சியாளர்களை நோக்கி சில வினாக்கள்!
=======================================
தெய்வத் தமிழ்ப் பேரவை ஒருங்கிணைப்பாளர்
பெ. மணியரசன் அறிக்கை!
=================================================

பழனி முருகன் கோயில் திருக்குடமுழுக்கு 27.1.2023 அன்று நடைபெறும் போதும் அதற்கு முன்பும் பின்பும் நடைபெறும் வழிபாடுகளிலும், கோயில் கருவறை, வேள்விச் சாலை, கோபுரக் கலச நன்னீராட்டு முதலிய இடங்களில் முதல்பாதி தமிழ் மந்திரங்களையும் தமிழ் அர்ச்சகர்களையும் கொண்டு நடத்த வேண்டும் என்ற வேண்டுகோளை முன்வைத்து 20.01.2023 அன்று தெயவத் தமிழ்ப் பேரவை மற்றும் ஆன்மிக அமைப்புகள், அரசியல் இயக்கங்கள் பழனி நகர் மயில் சதுக்கத்தில் எழுச்சியுடன் ஆர்ப்பாட்டம் நடத்தின.

இந்த ஆர்ப்பாட்டம் அரசு விதித்த தடையை மீறித்தான் நடந்தது. பழனி காவல் துறை ஆய்வாளர் உதயகுமார் 19.1.2023 வியாழன் இரவு 10:15 மணிக்கு என்னிடம் தொலைபேசி வழியாக, “நாளை நடைபெறும் உங்கள் ஆர்ப்பாட்டத்திற்குத் தடை விதிக்குமாறு சென்னையிலிருந்து எங்களுக்கு செய்தி வந்துள்ளது. எனவே தடை விதிக்கிறோம்” என்றார். “காரணம் என்ன ஐயா”, என்றேன்.

பழனி குடமுழுக்கைத் தமிழில் நடத்தப் போவதாக அறநிலையத் துறை அமைச்சர் (சேகர்பாபு) கூறிவிட்டார். சட்டப்பேரவையிலும் இதைத் தெரிவித்துள்ளார். எனவே நீங்கள் இதற்காக ஆர்பாட்டம் நடத்தத் தேவை இல்லை என்றார். அதற்கு நான், “பழனி முருகன் கோயில் குடமுழுக்கு நிகழ்ச்சி நிரல் அழைப்பிழைப் பார்த்தேன் அதில் ஓதுவார்கள் திருமுறை மற்றும் முருக வணக்கப்பாடல்களை பாடுவது பற்றிதான் குறிப்பிடப்பட்டுள்ளது. கோயில் கருவறை-வேள்விச்சாலை-கோபுரக் கலசம் ஆகிய இடங்களில் தமிழ் மந்திரம் ஓதி நடத்துவது பற்றிக் குறிப்பிடப்படவில்லை என்றேன். “மதுரை உயர்நீதி மன்றம் தமிழில் குடமுழுக்கு நடத்தச் சொல்லி இருக்கிறது. அரசு அதை ஏற்றுக் கொண்டுள்ளது. அதன்படி தமிழில் குடமுழுக்கு நடக்கவில்லை என்றால் நீங்கள் அரசு மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்குப் போட்டுக் கொள்ளலாம் என்று அதிகாரிகள் சொல்கிறார்கள். “எனவே ஆர்ப்பாட்டதிற்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது” என்றார்.

தமிழ்க் குடமுழுக்கு கோரி ஒருநாள் உண்ணா நிலைப் போராட்டம் என்றுதான் முதலில் அறிவித்தோம். உண்ணாநிலை வேண்டாம் ஆர்ப்பாட்டம் நடத்திக் கொள்ளுங்கள் என்று காவல் துறை கூறியதை ஏற்று ஆர்ப்பாட்டமாக மாற்றினோம்.

இப்போது தடையை மீறி ஆர்ப்பாட்டம் நடத்துவது என்று தெய்வத் தமிழ்ப் பேரவை செயற்குழு முடிவு செய்தது. 20.01.2023 முற்பகல் கடும் வெய்யில்! துணிப்பந்தல் போட வந்தவர்களைக் காவல் துறையினர் தடுத்து விட்டனர். நாற்காலி போட வந்தவர்களைத் தடுத்துவிட்டனர். ஆனால் நாம் ஆர்ப்பாட்டம் நடத்துவோம்; காவல்துறை தளைப்படுத்தினால் கைதாவோம் என்று முடிவு செய்தோம்.

வழக்கம் போல் முழக்கங்களை வைகறை எழுப்பினார். இடி முழக்கம் போல் மக்கள் எதிரொலித்தனர். ஆண்கள் – பெண்கள் – இளையோர் – முதியோர் என 400 பேர் ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்றனர். அப்போது அந்த வழியாகச் சென்ற அறநிலையத் துறை அமைச்சர் சேகர்பாபு அவர்களும் பார்த்துக் கொண்டு சென்றிருப்பார்.

தமிழ் வேத ஆகமப் பாடசாலை நிறுவனர் சிம்மம் சத்தியபாமா அம்மையார் அவர்களும், காரனோடை பதினெண் சித்தர் பீடத் தலைவர் சித்தர் மூங்கிலடியார் அவர்களும், தமிழ் மந்திரம் ஓதி தீபம் ஏற்றி, ஆர்ப்பாட்டத் திடலில், முருகனுக்கு வழிபாடு நடத்தி மக்களுக்கு திருநீறு வழங்கினர். இராசயோக சித்தர் பீடம் வட குரு மடாதிபதி குச்சனூர் கிழார் அவர்கள் “களப்பிரர்களைக் கண்டவர்கள் தமிழர்கள்; அவர்கள் காணாமல் போனார்கள்; பல்லவர்களைப் பார்த்தவர்கள் தமிழர்கள் அவர்களும் காணாமல் போனார்கள். தமிழர்கள் வாழ்ந்து கொண்டுள்ளோம். தமிழும் வாழ்ந்து கொண்டுள்ளது. அதே போல் தமிழை மறுக்கும் ஆரியர்களும் தமிழை மறைக்கும் திராவிடர்களும் காணாமல் போவார்கள் என்று ஆவேசமாக முழங்கினார்.

தமிழ்த்தேசியப் பேரியக்கப் பொதுச் செயலாளர் தோழர் கி.வெங்கட்ராமன், நாம்தமிழர் கட்சியின் வீரத் தமிழர் முன்னணி தமிழ்நாடு ஒருங்கிணைப்பாளர் திரு சு.முருகேசன், ஆசீவக சமய நடுவம் நிறுவனர் நெல்லை கோ.ச.ஆசீவகச் சுடரொளி, கொங்கு மக்கள் முன்னணி தலைமை ஒருங்கிணைப்பாளர் திரு பழனி சி.ஆறுமகம், வீரத் தமிழர் முன்னணி ஒருங்கிணைப்பாளர் பேராசிரியர் துரை.செந்தில்நாதன், சிவநெறியாளர் சென்னை திரு. சிவ.வடிவேலன், பாட்டாளி மக்கள் கட்சி திண்டுக்கல் வடக்கு மாவட்டத் தலைவர் திரு.ஆ.வைரமுத்து, வள்ளலார் பணியகம் ஒருங்கிணைப்பாளர் தஞ்சை திரு.க.இராசமாணிக்கம், வெள்ளியங்கிரி மலை பாதுகாப்புச் சங்கத் தலைவர் முனைவர் செள.காமராசு, புதிய தலைமுறை மக்கள் கட்சி நிறுவனர் கோவை பா.கோபாலகிருட்டிணன், தமிழர் முன்னணி பொதுச்செயலாளர் திரு இமயம் சரவணன், வத்தலகுண்டு பதினெண் சித்தர் மடம் திரு கா. பொன்னுசாமி அடிகளார், தெய்வத் தமிழப் பேரவை செயற்குழு உறுப்பினர் வழக்கறிஞர் புதுவை சுபாசு சந்திரபோசு, தெய்வத்தமிழ்ப் பேரவை செயற்குழு உறுப்பினர் திருச்சி வே.பூ.இராமராசு உள்ளிட்டோர் ஆர்ப்பாட்டத்தில் முன்னிலை வகித்தனர். தமிழ்த் தேசியப் பேரியக்கத் துணைப் பொதுச் செயலாளரும் தெய்வத் தமிழப் பேரவை செயற்குழு உறுப்பினருமான திரு க.அருணபாரதி நிகழ்ச்சிகளை ஒருங்கிணைத்தார். தெய்வத் தமிழ்ப் பேரவை ஒருங்கிணைப்பாளர் பெ.மணியரசன் ஆர்ப்பாட்டத்திற்குத் தலைமை தாங்கினார்.

காவல்துறையினர் இருந்தார்கள், ஆனால் கைது செய்யவில்லை. பகல் 1:00 மணியளவில் ஆர்ப்பாட்டத்தை முடித்துக் கொண்டோம்.

ஆர்ப்பாட்டத்திற்கான முன் தயாரிப்புப் பணிகளில், சிம்மம் சத்தியபாமா அம்மையார் அவர்களின் பங்களிப்பு மிகப் பெரியது. அவர்கள் முதல் நாளே பழனி வந்து தங்கியதுடன், முன்கூட்டியே வருவோர்களுக்கு தங்குவதற்கான அறைகள் முதல்நாள் இரவே ஊர்திகளில் வரும் நூற்றுக் கணக்கான மக்கள் தங்குதற்கான கூடங்கள் – அனைவர்க்கும் உணவு ஏற்பாடு, மறுநாள் (20.1.2023) காலை உணவு வரை அம்மா சத்தியபாமா அவர்கள் தம் பொறுப்பில் செய்தார்.

ஆர்ப்பாட்டம் முடிந்த பின் 20.1.2023 பகல் உணவு அனைவர்க்கும் நாம் தமிழர் கட்சி தம்பிகள் ஏற்பாடு செய்தனர். அவர்கள் பல்வேறு முன் தயாரிப்புப் பணிகளைச் செய்தனர். நாம் தமிழர் கட்சி பழனி தொகுதி பொருளாளர் கரு.சிவபாலன், பொறுப்பாளர் மணிகண்டன் உள்ளிட்ட பலரும் முன் தயாரிப்புப் பணிகளில் ஈடுபட்டனர்.

தமிழ்க்கடவுள் பழனி முருகன் கோயில் குடமுழுக்கு வழிபாடுகள் அனைத்தும் தமிழ் மந்திரம் ஓதி நடத்திடக் கோரிய இந்த ஆர்ப்பாட்டத்திற்கானப் பங்கேற்பாளர்களை அழைத்துவருவதற்கு முன் முயற்சி எடுத்தோர், தமிழ்நாட்டின் பல பகுதிகளில் இருந்து வந்து பங்கேற்றோர், ஆர்ப்பாட்டத் தயாரிப்புப் பணிகளில் ஈடுபட்டோர் அனைவர்க்கும் தெய்வத் தமிழ்ப் பேரவை நெஞ்சு நிறைந்த பராட்டுகளைத் தெரிவித்துக் கொள்கிறது.

குடமுழுக்கு அரச்சனை மொழியாகக் கோயில் கருவறை அர்ச்சனை மொழியாக அன்னைத் தமிழ் அரங்கேறும் வரை நமது அறப்போராட்டம் – நமது உரிமைப் போராட்டம் தொடரும் என்பதை ஆட்சியாளர்களுக்குத் தெரிவிப்போம்.
==============================================
ஆட்சியாளர்களை நோக்கி சில வினாக்கள்!
==============================================
1. தெய்வத் தமிழ்ப் பேரவை செயற்குழு உறுப்பினர்கள் – அதன் ஒருங்கிணைப்பாளர் தலைமையில் 21.12.2022 அன்று சென்னையில், இந்து சமய அறநிலையத்துறை ஆணையர் திரு.குமரகுருபன் அவர்களிடம் நேரில் வேண்டுகோள் மனுக் கொடுத்து, பழனி முருகன் (தண்டாயுதபாணி) திருக்கோயில் குடமுழுக்கைத் தமிழ் மந்திரம் ஓதி நடத்துமாறு கேட்ட போது, அவர், இப்போது முடியாது இதற்காக ஒரு கமிட்டி போட்டுள்ளது அரசு, அதன் முடிவுகள் வந்த பிறகுதான் தமிழ்குடமுழுக்கு பற்றி பேச முடியும் என்று சொன்னார்.
ஆனால் அத்துறை அமைச்சர் சில நாட்களுக்கு பின்(12.01.2023) சட்டப்பேரவையிலும், பின்னர் வெளியிலும் தமிழ்வழியில் பழனிமுருகன் கோயில் குடமுழுக்கு நடக்கும் என்று கூறி வருகிறாரே – இவ்விருவர் கூற்றில் யார் கூறுவது உண்மை?
……
2. தமிழ் வழியில் குடமுழுக்கு நடைபெறும் என்று கூறும் சேகர் பாபு – கோயில் கருவறை, வேள்விச்சாலை கோபுரக் கலசம் ஆகிய இடங்களில் தமிழ் மந்திரம் ஓதி அர்ச்சனை செய்யப்படும் என்று நேரடியாக தெளிவாக கூற வில்லையே ஏன்?
…..
3. பழனி மலைக் கோயில் வேள்விக்காக (யாகசாலையில்) 90 குண்டங்கள் தயார் செய்துள்ளார்கள். இவற்றில் 2020 உயர்நீதிமன்ற தீர்ப்புப் படி 45 குண்டங்களில் முழுக்கத் தமிழ் மந்திர அரச்சனை செய்வோரை அமர்த்துவீர்களா?
மீதமுள்ள 45 குண்டங்களில் மட்டுமே சமற்கிருத மந்திரம் ஓதுவோரை அமர்த்துவீர்களா?
……
4. பழனி முருகன் கோயில் குடமுழுக்கு தமிழ் மந்திரம் ஓதி நடத்தப்பட ஆணை இட வேண்டும் என்று கரூர் வழக்கறிஞர் தமிழ் இராசேந்திரன் மதுரை உயர்நீதிமன்றத்தில் தொடுத்த வழக்கில், 19.1.2023 அன்று பேசிய அரசு வழக்கறிஞர் வீரா.கதிரவன், “பழனிமுருகன் கோயில் குடமுழுக்கில் வேத மந்திரத்தை தமிழில்தான் ஓத வேண்டும் என்று அரசுக்குத் தனிநபர்கள் அறிவுரை கூற வேண்டியது இல்லை” என்று ஆணவத்துடன் பேசியுள்ளார்.
தமிழ்நாட்டில் உள்ள ஒரு குடிமகன் அரசு தன் கடமையை நிறைவேற்றுவதற்கு ஆணை இடக்கோரி நீதிமன்றத்தில் வழக்குத் தொடுக்க உரிமை இல்லையா? வழக்குத் தொடுத்தவரை அவமதிக்கும் தொனியில் அரசு வழக்கறிஞர் பேசியது சட்டப்படி சரியா? சமூக நீதியின் படியும் சரியா? தமிழ்நாடு முதலமைச்சர் இது பற்றி என்ன கூறுகிறார்?
…….
5. அமைச்சர் சேகர் பாபு, “ஆகமப்படி குடமுழுக்கு நடக்கும்” என்று அடிக்கடி சொல்கிறார். அவர்கூறும் ஆகமத்தில் தமிழ் மந்திரம், சமற்கிருத மந்திரம் ஆகியவற்றைப் பயன்படுத்துவது பற்றி என்ன கூறியிருக்கிறது என்று ஒரு முறை கூட அவர் விளக்கம் சொல்லாதது ஏன்? இனிமேலாவது ஆகம விளக்கம் அளிப்பாரா சேகர்பாபு?
…….
6. கடந்த 23.1.2022 அன்று சென்னை வடபழனிமுருகன் கோயில் குடமுழுக்கு ஆகமப்படி நடந்தது என்று செய்தியாளர்களிடம் கூறினார் சேகர்பாபு. ஆனால் அங்கு தமிழ் மந்திரம் கோயில் கருவறை – வேள்விச் சாலை, கோபுரக் கலசம் மூன்று இடங்களிலும் ஓதப்படவில்லை. சமற்கிருதமே கோலோச்சியது. சமற்கிருத வழியில் நடக்கும் என்பதைத் தான் மறைமுகமாக ஆகமப்படி நடக்கும் என்று அறநிலையத்துறை அமைச்சர் கூறுகிறாரா?
……

================================
தெய்வத் தமிழ்ப் பேரவை
================================
முகநூல்: www.fb.com/theivathamizh
சுட்டுரை: www.twitter.com/TheivigaThamizh
பேச: 9841949462, 9443918095
================================

Labels: , , ,

"பழனி குடமுழுக்கு வேள்வியில் தமிழ் முழுக்கப் புறக்கணிப்பு தி.மு.க.ஆட்சியிலும் தமிழுக்கு எதிரான தீண்டாமை!"----பெ.மணியரசன் அறிக்கை (ஒருங்கிணைப்பாளர், தெய்வத் தமிழ்ப் பேரவை)


பழனி குடமுழுக்கு வேள்வியில்

தமிழ் முழுக்கப் புறக்கணிப்பு
தி.மு.க.ஆட்சியிலும் தமிழுக்கு எதிரான தீண்டாமை!
=================================================
பெ.மணியரசன் அறிக்கை
(ஒருங்கிணைப்பாளர், தெய்வத் தமிழ்ப் பேரவை)
=================================================

பழனி முருகன் திருக்கோயில் குடமுழுக்கு 27.01.2023 அன்று நடப்பதை ஒட்டி 24.1.2023 அன்று பழனிமலையில் வேள்வி சாலை தொடங்கப்பட்டது. வேள்விக் குண்டங்கள் 90லும் – பிராமண அர்ச்சகர்கள் மட்டுமே அமர்ந்து சமற்கிருதத்தில் மந்திரம் சொல்லிக் கொண்டுள்ளார்கள். உயர்நீதிமன்றத் தீர்ப்பின் படி, அந்தக் தொண்ணூறு குண்டங்களில் 45 குண்டங்கள் தமிழ் மந்திரம் சொல்லி அர்ச்சிப்போர் அமர்ந்து பூசைகள் செய்து கொண்டிருக்க வேண்டும். ஆனால் 90-இல் ஒன்றில் கூட தமிழ் மந்திரம் சொல்வோர் அமர்த்தப்படவில்லை; தமிழ் மந்திரம் இல்லை. அனைத்திலும் பிராமண அர்ச்சகர்கள் சமற்கிருத சுலோகங்களை மட்டுமே சொல்லிக் கொண்டுள்ளார்கள்.

வேள்விச் சாலைக்கு வெளியே சற்று தள்ளி ஓதுவார்கள் சிலரை வெறுந் திடலில் உட்கார வைத்து அவ்வப்போது பாட வைத்துள்ளார்கள். இந்த காட்சிகளை நேரில் பார்த்தவர்கள் படம் எடுத்து வலைத் தளங்களில் போட்டுள்ளார்கள்.

ஏற்கெனவே இருதடவை சென்னை உயர்நீதி மன்றத்தின் மதுரைக் கிளை தமிழ் பாதி சமற்கிருதம் பாதி என்ற அளவில் மந்திரங்கள் சொல்லி குடமுழுக்கு சார்ந்த அர்ச்சனைகளை – பூசைகளை செய்திட ஆணை இட்டுள்ளது. இப்போது பழனி தண்டாயுதபாணி சுவாமி திருக்கோயில் குடமுழுக்கை அதே போல் தமிழ்பாதி – சமற்கிருதம் பாதியாக நடத்த வேண்டும் என்று கடந்த 19.01.2023 அன்று கரூர் வழக்கறிஞர் இராசேந்திரன் தொடுத்த வழக்கில் மதுரை உயர்நீதிமன்றம் இடைக்கால வழிகாட்டல் வழங்கியது. அவ்வாறு செய்வதாக அரசு வழக்கறிஞர் நீதிமன்றத்தில் உறுதி கொடுத்தார், ஆனால் தமிழ்நாடு அரசின் இந்து சமய அறிநிலையத்துறை ஏற்பாட்டில் வேள்விக் குண்டத்தில் தமிழ் மந்திரம் ஓதாமல் சமற்கிருதத்திலேயே முழுக்க முழுக்க பூசை மந்திரங்களைச் சொல்லி வருகின்றார்கள்.

தமிழ்நாடு அரசு தொடர்ந்து நீதிமன்றத் தீர்ப்புகளைப் புறக்கணித்து அவமதித்து வருகிறது. பழனிமுருகன் கோயில் குடமுழுக்கு தமிழ் மந்திரம் ஓதி நடத்தப்படும் என்று அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு சொல்லி வந்தவை அனைத்தும் வெறும் பாசாங்கு; அவை போலியானவை என்பது இப்போது வெட்ட வெளிச்சமாகியுள்ளது.

திருக்கோயில்களில் தமிழுக்கும் தமிழ் அர்ச்சகர்களுக்கும் எதிரான தீண்டாமையைத் தொடர்ந்து கடைபிடிக்க சமற்கிருத பிராமண அரச்சகர்களுக்கு முழு வாய்ப்பு வசதிகளைத் தி.மு.க. அரசு உண்டாக்கித் தருகிறது.

அரசு அமைத்துள்ள ஆன்மிக வல்லுநர் குழுக்களில் உறுப்பினர்களாக உள்ள பேரூர் ஆதீனகர்த்தர், மு.பெ.சத்தியவேல்முருகனார் போன்றோர் கருவறை – வேள்விச்சாலை – கோபுரக் கலசம் ஆகிய இடங்களில் தமிழ்க்கிரியை மந்திரங்கள் சொல்லி அரச்சிக்கப் பலருக்குப் பயிற்சி கொடுத்துள்ளார்கள். நடைமுறையில் அவர்கள் முழுக்க முழுக்கத் தமிழ்க் குடமுழுக்கு நடத்தி வருகிறார்கள். எமது தெய்வத் தமிழ்ப் பேரவை ஆன்றோர்களும் நிறைய தமிழ்க் குடமுழுக்குகள் நடத்தி வருகிறார்கள்.

இந்த நிலையிலாவது முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், தமது அரசின் தமிழ் விரோத – தமிழ் அர்ச்சகர் விரோத நிலைபாட்டைக் கைவிட்டு, உயர்நீதிமன்றத்தீர்ப்பின்படி பழனி முருகன் கோயில் கருவறை – வேள்விச்சாலை – கோபுரக் கலசம் ஆகிய மூன்று இடங்களிலும் – சரிபாதியாகத் தமிழ் மந்திரம் ஓதி அர்ச்சனையை செயல்படுத்தி சமநீதி வழங்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்.

================================
தெய்வத் தமிழ்ப் பேரவை
================================
முகநூல்: www.fb.com/theivathamizh
சுட்டுரை: www.twitter.com/TheivigaThamizh
பேச: 9841949462, 9443918095
================================

Labels: , , ,

"ஈரோடு இடைத் தேர்தலில் ஆளுங்கட்சியினர் ஊழல் - வன்முறை வெறியாட்டம்!"---தமிழ்த்தேசியப் பேரியக்கத் தலைவர் பெ. மணியரசன் கண்டனம்!

Thursday, February 23, 2023

 


ஈரோடு இடைத் தேர்தலில் ஆளுங்கட்சியினர்

ஊழல் - வன்முறை வெறியாட்டம்!
===================================
தமிழ்த்தேசியப் பேரியக்கத் தலைவர்
பெ. மணியரசன் கண்டனம்!
===================================


ஈரோடு கிழக்கு சட்டப்பேரவைத் தோகுதி இடைத்தேர்தலில் ஆளுங்கட்சியான தி.மு.க.வின் அதிகார அராசகங்களும் வன்முறைகளும் அன்றாடம் விரிவடைந்து கொண்டே போகின்றன. இதனால் இங்கு இடைத்தேர்தல் 27.2.2023-இல் நடக்காமல் நிறுத்தி வைக்கப்படுமோ என்ற ஐயத்தை முதன்மையான செய்தி ஏடுகள் எழுப்பி வருகின்றன.

வாக்காளர்களை மண்டபங்களில் அடைத்து வைப்பது, பிணைக் கைதிகள் போல் பிடித்து வைக்கப்பட்டுள்ள வாக்காளர்களுக்கு தலா ஒரு நாளைக்கு ரூ. 500 முதல் 1000 வரை தருவது முதலிய சட்டவிரோத மற்றும் ஊழல் நடவடிக்கைகளின் முன்னோடியாக அத்தொகுதியில் ஆளுங்கட்சியான தி.மு.க. செயல்படுகிறது.

இவற்றின் அடுத்த கட்டப் பாய்ச்சலாக வன்முறையிலும் தி.மு.க.வினர் இறங்குகின்றனர். சாலை விரிவாக்கத்திற்காக கொட்டி வைக்கப்பட்டுள்ள சரளைக் கற்களை அருகில் உள்ள தி.மு.க.வினரின் வீட்டு மாடிகளில் கொண்டுபோய் சேமித்து வைத்துள்ளதாகவும் அங்கிருந்து எதிர்த் தரப்பினர் மீது கற்களால் தாக்குவதாகவும் ஊடகங்களில் செய்திகள் வருகின்றன.

ஆளுங் கட்சியின் இந்த வன்முறை அரசியலின் தொடர்ச்சியாகத்தான் நேற்று (22.2.2023) மாலை நாம் தமிழர் கட்சியினரைத் தி.மு.க.வினர் தாக்கி படுகாயப்படுத்தியுள்ளனர்.

நாம் தமிழர் கட்சி வேட்பாளர் மேனகா நவநீதனுக்கு வாக்குக் கேட்டுக் கொண்டு வீரப்பன் சத்திரம் பகுதியில் அக்கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அவர்களும் அக்கட்சியினர் ஆண்களும் பெண்களும் ஊர்வலமாக வந்த போது தி.மு.க.வினர் அவர்களை மறித்துத் தகராறு செய்துள்ளனர். வீட்டு மாடிகளில் இருந்து கற்களை வீசியுள்ளனர். இதனால் ஆண்களும் பெண்களுமாக 6 பேர் தலையில் காயம்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். காவல்துறையினரும் காயம்பட்டுள்ளனர். சில நாட்களுக்கு முன் நாம் தமிழர் கட்சியின் இரண்டாம் நிலைத் தலைவர்களில் ஒருவரான தோழர் அன்பு தென்னரசன் அவர்களை தி.மு.க.வினர் தாக்கி தலையில் படுகாயம் உண்டாக்கினர்.

ஈரோடு கிழக்குத் தொகுதி வாக்கு வேட்டைக்காக 30 அமைச்சர்களை தி.மு.க. தலைமை அனுப்பியிருப்பதாகக் கூறப்படுகிறது. குறிப்பாக அமைச்சர் செந்தில் பாலாஜியின் வழிகாட்டல்படிதான் “எல்லாம்” நடப்பதாகக் கூறப்படுகிறது.

அ.இ.அ.தி.மு.க. ஆட்சி காலத்தில் நடந்த இடைத் தேர்தல்களில், அக்கட்சி அமைச்சர்களும் பொறுப்பாளர்களும் செய்த சட்ட விரோதச் செயல்களைக் கடுமையாகக் கண்டித்து, “சனநாயக மாண்பு” பற்றி அறிவுரை வழங்கிய மு.க. ஸ்டாலின் - தமது ஆட்சியில் அமைச்சர்களும் இரண்டாம் நிலைத் தலைவர்களும் இவ்வளவு படுமோசமாக - சட்ட விரோதச் செயல்களில் ஈடுபடுவதற்கு என்ன விளக்கம் தருவார்?

தேர்தல்களில் பொதுவாக சனநாயகம் என்ற பெயரில் கள்ளச் சந்தை நடப்பது இங்கு வாடிக்கைதான் என்றாலும், இப்போது தி.மு.க. ஆட்சியில் - கள்ளச் சந்தையும் வன்முறையும் பன்மடங்கு பெருகி உள்ளன. புதுப்புது வடிவங்கள் எடுத்துள்ளன. ஆளுங்கட்சியின் இந்த வன்முறை வெறியாட்டத்தையும் ஊழல் செயல்பாடுகளையும் தமிழ்த்தேசியப் பேரியக்கதத்தின் சார்பில் வன்மையாகக் கண்டிக்கிறேன்.

================================
தலைமைச் செயலகம்,
தமிழ்த்தேசியப் பேரியக்கம்
================================
பேச: 9443918095, புலனம் : +91 98419 49462
முகநூல் : www.fb.com/tamizhdesiyam
ஊடகம் : www.kannottam.com
இணையம் : www.tamizhdesiyam.com
சுட்டுரை : www.twitter.com/tamizhdesiyam
காணொலிகள் : youtube.com/tamizhdesiyam

================================

Labels:

"ஈரோடு இடைத் தேர்தலில் ஆளுங்கட்சியினர் ஊழல் - வன்முறை வெறியாட்டம்!" ----- தமிழ்த்தேசியப் பேரியக்கத் தலைவர் பெ. மணியரசன் கண்டனம்!


===================================
ஈரோடு இடைத் தேர்தலில் ஆளுங்கட்சியினர்

ஊழல் - வன்முறை வெறியாட்டம்!
===================================
தமிழ்த்தேசியப் பேரியக்கத் தலைவர்
பெ. மணியரசன் கண்டனம்!
===================================


ஈரோடு கிழக்கு சட்டப்பேரவைத் தோகுதி இடைத்தேர்தலில் ஆளுங்கட்சியான தி.மு.க.வின் அதிகார அராசகங்களும் வன்முறைகளும் அன்றாடம் விரிவடைந்து கொண்டே போகின்றன. இதனால் இங்கு இடைத்தேர்தல் 27.2.2023-இல் நடக்காமல் நிறுத்தி வைக்கப்படுமோ என்ற ஐயத்தை முதன்மையான செய்தி ஏடுகள் எழுப்பி வருகின்றன.

வாக்காளர்களை மண்டபங்களில் அடைத்து வைப்பது, பிணைக் கைதிகள் போல் பிடித்து வைக்கப்பட்டுள்ள வாக்காளர்களுக்கு தலா ஒரு நாளைக்கு ரூ. 500 முதல் 1000 வரை தருவது முதலிய சட்டவிரோத மற்றும் ஊழல் நடவடிக்கைகளின் முன்னோடியாக அத்தொகுதியில் ஆளுங்கட்சியான தி.மு.க. செயல்படுகிறது.

இவற்றின் அடுத்த கட்டப் பாய்ச்சலாக வன்முறையிலும் தி.மு.க.வினர் இறங்குகின்றனர். சாலை விரிவாக்கத்திற்காக கொட்டி வைக்கப்பட்டுள்ள சரளைக் கற்களை அருகில் உள்ள தி.மு.க.வினரின் வீட்டு மாடிகளில் கொண்டுபோய் சேமித்து வைத்துள்ளதாகவும் அங்கிருந்து எதிர்த் தரப்பினர் மீது கற்களால் தாக்குவதாகவும் ஊடகங்களில் செய்திகள் வருகின்றன.

ஆளுங் கட்சியின் இந்த வன்முறை அரசியலின் தொடர்ச்சியாகத்தான் நேற்று (22.2.2023) மாலை நாம் தமிழர் கட்சியினரைத் தி.மு.க.வினர் தாக்கி படுகாயப்படுத்தியுள்ளனர்.

நாம் தமிழர் கட்சி வேட்பாளர் மேனகா நவநீதனுக்கு வாக்குக் கேட்டுக் கொண்டு வீரப்பன் சத்திரம் பகுதியில் அக்கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அவர்களும் அக்கட்சியினர் ஆண்களும் பெண்களும் ஊர்வலமாக வந்த போது தி.மு.க.வினர் அவர்களை மறித்துத் தகராறு செய்துள்ளனர். வீட்டு மாடிகளில் இருந்து கற்களை வீசியுள்ளனர். இதனால் ஆண்களும் பெண்களுமாக 6 பேர் தலையில் காயம்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். காவல்துறையினரும் காயம்பட்டுள்ளனர். சில நாட்களுக்கு முன் நாம் தமிழர் கட்சியின் இரண்டாம் நிலைத் தலைவர்களில் ஒருவரான தோழர் அன்பு தென்னரசன் அவர்களை தி.மு.க.வினர் தாக்கி தலையில் படுகாயம் உண்டாக்கினர்.

ஈரோடு கிழக்குத் தொகுதி வாக்கு வேட்டைக்காக 30 அமைச்சர்களை தி.மு.க. தலைமை அனுப்பியிருப்பதாகக் கூறப்படுகிறது. குறிப்பாக அமைச்சர் செந்தில் பாலாஜியின் வழிகாட்டல்படிதான் “எல்லாம்” நடப்பதாகக் கூறப்படுகிறது.

அ.இ.அ.தி.மு.க. ஆட்சி காலத்தில் நடந்த இடைத் தேர்தல்களில், அக்கட்சி அமைச்சர்களும் பொறுப்பாளர்களும் செய்த சட்ட விரோதச் செயல்களைக் கடுமையாகக் கண்டித்து, “சனநாயக மாண்பு” பற்றி அறிவுரை வழங்கிய மு.க. ஸ்டாலின் - தமது ஆட்சியில் அமைச்சர்களும் இரண்டாம் நிலைத் தலைவர்களும் இவ்வளவு படுமோசமாக - சட்ட விரோதச் செயல்களில் ஈடுபடுவதற்கு என்ன விளக்கம் தருவார்?

தேர்தல்களில் பொதுவாக சனநாயகம் என்ற பெயரில் கள்ளச் சந்தை நடப்பது இங்கு வாடிக்கைதான் என்றாலும், இப்போது தி.மு.க. ஆட்சியில் - கள்ளச் சந்தையும் வன்முறையும் பன்மடங்கு பெருகி உள்ளன. புதுப்புது வடிவங்கள் எடுத்துள்ளன. ஆளுங்கட்சியின் இந்த வன்முறை வெறியாட்டத்தையும் ஊழல் செயல்பாடுகளையும் தமிழ்த்தேசியப் பேரியக்கதத்தின் சார்பில் வன்மையாகக் கண்டிக்கிறேன்.

================================
தலைமைச் செயலகம்,
தமிழ்த்தேசியப் பேரியக்கம்
================================
பேச: 9443918095, புலனம் : +91 98419 49462
முகநூல் : www.fb.com/tamizhdesiyam
ஊடகம் : www.kannottam.com
இணையம் : www.tamizhdesiyam.com
சுட்டுரை : www.twitter.com/tamizhdesiyam
காணொலிகள் : youtube.com/tamizhdesiyam

================================ 

Labels: , ,

"தமிழ் மாணவர்களைத் தாக்கி தலைவர்களை இழிவுபடுத்திய ஆர்.எஸ்.எஸ். மாணவர்கள் மீது வழக்குப் பதிக!"---தமிழ்த்தேசியப் பேரியக்கத் தலைவர் பெ. மணியரசன் அறிக்கை!

Tuesday, February 21, 2023


தமிழ் மாணவர்களைத் தாக்கி

தலைவர்களை இழிவுபடுத்திய
ஆர்.எஸ்.எஸ். மாணவர்கள் மீது வழக்குப் பதிக!
=====================================
தமிழ்த்தேசியப் பேரியக்கத் தலைவர்
பெ. மணியரசன் அறிக்கை!
=====================================


தில்லி சவகர்லால் நேரு பல்கலைக் கழகத்தில் ஆர்எஸ்எஸ் மாணவர் அமைப்பான ஏபிவிபி யைச் சேர்ந்த மாணவர்கள், அங்கு படிக்கும் தமிழ்நாட்டு மாணவர்களைத தாக்கியதும் காயப்படுத்தியதும் மதவெறியுடன் கலந்த இனவெறிப் பாசிசத்தின் வன்முறை வெறியாட்டமாகும்.

“நூறு மலர்கள்” என்ற பெயரில் இயங்கும் மாணவர் அமைப்பைச் சேர்ந்த தமிழ்நாட்டு மாணவர்கள், அப்பல்கலையில் மாணவர்கள் நிகழ்ச்சிகள் நடத்தும் அரங்கில் சமூக நோக்கிலான ஒரு இந்திப் படத்தைத் திரையிட இருந்தபோது அங்கு வந்த ஏபிவிபி அமைப்பைச் சேர்ந்த மாணவர்கள் அங்கு மாட்டப்பட்டிருந்த பெரியார், காரல் மார்க்ஸ், லெனின் போன்ற தலைவர்களின் படங்களை கழற்றி உடைத்துள்ளனர். அவ்வெறிச் செயலைத் தடுத்த மாணவர்களை ஏபிவிபி மாணவர்கள் தாக்கியுள்ளனர்.

சவகர்லால் நேரு பல்கலைக் கழகத்தில் மருத்துவத்துறை ஆய்வு மாணவராக உள்ள “தமிழ் நாசர்” என்று அழைக்கப்படும் நாசர் முகமது மொய்தீனை இரும்புத் தடியால் தாக்கியுள்ளனர். அவருக்குத் தலையில் காயம் ஏற்பட்டுள்ளது. இளையகுமார் என்ற தமிழ் மாணவரையும் தாக்கியுள்ளனர். காயம் பட்டவரை மருத்துவமனைக்கு அழைத்துச் செல்ல ஆம்புலன்சில் ஏற்றியபோதும் ஏபிவிபி வன்முறையாளர்கள் தாக்கியுள்ளனர்.

மேற்கண்டவாறு வன்முறையில் ஈடுபட்ட ஏபிவிபி மாணவர்களைப் பல்கலை நிர்வாகம் உடனடியாக இடைநீக்கம் செய்ய வேண்டும். இந்தியத் தண்டனைச் சட்டப்படி அவர்கள் மீது காவல்துறை வழக்குப் பதிந்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மோடி அரசின் மோசமான குடியுரிமைத் திருத்தச் சட்டத்தை எதிர்த்து பல்கலைக் கழக வளாகத்துக்குள் ஆர்ப்பாட்டம் நடத்திய மாணவர்கள் மீதெல்லாம் நடவடிக்கை எடுத்து சிறையில் அடைத்த ஆட்சி இது! தமிழ் மாணவர்கள் ஏபிவிபி இந்தி மாணவர்களால் தாக்கப்படும்போது இந்திய அரசு கண்டு கொள்ளாமல் இருப்பது அந்த வன்முறைக்குத் துணை போவதுபோல் ஆகும்!

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் நடவடிக்கை கோரி பல்கலை நிர்வாகத்திற்கு வேண்டுகோள் வைப்பது மட்டும் போதாது. இந்திய அரசுக்கு அழுத்தம் கொடுக்க வேண்டும்.

தமிழ்நாட்டில் தமிழ் இன உணர்வற்ற அரசியல் மேலோங்கி இருப்பதால் தமிழர்களுக்கு வெளிமாநிலங்களில் மட்டுமல்ல தமிழ்நாட்டிலும் பாதுகாப்பில்லாத நிலை உள்ளது. அன்றாடம் தமிழர்கள் தாக்கப்படும் நிகழ்வுகள் பற்றிய செய்திகள் வந்து கொண்டுள்ளன. கட்சி கடந்து தமிழ் இன உணர்வு தமிழ்நாட்டில் வளர வேண்டும் என்பதை இங்குள்ள மக்கள் உணர வேண்டும்.

================================
தலைமைச் செயலகம்,
தமிழ்த்தேசியப் பேரியக்கம்
================================
பேச: 9443918095, புலனம் : +91 98419 49462
முகநூல் : www.fb.com/tamizhdesiyam
ஊடகம் : www.kannottam.com
இணையம் : www.tamizhdesiyam.com
சுட்டுரை : www.twitter.com/tamizhdesiyam
காணொலிகள் : youtube.com/tamizhdesiyam

================================ 

Labels: , ,


தோழர் மணியரசன்
அவர்களின் படைப்புகள் மற்றும் கருத்துக்களை இத்தளத்தில் காணலாம்.
வாசகர்களின் கருத்துக்களும் வரவேற்கப்படுகின்றன.

Web This Blog

தொகுப்பு

முந்தைய பதிவுகள்

தோழமைத் தளங்கள்