"திருத்துறைப்பூண்டி தோழர் தை.செ. அவர்களுக்கு வீரவணக்கம்!" -- தமிழ்த்தேசியப் பேரியக்கத் தலைவர் பெ. மணியரசன் அறிக்கை!
Thursday, November 21, 2024
திருத்துறைப்பூண்டி தோழர் தை.செ.அவர்களுக்கு வீரவணக்கம்!
==============================
தமிழ்த்தேசியப் பேரியக்கத் தலைவர்
பெ. மணியரசன் அறிக்கை!
==============================
திருத்துறைப்பூண்டி தண்டலைச்சேரியைச் சேர்ந்த அன்புத்தோழர் தை. செயபால் அவர்கள், இன்று (21.11.2024, வியாழக்கிழமை) காலை 5 மணியளவில் காலமாகிவிட்டார் என்ற துயரச் செய்தி, என்னைப் பெருந்துயரத்தில் ஆழ்த்தியது.
1970களின் தொடக்கத்தில் தஞ்சை சரபோஜி அரசுக் கலைக் கல்லூரியில் தோழர் தை. செயபால், இளங்கலைப் பட்டப்படிப்பு படித்துக் கொண்டிருந்தபோது, சி.பி.எம். கட்சியின் மாணவர் அமைப்புப் பொறுப்பாளராகச் செயல்பட்ட எனக்கு அவருடன் தோழமை ஏற்பட்டது. சி.பி.எம். கட்சியில் செயல்பட்டோம். பின்னர் அவர் இந்து சமய அறநிலையத்துறையில் செயல் அலுவலராகப் பணியாற்றினார். அப்போதும் தோழமை தொடர்ந்தது.
சி.பி.எம். கட்சியை விட்டு விலகி, தனி அமைப்பு – தமிழ்த்தேசப் பொதுவுடைமைக் கட்சி தொடங்கிச் செயல்பட்டபோதும், எங்கள் தோழமை தொடர்ந்தது. அரசியல் புரிதல் எங்களுக்குள் ஒன்றாக இருந்ததால், அவர் பணி நிறைவு பெற்ற பின், தமிழ்த்தேசியப் பேரியக்கத்தில் இணைந்து, தலைமைச் செயற்குழுவில் உறுப்பினராக இருந்து, முழுநேரமாகச் செயல்பட்டார். புதிய தோழர்களை இயக்கத்தில் இணைக்கும் ஆற்றல் பெற்றவர்.
மனித சமநிலைக் கொள்கை, தமிழ்த்தேசியம் இரண்டிலும் ஆழமான பிடிப்புக் கொண்டவர் தோழர் தை.செ. 2018இல் கஜா புயல் தாக்கியபோது, மக்களின் துயர் துடைப்புப் பணிகளில் சிறப்பாகச் செயல்பட்டார். அவரது இல்லத்தையே முகாம் போல மாற்றினார்.
அண்மையில்தான், அப்பகுதியின் மூத்த முன்னோடித்தோழர் இரா.கோ. (பாங்கல் இரா. கோவிந்தசாமி) அவர்கள் காலமானார். அடுத்து, தோழர் தை.செ. அவர்களின் மறைவும் நேர்ந்தது பெருந்துயரம்! சிறுநீரகச் சிக்கலால் துன்புற்று, தகுந்த மருத்துவ சிகிச்சை அளிக்கப்பட்டபோதும் தோழர் தை.செ. அவர்களைக் காப்பாற்ற முடியவில்லை என்பது பெருந்துயரம்!
தோழர் தை.செ. அவர்கட்கு தமிழ்த்தேசியப் பேரியக்கத்தின் சார்பில் வீரவணக்கம் தெரிவித்துக் கொள்கிறேன்.
=====================================
தலைமைச் செயலகம்,
தமிழ்த்தேசியப் பேரியக்கம்
=====================================
பேச: 9443918095, புலனம் : 9841949462
முகநூல் : www.fb.com/tamizhdesiyam
ஊடகம் : www.kannottam.com
இணையம் : www.tamizhdesiyam.com
சுட்டுரை : www.twitter.com/Tamizhdesiyam
காணொலிகள் : youtube.com/Tamizhdesiyam
=====================================
Labels: அறிக்கைகள், இரங்கல்
0கருத்துக்கள்:
Post a Comment
<< முகப்பு பக்கம்