<body><script type="text/javascript"> function setAttributeOnload(object, attribute, val) { if(window.addEventListener) { window.addEventListener('load', function(){ object[attribute] = val; }, false); } else { window.attachEvent('onload', function(){ object[attribute] = val; }); } } </script> <div id="navbar-iframe-container"></div> <script type="text/javascript" src="https://apis.google.com/js/platform.js"></script> <script type="text/javascript"> gapi.load("gapi.iframes:gapi.iframes.style.bubble", function() { if (gapi.iframes && gapi.iframes.getContext) { gapi.iframes.getContext().openChild({ url: 'https://www.blogger.com/navbar/6955529389241309188?origin\x3dhttp://thozharmaniyarasan.blogspot.com', where: document.getElementById("navbar-iframe-container"), id: "navbar-iframe" }); } }); </script>
Monday, June 16, 2025


முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அவர்களே!

தஞ்சையில் நின்று நெஞ்சாரப் பொய்யுரைக்கலாமா?
==========================================
பெ. மணியரசன்,
தலைவர் - தமிழ்த்தேசியப் பேரியக்கம்
==========================================

தமிழ்நாட்டில் இன்றைக்குள்ள அரசியல் கட்சிகளின் பரப்புரை உத்தி பிரம்மாண்டங்களைக் காட்டி மக்களைப் பிரமிக்க வைத்து ஈர்ப்பது என்பதாகும்! அந்தத் தந்திரத்தில் தி.மு.க.வும் அ.தி.மு.க.வும் ஒரே தன்மையானவையே! மற்ற சின்ன தி.மு.க.களும் சின்ன அ.தி.மு.க.களும் தங்களின் வலிமைக்கு ஏற்ப ஆடம்பரங்களை அரங்கேற்றி வருகின்றன.

கடந்த 2025 சூன் 15 – 16 ஆகிய இருநாட்களும் தமிழ்நாடு முதலமைச்சரும் தி.மு.க. தலைவருமான மு.க. ஸ்டாலின் தஞ்சையில் தன் பரிவாரங்களுடன் முகாமிட்டு பல்வேறு பிரம்மாண்டங்களை மக்களிடம் நிகழ்த்திக் காட்டினார்.

திருச்சியிலிருந்து அவர் தஞ்சைக்கு மகிழுந்தில் வந்த நெடுஞ்சாலையில், சற்றொப்ப 70 கி.மீ தொலைவுக்கும் இடைவிடாமல் இருவரிசையாக தி.மு.க. கொடிகளை நெருக்கமாக இரும்புத் தடிகளால் நட்டிருந்தார்கள்.

தஞ்சையை நெருங்கும்போது சாலையில் மக்களைத் திரட்டி “வாழ்க” முழங்கி வரவேற்புக் கொடுத்தனர். அதற்கு முன்பாகவே, மு.க. ஸ்டாலின் படமும் உதயநிதி படமும் பொறிக்கப்பட்ட மிகப்பெரிய “பலூன்” வானத்தில் பறக்கவிடப்பட்டது.

இதற்கு முன்பெல்லாம் அரசியல் கட்சிகளின் தலைவர்களும், பேச்சாளர்களும் மேடை நாடகம் (சொற்பொழிவு) மட்டுமே நடத்துவார்கள். அவர்களின் ஆதரவாளர்கள், மைக் மதன காமராசர்களின் செயற்கையான பேச்சுப் புயலை - பேச்சு நாட்டியத்தை - பேச்சு நகைச்சுவையை - மற்றமற்ற சுவைகளை இரசிப்பார்கள்! அது இப்போது பழைய கவர்ச்சியை இழந்து விட்டது! இப்போது அரசியல் தலைவர்கள் சாலை நாடகம் (Road Show) நடத்த மக்களிடம் இறங்கி வந்துவிட்டார்கள். இந்த அரசியல் சாலை நாடகத்தை அரங்கேற்றிப் பிரபலப்படுத்தியவர் இந்தியத் தலைமை அமைச்சர் நரேந்திரமோடி! மு.க. ஸ்டாலின் மோடியிடமிருந்து அதைக் கற்றுக் கொண்டார்.

தஞ்சை மணிமண்டபத்திலிருந்து கீழ்ப்பாலம் வழியாகப் பழைய பேருந்து நிலையம் வரை முதல்வர் மு.க. ஸ்டாலின் நடந்து - மக்களிடம் மனுக்கள் வாங்கியுள்ளார். மக்கள் தன்னுடன் தற்படம் (செல்ஃபி) எடுக்க முகம் கொடுத்துள்ளார். ஆனால் அம்மக்களில் பெரும்பாலோர்க்குக் கட்டணம் செலுத்தி அழைத்து வந்துள்ளார்கள்.

வாடகைக்கு அழைக்கப்பட்டவர்களாக இருந்தாலும், வெளியில் பார்ப்பவர்களுக்கு முதலமைச்சரின் மக்கள் - “செல்வாக்கு” பெரிதாக்கப்பட்ட காட்சியாக இருக்கும் அல்லவா, அது போதும்!

தஞ்சை பழைய பேருந்து நிலையம் அருகில், நாடகம், மாநாடு, கருத்தரங்கம், இசை நிகழ்ச்சி என நடந்துவந்த வரலாற்றுச் சிறப்புமிக்க “இராமநாதன் மன்றம்” இடிக்கப்பட்டுவிட்டது. அந்த இடத்தில் கருணாநிதி சிலையைத் திறந்தார் ஸ்டாலின்!

எல்லாவற்றுக்கும் சிகரம் வைத்த நிகழ்ச்சி 16.6.2025 முற்பகல் தஞ்சை சரபோஜி அரசினர் கலைக்கல்லூரி விளையாட்டுத் திடலில் நடந்த அரண்மனை விழாவாகும்! சக்ரவர்த்தி தன் குடிபடைகளுக்கு நலத்திட்டங்கள் வழங்கும் விழா!

பலகோடி ரூபாய் செலவில் போடப்பட்டிருந்த மிகமிகப் பெரும் தகரக் கொட்டகை! கூரையின் உட்பகுதி முழுதும் ஒப்பனைகள். பத்தாயிரம் பேர் உட்காரக் கூடிய அளவு மிகமிகப் பெரிய கட்டுமானம் அது!

அதன் நுழைவாயில் முகப்பு அரண்மனை போன்றது. தஞ்சை நாயக்க - மராத்திய அரண்மனைக் கோபுரம் போலவே ஒரு கோபுரம் முகப்பில் எழுப்பப்பட்டிருந்தது. கோபுரத்திற்குக் கீழ் - அம்முகப்பின் நடுவில் கருணாநிதி படம். அதன் இடது முனையில் மு.க. ஸ்டாலின் படம். கருணாநிதியின் வலது ஓரத்தில் உதயநிதி படம்! வேறு யார் படமும் இல்லை! முன்னாள் முதல்வர் கருணாநிதி படம் இருந்தது. ஆனால் முன்னாள் முதல்வர் அண்ணாவின் படம் அதில் இல்லை.

அதில் கருணாநிதி படத்திற்குப் பக்கத்தில், தஞ்சை தலையாட்டிப் பொம்மைகள் இரண்டு தீட்டப்பட்டிருந்தன! இது ஒரு தத்துவத்தை அடையாளப்படுத்தியது. “தி.மு.க. எங்களின் குடும்பச் சொத்து; அதனால் அதன் ஆட்சியில் உள்ள தமிழ்நாடு அரசும் எங்கள் குடும்பச் சொத்து. எங்கள் வாரிசு அரசியல்தான் தொடரும். கழகக் கண்மணிகளும் தமிழ்நாட்டு மக்களும் எங்களுக்குத் தஞ்சை தலையாட்டிப் பொம்மைகள்!”. இந்தத் தத்துவம் அந்த படச்சித்தரிப்பில் உள்ளார்ந்த மெய்யியலாக (தத்துவமாக) இருந்தது என்று உய்த்துணர்ந்து (ஊகித்துக்) கொள்ளலாம்.

அதே முகப்புச் சித்தரிப்பில் அதன் வலது ஓரத்தில் ஆடவல்லான் (தில்லை நடராசர்) படமும், இடது ஓரத்தில் தஞ்சை பெரிய கோயிலும் இடம் பெற்றிருந்தன.

இன்று (17.6.2025) காலை அந்த அரண்மனை வளாகத்தைப் போய்ப் பார்த்துவிட்டு வெளியே வரும்போது, “அந்தக் கல்லூரி திடல் வளாகத்தின் நுழைவாயிலுக்கு வெளியே, சாலை ஓரமாக தேநீர், மூக்கரட்டைச்சாறு போன்ற மூலிகைச் சாறுகள் ஆகியவற்றைத் தள்ளுவண்டியில் வைத்து விற்றுக் கொண்டிருந்தார் ஓர் இளம் பெண். பார்த்தால் கல்லூரிப் படிப்பு படித்தவர் போல் தோற்றம் கொண்டிருந்தார். “என்னம்மா நேற்று கடைபோட முடிந்ததா என்று கேட்டேன். எப்படி ஐயா நேற்று போட முடியும்” என்றார். என்னம்மா படித்திருக்கிறீர்கள் என்று கேட்டேன். ”எம்.எஸ்.சி.” என்றார்.

வேலை கிடைக்கவில்லை. வேறு வழியில்லாமல், காலை நேரம் நடைப்பயிற்சிக்கு வருவோர்க்காக தள்ளுவண்டி விற்பனையாளராக உள்ளேன். இதற்கு உரிமையாளர்கள் இருக்கிறார்கள். நான் அவர்களிடம் வேலை செய்கிறேன். என் படிப்புக்கேற்ற வேலை கிடைத்தால் சொல்லுங்களய்யா” என்றார் அப்பெண்!

படித்த, பட்டம் பெற்ற, தொழிற்கல்வி கற்ற கோடிக்கணக்கான இளம் ஆண்களும் பெண்களும் உரிய வேலையின்றி - அத்துக் கூலிகளாகவோ, அதுவும் இல்லாமலோ - தமிழ்நாட்டில் தவிக்கிறார்கள்.

தமிழ்நாடு அரசுப் பணிகளில் - மருத்துவ மனைகளில் - பள்ளிக் கூடங்கள் முதல் பல்கலைக் கழகங்கள்வரை, காவல்துறையில், சிறைத்துறையில், மின்சார வாரியத்தில், தமிழ்நாடு அரசு துறைகளில் நிரப்பப்படாமல் காலியாக உள்ள நிரந்தரப் பணி இடங்களின் எண்ணிக்கை பத்து இலட்சத்திற்கும் மேல்! தமிழ்நாடு அரசுக்குள்ள கடன் பத்து இலட்சம் கோடி ரூபாய்!

மேற்படி காலி பணியிடங்களைத் தமிழ்நாடு அரசு ஏன் நிரப்பவில்லை? நிதி இல்லை! ஏன் இவ்வளவு பெருந்தொகை தமிழ்நாடு அரசுக்குக் கடன் இருக்கிறது? ஏழ்மை நிலையில் தமிழ்நாடு அரசு உள்ளது! ஆனால் பழங்கால மொகலாயச் சக்கரவர்த்திபோல் அரசு பணத்தில் ஆடம்பர விழாக்களை மு.க. ஸ்டாலின் நடத்துவது ஏன்? மக்களை மயக்க, மறுபடியும் 2026 தேர்தலில் வெற்றிபெற்று ஆட்சி அதிகாரத்தைப் பிடிக்க!

மக்களைத் தட்டி எழுப்ப, மக்களை ஈர்க்க தி.மு.க. போன்ற கட்சிகளுக்கு உண்மையான இலட்சியங்களோ, கோரிகைகளோ இல்லை! அக்கட்சிகளின் தலைவர்களுக்கான உயிர் இலட்சியங்கள் மூன்று; பதவி - பணம் - பகட்டு!

இவர்கள் பொய் சொல்வதை - இராசதந்திரம் என்று வர்ணித்துக் கொள்வார்கள்!

தஞ்சை நிகழ்ச்சியில், “கலைஞர்தான் காவிரி உரிமைகளை மீட்டார்” என்று மு.க. ஸ்டாலின் முழுமையாகப் பொய்யுரைத்தார்.

உச்ச நீதிமன்றத் தீர்ப்பின்படி மாதவாரியாகத் திறக்க வேண்டிய மிகக் குறைந்த தண்ணீரைக்கூடத் திறந்துவிட தொடர்ந்து மறுத்து வருகிறது கர்நாடக அரசு! கர்நாடக அணைகள் நிரம்பி வெளியேறும் வெள்ளம்தான் அங்கிருந்து மேட்டூர் வருகிறது.

தஞ்சாவூரில் நின்று கொண்டு, நெஞ்சாரப் பொய் சொல்லும் முரட்டுத் துணிச்சல் மு.க. ஸ்டாலின் போன்றவர்களுக்குக் கைவந்த கலை!

===============================
தலைமைச் செயலகம்,
தமிழ்த்தேசியப் பேரியக்கம்
=================================
பேச: 9443918095, புலனம் : 9841949462
முகநூல் : www.fb.com/tamizhdesiyam
ஊடகம் : www.kannottam.com
இணையம் : www.tamizhdesiyam.com
சுட்டுரை : www.twitter.com/Tamizhdesiyam
காணொலிகள் : youtube.com/Tamizhdesiyam
==============================

Labels: , , , ,

"சிறந்த மரபு மருத்துவர் – தெளிவான தமிழ்த்தேசியர் அப்துல் ஹலீம் அவர்கள் மறைவு பெருந்துயரம்!" ---- தமிழ்த்தேசியப் பேரியக்கத் தலைவர் பெ. மணியரசன் இரங்கல்!

Sunday, June 15, 2025


சிறந்த மரபு மருத்துவர் – தெளிவான தமிழ்த்தேசியர்

அப்துல் ஹலீம் அவர்கள் மறைவு பெருந்துயரம்!
=========================================
தமிழ்த்தேசியப் பேரியக்கத் தலைவர்
பெ. மணியரசன் இரங்கல்!
=========================================


சென்னை மரபு மருத்துவர் அன்புத் தோழர் அப்துல் அலீம் அவர்கள் உடல்நலக் குறைவால் மருத்துவ சிகிச்சையில் இருந்த நிலையில், அவர் இன்று (16.06.2025) இறந்து விட்டார் என்ற கொடும் செய்தி நெஞ்சைத் தாக்கியது.

சென்னை வளசரவாக்கத்தில் உள்ள அலீம் அவர்களின் மருத்துவமனை குறைவான கட்டணத்தில் நிறைவான சிகிச்சை அளித்துக் குணப்படுத்தும் மையமாக விளங்கியது. நான் அவரிடம் சிகிச்சைப் பெற்றுப் பயனடைந்துள்ளேன். அவரின் மருத்துவ ஆற்றல் அறிந்த பெரும் வசதி படைத்தோரும் – அமைச்சர்களும் கூட அவரிடம் சிகிச்சை பெற்றார்கள்.

அலீம் அவர்கள் அடிப்படையில் ஒரு தமிழ்த்தேசியர்! நாம் தமிழர் கட்சியின் தீவிர ஆதுரவாளராக இருந்தார். தமிழ்த்தேசியப் பேரியக்கத் துணைப் பொதுச் செயலாளர் தோழர் க. அருணபாரதி உள்ளிட்ட தோழர்களுடன் பாசத்தோடு பழகினார். அந்த வழியில்தான் எனக்கும் அலீம் அவர்களுக்கும் இடையே பாசப் பிணைப்பு ஏற்பட்டது.

இந்து, இசுலாம், கிறித்துவம் என எந்த மதத்தில் இருந்தாலும் தமிழிர்களின் தேசியம் தமிழ்த்தேசியமே என்ற புரிதல் கொண்டவர் தோழர் அலீம்! சமூக அறிவியல் பாற்பட்ட இந்தப் புரிதல் தமிழர்கள் எல்லோருக்கும் வேண்டும்.

பலரின் கடும்நோய் தீர்த்து, நல வாழ்வு தந்த தோழர் அலீம் அவர்கள், கொடும் நோய்க்கு ஆளாகிக் காலமானது பேரிழப்பு!

அன்புத்தோழர் அப்துல் அலீம் அவர்களின் மறைவுக்குப் பெருந்துயரத்தையும், இரங்கலையும் தமிழ்த்தேசியப் பேரியக்கத்தின் சார்பில் தெரிவித்துக் கொள்கிறேன்.

===============================
தலைமைச் செயலகம்,
தமிழ்த்தேசியப் பேரியக்கம்
=================================
பேச: 9443918095, புலனம் : 9841949462
முகநூல் : www.fb.com/tamizhdesiyam
ஊடகம் : www.kannottam.com
இணையம் : www.tamizhdesiyam.com
சுட்டுரை : www.twitter.com/Tamizhdesiyam
காணொலிகள் : youtube.com/Tamizhdesiyam
==============================

Labels: ,

"இலட்சியமில்லா சமூகத்தில் இரசிகச் சீரழிவுகள் கொடிநாட்டும்! (பகுதி - 2)" ----- ஐயா பெ. மணியரசன் தலைவர், தமிழ்த்தேசியப் பேரியக்கம்.

Thursday, June 12, 2025


இலட்சியமில்லா சமூகத்தில்

இரசிகச் சீரழிவுகள் கொடிநாட்டும்!
(பகுதி - 2)
============================
பெ. மணியரசன்
தலைவர், தமிழ்த்தேசியப் பேரியக்கம்
============================


(பகுதி 1 -ஐப் படிக்க
https://www.facebook.com/share/p/1CDNLFcape )

நீண்ட காலத்திற்குப் பிறகு இப்பொழுதுதான் “தமிழர்” – ”தமிழ்த்தேசியர்” என்ற இயற்கையான இன அடையாளங்கள் தமிழ்நாட்டில் எழுச்சி பெற்று வருகின்றன!

எனவே, தமிழ் மக்கள் முன்பாக பதவி – பணம் – விளம்பரம் மூன்றையும் இலட்சியங்களாகக் கொண்ட தனிநபர் வேட்டை அரசியலே தி.மு.க., அ.தி.மு.க. கட்சிகளாலும் அவற்றின் கூட்டாளிகளாலும் வைக்கப்பட்டன!

இயற்கை மரபான மொழி - இன - தாயக அடையாளங்கள் மறைக்கப்பட்டு, தனிநபர் - தலைவர் அடையாள அரசியல் இங்கு கோலோச்சுகிறது.

இந்தத் தனித் “தலைவர் மைய” அரசியல், தமிழ் மக்களிடையே இலட்சிய அடிப்படையிலான சமூகக் கூட்டுறவை, சமூக இணைப்பை உருவாக்கவில்லை! இன வழிப்பட்ட கூட்டாற்றல் அற்ற மக்கள் தங்கள் சாதி, தங்கள் மதம் என்ற அடிப்படையில், அரசியலுக்கு அப்பாற்பட்ட கூட்டுறவை - நெருக்கத்தைக் கூடுதலாகக் கொண்டார்கள். மனிதர்கள் சமூகப் பிராணிகள் (social animals) என்பார்கள்! சாதி - மதம் கடந்து மக்களை இணைப்பது கொள்கைக் கூட்டுறவு! அது இல்லாத இன்றைய நிலையில், சொந்த சாதிக் கூட்டுறவை - சொந்த மதக் கூட்டுறவை கடந்த காலத்தைவிட மக்கள் அதிகமாக நாடுகிறார்கள்.

இப்போக்கு ஒரே தமிழ் இனத்திற்குள் சாதி, மத மோதல்களை அதிகப்படுத்தியுள்ளன. சாதி அரசியல் மேலோங்கியுள்ளது. தி.மு.க. 1960களில், திராவிடத் தனிநாட்டுக் கோரிக்கையை எழுப்பி வந்த காலத்திலும் சாதி முரண்பாடுகள் இருந்தன. ஆனால், இப்போதுள்ள அளவு முட்டல் மோதல்கள் அப்போதில்லை. உளவியல் அளவில் முகாம் பிரிந்து நிற்கும் ஆழமான சமூகப் பிளவுகள் இப்போது உள்ளது போல் அப்போதில்லை! சாதிச் சங்கங்களும், சாதி அடிப்படையிலான கட்சிகளும் இப்போதுள்ள அளவிலும் தீவிரத்திலும் அப்போது இல்லை.

திராவிட நாடு என்று தி.மு.க. சொன்னாலும் தனித்தமிழ்நாடு கிடைக்க வேண்டும், கிடைக்கலாம் என்ற நம்பிக்கையில் தமிழர்கள் - குறிப்பாக மாணவர்கள் - இளைஞர்கள் தி.மு.க. வை ஆதரித்தார்கள்! தி,மு.க. இலட்சியத் துரோகம் செய்தது மட்டுமல்ல, தமிழர்களின் மொழி - இன எழுச்சியைத் தனது தனிநபர் இலாப வரம்புக்குட்பட்ட வளையத்திற்குள் வரும்படி வரையறுத்தது. போலி இலட்சியங்கள் பேசி தமிழின உணர்வை மழுங்கடித்தது. தி.மு.க. விலிருந்து பிரிந்த அ.தி.மு.க., ஒளிவு மறைவின்றி - தந்திரப் பேச்சு எதுவுமின்றி ஆரியத்திடம் - இந்திய ஏகாதிபத்திய வாதத்திடம் சரணாகதி அடைந்து, அண்ணா தி.மு.க. பெயருக்கு முன்னொட்டாக, “அனைத்திந்திய” என்ற அடை சொல்லைச் சேர்த்தது; தில்லி எசமானர்களிடம் தனது விசுவாசத்தை வெளிப்படுத்தியது. பின்னர் எம்.ஜி.ஆர்.ஐப் பார்த்து ஆந்திராவில் கட்சி தொடங்கிய நடிகர் என்.டி. இராமாராவ் “தெலுங்கு தேசம்” என்ற பெயரில் தொடங்கினார்.

நெல் விதைக்கப்படாத வயலில் புல், பூண்டு மண்டுவது போல், தமிழ்நாட்டு மக்கள் அனைவர்க்கும் உரிய பொது இலட்சியமில்லாத சாதிச் சங்கங்கள், சாதிக்கட்சிகள் பல்கிப் பெருகின. அவற்றைத் தி,மு.க.வும் அ.இ.அ.தி.மு.க. வும் தங்கள் கூட்டணியில் சேர்த்தன. சாதிகள் புத்தெழுச்சி பெற்றன. சாதி மோதல்கள் - குறிப்பாகப் பட்டியல் வகுப்பு மக்களுக்கெதிராகக் கூர்மையடைந்தன. கிராமங்கள் அறிவிக்கப்படாத சாதி முகாம்கள் ஆயின.

தனிநாடு கேட்ட தி.மு.க. 1970லிருந்து இந்திய ஏகாதிபத்தியவாதக் கட்சியான காங்கிரசுடன் கூட்டணி சேர்ந்தது. அ.தி.மு.க. பிறக்கும்போதே (1972-இல்) காங்கிரசுக் கூட்டணியுடன் பிறந்தது.

தமிழ்நாடு உள்ளிட்ட பெரும்பாலான இந்திய மாநிலங்கள் – இனத் தாயகங்களாகவே பிரிக்கப்பட்டுள்ளன. தனிநாடு கேட்ட தி.மு.க.வும் அதிலிருந்து பிரிந்த அ.தி.மு.க. வும் இந்திய ஏகாதிபத்தியவாத - ஆரியத்துவா - பாசகவுடனும் மாறிமாறி கூட்டணி சேர்ந்து வருகின்றன.

தமிழர்களுக்கான பொது அரசியல் இலட்சியம் தமிழ்நாட்டில் இல்லாமல் போனதால், சாதி - மத வாதங்கள் தமிழ்நாட்டில் புத்தெழுச்சி பெற்றன.

தமிழர் தாயகமான தமிழ்நாட்டைத் தெலுங்கர், கன்னடர், மலையாளிகளின் இயற்கையான சொந்தத் தாயகம் ஆக்கிடும் நோக்கில் ஈ.வெ.ரா. “திராவிட இனம்” என்று ஆரியர்கள் வரையறுத்த ஓரு இனத்தைத் திணித்தார். அண்ணா போன்ற அறிவாளிகள் அதை ஆதரித்துத் தமிழ்நாட்டில் பரப்பினர். இச்சூழ்நிலையைப் பயன்படுத்தி தமிழ்நாட்டில், தமிழ், தமிழர் தொன்மை - வரலாறு முதலியவற்றை மறைத்து தெலுங்கர்-கன்னடர்-அரசியல் இங்கு செல்வாக்குப் பெற்றது. ஆனால், ஆந்திரம், கர்நாடகம், கேரளம் போன்ற அவர்கள் மாநிலங்களில் காலம்காலமாக வாழும் தமிழர்கள் தமிழ் இன அடையாளமின்றி வாழ்கிறார்கள்!

தமிழ்நாட்டில் இயற்கையாக எழுச்சி பெற்றிருக்கவேண்டிய தமிழின உணர்ச்சியை, - அதனடிப்படையில் எழுந்திருக்க வேண்டிய பல்வேறு பிரிவு மக்களின் இன நெருக்கத்தை - ஒற்றுமை உணர்ச்சியைச் சீரழித்தன தி,மு.க.வும், அ.தி,மு.க.கவும்! தமிழினச் சாதிகள் மட்டுமல்ல, தமிழ்நாட்டில் தெலுங்கு - கன்னடச் சாதி அமைப்புகளும் தீவிர வளர்ச்சி பெற்றன!

அச்சாதிப் பிளவைப் பயன்படுத்தி வாக்கு வாங்கி வெற்றிபெற, சாதி அடிப்படையில் கட்சியில் பதவிகள் தருவது, வேட்பாளர்களை நிறுத்துவது எனத் தி,மு.க.- அதி.மு.க. கட்சிகள் இறங்கின. மற்ற கட்சிகளுக்கும் இப்போக்கு பரவியது.

கல்வி நிலையங்களில் இளங்குருத்துகளான மாணவர்கள் சாதி முகாம்களாகச் செயல்படுகின்றனர். குறிப்பிட்ட சாதியைக் குறிப்பிடும் சாதிக் கயிறுகளை மாணவர்கள் கைகளில் கட்டிக் கொள்கிறார்கள்.

ஒவ்வொரு தனிநபரும் தனது தனித்த அடையாளத்தைக் காட்ட, பல்வேறு குடும்ப விழாக்களை, திருமண விழாக்கள் போல் - கடன்வாங்கியாவது நடத்தும் நிலைக்கு வந்துள்ளனர்.

பெண்பிள்ளைகள் பருவமடைந்தால் அந்நிகழ்வை - திருமண மண்டபம் பிடித்து - அழைப்பிதழ் அச்சிட்டு வழங்கி, நடத்துவது, அதுபோல் பிள்ளைக்குப் பெயர் சூட்டுவிழா – கருவுற்ற பெண்களுக்கு வளைகாப்பு விழா - குழந்தைகளுக்கு காதணி விழா என பல்வேறு குடும்ப நிகழ்வுகளை மண்டபம் பிடித்து திருமண விழா போல் நடத்துகிறார்கள். இவ்விழாக்களுக்கான ஆடம்பரப் பதாகைகள் வீதிகளில் வைக்கப்படுகின்றன. தனிநபர் அடையாளம் செல்வாக்கு முதலியவற்றை நிலைநாட்டும் நிகழ்வுகளாக இவை மாற்றப்பட்டுள்ளன. இம் மனநிலையில் திருமண விழாக்கள் மாநாடுகள் போல் நடத்தப்படுகின்றன. இவ்விழாக்களின் அழைப்பிதழ்களில், தங்கள் சாதிப் பெயர்களை, சாதிகளுக்கு உரிய பட்டப் பெயர்களைப் போட்டுக் கொள்கிறார்கள்.

இவ்வாறான உளவியலில் மூழ்கியுள்ள தமிழ்ச் சமூகம் – பழம் பெருமை மிக்க தனது தமிழ்மொழி, தமிழ் இனம், தமிழர் தாயகம் மூன்றும் சிதைக்கப்படுவது பற்றி உரியவாறு அக்கறை காட்டுவதில்லை. தனிநபர் செல்வாக்கிலேயே முனைப்புக் காட்டுகிறது.

தமிழின இளங்குருத்துகளான மாணவர்களிடம், சாதி - மத ஆதிக்கத் தீவிரவாதங்கள் மட்டுமல்ல, கஞ்சா போன்ற போதைப் பொருட்களைப் பயன்படுத்தும் பழக்கங்கள் பல்கிப் பெருகிக் கொண்டுள்ளன!

ஒரு சமூகத்தை ஓர் உயர்ந்த இலட்சியத்தை நோக்கி செலுத்தவில்லை என்றால் அந்தச் சமூகம் எப்படிச் சீரழியும் என்பதற்கு இன்றைய நம் தமிழ்ச் சமூகமே சான்று!

ஒரு கடந்த கால நினைவு: நான் தஞ்சை மாவட்டம் செங்கிப்படிட்டியில் 7-ஆம் வகுப்பு படித்துக் கொண்டிருக்கிறேன். அது 1961-ஆம் ஆண்டாக இருக்கும். எங்கள் ஆச்சாம்பட்டியிலிருந்து போகவர 8 கிலோ மீட்டர் (அப்போது 5 மைல்) அன்றாடம் நடந்து பள்ளிக்கு வந்து செல்வோம்.

எங்கள் ஆச்சாம்பட்டிக்குத் தென்மேற்கே 4½ கி.மீ. தொலைவில் திருச்சி மாவட்டம் - இப்போது புதுக்கோட்டை மாவட்டம்) கிள்ளுக்கோட்டையில் தி.மு.க. தலைவர்களில் அண்ணாவுக்கு அடுத்த தலைவராகக் கருதப்பட்ட நாவலர் நெடுஞ்செழியன், சந்தியவாணிமுத்து அம்மையார் ஆகியோர் பேசும் பொதுக்சுட்டம் நடந்தது. அப்போது திருச்சி மாவட்ட தி.மு.க. செயலாளர் அன்பில் தர்மலிங்கம்!

அன்று எங்கள் பள்ளிக்கூடம் நடந்து கொண்டுள்ளது. நான், என் வகுப்புத் தோழர்கள் செங்கிபட்டி - சானடோரியம் வெ. பழனிமாணிக்கம், கரியப்பட்டி கிருஷ்ணன் மூவரும் - நாங்கள்நெருங்கிய நண்பர்கள் - நாவலர் கூட்டத்திற்கு கிள்ளுக்கோட்டைக்குப் போவது என்று முடிவு செய்தோம். பகல் உணவு இடைவேளைக்குப் பிறகு மூவரும் 8½ கிலோ மீட்டர் நடந்து கிள்ளுகோட்டை சென்று தி.மு.க. பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டு இரவே வீடு திரும்பிவிட்டோம்.

மறுநாள் பள்ளிக்கூடம் சென்றோம். எட்டாம் வகுப்புவரை உள்ள அரசு நடுநிலைப்பள்ளி அப்போது அது! எங்கள் தலைமை ஆசிரியர் சுப்பிரமணியம் (ஐயர்) அவர்கட்கு நாங்கள் வகுப்பைக் “கட்” அடித்து தி.மு.க. பொதுக்கூட்டத்திற்குச் சென்றது தெரிந்துவிட்டது. எங்கள் மூன்று பேருக்கும் வகுப்பில் தண்டனை கொடுத்தார். வகுப்பு நடந்து கொண்டிருக்கும்போது நாங்கள் மூன்று பேரும் பெஞ்சுமேல் ஏறி நிற்க வேண்டும். நின்றோம்! அப்படி அவமானப்படுத்துவது அப்போது பள்ளிகளில் இருந்த தண்டனை முறைகளில் ஒன்று.

தி.மு.க.வின் தமிழின வரலாற்றுப் பெருமித சொற்பொழிவுகள் கட்டுரைகள் மாணவர்களை அப்போது ஈர்த்தன. காங்கிரசு ஆட்சியின் இந்தித் திணிப்பு வடவர் ஆதிக்க அரசியலை அம்பலப்படுத்தி முறியடிக்க வேண்டும் என்றது அப்போது தி.மு.க.!

அப்படி ஈர்க்கப்பட்ட மாணவர்கள்தாம் வரலாற்றிலேயே ஈடுகாட்ட முடியாத உலக தாய்மொழிக் காப்பு, அயல்மொழித் திணிப்பு எதிர்ப்பு போராட்டத்தை – இந்தி எதிர்ப்புப் போராட்டத்தை 1965-இல் தமிழ்நாடு தழுவிய அளவில் 50 நாட்கள் நடத்தினர்.

தி.மு.க. தமிழ்நாடு ஆட்சியைக் கைப்பற்றிய பின், அது எதிர்க்கட்சியாய் இருந்தபோது பேசிய இன, மொழி, தாயக உரிமை மீட்பு முழக்கங்களைக் கைவிட்டது. கருணாநிதி ஆட்சி ஊழலில் திளைத்தது. அதன் ஊழலை எதிர்த்து எம்.ஜி.ஆர் கட்சி தொடங்கி ஆட்சியைப் பிடித்தார். இரண்டாம் முறை அக்கட்சி ஆட்சிக்கு வந்தபின் அதுவும் ஊழலில் ஈடுபட்டது.

பின்னர் செயலலிதா ஆட்சிக்கு வந்தபோது மறைமுக வரி வருவாய் அரசுக்கு வருவது போல், இலஞ்சத் தொகை திட்ட மதிப்பீட்டுத் தொகையில் குறிப்பிட்ட வீதாச்சாரப்படி வெட்டுத் தொகையாக ஒவ்வொரு திட்டத்திலும் வரும் சூத்திரத்தை வகுத்தார். அதன்பின் வந்த கருணாநிதி ஆட்சியும், எடப்பாடி ஆட்சியும் அந்த சூத்திரத்தைப் பின்பற்றி தனிநபர் ஊழல் வசூல் செய்தன. இப்போது மு.க. ஸ்டாலின் ஆட்சியும் அதை மரபெனத் தொடர்கிறது.

இந்த ஆட்சிகள் மதுவிலக்கை நீக்கி, சாராய வணிகத்தை அரசே நடத்தச் செய்தன! சாராயக் கடைகளில் (டாஸ்மாக்) விழாக் காலங்களில் அதிகமாக விற்பனை நடக்க இலக்குகள் வரையறுத்து, மாவட்ட ஆட்சியர் உள்ளிட்ட உயரதிகாரிகள் அவ்விற்பனைப் பாய்ச்சலை உறுதி செய்ய நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.

தமிழர்கள் என்ற இனச் சமூக அடிப்படையிலான பொது இலட்சியம் தமிழ்நாட்டில் முன்வைக்கப்படாத நிலையில், தனிநபர் தேவை - தனிநபர் இரசிகத் தன்மை முதலியவற்றை முதன்மையாகக் கொண்டு, மக்கள் பிரிந்தோ, இணைந்தோ கூடிக்கொள்கின்றனர்.

தனிநபர் இரசிகத் தன்மை - தன் சொந்த அடையாள வெளிப்பாட்டுடன் இணைகிறது.

நிலவுகின்ற அரசியல் கட்சிகளில் சேர்ந்து பிரமுகர் ஆக முடியாதவர்கள், அல்லது அதை விரும்பாதவர்கள் திரைப்பட நடிகர் இரசிகர் மன்றங்களில் பிரமுகர்களாக வலம் வருகிறார்கள். நடித்து நிறைவடைந்த கதாநாயகர்கள் புதிய அரசியல் நடிப்புத் தலைவராக ஆசைப்படுகிறார்கள். கட்சிகள் தொடங்குகிறார்கள். இப்போக்கு தமிழ்நாட்டிற்கே உரிய சீரழிவு!

கார்ப்பரேட்டுகளால் மக்களுக்கான கவர்ச்சி விளையாட்டாய் மாற்றப்பட்டுள்ள மட்டைப்பந்து விளையாட்டில் வேறுபலர் வீரர்கள் ஆகிறார்கள். அவர்களின் இரசிகர்கள் மக்களிடையே உருவாகிறார்கள். இவ்வாறாக தன்ரசிப்பு அடிப்படையில் சாதிச் சங்கங்கள், கட்சிகளில் இணைகிறார்கள்!

உலகத்தில் இனச் சமூகங்கள் அடிப்படையில்தான் பொரும்பாலான நாடுகள் அமைந்துள்ளன. மேற்கத்திய வணிக வேட்டையாடிகளால் பல இனத்தாயகங்கள் வன்முறையால் வளைக்கப்பட்டு “இந்தியா” எனக் புதிய அரசு நிர்வாகம் கட்டமைக்கப்பட்டது.

இந்திய விடுதலைக்குப் பின், இங்குள்ள இனங்கள் போராடி, தங்கள், தங்கள் இனத்தாயகங்களை “மாநிலங்களாக”ப் பெற்றார்கள். அப்படி மீண்டதுதான் தமிழ் இனத்தின் தாயகமான தமிழ்நாடு. இதன் மொழி தமிழ்! இந்தத் தமிழ்நாட்டிற்கு மாநில அரசு இருக்கிறது. ஆனால், இந்திய அரசின் ஆதிக்கத்தின் கீழ் இருக்கிறது. இந்திய அரசை ஆளுவோரில் ஆட்கள் மாறினாலும் அவர்கள் ஆரிய - சமற்கிருத - இந்தி மண்டலங்களின் தலைவர்களாகவே இருப்பார்கள். அவர்களுக்கு, இந்தி, குசராத்தி, மராத்தி எனப் பலப்பல மாநிலங்கள் இருக்கின்றன. மக்கள் தொகை மிகமிக அதிகம்!

தமிழ்நாட்டின் அண்டை மாநிலங்களாக ஆந்திரம், தெலங்கானா, கர்நாடகம், கேரளம் முதலியவை உள்ளன. இவை, தமிழ் மொழியின் - தமிழ் இனத்தின் மனித குல முதன்மை - உலக மொழிகளில் முதன்மை போன்றவற்றைக் கண்டு பொறாமைப்படுகின்றன. உலகின் முதல் செம்மொழி - சேர-சோழ-பாண்டிய அரசர்களின் ஆளுமை, வீரம், அறம் போன்றவற்றைக் கண்டும் பொறாமைப் படுகிறார்கள். செயற்கையாக நம்மோடு ஒட்டாமல் இருக்கிறார்கள். தமிழர்களாகிய நாம் அவர்களோடு நல்லுறவையே விரும்புகிறோம். ஆனால், அவர்கள் நம்மைப் போட்டியாளர்களாக, பொறாமையோடு பார்க்கிறார்கள்.

தமிழ்நாட்டில் நிலவும் திராவிட அரசியலைப் பயன்படுத்தி, அண்டை மாநிலத்தார்கள் தமிழ்நாட்டு தொழில், வணிகம், வேலை, கலைத்துறை, திரைத்துறை, அரசியல் என அனைத்துத் துறைகளிலும் புகுந்து ஆதிக்கம் செலுத்துகிறார்கள்.

இந்தி - சமற்கிருத - ஆரிய மண்டலத்தாராலும், அண்டை இனத்தார்களாலும் தமிழர்கள் தற்சார்பு மறுக்கப்பட்டு தவிக்கிறோம். தமிழ் இனம் தற்சார்பற்று, இன-மொழி-தாயகக் காப்பின்றி வாழ்ந்தால் ஒவ்வொரு தமிழருக்கும் நெருக்கடிதானே; அயலார் ஆதிக்கம் தானே!

தமிழர்கள் ஒவ்வொருவருக்கும் தமிழ்ச் சமூகத்திற்கான தற்காப்புணர்ச்சி தேவை! தமிழ்நாட்டு அரசியல் சீரழிந்ததால் தமிழர்களிடையே தனிநபர் சீரழிவுப் பண்புகள் தலைதூக்குகின்றன! ஓர் இனமாக, ஒரு சமூகமாக தமிழர்களை இணைத்து வலுவாக்கும் ஒரே இலட்சியம் தமிழ்த்தேசியம்! தனிநபர் தன்முனைப்பு - கவர்ச்சியான தலைவரைத் தேடும் அலங்கோலம் - ஆடம்பரங்களில் ஈடுபாடு முதலிய எல்லாவற்றையும் ஒழுங்குபடுத்துவது தமிழ்த்தேசியமே! தமிழ்நாட்டு மக்கள் சமுதாயம் அடைய வேண்டிய இலட்சிய இலக்கு தமிழ்த்தேசிய வெற்றியே; தமிழத்தேசிய இறையாண்மை மீட்பே! தமிழ்ச் சமூகத்தில் பரவியுள்ள பண்பாட்டு அழுக்குகளை நீக்கித் தூய்மைப்படுத்தவும் இதுவே இன்றியமையாத் தேவை!

சமூக மாற்றத்தின் சமூக அடித்தளம் தேசிய இனத் தாயகமே!

தமிழ்நாட்டில் எந்தவகை சமூக மாற்றம் செய்ய வேண்டுமானாலும் தமிழ் இன உரிமை மீட்பும் - தமிழ்நாட்டிற்கென்ற தனித்திட்டமும் தேவை! எடுத்துக் காட்டாகத் தமிழ்நாட்டில் இரண்டு வகை சமூக மாற்றங்கள் 85 ஆண்டுகளாகப் பேசப்பட்டு வருகின்றன. ஒன்று, வர்ண - சாதி ஆதிக்க மற்ற - ஆரியத்துவா ஆதிக்கமற்ற - சமநீதி - சமூக நீதிச் சமூகம் அமைத்தல்; மற்றொன்று, பொதுவுடைமையரின் (கம்யூனிஸ்ட்டுகளின்) நிகரமைச் (சோசலிச) சமூகப் புரட்சிக்கான தேசிய சனநாயகப் புரட்சி அல்லது மக்கள் சனநாயகப் புரட்சி நடத்துதல்!

இந்த இரண்டு வகைப் புரட்சிகளும் நடைபெறவில்லை என்பது பெரிய செய்தி அல்ல! இவ்விரண்டையும் முன்வைத்த கட்சிகள் பகை ஆரிய இனத்தோடும், பகை பெரு முதலாளியக் கட்சிகளோடும் கூட்டணி சேர்ந்தால்தான் சட்டமன்ற - நாடாளுமன்றத் தேர்தலைச் சந்திக்க முடியும் என்ற அவலம்! தி,மு.க., காங்கிரசு அல்லது பாசகவுடன் கூட்டணி சேர்ந்தால்தான் பயனடைய முடியும் என்ற நிலை! காங்கிரசு, பா.ச.க. இரண்டுமே ஆரிய – பிராமணிய, ஆரிய –வைசிய, இந்தி - ஏகாதிபத்தியக் கட்சிகள்! இவற்றுடன் கூட்டணி சேர்ந்து சமூகநீதியை மீட்போம் என்பதும், இந்தியை என்றும் எதிர்ப்போம் என்பதும் பெரிய மோசடி அல்லவா?

சமூக நீதி பேசும் தி.மு.க., தி.க. போன்ற கட்சிகள் தமிழ்நாட்டில் மட்டும்தான் இருக்கின்றன. ஆரியத்துவா - சனாதன பிராமணிய ஆற்றல்கள் இந்தியா முழுதும் இருக்கின்றன. இந்திய அரசின் ஆதிக்கத்திலும் இருக்கின்றன. அதே வேளை, ஆரிய வர்ணாசிரமத்தால் பாதிக்கப்பட்ட மக்கள் இந்தியா முழுதும் இருக்கின்றனர். பகுத்தறிவு பேசுவோரும் பல மாநிலங்களில் இருக்கின்றனர். ஆனால் அவர்கள் தங்கள் மாநிலங்களில் தி.மு.க.வையோ, தி.க.வையோ தொடங்கி வளர்க்க மாட்டார்கள். ஏன்? இன- மொழி - தாயகங்கள்! அந்தந்த இனத்தாயகத்தைச் சேர்ந்த அமைப்பால் – தலைமையால் - மட்டுமே மக்களைப் புரட்சிகர மாற்றத்திற்குத் திரட்ட முடியும்.

மார்க்சிய நிகரமைப் புரட்சித்திட்டத்தை முன்வைத்து மக்களைத் திரட்டிய சி.பி.எம். கட்சி, மேற்கு வங்கம், திரிபுரா, கேரளம் ஆகிய மூன்று மாநிலங்களில் மட்டுமே மக்கள்திரள் புரட்சி இயக்கமாக வளர முடிந்தது. மற்ற மாநிலங்களில் அவ்வளர்ச்சி இல்லை. ஆயுதப் புரட்சி செய்யும் மாவோயிஸ்ட் கட்சி, ஆந்திரப்பிரதேசம், சத்தீசுகர் மாநிலங்களில் மலைவாழ் பழங்குடி மக்களிடம் மட்டுமே வேர்பிடிக்க முடிந்தது. தொழிலாளளிகளும் உழவர்களும் எல்லா மாநிலங்களிலும் இருக்கிறார்கள்!

ஓர் இனத்தாயகத்தில், அந்த இனத் தலைவர்களால் - போராளிகளால் - நடத்தப்படும் புரட்சியைத்தான் அந்த இனமக்கள் ஆதரிப்பார்கள்; அதில் பங்கெடுப்பார்கள். மக்களின் உளவியலையும் மனித மன உணர்வையும் கணக்கில் கொள்ள வேண்டும்.

“கப்சா” என்று தெரிந்தே கம்யூனிஸ்ட்டுக் கட்சிகள் இந்தியப் புரட்சி என்றும் ஒட்டுமொத்த இந்திய சமூக மாற்றம் என்றும் பேசிவருகின்றன! காங்கிரசு – பா.ச.க. போன்ற ஆரிய - இந்தி - ஏகாதிபத்தியவாதக் கட்சிகளுடன் கூட்டணி வைத்துக் கொண்டே, திராவிட சமூக நீதி பேசி தமிழர்களைத் தெட்டி வருகின்றன தி.மு.க.வும் தி.க.வும்!

எந்த வகைப் புரட்சிக்கும் - சமூக மாற்றத்திற்கும் ஒரு தேசிய இனம்,- அதன் தாய்மொழி,- அதன் தாயகம் மூன்றும்தான் அடிப்படை அலகு! ஒரே நேரத்தில் பலவகை தேசிய இனத்தாயகங்களில், ஒரு பொதுக் கொள்கைக்காக சமூகப் புரட்சியோ, சமூகமாற்ற எழுச்சியோ நடத்த முடியாது! இந்த வரையறை மனித உளவியல் - சமூகப் புறநிலை இரண்டின் அடிப்படையில் கட்டமைக்கப்பட்டது.

எனவே எந்த வகை சமூக மாற்றத்திற்கும் அடித்தளம் தமிழர்களுக்குத் தமிழ்த்தேசமே!

===============================
தலைமைச் செயலகம்,
தமிழ்த்தேசியப் பேரியக்கம்
=================================
பேச: 9443918095, புலனம் : 9841949462
முகநூல் : www.fb.com/tamizhdesiyam
ஊடகம் : www.kannottam.com
இணையம் : www.tamizhdesiyam.com
சுட்டுரை : www.twitter.com/Tamizhdesiyam
காணொலிகள் : youtube.com/Tamizhdesiyam
==============================

Labels: , , ,


தோழர் மணியரசன்
அவர்களின் படைப்புகள் மற்றும் கருத்துக்களை இத்தளத்தில் காணலாம்.
வாசகர்களின் கருத்துக்களும் வரவேற்கப்படுகின்றன.

Web This Blog

தொகுப்பு

முந்தைய பதிவுகள்

தோழமைத் தளங்கள்