"மனித உரிமைச் செயல்பாட்டாளர் மகபூப் பாட்சா அவர்கள் மறைவு. பெருந்துயரம் !" --- பெ.மணியரசன்,தலைவர், தமிழ்த்தேசியப் பேரியக்கம்.
Thursday, February 15, 2024
மனித உரிமைச் செயல்பாட்டாளர் மகபூப் பாட்சா அவர்கள் மறைவு.
பெருந்துயரம் !
============================================================பெ.மணியரசன்,
தலைவர், தமிழ்த்தேசியப் பேரியக்கம்
நாள்: 15.02.2024
===========================
குடிமை உரிமைப் பாதுகாப்பில் துடிப்புடன் களப்பணிகள் ஆற்றிய மனித உரிமைச் செயற்பாட்டாளர் ஐயா அ.மகபூப் பாட்சா அவர்கள் நேற்று 14.02.2024 அன்று சென்னையில் காலமான செய்தி பெரும் துயரம் அளிக்கிறது. உடல் நலம் பாதிக்கப்பட்டு, சென்னை மருத்துவ மனையில் சிகிச்சை பெற்று வந்தார். இன்று (15.02.2024) பிற்பகல் அவரின் நல்லடக்கம் நடைபெறுகிறது.
மனித உரிமையில் அக்கறை உள்ள மகபூப் பாட்சா அவர்கள் உச்சநீதிமன்ற நீதிபதிகள் வி.ஆர்.கிருஷ்ணய்யர், பி.என்.பகவதி ஆகியோர் வழங்கிய மனித உரிமை சார்ந்த தீர்ப்புகளால் ஈர்க்கப்பட்டு அவர்களுடன் தொடர்பு கொண்டிருந்தார்.
பழங்குடி மக்கள், பெண்கள், ஏழை எளிய உழவர்கள், அமைப்பு சாரா தொழிலாளர்கள் முதலியவர்களின் உரிமைகளைக் காப்பாற்றவும் மீட்கவும் களப்பணிகள் ஆற்றியவர் மகபூப் பாட்சா!
திருவில்லிப்புத்தூர் செண்பகத் தோப்புப் பகுதியில் பழங்குடி மக்களான “பளியர்கள்”, கொத்தடிமைகளாக வேளாண் பண்ணைகளில் வேலை செய்து வந்தனர். அவர்களைக் கொத்தடிமையிலிருந்து விடுவிக்க அன்றைய உச்சநீதிமன்ற நீதிபதி பி.என்.பகவதி அவர்கட்குத் தந்தி கொடுத்து வழக்கு எடுக்கச் செய்தார். அவர்களை உச்சநீதிமன்றம் விடுவித்தது.
குடிமை உரிமைகள் மீட்கும் பணிகளுக்காகவே மதுரையில் 1982-இல் சோகோ அறக்கட்டளை தொடங்கினார். மகபூப் பாட்சா அவர்களும் மற்றும் அறக் கட்டளை நண்பர்களும் மதுரையில் நீதிபதி வி.ஆர்.கிருஷ்ணய்யர் பெயரில் பெரிய கூட்ட அரங்கமும் அலுவலகமும் எழுப்பினர். காவல்துறை வெளி இடங்களில் அனுமதி மறுத்த கூட்டங்கள் கிருஷ்ணய்யர் அரங்கில் நடைபெறும்.
கடந்த ஆண்டு தெய்வத் தமிழ்ப் பேரவையின் முழுநாள் மாநாட்டை மேற்படி கிருஷ்ணய்யர் அரங்கில் நடத்தினோம். முழு மாநாட்டிலும் பார்வையாளராகக் அவர் கலந்து கொண்டு முடிவில் பாராட்டினார்.
ஒவ்வொருவருக்கும் தனி வாழ்வில் மத உரிமை உண்டு. அதே வேளை பொது வாழ்வில் அனைவரும் மதப்பாகுபாடு இல்லாமல் வாழ வேண்டும் என்ற கொள்கை உடையவர் மகபூப்பாட்சா! நானும் மதுரைத் தோழர்களும் அவரை சந்திக்கும் பொழுதுதெல்லாம் எங்களிடம் முழுமையான அன்பை வெளிப்படுத்துவார்.
இன்னும் வாழ்ந்து மக்களுக்குப் பணியாற்ற வேண்டிய நடுத்தர அகவையில் ஐயா மகபூப் பாட்சா அவர்கள் மறைந்தது பெருந்துயரம்! அவர் பிள்ளைகளுக்கும் இல்லத்தாருக்கும் தமிழ்த்தேசியப் பேரியக்கத்தின் சார்பில் ஆறுதலைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
===============================
தலைமைச் செயலகம்,
தமிழ்த்தேசியப் பேரியக்கம்
=================================
பேச: 9443918095, புலனம் : 9841949462
முகநூல் : www.fb.com/tamizhdesiyam
ஊடகம் : www.kannottam.com
இணையம் : www.tamizhdesiyam.com
சுட்டுரை : www.twitter.com/Tamizhdesiyam
காணொலிகள் : youtube.com/Tamizhdesiyam
=================================
Labels: அறிக்கைகள், இரங்கல், இரங்கல்!
0கருத்துக்கள்:
Post a Comment
<< முகப்பு பக்கம்