<body><script type="text/javascript"> function setAttributeOnload(object, attribute, val) { if(window.addEventListener) { window.addEventListener('load', function(){ object[attribute] = val; }, false); } else { window.attachEvent('onload', function(){ object[attribute] = val; }); } } </script> <div id="navbar-iframe-container"></div> <script type="text/javascript" src="https://apis.google.com/js/platform.js"></script> <script type="text/javascript"> gapi.load("gapi.iframes:gapi.iframes.style.bubble", function() { if (gapi.iframes && gapi.iframes.getContext) { gapi.iframes.getContext().openChild({ url: 'https://www.blogger.com/navbar/6955529389241309188?origin\x3dhttp://thozharmaniyarasan.blogspot.com', where: document.getElementById("navbar-iframe-container"), id: "navbar-iframe" }); } }); </script>

"“மலையாள ஆலூக்காசே வெளியேறு!” தஞ்சையில் 9.3.2011 அன்று த.தே.பே. போராட்டம்! 120 பேர் சிறை சென்ற வழக்கை மதுரை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்தது!" ---- பெ. மணியரசன் தலைவர் - தமிழ்த்தேசியப் பேரியக்கம்.

Thursday, October 19, 2023


“மலையாள ஆலூக்காசே வெளியேறு!”

தஞ்சையில் 9.3.2011 அன்று த.தே.பே. போராட்டம்!
120 பேர் சிறை சென்ற வழக்கை
மதுரை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்தது!
======================================
பெ. மணியரசன்
தலைவர் - தமிழ்த்தேசியப் பேரியக்கம்
======================================


தமிழ்நாட்டில் உள்ள தொழில், வணிகம், வேலை, கல்வி முதலிய அனைத்திலும் அயல் மாநிலத்தார் ஆதிக்கம் கூடுதலாகி வருகிறது. சொந்த மண்ணிலேயே தமிழர்கள் அனாதைகளாய், அகதிகளாய்ப் புறக்கணிக்கப்படும் அநீதியை எதிர்த்துத் தமிழ்த்தேசியப் பேரியக்கம் தொடர்ந்து போராடி வருகிறது. மண்ணின் மக்களுக்கே தொழில், வணிகம், வேலை, கல்வி அனைத்தும் என்ற கோரிக்கை எழுப்பி வருகிறது.

மண்ணின் மக்கள் உரிமைக்கான இப்போராட்டங்களில் ஒன்றாக, தஞ்சாவூர் கீழ் அலங்கத்தில் உள்ள மலையாள ஆலுக்காஸ் நகை மாளிகையை வெளியேறக் கோரும் ஆர்ப்பாட்டம் கடந்த 9.3.2011 அன்று அக்கடை முன் நடந்தது. இந்தத் தமிழர் உரிமைப் போராட்டத்தில் தமிழ்நாட்டின் பல பகுதிகளில் இருந்து வந்த இன உணர்வாளர்கள் பங்கேற்றனர். அவர்களில், 120 பேரைக் காவல் துறையினர் தளைப்படுத்தி, திருச்சி நடுவண் சிறையில் அடைத்தார்கள். பல நாட்கள் சிறையிலிருந்த தோழர்கள் பின்னர் பிணை ஆணை பெற்று வெளியே வந்தனர்.

அதன்பிறகு, அவர்களுக்கு நீதிமன்றத்தில் நேர் நிற்பதற்கான அழைப்பாணை வரவே இல்லை. அவ்வாணையைத் தொடர்புடையவரிடம் கொடுத்து அதன் நகலில் காவல்துறையினர் அவரிடம் கையொப்பம் வாங்க வேண்டும். இக்கடமையைக் காவல்துறையினர் செய்யவில்லை. நீதிமன்றத்தில் வழக்கு நிலுவையில் இருக்கிறது, அவர்கள் வாய்தா போட்டுக் கொண்டுள்ளார்கள் என்ற செய்தி இந்த 120 பேரில் 114 பேர்க்குத் தெரியாது. தஞ்சை நகரத்தைச் சேர்ந்த – அறிமுகமான ஆறு தோழர்களிடம் மட்டும் அழைப்பாணை கொடுத்து நீதிமன்றம் வரச்சொல்லி இருக்கிறார்கள், காவல்துறையினர்!

அந்த ஆறு பேர்க்கு மட்டும் வழக்கைப் பிரித்து நடத்தி இருக்கிறார்கள். அவர்களை நீதிமன்றம் விடுதலை செய்து விட்டது. ஆனால் எஞ்சியுள்ள 114 பேர் பற்றிக் காவல்துறை துரும்பைக் கூட அசைக்கவில்லை. அவர்களுக்கும் தங்கள் பெயரில் தஞ்சை நீதிமன்றத்தில் வழக்கு நிலுவையில் உள்ளது என்ற செய்தி தெரியாது.

ஆனால், கடந்த ஆறு மாதங்களாக அந்த 114 பேரை நீதிமன்றம் வந்து பிணை எடுத்துக் கொள்ளச் சொல்லி ஒவ்வொரு ஊராகச் சென்று காவல்துறையினர் நெருக்கடி கொடுத்தனர். அந்த 114 பேரில் சில தோழர்கள் காலமாகிவிட்டார்கள். எஞ்சியவர்கள் ஓசூர், கோவை, சென்னை, கடலூர், சிதம்பரம், திருச்சி, வேதாரணியம் எனப் பல ஊர்களிலிருந்தும், தஞ்சை மாவட்டத்திலிருந்தும் வந்து தஞ்சை நீதிமன்றத்தில் நேர்நின்று பிணை பெற்றார்கள். அந்நீதிமன்ற நீதிபதி இளவரசி அவர்கள், ஈவிரக்கமின்றி, தாங்களாக முன்வந்து நேர்நின்ற ஒவ்வொரு தோழர்க்கும் ரூபாய் ஆயிரம் தண்டத்தொகை விதித்தும், வாராவாரம் திங்கட்கிழமை மாலை 5 மணிக்கு வந்து மேற்படி தஞ்சை நீதிமன்றத்தில் அந்த அம்மையாருக்கு முன் நேர்நின்று கையொப்பமிட வேண்டும் என்றும் கட்டளையிட்டார்.

இக்கொடுமைகளை நம் தோழர்கள் பல மாதங்களாகச் செயல்படுத்தி வந்தார்கள். சிதம்பரம், ஓசூர் தோழர்கள் 30 வாரம் திங்கட்கிழமை தோறும் கையெழுத்துப் போட வேண்டும் என்று காலவரம்பும் விதித்தார். எடுத்தேன், கவிதழ்தேன் இயல்புள்ளவராக நீதிபதி இளவரசி செயல்பட்டார். நல்ல வேளையாக அந்த அம்மையாரை ஊர்மாற்றிவிட்டார்கள். ஆனால் அந்த ஊர்க்காரர்களுக்குக் “கெட்ட வேளை” போலும்!

தமிழ்த்தேசியப் பேரியக்கத் தோழர் தஞ்சை வழக்கறிஞர் இரெ. சிவராசு அவர்கள் இலட்சியப் பற்றோடு இவ்வழக்கில் வாதாடி வந்தார். கட்டணமில்லாக் கட்சிப் பணியாகச் செய்கிறார்.

இவ்வாறு கொடுந்துயரத்தில் உழன்ற நம் தோழர்களுக்கு நேற்று (18.10.2023) விடுதலை வழங்கிவிட்டது சென்னை உயர் நீதிமன்ற மதுரை அமர்வு! இந்த நீதியை வழங்கியவர் நீதிபதி ஜி. இளங்கோவன் அவர்கள்.

குற்றவியல் நடைமுறைச் சட்ட விதிகளைப் பின்பற்றாமல், குற்றம் சாட்டப்பட்டவர்க்கு அழைப்பாணை கொடுக்காமல், பிடி ஆணை போட்டு நீதிமன்றம் கொண்டு வந்து அநீதி இழைக்கப்பட்டதை சுட்டிக்காட்டி மதுரை உயர் நீதிமன்ற மூத்த வழக்கறிஞர் மக்கள் உரிமை அக்கறையாளர் ஐயா அழகுமணி அவர்கள் இவ்வழக்கைத் தள்ளுபடி செய்யக் கோரிக் கட்டணமின்றி வழக்கு நடத்தினார். ஐயா அவர்களுக்கும், அவர் அலுவலக இளம் வழக்கறிஞர்களுக்கும் நெஞ்சு நிறைந்த நன்றி!

மதுரை உயர் நீதிமன்றத்தில் இவ்வழக்கைத் தொடுப்பதற்பான தொடர்புப் பணிகள் அனைத்தையும் தமிழ்த்தேசியப் பேரியக்கப் பொருளாளர் தோழர் அ. ஆனந்தன் அவர்கள் முன்னெடுத்தார்.

மலையாள ஆலுக்காஸ் போன்ற வெளியார் நிறுவனங்களை வெளியேற்றி, தமிழ்நாட்டுத் தொழிலும், வணிகமும் தமிழர்களுக்கு என்ற இனப்பற்றோடு இப்போராட்டத்தில் பங்கேற்ற தோழர்கள் – சிறை சென்ற தோழர்கள் – 12 ஆண்டுகளுக்குப் பிறகு பழிவாங்கும் நோக்கோடு, வழக்கிற்கு வாரம் தோறும் இழுத்தடித்தாலும், இது தமிழினத் தற்காப்புத் தொண்டு, தமிழ்த்தேசிய இலட்சியப் பணி என்ற உணர்வோடு எதிர்கொண்ட நம் தோழர்கள் அனைவர்க்கும் நெஞ்சு நெகிழ்ந்த பாராட்டுகள்! வரலாற்றில் தடம் பதித்துள்ளீர்கள் தோழர்களே!

===============================
தலைமைச் செயலகம்,
தமிழ்த்தேசியப் பேரியக்கம்
=================================
பேச: 9443918095, புலனம் : 9841949462
முகநூல் : www.fb.com/tamizhdesiyam
ஊடகம் : www.kannottam.com
இணையம் : www.tamizhdesiyam.com
சுட்டுரை : www.twitter.com/Tamizhdesiyam
காணொலிகள் : youtube.com/Tamizhdesiyam
================================= 

Labels: ,

"சென்னை சுங்கத்துறை வேலைகளுக்கான தேர்வில் மோசடி செய்தோரையும், இதற்குத் துணைபோன அனைவரையும் சிறையில் அடைக்க வேண்டும்!" ---- தமிழ்த்தேசியப் பேரியக்கத் தலைவர் பெ. மணியரசன் கோரிக்கை!

Sunday, October 15, 2023


சென்னை சுங்கத்துறை வேலைகளுக்கான தேர்வில் மோசடி செய்தோரையும், இதற்குத் துணைபோன அனைவரையும் சிறையில் அடைக்க வேண்டும்!

தமிழ்த்தேசியப் பேரியக்கத் தலைவர் பெ. மணியரசன் கோரிக்கை!
===============================================

சென்னையில் உள்ள இந்திய அரசின் சுங்கத்துறை அலுவலகத்திற்கு உணவக உதவியாளர், எழுத்தர், மகிழுந்து ஓட்டுநர், சமயலர் போன்ற பணியிடங்களுக்கு 17 பேரைத் தேர்வு செய்வதற்கான எழுத்துத் தேர்வு 14.10.2023 அன்று மேற்படி அலுவலகத்தில் நடந்துள்ளது. ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் இத் தேர்வை எழுதியுள்ளனர். அப்பொழுது, தேர்வு மண்டபத்தில் எலக்ட்ரானிக் கருவி வேலை செய்வது போன்ற ஒலியும், அறிகுறிகளும் தெரிந்திருக்கின்றன.

அத்தேர்வெழுதுவோரைக் கண்காணிப்பாளர்கள் சோதித்தபோது, 30 பேர் காதுகளில் ப்ளு-டூத்துகள் பொருத்தப்பட்டிருந்திருக்கின்றன. அவற்றைச் சோதித்தபோது வெளியிலிருந்து ஒருவர் இங்குள்ள வினாக்களுக்கு விடைகளைச் சொல்லிக் கொண்டிருப்பதும் தேர்வர்கள் அதைக் கேட்டு விடை எழுதிக் கொண்டிருப்பதும் கையும் களவுமாகப் பிடிக்கப்பட்டது.

இந்த 30 பேரில் 28 பேர் அரியானாக்காரர்கள், இரண்டு பேர் உத்திரப்பிரதேசக் காரர்கள் என்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்திய அரசுத்துறை சார்ந்த வேலைவாய்ப்புகளுக்கான தேர்வுகளில் தமிழ்நாட்டில் இந்திக்காரர்கள் மிகை எண்ணிக்கையில் தேர்ச்சி பெற்று வேலைகளில் சேர்க்கப்படுவது கடந்த பல ஆண்டுகளாக தொடர்ந்து கொண்டுள்ளது.

சில ஆண்டுகளுக்கு முன் இந்திக்காரர்கள் ஆள்மாறாட்டம் செய்தும், விடைத்தாள் தில்லுமுல்லுகள் செய்தும் சிக்கிக் கொண்டு திருச்சி துப்பாக்கித் தொழிற்சாலை, ஆவடி படைக்கலத் தொழிற்சாலைகள் போன்றவற்றில் வழக்குகள் பதியப்பெற்றுள்ள செய்திகளை நாடறியும். நான்கைந்து ஆண்டுகளுக்கு முன் தமிழ்நாட்டில் அஞ்சல் துறைக்கான வேலைவாய்ப்புத் தேர்வுகள் நடந்தபோது, தமிழ்த்தாளில் மொத்த மதிப்பெண் 25க்கு 25, 24, 23 என்று அரியானாக்காரர்கள் வாங்கியதும், தமிழ்நாட்டுத் தேர்வர்கள் மேற்படித் தாளில் 25க்குப் 17. 16 என்று வாங்கியதும் வெளிப்பட்டு, அத்தேர்வுகளில் நடந்த மோசடிகள் அம்பலமாயின.

அத்தேர்வு முடிவுகள் அறிவிக்கப்படாமல் நிறுத்தி வைக்கப்பட்டன. இது போல் கடந்த பல ஆண்டுகளாக தமிழ்நாட்டுக்கான இந்திய அரசுப் பணிகளில் இந்திக் காரர்கள் மோசடி செய்து வேலை பெற்று வருகிறார்கள்.

இதனால்தான் இந்திய அரசின் வருமான வரித்துறை, ஜிஎஸ்டி வரித்துறை, கணக்குத் தணிக்கைத் துறை, துறைமுகங்கள், வானூர்தி நிலையங்கள், தொடர்வண்டித்துறை, போன்ற அனைத்துத் துறைகளிலும் 100க்குத் 95 விழுகக்காடு வேலைகளை இந்திக்காரர்கள் கைப்பற்றிக் கொள்கிறார்கள்.

சில ஆண்டுகளுக்கு முன் தமிழ்நாடு அரசு தொழில்நநுட்பக் கல்லூரிகளில் (பாலிடெக்னிக்) ஆசிரியர் பணிக்கு நடந்த தேர்வில் நூற்றுக்கணக்கான இந்திக்காரர்கள் தேர்வில் வெற்றிபெற்று நேர்காணலுக்கு அழைக்கப்பட்டிருந்தனர். சென்னை தரமணியில் உள்ள தமிழ்நாடு அரசு தொழில் நுட்பக் கல்லூரி ( பாலிடெக்னிக்) யில் நடக்கவிருந்த அந்நேர்காணலை எதிர்த்து தமிழ்த்தேசியப் பேரியக்கம் அந்நேர்காணல் நடக்கும் இடத்திலேயே மறியல் போராட்டம் என்று அறிவித்தது. அதன் பின் குறிப்பிட்ட தேதியில் அந்நேர்காணல் நடத்தாமல்நிறுத்திவைக்கப்பட்டிருந்தது.

இந்த மோசடியில் இந்திய அரசின் உயர் பொறுப்பாளிகளுக்கும், அதிகாரிகளுக்கும் பங்கிருக்கிறது. தமிழ்நாட்டு வேலைகளை இந்திக்காரர்கள் கைப்பற்றிக் கொண்டு தமிழ்நாட்டை இன்னொரு இந்தி மாநிலமாக்கக் கூடிய திட்டத்தில் இம் மோசடிகள் நடக்கின்றன என்று தமிழ்த்தேசியப் பேரியக்கம் தொடர்ந்து குற்றம்சாட்டி போராட்டங்கள் நடத்தி வருகின்றது.

ஆனால் தமிழ்நாட்டில் மாநில ஆட்சியாளர்களோ, பெரிய கட்சிகளோ இந்த மோசடிகளைக் கண்டுகொள்ளவே இல்லை. தடுத்து நிறுத்த முன்வருவதில்லை. இக் குற்றச் செயல்களில் ஈடுபட்ட தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்களையும் வெளிமாநிலங்களைச் சேர்ந்தவர்களையும் சட்டப்படி தண்டிப்பதற்கான நடவடிக்கைகளை தமிழ்நாடு அரசு உரியவாறு எடுக்கவில்லை.

இந்த முறையாவது, சென்னை சுங்கத்துறை வேலைவாய்ப்புக்கான தேர்வில் மோசடி செய்து பிடிபட்டுள்ளவர்களின் மீதும், அவர்களுக்குத் துணைநின்றவர்கள் மீதும் கடும் நடவடிக்கை எடுத்துச் சிறையில் அடைக்க வேண்டும் என்றும், இத் தேர்வை செயலற்றதாக்கிட முன்வர வேண்டும் என்றும் தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களைத் தமிழ்த்தேசியப் பேரியக்கத்தின் சார்பில் கேட்டுக் கொள்கிறேன்.

தமிழ்நாட்டில் உள்ள இந்திய அரசுப் பணிகளில் முதல் நிலை அதிகாரிகள் பணிகளில் 10 விழுக்காடு மட்டுமே வெளிமாநிலத்தவருக்கு வழங்கலாம் என்றும், 90 விழுக்காடு பணிகள் மண்ணின் மக்களாகிய தமிழர்களுக்கே வழங்க வேண்டும் என்றும், இரண்டு, மூன்று, நான்காம் நிலைப் பணிகளில் 100 விழுக்காடு தமிழர்களுக்கே வழங்க வேண்டும் என்றும் சட்டம் இயற்றுமாறு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களைக் கேட்டுக் கொள்கிறேன்.
===============================
தலைமைச் செயலகம்,
தமிழ்த்தேசியப் பேரியக்கம்
=================================
பேச: 9443918095, புலனம் : 9841949462
முகநூல் : www.fb.com/tamizhdesiyam
ஊடகம் : www.kannottam.com
இணையம் : www.tamizhdesiyam.com
சுட்டுரை : www.twitter.com/Tamizhdesiyam
காணொலிகள் : youtube.com/Tamizhdesiyam
=============================

Labels: , , ,

"தொல்லியல் ஆய்வில் நிரந்தர ஒளிச்சுடராக ஆய்வாளர் ஒரிசா பாலு அவர்கள் விளங்குவார்!" --- பெ.மணியரசன், தலைவர், தமிழ்த்தேசியப் பேரியக்கம்.

Saturday, October 7, 2023

*தொல்லியல் ஆய்வில் நிரந்தர ஒளிச்சுடராக ஆய்வாளர் ஒரிசா பாலு அவர்கள் விளங்குவார்!*

==========================
*பெ.மணியரசன், தலைவர்*
தமிழ்த்தேசியப் பேரியக்கம்.
===========================


தமிழர் தொல்லியல் ஆய்வறிஞர் ஐயா ஒரிசா பாலு அவர்கள் 06.10.2023 அன்று மருத்துவமனையில் காலமான செய்தி பெரும் துயரம் அளிக்கிறது. தமிழுக்கும் தமிழருக்கும் பேரிழப்பு! தொல்லியல் ஆய்வில் மாறுபட்ட புதிய ஆய்வு முறையைத் தமிழ்நாட்டில் அறிமுகப்படுத்தி அதில் சாதனை படைத்தவர் ஒரிசா பாலு அவர்கள். அவர்களின் ஆய்வுச் சிறப்பில் முதன்மையானது தமிழர்களின் தொன்மைத் தாயகம் குமரிக் கண்டமே என்று நிறுவியதும், குமரிக் கண்டத்திலிருந்து பல்வேறு கண்டங்களுக்குத் தமிழர்கள் பழங்காலத்திலேயே பரவிச் சென்றதை நிறுவியதும் ஆகும்.

தமிழர்கள் பல்வேறு கண்டங்களுக்கு பரவி வாழ்ந்ததை கடல் ஆமைகளின் பயணத்தை வைத்து நிறுவினார். பல்வேறு நாடுகளில் வெவ்வேறு மொழிகளில் உள்ள சொற்கள் தமிழ்ச் சொற்களின் மூலத்திலிருந்து உருவானவை என்பதை மொழியியல் அடிப்படையிலும் நிறுவினார்.

தமிழ் மொழியின் மீதும் தமிழ் இனத்தின் மீதும் உள்ள பற்றினால் சுறுசுறுப்பாகத் தமிழ்நாடெங்கும் பல்வேறு கருத்தரங்குகளில் பங்கு பெற்று ஆய்வுரைகள் நிகழ்த்தினார். உடல் நோயுற்ற காலத்திலும் இப்பணிகளைத் தொடர்ந்தார். தமிழர் தொன்மையை ஆராய்ந்து அறிவதற்கான பயிற்சியை இளையோருக்கு அக்கறையுடன் கற்றுத் தந்த சான்றோராக விளங்கினார் ஒரிசா பாலு அவர்கள்.

மனித குலத்தின் மிகக் கொடிய நோயாக உள்ள புற்று நோயால் தாக்கப்பட்டு சிக்கிச்சை பெற்று வந்த காலத்திலும் அவர் தமது ஆய்வுப் பணியை நிறுத்தவில்லை. கருத்துரைகள் வழங்குவதையும் நிறுத்தவில்லை. அறுபது அகவையிலேயே அவருக்கு இறுதி நிலை வந்தது பேரிழப்பாகும்.

ஐயா ஒரிசா பாலு அவர்களுடன் கலந்து பேசி கருத்துப் பரிமாற்றங்கள் செய்துகொள்ளக் கூடிய நல்வாய்ப்புகளையும், ஐயங்களுக்கு அவருடன் பேசி தெளிவு பெறும் வாய்ப்புக்களையும் பெற்றிருந்தேன்.

ஆய்வறிஞர் ஒரிசா பாலு அவர்களுக்குத் துயரத்தோடு இறுதி வணக்கம் தெரிவித்துக் கொள்கிறேன். தமிழ்த்தேசியப் பேரியக்கத்தின் சார்பில் ஐயா அவர்களுக்கு புகழ் வணக்கம் செலுத்துகிறேன். தமிழர் தொல்லியல் ஆய்வில் ஒரிசா பாலு அவர்கள் நிரந்தர ஒளிச்சுடராக விளங்குவார் என்பதையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

================================
தலைமைச் செயலகம்,
தமிழ்த்தேசியப் பேரியக்கம்
=================================
பேச: 9443918095, புலனம் : 9841949462
முகநூல் : www.fb.com/tamizhdesiyam
ஊடகம் : www.kannottam.com
இணையம் : www.tamizhdesiyam.com
சுட்டுரை : www.twitter.com/Tamizhdesiyam
காணொலிகள் : youtube.com/Tamizhdesiyam
=================================
 

Labels: ,

Sunday, October 1, 2023


வாச்சாத்திக் குற்றவாளிகளைப் பாதுகாத்தவர் செயலலிதா!

உயர் நீதிமன்றம் அம்பலப்படுத்தியுள்ளது!
===============================================
தமிழ்த்தேசியப் பேரியக்கத் தலைவர்
ஐயா பெ. மணியரசன் அறிக்கை!
===============================================


வாச்சாத்தி வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட அனைவரையும், அதில் இப்போது உயிரோடுள்ள 215 அரசு ஊழியர்களையும் சென்னை உயர் நீதிமன்றம் தண்டித்திருக்கிறது.

இந்தத் தண்டனையை சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி பி. வேல்முருகன் அவர்கள் கொடுக்கவில்லை. தருமபுரி மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்ற நீதிபதி எஸ். குமரகுரு அவர்கள் 2011 செப்டம்பர் 29-ஆம் நாள் வனத்துறை, காவல்துறை, வருவாய்த்துறை அதிகாரிகள் - அலுவலர்கள் 215 பேர்க்குக் குற்றவாளிகள் என்று தண்டனை கொடுத்தார். இப்போது சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி பி. வேல்முருகன் முழுமையாக விசாரித்து, எதிர்த்தரப்பு வழக்கறிஞர்களை முழுமையாக வாதிட அனுமதித்து, வாச்சாத்தி கிராமத்திற்கு உரிய அதிகாரிகளை அழைத்துக் கொண்டு சென்று நேரில் கள ஆய்வு செய்து. மாவட்ட முதன்மை நீதிபதி கொடுத்த தீர்ப்பை உறுதி செய்துள்ளார். அவர் புதிதாகத் தண்டனை கொடுக்கவில்லை.

தருமபுரி மாவட்டம் அரூர் - பாப்பிரெட்டிப்பட்டி இடையே கல்வராயன் மலைத் தொடரின் அடிவாரப் பகுதியில் உள்ள கிராமம் வாச்சாத்தி. அம்மலைத் தொடரில் நிறைய சந்தன மரங்கள் உண்டு. அச்சந்தன மரங்களை வாச்சாத்தி மக்கள் திருட்டுத்தனமாக வெட்டித் தங்கள் வீடுகளில் வைத்துப் பின்னர் விற்று வருகிறார்கள் என்ற குற்றச்சாட்டு அதிகாரிகளால் கூறப்பட்டது. சந்தனக் கடத்தல் வீரப்பனுக்காக இவ்வாறு திருடுகிறார்கள் என்று அரசுத் தரப்பில் சொல்லப்பட்டது.

20.6.1992 அன்று வனத்துறையினர் 155 பேர், காவல்துறையினர் 108 பேர், வருவாய்த் துறையினர் 6 பேர் என மொத்தம் 269 பேர் வாச்சாத்தி கிராமத்தை முற்றுகையிட்டு, சோதனை என்ற பெயரில் வேட்டை யாடினர். 90 பெண்கள் உட்பட 133 பேரைக் கைது செய்தனர். அம்மக்கள் மீது கொடூரத் தாக்குதல் நடத்தினர். மலைவாழ் பழங்குடிப் பெண்கள் 18 பேரை பாலியல் வன்முறை செய்தனர். அவர்களின் வீடுகள் சூறையாடப் பட்டன. அரசுத் துறைகள் சார்ந்த இந்த வன்முறையாளர்களை வாச்சாத்திக்கு ஏவிவிட்டவர் அப்போதைய தமிழ்நாடு முதலமைச்சர் செயலலிதா! வாச்சாத்திப் பழங்குடி மக்கள் மீது செயலலிதா கட்டவிழ்த்துவிட்ட வேட்டையை மக்கள், கட்சிகடந்து கண்டனம் செய்தனர்.

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்டுக் கட்சியும் அக்கட்சியின் மலைவாழ் மக்கள் சங்கத்தின் அப்போதைய மாநிலச் செயலாளராக இருந்த தோழர் பெ. சண்முகம் அவர்களும் பாதிக்கப்பட்ட பழங்குடி மக்களுக்கு ஆதரவாகவும் அரசுத்துறை வன்முறையாளர்கள் மற்றும் வன்புணர்ச்சி யாளர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியும் தொடர் போராட்டங்கள்நடத்தினர்.

முதல்வர் செயலலிதா வருவாய்க் கோட்டாட்சியர் தலைமையில் விசாரணைக் குழு அமைத்தார். அது அம்மையாரின் விருப்பப்படி, வாச்சாத்தியில் வழக்கமாக சந்தனக் கடத்தல் செய்வோர் மீது நடவடிக்கை எடுக்கச் சென்ற அதிகாரிகள் மீது அவர்கள் வீண் பழி சுமத்துகிறார்கள் என்று 10.8.1992 அன்று அறிக்கை கொடுத்தது.

பாதிக்கப்பட்ட மக்கள் சார்பில் மாவட்ட முதன்மை அமர்வு நீதின்றத்தில் வழக்குப் போடப்பட்டது. சென்னை வழக்கறிஞர்கள் வைகை, என்.ஜி.ஆர். பிரசாத் உள்ளிட்டோரைக் கொண்ட 5 வழக்கறிஞர் குழு இவ்வழக்கை நடத்தியது.

பதின்மூன்று அகவைச் சிறுமி, 8 மாத கர்ப்பினி உட்பட பதினெட்டு இளம் பெண்களை அரசுத் துறையினர் இழுத்துச் சென்று ஏரிக்கரைக் காட்டுப்பக்கம் வன்புணர்ச்சி செய்தது மெய்ப்பிக்கப்பட்டது. மற்ற குற்றங்களும் மெய்ப்பிக்கப்பட்டன. தருமபுரி மாவட்ட முதன்மை அமர்வு நீதிபதி 12 பேருக்கு 10 ஆண்டு சிறை, 5 பேர்க்கு 7 ஆண்டு சிறை, மற்றவர்களுக்கு ஒன்று முதல் மூன்றாண்டுகள் சிறைத் தண்டனைகள் வழங்கினார்.

இந்த வழக்கை சென்னை உயர் நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்தனர். வழக்கை இந்திய அரசின் காவல் துறையான சிபிஐ நடத்தியது. பாதிக்கப்பட்டவர்களுக்காக உயர் நீதிமன்றத்தில் இந்திய அரசு வழக்கறிஞர் கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் ஆர்.எல். சுந்தரேசன் வாதிட்டார். சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி பி. வேல்முருகன் அவர்கள், பொறுப்புடனும் அக்கறையுடனும் விசாரித்தும், கள ஆய்வு செய்தும் 29.9.2023 அன்று அளித்த தீர்ப்பில், மாவட்ட நீதிமன்றம் அளித்த தண்டனைகளை உறுதிப்படுத்தினார். பாலியல் வன்முறையில் பாதிக்கப்பட்ட பெண்களுக்குத் தலா பத்துலட்சரூபாய் நிதிஉதவி செய்ய வேண்டும். அதில் 5 இலட்ச ரூபாயை அரசும், மீதி 5 இலட்ச ரூபாயைக் குற்றவாளிகளும் வழங்க வேண்டும் என்றார்.

“இந்த வழக்கில் தொடக்கத்திலிருந்தே குற்றச் செயலில் ஈடுபட்ட அதிகாரிகளையும் அரசு ஊழியர்களையும் பாதுகாக்க வேண்டும் என்ற நோக்த்துடன்தான் தமிழ்நாடு அரசு செயல்பட்டுள்ளது” என்று தீர்ப்பில் கூறியுள்ளார் நீதிபதி! அதனால்தான் 1992-இல் நடந்த குற்றச் செயல்களுக்கு 2023 செப்டம்பரில் தீர்ப்பு வரும் அவலம் ஏற்பட்டுள்ளது.

வாச்சாத்தி வன்கொடுமைக் குற்றவாளிகளை தண்டனையிலிருந்து தப்பிக்க வைப்பதற்கு அரசு அதிகாரத்தைத் தவறாகப் பயன்படுத்தியவர் அன்றைய முதல்வர் செயலலிதா என்பதை உயர் நீதிமன்றம் அம்பலப்படுத்தியுள்ளது.

இனி இதுபோல் ஆட்சியாளர்களால் - ஆதிக்க ஆற்றல்களால் நீண்ட கால தாமதம் ஏற்படாமல் தவிர்க்க, பழங்குடி மக்களுக்கும், பெண்களுக்கும் நீதி கிடைக்க இவர்களுக்கென்று தனித்தனியே மாவட்டத்திற்கு இரண்டு நீதிமன்றங்களை உருவாக்க வேண்டும்.

சிபிஎம் கட்சியும், மனித உரிமை ஆர்வலர்களும் உறுதியுடன் தொடர்ந்து முயலாவிட்டால் மேற்படி குற்றவாளிகள் எப்போதோ தப்பி அப்பாவிகள் ஆகியிருப்பர்! நீதிபதி பி. வேல் முருகன் பாராட்டுக்குரியவர்!

================================
தலைமைச் செயலகம்,
தமிழ்த்தேசியப் பேரியக்கம்
=================================
பேச: 9443918095, புலனம் : 9841949462
முகநூல் : www.fb.com/tamizhdesiyam
ஊடகம் : www.kannottam.com
இணையம் : www.tamizhdesiyam.com
சுட்டுரை : www.twitter.com/Tamizhdesiyam
காணொலிகள் : youtube.com/Tamizhdesiyam
=================================

Labels: , ,


தோழர் மணியரசன்
அவர்களின் படைப்புகள் மற்றும் கருத்துக்களை இத்தளத்தில் காணலாம்.
வாசகர்களின் கருத்துக்களும் வரவேற்கப்படுகின்றன.

Web This Blog

தொகுப்பு

முந்தைய பதிவுகள்

தோழமைத் தளங்கள்