"திருச்செந்தூர் பகுதியில் வெள்ளப் பாதிப்புகளை நேரில் பார்த்து, உதவிகள் வழங்கினோம்! அரசுக்குக் கோரிக்கைகள்!" ---- தமிழ்த்தேசியப் பேரியக்கத் தலைவர் பெ. மணியரசன் அறிக்கை!
Tuesday, December 26, 2023
திருச்செந்தூர் பகுதியில்
வெள்ளப் பாதிப்புகளை நேரில் பார்த்து, உதவிகள் வழங்கினோம்!
அரசுக்குக் கோரிக்கைகள்!
==========================================================
தமிழ்த்தேசியப் பேரியக்கத் தலைவர்
பெ. மணியரசன் அறிக்கை!

மிகை மழை, புயல், வெள்ளத்தைக் குறிக்க ‘வரலாறு காணாத‘ என்று முன் சொல் சேர்த்துக் கூறுவது வழக்கம். மெய்யாகவே வரலாறு காணாத பேய்மழையும், பெரு வெள்ளமும் தூத்துக்குடி, திருநெல்வேலி, தென்காசி, குமரி மாவட்டங்களில் பேரழிவை உண்டாக்கி விட்டன!
பாதிக்கப்பட்ட மக்களைப் பார்த்து ஆறுதல் கூறவும், சிறிய அளவில் பொருளுதவி செய்யவும் 23.12. 2023 பிற்பகல் 3:00 மணி அளவில் தூத்துக்குடி மாவட்டம், ஏரல் வட்டம் பகுதியிலுள்ள கிராமங்களுக்கு நேரில் சென்று, வெள்ளச் சேதங்களைப் பார்த்து மக்களுக்கு ஆறுதல் கூறினோம். பாதிக்கப்பட்ட மக்களுக்கு எங்களால் இயன்ற அளவு அரிசி, பருப்பு, மசால்பொடி முதலியவற்றை வீடு வீடாகச் சென்று கொடுத்தோம்.
என் தலைமையில், தமிழ்த் தேசிய பேரியக்கப் பொருளாளர் தோழர் அ. ஆனந்தன், துணைப் பொதுச் செயலாளர் க. அருணபாரதி, தலைமைச் செயற்குழு உறுப்பினர் ஏரல் வட்டம் குரும்பூர் தோழர் மு. தமிழ்மணி, மதுரை மாநகரச் செயலாளர் தோழர் கதிர்நிலவன், மதுரைத் தோழர்கள் மலையரசன், தமிழேந்தி, தஞ்சை மாவட்டச் செயற்குழு உறுப்பினர் தோழர் பி தென்னவன், ஏரல் வட்டத் தோழர்கள் உச்சிராசா, சிவா, விசயநாராயணப் பெருமாள், இராமசந்திரன் உள்ளிட்ட பல தோழர்கள் கலந்து கொண்ட குழுவினர் இப்பணிகளில் பங்கேற்றனர்.
பெரு வெள்ளத்தில் பாதிக்கப்பட்ட தமிழ்நாட்டு மக்களுக்குத் துயர் துடைப்பு உதவிகள் செய்ய வேண்டும் என்ற உயர்ந்த நோக்கத்துடன், ஸ்விஸ் நாட்டில் வாழும் ஈழத் தமிழர்களான பெரியவர் கணேஷ் குமார் அவர்களும், அவரின் இல்லத்தரசியாரும் நேரில் வந்து, வீடு வீடாகச் சென்று உதவிகள் வழங்கினர். அந்தப் பொருட்கள் வாங்குவதற்குரிய நிதியை அவர்கள் அளித்தனர். முதல் நாள் (23.12.2023) பணிகள் முடிந்ததும், மாலை 6:00 மணிக்கு மேல், அவர்களும் அருணபாரதியும் சென்னைக்குப் புறப்பட்டு சென்றுவிட்டனர். சென்னை புழல் பகுதியில் முகாம்களில் வசிக்கும் ஈழத் தமிழர்களுக்கு உதவுவதற்காகச் சென்றனர். மறு நாள் 24.12.2023 மாலை வரை, நாங்கள் பல ஊர்களுக்குச் சென்று பேரழிவுச் சேதங்களைப் பார்த்தோம்; உதவிகளை வழங்கினோம்.
ஏரல் வட்டம் சொக்கப்பழங்கரை, சேதுக்குவாய்த்தான், திருத்து, சோலியக் குறிச்சி, காரவிளை, மயிலோடை, அங்கமங்கலம் புதுகிராமம், பொறையூர் வண்ணார்விளை, சுல்லாம்பாறை ஆகிய கிராமங்களில் 600 குடும்பங்களுக்கு, - ஒரு வீட்டிற்கு இரண்டு கிலோ அரிசி, அரைக் கிலோ துவரம் பருப்பு, ஒரு பொட்டலம் மசாலா பொடி என வழங்கினோம். இறுதியாக, திருவைகுண்டம் புதுக்குடி கிராமத்தில் உள்ள சேதங்களை பார்த்து ஆறுதல் கூறினோம்.
தாமிரபரணி ஆற்றில்
அருகருகே மூன்று உடைப்புகள்!
===================================
சேதுக்குவாய்த்தான் ஊராட்சியில் உள்ள சொக்கப்பழங்கரை கிராமத்தில், தாமிரபரணியில், அடுத்தடுத்து மூன்று இடங்களில் கரை உடைத்து வெள்ளம் ஊருக்குள் புகுந்து அழித்த கொடுமைகளைப் பார்த்தோம். பல நூற்றாண்டுகள் முதுமை மிக்க பிரமாண்டமான மருத மரங்கள் வேரோடு வீழ்த்தப்பட்டு கிடந்தன. அந்த மரங்கள் தாமிரவருணியின் கொடும் சீற்றத்தத்தை மட்டுப்படுத்தவில்லை என்றால், பேரழிவுகள் இன்னும் அதிகமாக இருக்கும் என்றார்கள் ஊர்மக்கள். சொக்கப்பழங்கரை மட்டுமல்ல, அடுத்தடுத்த ஊர்களிலும் ஊரைக் காலி செய்து விட்டு, உயிர்காக்க வெளியே போய்த் தங்கிய மக்கள், பின்னர் வந்து வீடுகள் ஆங்காங்கே வீழ்ந்து நொறுங்கிக் கிடப்பதைக் கண்டு பதைத்தனர்.
நெஞ்சு வெடிக்கும் கொடிய செய்தி ஒன்றைக் காரவிளை மக்கள் சொன்னார்கள். தூத்துக்குடி மாவட்டம் நாசரேத் பகுதியில் இருந்து வேலைவாய்ப்புக்காக நேர்காணலுக்குச் சென்னை சென்று திரும்பிய இளைஞர்கள் நான்கு பேர், தூத்துக்குடி வரை வந்தவர்கள் அதற்கு மேல் செல்ல முடியாமல் வெள்ளத்தில் சிக்கிக் கொண்டார்கள். நடந்தும், வழியில் வந்த வண்டிகளில் ஏறியும் ஆத்தூரில் இருந்து மேற்கு நோக்கி குரும்பூர் போக நடந்திருக்கிறார்கள். காரவிளையைக் கடக்கும்போது, குரும்பூருக்கு முன்பாகவே, இரு கால்வாய்களின் கரை தெரியாமல் வெள்ளம் பாலங்களின் மேல் செல்கிறது. வேறு வழியின்றி, ஓடும் வெள்ளத்தில் சாலையை அனுமானித்து நடந்து போய் இருக்கிறார்கள். வெள்ளத்தின் வேகம் நால் வரையும் இழுத்துச்செல்கிறது! நான்கு நாள் கழித்துத்தான் - 23.12. 2023 அன்று காலையில்தான், இரண்டு பேர் தப்பித்தார்கள் என்பதும், இரண்டு பிணங்கள் கிடைத்தன என்பதும் தெரிந்தது.
கடம்பாகுளம் ஏரிக்கரை உடைப்பால் தாமிரபரணிப் பேரழிவு!
===================================
ஏரல் வட்டம், கல்லாம்பாறை கிராமத்திற்கு அருகே உள்ள கடம்பாகுளம் என்ற மாபெரும் ஏரியைப் போய்ப் பார்த்தோம். கல்லாம்பாறை உழவர் பெருமக்கள் கல்லைப்பெருமாள், இராசரத்தினம், ஜெயராமன், கர்ணன் உள்ளிட்ட பலர் வந்திருந்தனர்.
கடம்பாகுளம் ஏரி, 18 கிராமங்களுக்கும் 12 குளங்களுக்கும் தண்ணீர் தரும் மிகப் பெரும் நீர்த்தேக்கம்! ‘கடலில் பாதி கடம்பா குளம்‘ என்ற பழமொழி அச்சுற்று வட்டார மக்களிடையே புகழ் பெற்றது! பாசனத்திற்குத் தண்ணீர் திறந்து விட, 10 இடங்களில் மதகுகள் இருக்கின்றன. நாங்கள் பார்த்த இடம் ஒன்பதாவது இடத்தில் உள்ள மதகுகள்.
அதன் பக்கத்தில் மிகை நீரை வெளியேற்ற, குறைந்த உயரமுள்ள சுவர் உள்ளது. அதிகமாக வரும் மிகை நீரை வெளியேற்ற, புதிதாக நான்கு திறப்பான்கள் கொண்ட மதகுகளைக் கட்டி முடித்திருக்கிறார்கள். கடந்த ஆகத்து மாதமே (2023) கட்டுமானப் பணி முடிக்கப்பட்டுவிட்டது. ஆனால் அது இன்னும் செயல்படவில்லை என்றார்கள். இவ்வளவு மிகைநீர் குளத்தில் தேங்கித் ததும்பிய போதே அப்புதிய கண்மாய்களை திறந்துவிட்டு இருக்க வேண்டும். அதற்குத்தானே இந்த மறுகால் (வடிகால்) மதகுகள் என்று கேட்டேன்.
‘சில மாதங்களுக்கு முன் புதிதாகக் கட்டிய மதகுகளின் இரும்புப் பலகைகளை மேலே உயர்த்தி, திறந்துவிட முயற்சித்தார்கள். நான்கு பலகைகளையும் திருகி மேலேற்ற முடியவில்லை; அவை வேலை செய்ய வில்லை‘ என்றார்கள். வேலை முற்றிலும் முடிக்கப்பட்ட வடிகால் மதகுகள் நான்கு மாதங்களாகத் திறக்க முடியாமல் மூடிக்கிடக்கின்றன‘ என்று உழவர்கள் சொன்னார்கள். ஏன் அவற்றைச் சரி செய்ய முடியவில்லை? புதிதாகக் கட்டி முடிக்கப்பட்ட மதகுகள் திறக்க முடியாமல் கிடந்தால், அந்த வேலை என்ன தரத்தில் செய்து முடிக்கப்பட்டு இருக்கும்?
ஏற்கெனவே நாங்கள் பார்வையிட்ட அதே இடத்தில் எட்டு கண்மாய்கள் உள்ள பாசன மதகுகள் இருக்கின்றன. அவற்றைத் திறந்து தண்ணீர் அதிகரிப்பதை குறைத்தார்களா என்று கேட்டேன். ‘இல்லை, நாங்கள் போய் திறக்க முயன்ற போதும், காவல்துறையினரை அங்கு நிறுத்தி, திறக்க விடாமல் தடுத்து விட்டார்கள்‘ என்றார்கள் உழவர்கள்.
அடுத்து புதிதாக கட்டிய புதிய கலுங்கல் சுவர் மீது வெள்ளம் வழிந்து வெளியேறியதா என்று கேட்டேன். ‘ஏற்கெனவே இருந்த உயரத்தை விட இப்போது இரண்டு அடி உயரம் கூடுதலாகக் கட்டியுள்ளார்கள். அதனால் பழைய நிலை போல் மிகை வெள்ள நீர் அதிகமாக கலுங்கல் வழியே வெளியேறவில்லை‘ என்றார்கள்.
மேற்கண்ட தவறுகளால்தான், சீராக வழிய வேண்டிய வெள்ளநீர் வடியாமல் கடம்பாகுளம் கரையைக் ‘கன்னாபின்னா‘வென மூன்று இடங்களில் உடைத்துக்கொண்டு சீரற்ற முறையில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. அது தாமிரபரணியில் கலந்ததால், அந்த ஆறும் பல இடங்களில் உடைந்தது.
உயிர்ச் சேதம், பயிர்ச் சேதம், வாழைத் தோப்புகள் நாசம் எனப் பல அழிவுகள் ஏற்பட்டன. வேலை வாய்ப்புக்காகச் சென்று திரும்பிய இரு இளைஞரின் உயிரைப் பலி கொண்டதும், தந்தி தொலைக்காட்சி செய்தியாளரைப் பலி கொண்டதும் இந்த வெள்ளம் தான்!
கடம்பாகுளத்தின் மிகை வெள்ள நீரை வெளியேற்றத்தான் 34 கோடி ரூபாய் செலவில், நான்கு மணல் போக்கிகளுடன் புதிய வடிகால் மதகுகள், புதிய கலுங்கல், வெள்ள நீர் வெளியேற மறுகால் கால்வாய், அதற்கான பாலம் முதலிய கட்டமைப்புகள் உருவாக்கி முடிக்கப்பட்டுள்ளன. பழைய கலுங்கல் அப்படியே இருந்திருந்தால் கூட, மிகைநீர் படிப்படியாக வெளியேறி இருக்கும். புதிய வடிகால் மதகுகள் செயல்படாத நிலையில் பழைய பாசன மதகுகள் வழியாக சீராக, தண்ணீரை வெளியேற்றி இருக்கலாமே? அதையும் காவல்துறையினரை வைத்து முற்றிலும் தடுத்ததேன்?
‘தூத்துக்குடி அருகே ஆறுமுகநேரியில் செயல்பட்டுவரும் தனியார் துறையைச் சேர்ந்த தாரங்கதாரா கெமிகல் ஒர்க்ஸ் (DCW) என்ற நிறுவனத்திற்குக் கடம்பா குளத்தில் புதிதாகக் கட்டப்பட்டுள்ள மிகை நீர் வடிகால் மதகுகள் வழியாக, ஆண்டு முழுவதும் தண்ணீர் கொண்டுபோக அரசுடன் உடன்பாடு ஏற்பட்டிருப்பதாகவும், அதற்காகத் தண்ணீரைச் சேமிக்க வேண்டும் என்ற நோக்கில்தான், மிகை வெள்ளம் வந்தபோது கூட, பாசன மதகுகளையும் வடிகால் மதகுகளையும் திறக்காமல் பூட்டி வைத்துள்ளார்கள்; அதற்காகக் காவல்துறையினரையும் காவல் போட்டுவிட்டார்கள்‘ என்று உழவர்பெருமக்கள் ஒரே குரலில் சொன்னார்கள்.
இவ்வளவு மிகை நீர் நிரம்பி வெளியேறிய கடம்பாகுளத்தில், வேளாண் பாசனத்திற்கு ஒரு சொட்டுத் தண்ணீர்கூட இப்போது இல்லை என்ற கொடுமையையும் ஆட்சியாளர்கள் பார்க்க வேண்டும்.
===================================
1. உழவர் பெருமக்கள் கூறியுள்ள மேற்கண்ட தவறுகள் அனைத்தும் நடக்கக் காரணம் என்ன? யார் யார் இந்த தவறுகளுக்குப் பொறுப்பாளிகள்- மேலிருந்து கீழ்வரை யார் யார், என்பதைக் கண்டறிந்து அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க, நடுநிலையுள்ள – ஓய்வுபெற்ற சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி ஒருவர் தலைமையில், ஒரு விசாரணைக் குழு உடனடியாக அமைக்க வேண்டும். அது இரண்டு மாதங்களுக்குள் தனது ஆய்வு அறிக்கையை அரசுக்கு அளிக்க கால வரம்பு விதிக்க வேண்டும்.
2. தாமிரபரணி மற்றும் கடம்பாகுளம் உடைப்பால், சேற்றுமண் பல அடி உயரம் உறைந்துள்ள வயல்களில் அவற்றை அகற்றி, சாகுபடிக்குத் தகுந்தவையாக மறு உருவாக்கம் செய்ய, உழவர்களுக்குப் பொருளாதார வலிமை இல்லை. தமிழ்நாடு அரசு, தானே களத்தில் இறங்கி அப் பணியை முடித்து தர வேண்டும்.
3. நஞ்சை சாகுபடி இழப்பிற்கு ஒரு ஏக்கருக்கு ரூபாய் 40,000 உழவர்களுக்கு அரசு வழங்க வேண்டும். புஞ்சை சாகுபடி இழப்பிற்கு ஒரு ஏக்கருக்கு ₹25,000 அரசு வழங்க வேண்டும்.
4. வணிகர்களுக்கு வட்டி இல்லாமல், சுலபத் தவணைகளில் திருப்பிச் செலுத்தக்கூடிய கடன்களை, அரசு வங்கிகள் மூலம் கொடுக்க வேண்டும்.
5. வீடுகளை இழந்த ஏழைகளுக்கு இலவசமாக வீடுகள் கட்டித் தர வேண்டும்; மற்றவர்களுக்கு வட்டி இல்லாமல், சுலபத் தவணையில் செலுத்தக் கூடிய வகையில், அரசு வங்கிகளில் வீட்டுக் கடன்கள் வழங்க வேண்டும்.
தமிழ்நாடு அரசும் இந்திய அரசும் இணைந்து, மேற்கண்ட கோரிக்கைகளை நிறைவேற்றிட, தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் உரிய முயற்சிகளை உடனடியாக எடுக்க வேண்டும்.
===============================
தலைமைச் செயலகம்,
தமிழ்த்தேசியப் பேரியக்கம்
=================================
பேச: 9443918095, புலனம் : 9841949462
முகநூல் : www.fb.com/tamizhdesiyam
ஊடகம் : www.kannottam.com
இணையம் : www.tamizhdesiyam.com
சுட்டுரை : www.twitter.com/Tamizhdesiyam
காணொலிகள் : youtube.com/Tamizhdesiyam

Labels: அறிக்கைகள், பேரிடர்