<body><script type="text/javascript"> function setAttributeOnload(object, attribute, val) { if(window.addEventListener) { window.addEventListener('load', function(){ object[attribute] = val; }, false); } else { window.attachEvent('onload', function(){ object[attribute] = val; }); } } </script> <div id="navbar-iframe-container"></div> <script type="text/javascript" src="https://apis.google.com/js/platform.js"></script> <script type="text/javascript"> gapi.load("gapi.iframes:gapi.iframes.style.bubble", function() { if (gapi.iframes && gapi.iframes.getContext) { gapi.iframes.getContext().openChild({ url: 'https://www.blogger.com/navbar/6955529389241309188?origin\x3dhttp://thozharmaniyarasan.blogspot.com', where: document.getElementById("navbar-iframe-container"), id: "navbar-iframe" }); } }); </script>

"மணிப்பூரில் பெருந்தீயைப் பற்ற வைத்தது பா.ச.க.வும், நீதிபதியும்!" --- ஐயா பெ. மணியரசன், தலைவர் – தமிழ்த்தேசியப் பேரியக்கம்

Tuesday, May 9, 2023

 


மணிப்பூரில் பெருந்தீயைப்

பற்ற வைத்தது பா.ச.க.வும், நீதிபதியும்!
===============================
பெ. மணியரசன்,
தலைவர் – தமிழ்த்தேசியப் பேரியக்கம்
===============================


மணிப்பூர் மாநிலம் கடந்த 3.5.2023-லிருந்து பற்றி எரிகிறது. இரு இனங்களுக்கு இடையே வன்முறை! மணிப்பூர் தலைநகர் இம்பால், அதை ஒட்டியுள்ள சமவெளிப் பகுதிகளில் மிகப் பெரும்பான்மையாய் வாழ்பவர்கள் பழங்குடி அல்லாத மெய்த்தி மக்கள். மலைப் பகுதிகளில் மிகப் பெரும்பான்மையாய் வாழ்பவர்கள் குக்கி பழங்குடி மக்கள். மற்ற சிறுசிறு பிரிவு பழங்குடிகளும் உண்டு. இப்பழங்குடிகள் 41 விழுக்காட்டினர். மெய்த்தி சமவெளி மக்கள் 54 விழுக்காட்டினர். இவர்களில் வெளித் தாயகங்களிருந்து குடியேறியவர்கள் கணிசமானோர்.

மோரே மலைப்பகுதியில் தமிழர்களும் வாழ்கிறார்கள். இவர்கள் மியான்மரிலிருந்து வந்து குடியேறியவர்கள். 1960களில் மியான்மரில் (பர்மாவில்) தமிழர்களைத் தாக்கிக் கொன்று, வணிக நிறுவனங்களைச் சூறையாடி, வீடுகளை எரித்து வேட்டையாடினர் பர்மிய ஆளும் இனத்தைச் சேர்ந்தவர்கள். அப்போது உயிர்காக்கப் புலம் பெயர்ந்து அருகில் உள்ள மணிப்பூர் மலை மண்டலத்தில் குடியேறினர் தமிழர்கள். குக்கி, மெய்த்தி மக்களுக்கு அடுத்த எண்ணிக்கையில் தமிழர்கள். மோரே மலைப் பகுதிகளில் வாழ்கிறார்கள்.

இந்தத் தமிழர்களின் வீடுகள் 42 மோரே மலைப் பகுதியில் எரிக்கப்பட்டு விட்டன என்கிறார் மோரே தமிழ்ச் சங்கத் தலைவர் சேகர். (நேர்காணல் ஏகலைவன், ராவணா வலையொளி).

குக்கி - மெய்த்தி இன மோதலில் நூற்றுக்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டுள்ளனர். ஏராளமான வீடுகள், வணிகக் கட்டிடங்கள் எரியூட்டப்பட்டன. இதில் அதிகம் பாதிக்கப்பட்டவர்கள் குக்கி மக்கள். மாநில அரசும், இந்தியப் படைத் துறையினரும் பல்வேறு இடங்களில் மக்களுக்கான பாதுகாப்பு முகாம்கள் அமைத்துள்ளன. அவற்றில் மாநில அரசு நடத்தும் முகாம்களில் குக்கி மக்களுக்கு உணவில்லை, தண்ணீர் இல்லை என்று கூறி இந்திய அரசு முகாம்களைத் தேடிப் போகிறார்கள்!

வெளி மாநிலங்களிலிருந்து வந்து மணிப்பூரில் உள்ள இந்திய அரசின் உயர்கல்வி நிறுவனங்களில் – மருத்துவம், பொறியியல், படிப்போரையும் மற்றவர்களையும் அந்தந்த மாநில அரசுகள் பாதுகாப்பாக அழைத்துக் கொண்டு போய்விட்டன. அண்டை மாநிலங்களான அசாம், மிசோரம், சிக்கிம் போன்றவை மட்டுமல்ல, தொலைவில் உள்ள மராட்டியம் போன்ற மாநிலங்களும் மணிப்பூரில் படிக்கும், - வசிக்கும்- தங்கள் இன மக்களை மீட்கும் பணியில் ஈடுபட்டுள்ளன. ஆனால், தமிழ்நாடு அரசு மட்டும் இன்று வரை (9.5.2023) கண்டு கொள்ளவில்லை.

தமிழ்நாட்டு மாணவர்களும் மற்றவர்களும் மணிப்பூரில் உள்ளார்கள் என்பது ஒரு பக்கம்! இன மோதலின், - எரியூட்டல் தாக்குதலின் – மையமாக உள்ள மோரே மலைப் பகுதிகளில் தமிழர்கள் 1960களிலிருந்து தாயகம் போல் வசித்து வருகிறார்கள். இவர்கள் 1960களில், பர்மிய ஆளும் இனவெறியர்களின் தீவைப்பு, சூறையாடல், படுகொலைகள் முதலியவற்றால் பாதிக்கட்பட்டு தப்பி ஓடிவந்த தமிழினத்தின் ஒரு பகுதியினர்.

மோதல், மெய்த்தி – குக்கி இனங்களுக்கிடையே என்றாலும், மோரே மலைப்பகுதியில் குக்கி இன மக்களோடு தமிழர்களும் வாழ்ந்துவருகிறார்கள். இவர்களின் 42 வீடுகள் எரிக்கப்பட்டு விட்டன என்று மோரே தமிழ்ச் சங்கத் தலைவர் சேகர் கூறுகிறார். (நேர்காணல், ஏகலைவன் – ராவணா தொலைக்கட்சி)

இந்நேர்காணலில், உங்களுக்கு ஏற்பட்டுள்ள இப்பாதிப்புகள் பற்றித் தமிழ்நாடு அரசு சார்பில் யாரும் விசாரித்தார்களா, உதவி செய்ய முன் வந்தார்களா என்று ஏகலைவன் கேட்ட கேள்விக்கு, “இல்லை“ என்று விடையிறுக்கிறார் தமிழ்சேகர்!

இங்கே இருப்பது திராவிட அரசு! இந்தியத் தலைமை அமைச்சர் பதவியை 2024 தேர்தலில் குறிவைத்துள்ள தலைமை! ”தமிழர்” என்ற ”இனக் குண்டுச் சட்டிக்குள்” சிக்காது; ஏனெனில் அதில் பதவிக் குதிரை ஓட்ட முடியாது.

இந்த இனக் கலவரம் ஏன் வெடித்தது? இதற்கும் தமிழ்நாடுதான் உடனடி காரணமாக இருக்கிறது. மணிப்பூர் உயர்நீதிமன்றத்தின் பொறுப்புத் தலைமை நீதிபதி திருவாளர் எம்.வி. முரளிதரன்; தமிழர். தமிழ்நாடு உயர்நீதிமன்றத்தில் நீதிபதியாகப் பணியாற்றியவர். இவர் மீது சில புகார்கள் எழுந்ததால், இவர் மணிப்பூர் உயர் நீதிமன்றத்துக்கு மாற்றப்பட்டார். மணிப்பூர் ஆளுநர் இல. கணேசன்; தமிழ்நாடு பா.ச.க.வின் முன்னாள் தலைவர். மணிப்பூரில் பா.ச.க. ஆட்சி! முதலமைச்சர் பீரேன் சிங்!

அம்மாநிலத்தில் ஏற்கெனவே தனிப் பெரும்பான்மையாய் உள்ள – பழங்குடி அல்லாத – பழங்குடிகளைவிட வாழ்க்கைத் தரம் மேம்பட்ட மெய்த்தி மக்களுக்கும் பழங்குடி குக்கி மக்களுக்கும் இடையே முட்டல் மோதல்! மேலாதிக்கம் செலுத்துவது மெய்த்தி இனம்! அவர்கள் இந்து மதம்! மலைவாழ் குக்கிகளும், மற்ற பழங்குடிப் பிரிவுகளும் கிறித்துவர்கள்!

இவ்விரண்டில் பா.ச.க. எந்தப் பக்கம் என்று கேட்க வேண்டுமா? நடுநிலையில் நிற்காது; மெய்த்தி பக்கம்தான் நிற்கிறது. நிற்பதோடல்லாமல், அவர்களின் ஆதரவைப் புதுப்பித்துக் கொண்டே இருப்பதற்காக அவர்களின் கோரிக்கைகளை ஏற்றது பா.ச.க.!

குக்கி மலைவாழ் மக்கள் உள்ள பழங்குடிப் பட்டியலில் தங்கள் இனத்தைச் சேர்க்க வேண்டும் என்றனர் மெய்த்தி தலைவர்கள்! அதற்கான குறுக்குவழி ஒன்றை உருவாக்கினார்கள் பா.ச.க.வினர். மணிப்பூர் உயர் நீதிமன்றத்தில் வழக்குப் போட்டு, மெய்த்தி மக்களைப் பழங்குடிப் பட்டியலில் சேர்க்க ஆணை இடுமாறு கோரினர்.

நீதிபதி முரளிதரன் சட்டம் படித்தவர்தாம்! இந்தியாவிலும் மணிப்பூரிலும் பா.ச.க. ஆட்சி! பா.ச.க. சார்பாளர்கள் கோருகிறார்கள், கொடுத்துவிடுவோம் என்று கருதிவிட்டார் போலும். அவர் பொறுப்பு - தலைமை நீதிபதி! அரசமைப்புச் சட்டம் தொடர்பான இச்சிக்கலில் இன்னொரு நீதிபதி கொண்ட அமர்வை உருவாக்கிக் கொள்வோம் என்று அவர் கருதவில்லை; அந்த இடைஞ்சல் ஏன் என்று நினைத்திருக்கலாம்! அவரே 27.3.2023 அன்று தீர்ப்பளித்துவிட்டார்.

‘மெய்த்தி சமூகத்தைப் பழங்குடிப் பட்டியலில் சேர்க்க வேண்டும் என்ற இக் கோரிக்கையை மாநில அரசு விரைவாக ஆழ்ந்து ஆராய வேண்டும். இத்தீர்ப்பின் நகல் கிடைத்த நான்கு வாரங்களுக்குள் முடிவு எடுக்க வேண்டும். பட்டியல் பழங்குடியில் மெய்த்தி மக்களைச் சேர்ப்பது குறித்த அறிக்கையை இந்திய அரசுக்கு அனுப்ப வேண்டும்’ என்றார் தமது தீர்ப்பில்.

இவ் வழக்கு உயர் நீதிமன்றத்தில் நடக்கும்போது மணிப்பூர் பா.ச.க. அரசு இக்கோரிக்கையை எதிர்க்கவில்லை. அரசமைப்பு உறுப்பு 342 ஐ சுட்டிக் காட்டி இதுபற்றி முடிவெடுக்க உயர் நீதிமன்றத்திற்கு அதிகாரம் இல்லை என்றும் கூறவில்லை. அமைதியாக இருந்து இவ்வாறான தீர்ப்பு வர ஒத்துழைத்தது.

பழங்குடி மக்களிடையே கொதிப்பும் கொந்தளிப்பும் ஏற்பட்டது.

பா.ச.க.வின் சட்டப் பேரவை உறுப்பினராகவும் மலை மண்டல நிர்வாகக் குழு தலைவராகவும் உள்ள தின்காங் லுங்க் என்பவர் இத்தீர்ப்புக்கு எதிராகப் பேசினார். ஊடகங்களில் அது வந்தது. அதே போல் பழங்குடி மாணவர் அமைப்பின் தலைவர் ஒருவரும் இத்தீர்ப்பை எதிர்த்துப் பேசினார்.

பழங்குடி அல்லாத மக்களைப் பழங்குடிகளாக மாற்றுகிறது இத்தீர்ப்பு என்று விமர்சித்தனர். இதனால் கொந்தளித்த நீதிபதி முரளிதரன், அவ்விருவரையும் தன் முன்னால் நேர்நிறுத்த வேண்டும் என்று மாநிலக் காவல்துறை தலைமை இயக்குநருக்கு ஆணைஇட்டார்.

இவரின் இந்த ஆணையை எதிர்த்து மேற்கண்ட இருவரும் உச்ச நீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்தார்கள்.

இதற்கிடையே, அனைத்து பழங்குடி மக்கள் சார்பாக 3.5.2023 அன்று இம்பாலில் மாபெரும் கண்டனப் பேரணி நடத்தினார்கள். அப்போது மெய்த்தி இனத்தார்க்கும் குக்கி இனத்தார்க்கும் இடையே மோதலும், கலகமும் மூண்டன. இருதரப்பு வீடுகளும் பற்றி எரிந்தன. மோரே மலைப்பகுதிக்கும் இச் சண்டை பரவியது. இன்றுவரை முற்றிலுமாக அமைதி திரும்பவில்லை. நூற்றுக்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டு விட்டார்கள். 200-க்கும் மேற்பட்டோர் படுகாயமுற்றுள்ளனர். கண்டதும் சுட ஆணை இடப்பட்டது. இந்தியப் படையினரும் இந்திய காவல் துறையினரும் இறக்கிவிடப்பட்டனர். பாதுகாப்பு முகாம்களில் கூட இனப்பாகுபாடு காட்டப்படுகிறது. குக்கி இன மக்களுக்கு உணவும் தண்ணீரும் கூட கிடைப்பதில்லை என்று அழுகிறார்கள். மாநில அரசு முகாமிலிருந்து இந்தியப் படை நடத்தும் முகாம்களுக்கு மாற்றுங்கள் என்று குக்கிகள் கோருகிறார்கள்.

மொத்தம் 30,50,000 மக்கள்தொகை கொண்ட சிறிய பழங்குடி மக்கள் மாநிலத்தில் புகுந்த பா.ச.க. அங்கு பெரும்பான்மையாய் – இந்துக்களாய் உள்ள மக்களைத் திரட்டிக் கொள்வதற்காக அம்மக்களுக்கு ஆசை காட்டி, பழங்குடிப் பட்டியலில் சேர்ப்பதாகப் பரப்புரை செய்தது. இவ்வளவு பெரிய வன்முறைகளுக்கும் உயிரிழப்புகளுக்கும் இந்தியப் படை தலையிட வேண்டிய நிலைமைக்கும் மூல காரணம் பா.ச.க.தான். அதற்குத் துணை போன நீதிபதி அடுத்த காரணம்!

ஆரியத்தின் அடிப்படைத் தத்துவமே வர்ணாசிரம தர்மம்! அதுவே அவர்களின் சனாதனம்! வர்ணாசிரமம் என்பது பிறப்பால் மக்களை மேல் - கீழ் என்று செயற்கையாகப் பிரிப்பது! இதனால் மக்களிடையே நிலவுகின்ற சாதி உயர்வு தாழ்வை – சாதிப் பிளவுகளைப் பயன்படுத்தித் தங்கள் தலைமையில் மக்களைத் திரட்டிக் கொள்வது என்பதுதான் எப்போதும் பா.ச.க. உத்தி!

நீதிபதிகளும் துணை போவது பெருந் தீவினை! உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதி டி.ஓய். சந்திரசூட் இது தொடர்பான வழக்கில் நேற்று (8.5.2023) இம்பால் உயர்நீதிமன்றத் தீர்ப்பு (27.3.2023) பற்றி சாட்டை அடி கொடுத்தார்.

இந்திய அரசமைப்பு உறுப்பு 342 தெளிவாக பழங்குடிமற்றும் பட்டியல் வகுப்பில் புதிதாகச் சாதிகளைச் சேர்க்கவோ, இருக்கும் சாதிகளை நீக்கவோ, மாற்றி அமைக்கவோ உயர் நீதிமன்றத்திற்கும் மாநில அரசுக்கும் அதிகாரம் இல்லை என்று கூறியுள்ளது. இந்திய குடியரசுத் தலைவருக்கும் நாடாளுமன்றத்திற்கும்தான் அவ்வதிகாரம் இருக்கிறது. அப்படி இருக்க, எப்படி இதுபோல் ஒரு தீர்ப்பு வரலாம்? மாநில அரசு அதை எதிர்க்காமல் இருப்பது என்ன நீதி என்று சீறினார்; ஏடுகளில் வந்துள்ளது.

இந்திய உள்துறை அமைச்சர் அமித் சா இத்தனை வன்முறைகளுக்கும், கொடுமைகளுக்கும் பிறகு, நேற்று தொலைக்காட்சி செய்தி ஒன்றில் பேசும்போது ”உயர்நீதிமன்றத் தீர்ப்பு பற்றி எல்லாத் தரப்பினரும் கலந்து பேசலாம்” என்கிறார்!

பா.ச.க.வின் குறி உச்ச நீதிமன்றத் தன்னாட்சியைத் தகர்ப்பதுதான். அதற்கான சட்டமோதலை சட்டத்துறை அமைச்சர், - பழங்குடி இனத்தைச் சேர்ந்த - ரிஜ்ஜூ மூலம் அன்றாடம் நிகழ்த்தி வருகிறது.

தமிழ்நாட்டில் மூன்று விழுக்காடளவில் உள்ள முன்னேறிய ”அவா”ளுக்குப் பத்து விழுக்காடு அளித்தது தானே பா.ச.க. அரசு!

=================================
தலைமைச் செயலகம்,
தமிழ்த்தேசியப் பேரியக்கம்
=================================
பேச: 9443918095, புலனம் : 9841949462
முகநூல் : www.fb.com/tamizhdesiyam
ஊடகம் : www.kannottam.com
இணையம் : www.tamizhdesiyam.com
சுட்டுரை : www.twitter.com/Tamizhdesiyam
காணொலிகள் : youtube.com/Tamizhdesiyam
=================================








Labels: , , ,

0கருத்துக்கள்:

Post a Comment

<< முகப்பு பக்கம்


தோழர் மணியரசன்
அவர்களின் படைப்புகள் மற்றும் கருத்துக்களை இத்தளத்தில் காணலாம்.
வாசகர்களின் கருத்துக்களும் வரவேற்கப்படுகின்றன.

Web This Blog

தொகுப்பு

முந்தைய பதிவுகள்

தோழமைத் தளங்கள்