<body><script type="text/javascript"> function setAttributeOnload(object, attribute, val) { if(window.addEventListener) { window.addEventListener('load', function(){ object[attribute] = val; }, false); } else { window.attachEvent('onload', function(){ object[attribute] = val; }); } } </script> <div id="navbar-iframe-container"></div> <script type="text/javascript" src="https://apis.google.com/js/platform.js"></script> <script type="text/javascript"> gapi.load("gapi.iframes:gapi.iframes.style.bubble", function() { if (gapi.iframes && gapi.iframes.getContext) { gapi.iframes.getContext().openChild({ url: 'https://www.blogger.com/navbar/6955529389241309188?origin\x3dhttp://thozharmaniyarasan.blogspot.com', where: document.getElementById("navbar-iframe-container"), id: "navbar-iframe" }); } }); </script>

"நாம் தமிழர் கட்சி மீது அவதூறு பொழிந்து பழிவாங்கத் துடிக்கும் வருண்குமார் ஐ.பி.எஸ். மீது நடவடிக்கை வேண்டும்! "----தமிழ்த்தேசியப் பேரியக்கத் தலைவர் பெ. மணியரசன் அறிக்கை!

Friday, December 6, 2024


நாம் தமிழர் கட்சி மீது அவதூறு பொழிந்து

பழிவாங்கத் துடிக்கும் வருண்குமார்
ஐ.பி.எஸ். மீது நடவடிக்கை வேண்டும்!
==================================
தமிழ்த்தேசியப் பேரியக்கத் தலைவர்
பெ. மணியரசன் அறிக்கை!
==================================


இந்தியக் காவல் பணி (ஐ.பி.எஸ்.) அதிகாரிகளின் அனைத்திந்திய ஐந்தாவது மாநாடு அண்மையில் சண்டிகரில் நடந்தபோது, அதில் பேசிய திருச்சி மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் வருண்குமார், தமிழ்நாட்டின் நாம் தமிழர் கட்சி குறித்து கூறிய குற்றச்சாட்டுகளும், அவதூறுகளும் வன்மையான கண்டனத்துக்குரியவை.

நாம் தமிழர் கட்சியைப் பிரிவினைவாதக் கட்சி என்று திட்டமிட்டுப் பொய்க் குற்றச்சாட்டு கூறியுள்ளார் வருண்குமார். அக்கட்சியைக் கண்காணிக்க வேண்டும் என்றும் கூறியுள்ளார். இதன் பொருள் நாம் தமிழர் கட்சியைத் தடை செய்ய வேண்டும் என்று கோருவதாகும்.

தமிழர்கள் தனித்துவமான பழம்பெரும் இனம் - தமிழர்களுக்குத் தன்னுரிமை வேண்டும் என்று நாம் தமிழர் கட்சி பேசி வருகிறது. இவை குற்றச் செயல்களோ, தனிநாட்டு விடுதலைக் கருத்துகளோ அல்ல!

மொழிவாரி மாநில மறுசீரமைப்புச் சட்டம் 1956-இன்படி, தமிழ்நாடு தமிழர்கள் தாயக மாநிலமாக இந்திய அரசால் உருவாக்கப்பட்டது. இந்தத் தமிழ்நாட்டின் மாநில ஆட்சியைத தமிழர்கள் நடத்த வேண்டும் என்று கூறுவது எப்படிக் குற்றச் செயல் ஆகும்? இதன் மீது மாற்றுக் கருத்து உள்ளவர்கள் இதனை விமர்சிக்கலாம். ஆனால் இக்கருத்து இந்தியாவிலிருந்து தமிழ்நாட்டைப் பிரித்து விடுதலை கோருவது என்று எப்படிக் கூறலாம்?

அரசியல் கட்சிகள், சமூகப் பிரிவுகள் அனைத்திற்கும் அப்பால் நின்று நடுநிலையாக நிர்வாகம் நடத்த வேண்டிய ஓர் ஐ.பி.எஸ். அதிகாரி தமிழ்த்தேசியத்தின் மீதான அரசியல் காழ்ப்புணர்ச்சியுடன் குற்றம் சாட்டுவது வன்மையான கண்டனத்திற்குரியது.

அரசியல் கட்சிகள் அத்து மீறி ஒன்றையொன்று விமர்சித்துக் கொள்வதுடன் சாடிக் கொள்வதும் சனநாயகத்தில் இயல்பான ஒன்றே! இவ்வாறான விமரிசனங்களும் சாடல்களும் அனைத்திந்திய அளவில் பல்வேறு கட்சிகள், இயக்கங்களிடையே நடந்து கொண்டுள்ளன. இவற்றுக்கெல்லாம் காவல்துறை அதிகாரிகள் தங்கள் விருப்பு வெறுப்புக்கேற்ப நடவடிக்கை எடுக்கக் கூடாது. அதிகாரிகளே அந்தரங்கமாகப் புகார் கொடுக்கச் சொல்லி அதன் மீது நடவடிக்கை எடுக்கக் கூடாது.

ஆட்சியில் இருக்கும் கட்சித் தலைமைகள் தூண்டினால் கூட ஐ.ஏ.எஸ், ஐ.பி.எஸ். அதிகாரிகள் நடுநிலை தவறி நடவடிக்கை எடுக்கக் கூடாது. இந்த அடிப்படையில்தான் அனைத்திந்தியப் பணி அதிகாரிகளுக்கான 1968ஆம் ஆண்டு நடத்தை விதிகள் (The All India Services (Conduct) Rule, 1968) அற மதிப்பீடுகளைக் கடைபிடித்து (Ethics), அரசியல் சார்பற்று - அரசியல் கட்சிகளிடையே நடுநிலை வகித்து (Political neutrality) அதிகாரிகள் செயல்பட வேண்டும் என்று வலியுறுத்துகிறது (விதி எண் 3).

திருச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் வருண்குமார் ஆளுங்கட்சியின் அரசியல் சார்புடன் செயல்படுகிறார் என்பதற்கான மேலும் ஒரு சான்றுதான் சண்டிகர் ஐ.பி.எஸ். அதிகாரிகள் கருத்தரங்கில் அவர் நாம் தமிழர் கட்சி பிரவினைவாதக் கட்சி என்று குற்றம் சாட்டியது.
அதற்கு முன்பே வேறு மாவட்டங்களில் மேடைகளில் பேசிய பேச்சிற்காக சாட்டை துரைமுருகன் உள்ளிட்ட நாம் தமிழர் கட்சியினர் மீது வருண்குமார் ஏற்பாட்டில் வழக்குகள் புனையப்பட்டுள்ளன.

அதேபோல், சாட்டை துரைமுருகன் கைது செய்யப்பட்டபோது, அவரின் கைபேசியைக் கைப்பற்றி அதில் பதிவாகியுள்ள நாம் தமிழர் கட்சிப் பிரமுகர்களின் அந்தரங்க உரையாடல்களை அம்பலப்படுத்தியதும் இதே வருண்குமார்தான் என்ற குற்றச்சாட்டையும் நாம் தமிழர் கட்சியினர் ஏற்கெனவே கூறி வருகிறார்கள்.

எனவே, திருச்சி காவல் கண்காணிப்பாளர் வருண்குமார் மீது கூறப்படும் மேற்படி குற்றச்சாட்டுகள் மீது விசாரணை நடத்தி, அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தமிழ்நாடு அரசைக் கேட்டுக் கொள்கிறேன். தமிழ்நாட்டில் செயல்படும் ஐ.பி.எஸ். அதிகாரிகள் சங்கமும் தலையிட்டு வருண்குமார் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.

=====================================
தலைமைச் செயலகம்,
தமிழ்த்தேசியப் பேரியக்கம்
=====================================
பேச: 9443918095, புலனம் : 9841949462
முகநூல் : www.fb.com/tamizhdesiyam
ஊடகம் : www.kannottam.com
இணையம் : www.tamizhdesiyam.com
சுட்டுரை : www.twitter.com/Tamizhdesiyam
காணொலிகள் : youtube.com/Tamizhdesiyam
===================================== 

Labels: , ,

0கருத்துக்கள்:

Post a Comment

<< முகப்பு பக்கம்


தோழர் மணியரசன்
அவர்களின் படைப்புகள் மற்றும் கருத்துக்களை இத்தளத்தில் காணலாம்.
வாசகர்களின் கருத்துக்களும் வரவேற்கப்படுகின்றன.

Web This Blog

தொகுப்பு

முந்தைய பதிவுகள்

தோழமைத் தளங்கள்