<body><script type="text/javascript"> function setAttributeOnload(object, attribute, val) { if(window.addEventListener) { window.addEventListener('load', function(){ object[attribute] = val; }, false); } else { window.attachEvent('onload', function(){ object[attribute] = val; }); } } </script> <div id="navbar-iframe-container"></div> <script type="text/javascript" src="https://apis.google.com/js/platform.js"></script> <script type="text/javascript"> gapi.load("gapi.iframes:gapi.iframes.style.bubble", function() { if (gapi.iframes && gapi.iframes.getContext) { gapi.iframes.getContext().openChild({ url: 'https://www.blogger.com/navbar/6955529389241309188?origin\x3dhttp://thozharmaniyarasan.blogspot.com', where: document.getElementById("navbar-iframe-container"), id: "navbar-iframe" }); } }); </script>

"கோவை மேம்பாலத்தை “கோ. துரைசாமி” பாலம் என்று மாற்றுக!" ---- பெ. மணியரசன், தலைவர் – தமிழ்த்தேசியப் பேரியக்கம்.

Friday, October 10, 2025


கோவை மேம்பாலத்தை
“கோ. துரைசாமி” பாலம் என்று மாற்றுக!
====================================
பெ. மணியரசன்,
தலைவர் – தமிழ்த்தேசியப் பேரியக்கம்.
====================================


கோவையில் புதிதாகக் கட்டப்பட்டுள்ள 10 கி.மீ. மேம்பாலத்திற்கு “ஜி.டி. நாயுடு மேம்பாலம்” என்று தமிழ்நாடு அரசு பெயர் சூட்டியிருப்பதற்கு எதிர்ப்புகளும், ஆதரவுகளும் கூறப்பட்டு வருகின்றன.

தமிழ்நாட்டில் எம்.ஜி.ஆர். முதலமைச்சராக இருந்தபோது, ஈ.வெ.ரா. நூற்றாண்டு விழா கொண்டாடப்பட்ட காலத்தில் 1978 அக்டோபர் 3ஆம் நாள், ஓர் அரசாணை போடப்பட்டது. மாநகராட்சி, நகராட்சி, ஊராட்சிகளில் தீர்மானம் நிறைவேற்றி, தெருக்கள் – சாலைகளில் உள்ள பெயர்களில் உள்ள சாதிப் பெயர்களை நீக்க வேண்டும் என்று அந்த அரசாணை கூறியது.

அதன்படி சென்னை மாநகராட்சியில் பாரிமுனைப் பகுதியில் உள்ள “தம்பு செட்டித் தெரு”வில் உள்ள செட்டி என்பது நீக்கப்பட்டு “தம்பு தெரு” என்று மாற்றப்பட்டது. இது ஓர் எடுத்துக்காட்டு.

இப்போதுள்ள தி.மு.க.வின் “திராவிட மாடல்” ஆட்சியில், 06.10.2025 நாளிட்டு தமிழ்நாடு அரசின் தலைமைச் செயலாளர் வெளியிட்ட அரசாணையில், தமிழ்நாடு முதல்வர் சட்டப்பேரவையில் 29.04.2025 அன்று அறிவித்தபடி, “குடியிருப்புகள், தெருக்கள், சாலைகள், நீர்நிலைகள் போன்றவற்றில் உள்ள சாதிப் பெயர்களை நீக்க வேண்டும். உள்ளூர் மக்கள் – அந்த சாதிப் பெயர்கள் இருப்பதால் எந்தப் பிரச்சினையும் இல்லை என்று விரும்பினால், அப்பெயர்களை மாற்ற வேண்டியதில்லை” என்று கூறப்பட்டுள்ளது.

6.10.2025 அன்று இவ்வாறு – சாதி நீக்க அரசாணை வெளியிட்டுவிட்டு, 09.10.2025 அன்று கோவை மேம்பாலத்திற்கு “ஜி.டி. நாயுடு மேம்பாலம்” என்று சாதிப் பெயருடன் பெயர் சூட்டியது ஏன் என்ற வினா மக்கள் மன்றத்தில், சமூக மாற்றம் விரும்புவோர் மனத்தில் எழுவது இயல்பே!

சமூகநீதியின் மொத்த சேமிப்புக் கிடங்கான திராவிட முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், மேற்படி வினாவுக்கு இன்னும் விடை சொல்லவில்லை! ஆனால், தமிழ்நாட்டில் முதுபெரும் மூத்த தலைவராக உள்ள திராவிடர் கழகத் தலைவர் ஐயா கி. வீரமணி அவர்கள், வரிந்து கட்டிக் கொண்டு, கண்டன அறிக்கை வெளியிட்டு, கோவை மேம்பாலத்திற்கு சாதி அடையாளத்துடன் பெயர் சூட்டியதை எதிர்ப்போரைத் தாக்கியுள்ளார்.

06.10.2025 அன்று சாலைகளுக்கு சாதி ஒட்டுள்ள பெயர்களைச் சூட்டக் கூடாது என்று ஆணை பிறப்பித்த தமிழ்நாடு அரசு, 09.10.2025 அன்று நாயுடு என்ற சாதிப் பெயரை தமிழ்நாட்டிலேயே மிக நீளமான கோவை மேம்பாலத்திற்குச் சூட்டியதை தவறு என்று குற்றம்சாட்டியோரை, “அரை வேக்காடுகள்” என்றும், “இது விஷமத்தனம்” என்றும் திட்டியுள்ளார். எதிர்க்கருத்துகளை அறிவுரை போல் சொல்வதுதான் ஒரு முதுபெரும் தலைவர்க்கு அழகு!

“சாதி” குறித்த ஐயா வீரமணி அவர்களின் இரட்டை நிலைபாட்டை சுட்டிக்காட்ட விரும்புகிறேன்.

ஈ.வெ.ரா. வாழ்க்கை வரலாற்றை ஐயா வீரமணி அவர்கள் திரைப்படமாக எடுத்தார். நடிகர் சத்தியராஜ் அவர்கள் தாம் ஈ.வெ.ரா. அருமையாக நடித்திருந்தார். அந்தத் தமிழ்த் திரைப்படத்தின் பெயர் “பெரியார்”! அதேபடம் தெலுங்கில் மொழி மாற்றம் (டப்பிங்) செய்யப்பட்டு ஆந்திராவில் வெளியிடப்பட்டது. அதில் அதன் பெயர் “ஈ.வெ. ராமசாமி நாயக்கர்”!

அவர்களின் திராவிட நாட்டுக்குள்ளேயே தமிழ்நாட்டில் சாதிப் பெயர் கூடாது, தெலுங்கர் நாட்டுக்குச் சாதிப் பெயர் வேண்டும். அதுபோல் தமிழ்நாட்டிற்குள்ளும் தமிழர்களின் பெயரில் சாதி ஒட்டு கூடாது. தமிழ்நாட்டிற்குள்ளேயே தெலுங்கு, கன்னட, மலையாளப் பெயர்களில் சாதி ஒட்டு இருக்கலாம்.

இதுதான் தமிழ்நாட்டில் “திராவிடம்” திணிக்கப்பட்டதற்கான உண்மைக்காரணம் என்ற ஐயம் இளையோர்க்கு எழுமா, எழாதா?

கோ. துரைசாமி என்கிற ஜி.டி. நாயுடு
-------------------------------------------------
கோ. துரைசாமி (ஜி.டி. நாயுடு) அவர்கள் அறிவியல் கண்டுபிடிப்புகளில் சாதனைகள் நிகழ்த்தியவர்கள் என்பார்கள். அதுபற்றிய அறிதல்கள் எனக்கு போதிய அளவில் இல்லை. ஆனால், ஜி.டி. நாயுடு அவர்கள் தனித்தமிழ்நாடு விடுதலை கோரியவர். இந்தி எதிர்ப்பில் தீவிரம் காட்டியவர் என்பது எனக்கு நன்கு தெரியும்.

தனித்தமிழ் அறிஞர் அண்ணல் தங்கோ அவர்களின் பெயரன் தம்பி அருட்செல்வன் அவர்கள், ஜி.டி. நாயுடு அவர்கள் அண்ணல் தங்கோ அவர்களுக்கு எழுதியிருந்த ஒரு மடலை என்னிடம் காட்டினார். அதில், “தனித்தமிழ்நாடு கேட்டுப் போராடுங்கள்; அது மிகமிகத் தேவை! என்னால் ஆன உதவிகள் அனைத்தும் செய்கிறேன்” என்று கூறியிருந்தார்.

நான் ஜி.டி. நாயுடு அவர்களின் சொற்பொழிவை இரு இடங்களில் கேட்டிருக்கிறேன். 1966ஆம் ஆண்டு, தஞ்சை திலகர் திடலில் மாபெரும் இந்தி எதிர்ப்பு மாநாட்டை தி.மு.க. மாணவரணி நடத்தியது. (1965இல் மொழிப் போர் நடந்தது.) நான் திலகர் திடல் மாநாட்டிற்குப் போயிருந்தேன். அண்ணா, கருணாநிதி, பாவலரேறு பெருஞ்சித்திரனார், ஜி.டி. நாயுடு உள்ளிட்ட பலரும் பேசினார்கள்.

இந்தித் திணிப்பைக் கடுமையாக எதிர்த்து ஜி.டி. நாயுடு பேசினார்.

அதன்பிறகு, 1968 சனவரியில் சென்னையில் இரண்டாம் உலகத் தமிழாராய்ச்சி மாநாடு நடந்தது. அப்போது சென்னைத் தீவுத் திடலில் பொது மக்களுக்கான திறந்தவெளி அரங்கம் பந்தல் போடப்பட்டு நடந்து கொண்டிருந்தது. தீவுத் திடல் பொது அரங்கத்தில், ஜி.டி. நாயுடு அவர்கள் கலந்து கொண்டு, தமிழ் சார்பாக சிறப்பாகப் பேசினார்கள்.

ஈ.வெ.ரா.வைப் போல் தமிழ் எதிர்ப்பாளர் அல்லர் ஜி.டி. நாயுடு! தமிழ் வளர்ப்பாளர். இந்தி எதிர்ப்பாளர்!

எனவே, அவர் பெயரைச் சாலைக்கோ அல்லது பாலத்திற்கோ சூட்டுவது பொருத்தம்தான்!

அதேவேளை தலைவர்கள், தெருக்கள், சாலைகள் பெயரில் சாதி ஒட்டு கூடாது என்ற தமிழ்நாடு அரசின் நிலைப்பாடு சரிதான்! இதற்கு ஜி.டி. நாயுடுவுக்கு விதிவிலக்கு கொடுப்பீர்கள்; பெரியவர் முத்துராமலிங்கத் தேவர்க்கு கொடுக்க மாட்டீர்கள் என்றால், அதில் இனப்பாகுபாடு இருக்கிறது என்று தமிழர்கள் ஐயுற்றால், ஆவேசப்பட்டால் குற்றமா? குற்றம் இல்லை!

“கோ. துரைசாமி மேம்பாலம்” என்று பெரிய வடிவில் எழுதிவிட்டு, அதன் கீழே மிகச்சிறிய எழுத்தில் “ஜி.டி. நாயுடு” என்று அழைக்கப்பட்ட கோ. துரைசாமி என்று அடைப்புக்குள் குறிப்புக் கொடுங்கள். ஐயா கோ. துரைசாமி அவர்களின் குடும்பத்தினர் இன்று கோவையில் நடத்தி வரும் அருங்காட்சியகம் உள்ளிட்ட பல்வேறு நிறுவனங்களுக்கு “நாயுடு” என்ற சாதிப் பின்னொட்டை நீக்கி, “ஜி.டி.” (GEEDEE) என்றே பெயரிட்டுள்ளார்கள். அவர்களின் குடும்பத்தாரை விடவும் கூடுதலாக திராவிட மாடல் “நாயுடு”வை சேர்ப்பதேன்?

தமிழ்நாட்டிற்குள்ளேயே தமிழ் இனத்தாரைத் தாழ்த்திவிட்டு, அவர்களின் உளத்தியலில் தாழ்வு மனப்பான்மையை வளர்த்துவிட்டு, தமிழ்நாட்டில் தெலுங்கர், கன்னடர் மேலாதிக்கத்தை நிலைநாட்டத்தான் ஈ.வெ.ரா. திராவிட இனத் திணிப்பை செய்தார் என்பதைத் தமிழர்கள் புரிந்து கொண்டுவிட்ட காலம் இது! கருணாநிதியும், மு.க. ஸ்டாலினும் தெலுங்கர் – கன்னடர் ஆதிக்க அரசியலில் ஈ.வெ.ரா.வின் உண்மையான வாரிசுகள்!

இன்றையத் தி.மு.க.வின் – தி.மு.க. அமைச்சர்களின் கட்டமைப்பைப் பார்த்தாலே, இந்த உண்மையைப் புரிந்து கொள்ளலாம்.

சாதிப் பெயர் நீக்க அரசாணையில், “தெருக்கள் மற்றும் சாலைகள்” என்ற தலைப்பில், சான்றோர்கள் / தலைவர்கள் பெயர்கள் போடப்படுவதற்கு எடுத்துக்காட்டாக 16 பெயர்களை முன்மொழிந்துள்ளார்கள். “1. திருவள்ளுவர், 2. ஔவையார், 3. கபிலர், 4. சீத்தலைச்சாத்தனார், 5. நக்கீரர், 6. பிசிராந்தையார், 7. கம்பர், 8. அகத்தியர், 9. வீரமாமுனிவர், 10. பாரதியார், 11. பாரதிதாசன், 12. மகாத்மா காந்தி, 13. தந்தை பெரியார், 14. பேரறிஞர் அண்ணா, 15. காமராசர், 16. கலைஞர்”.

இந்த அரசாணையில் இதன் கீழ் கையொப்பமிட்டுள்ள அதிகாரி- நா. முருகானந்தம், அரசுத் தலைமைச் செயலாளர்.

திராவிடர்கள் தந்தை பெரியார், பேரறிஞர் அண்ணா, கலைஞர் என்று புனைவு சிறப்புப் பெயர்களால் குறிக்கப்பட்டுள்ளார்கள். அவர்களின் அசல் பெயர்கள் குறிப்பிடப் படவில்லை! ஆனால், தமிழர்களான பாரதிதாசன் பெயருக்கு முன்னால் “பாவேந்தர்” போடப்படவில்லை; காமராசர் பெயருக்கு முன்னால் “பெருந்தலைவர்” போடப்பட வில்லை!

சூட்சுமம் புரிகிறதா தமிழர்களே!

எனவே, தமிழின உணர்வு இளையோர் ஐயா கோ. துரைசாமி அவர்களின் பெயரை “ஜி.டி. நாயுடு” எனக் குறிப்பிட்டு, மேம்பாலத்திற்கு சூட்டுவதை எதிர்த்துக் கொந்தளிக்கிறார்கள்.

தமிழ்த்தேசியர்க்கு..
---------------------------
திராவிடத் திணிப்பில் தெலுங்கர் – கன்னடர் – மலையாளி ஆதிக்க அரசியல் இருக்கிறது என்பதைப் புரிந்து கொள்ள வேண்டும்; எச்சரிக்கையாக செயல்பட வேண்டும். அதேவேளை, பல நூறு ஆண்டுகளாகத் தமிழ்நாட்டைத் தாயகமாகக் கொண்டு வாழும் தெலுங்கு, கன்னடம், உருது, சௌராட்டிரம், மராத்தி பேசும் மக்களை அயலாராகக் கருதக்கூடாது. இந்தத் தமிழ் மண்ணின் மக்களாகவே நாம் மதிக்க வேண்டும்.

தமிழ்நாட்டின் ஆட்சிமொழி, கல்விமொழி தமிழ் மட்டுமே என்பதில் உறுதியாக இருக்க வேண்டும்.

ஆரிய பிராமண – ஆரிய வைசிய – இந்தி ஏகாதிபத்தியர்களிடம் அடிமைப்பட்டிருக்கும் தமிழ்நாட்டை - தமிழர்களை மீட்க ஒட்டுமொத்தத் தமிழ்நாடும் ஒருங்கிணைந்து போராட வேண்டும். இந்தி ஆதிக்கத்திற்கும் - தெலுங்கு போன்ற இன்னொரு ஆதிக்கத்திற்கும் அடிமையாகக் கூடாது என்ற எச்சரிக்கையும் வேண்டும். பல நூறாண்டுகளாக தமிழ் மண்ணின் மக்களாக வாழும் பிறமொழி பேசுவோரில், ஆதிக்கவெறியுடன் இயங்கும் ஒரு சிலரைப் புறக்கணித்துவிட்டு, அவர்களுக்குள் தமிழின உணர்வோடு வருவோரை அரவணைக்கும் பண்பும், தமிழர்களுக்கு வேண்டும்.

தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் தலையிட்டு, கோவை மேம்பாலத்தின் பெயரை “கோ. துரைசாமி பாலம்” என்று மாற்றும்படி கோருவோம்!

=================================
தலைமைச் செயலகம்,
தமிழ்த்தேசியப் பேரியக்கம்
=================================
பேச: 9443918095, புலனம் : 9841949462
முகநூல் : www.fb.com/tamizhdesiyam


ஊடகம் : www.kannottam.com

நூல்கள் பெற : www.panmaiveli.com

இணையம் : www.tamizhdesiyam.com

சுட்டுரை : www.twitter.com/Tamizhdesiyam

காணொலிகள் : youtube.com/Tamizhdesiyam

=================================


 

Labels: , ,

"திருவண்ணாமலையில் வழிபாட்டிற்கு வந்த இளம்பெண்ணைச் சீரழித்த காவல்துறையினர்! இதுதான் திராவிட மாடலா? ---- பெ. மணியரசன், தலைவர் – தமிழ்த்தேசியப் பேரியக்கம்.

Thursday, October 9, 2025


திருவண்ணாமலையில் வழிபாட்டிற்கு வந்த

இளம்பெண்ணைச் சீரழித்த காவல்துறையினர்!
இதுதான் திராவிட மாடலா?
====================================
ஐயா பெ. மணியரசன்,
தலைவர் – தமிழ்த்தேசியப் பேரியக்கம்.
====================================


ஆட்சியாளர்களைத் தேர்வு செய்யும் அரசியலில் ஒழுக்கக் கேடும் ஊழல் சீரழிவும் மலிந்தால் அந்தச் சமூகமே பாதிக்கப்படும். இந்தக் கணிப்பிற்கான சன்றாகத் திருவண்ணாமலையில் வழிபாட்டிற்கு வந்த பெண்கள் இருவரில் 25 அகவை உடைய திருமணம் ஆகாத இளம்பெண்ணை தமிழ்நாடு அரசின் காவல்துறையில் பணியாற்றும் இரு காவலர்கள் – பின்னிரவு நேரத்தில் ஏமாற்றி, காட்டுக்குள் அழைத்துச் சென்று – பாலியல் வன்கொடுமை செய்து, சித்திரவதை செய்து காமக் களியாட்டம் நடத்தியுள்ளார்கள். அவர்கள் பிடிபட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்கள்.

அத்தோடு இந்தக் காமவெறிக் கயவர்களின் வன்செயலை – மறந்துவிட முடியாது. திருவண்ணாமலை கிழக்குக் காவல் நிலையத்தைச் சேர்ந்த காவலர்கள் சுரேஷ்ராஜ், சுந்தர் ஆகிய இருவரும் திருவண்ணாமலையில் இரவுக் காவல் பணியில் இருந்துள்ளார்கள். 30.09.2025 அதிகாலை 2.30 மணியளவில் ஆந்திராவிலிருந்து வாழைத்தார் ஏற்றி வந்த சரக்குந்தில் ஒரு வயதான பெண்ணும், அவரது வளர்ப்பு மகளான 19 அகவை இளம்பெண்ணும் வந்திருக்கிறார்கள். அந்த சரக்குந்தின் ஓட்டுநர் அந்த இளம்பெண்ணின் வளர்ப்புத் தாயின் தம்பி!

திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலுக்குப் போகும் வழியில் இரவுக் காவல் பணியில் இருந்த காவலர்கள் சுரேஷ்குமார், சுந்தர் ஆகிய இருவரும் சரக்குந்தை மறித்து விசாரித்துள்ளார்கள். கோயிலுக்குக் கொண்டு போய் இவர்களை விடப் போகிறேன் என்று ஓட்டுநர் கூறியுள்ளார். நாங்கள் கொண்டு போய் விடுகிறோம், நீ போ என்று சரக்குந்து ஓட்டுநரைப் போகச் சொல்லியிருக்கிறார்கள்.

அதன்பிறகு, அக்காவலர் இருவரும் மேற்படி இரு பெண்களையும் அருகில் காட்டுப் பகுதிக்கு அழைத்துச் சென்று இளம்பெண்ணை மாறிமாறி – பாலியல் சித்திரவதை செய்துள்ளனர்.

இச்செய்தி விடிந்ததும் தெரிந்த பின்னர் உள்ளூர்க்காரர்கள் காவல்துறையில் புகார் செய்துள்ளார்கள். காவல்துறை மேலதிகாரிகள் நடவடிக்கை எடுத்து, அந்தக் காமவெறிக் காவலர்கள் இருவரையும் சிறையில் தள்ளியுள்ளார்கள். காக்கி உடுப்பில், அலைந்த இந்தக் காமக் கயவர்கள் – தமிழ்நாட்டுச் சமூகம், தமிழ்நாட்டு அரசுத் துறை முதலிய அனைத்தும் எவ்வளவு சீரழிந்து சின்னாபின்னமாகிக் கிடக்கின்றன என்பதற்கு எடுத்துக்காட்டு! அதேபோல், தமிழ்ச் சமூகமும் எவ்வளவு சீரழிவுக்கு உள்ளாகியுள்ளது என்பதற்கும் உரைகல்!

“திராவிட மாடல்” முதலமைச்சர் மு.க. ஸ்டாலினோ, அடிக்கடி இந்தியாவிலேயே பெண்களுக்குப் பாதுகாப்பான மாநிலமாகத் தமிழ்நாடு விளங்குகிறது என்று பரப்புரை செய்து வருகிறார். இவரிடம் இட்லரின் கோயபல்சே தோற்று விடுவார்!

இந்த அரசியல் சாடலோடு, நாம் மனநிறைவடையக் கூடாது!

நம் சமூகம் ஏன் இவ்வாறு சீரழிந்து கிடக்கிறது? பொறுக்கித்தனத்தின் புகலிடமாகத் தமிழ்நாட்டுத் தேர்தல் அரசியல் சீரழிந்து கிடக்கிறது. அரசியல் சீரழிந்தால் – ஆட்சியாளர்கள் சீரழிகிறார்கள் என்று பொருள்! அதன்பிறகு, அனைத்தும் சீரழியும். தவறு செய்தால், ஊழல் அரசியல் பிரமுகர்கள் – தலைவர்கள் வழியாகத் தப்பி விடலாம் என்ற தெம்பும் சீரழிவாளர்களை ஊக்கப்படுத்துகிறது.

மக்கள் சார்ந்த இலட்சியம் எதுவும் அற்ற மக்களை ஏமாற்றி வாக்கு வாங்கும் “திறமை”யை மட்டுமே நம்பி – சீரழிந்து கிடக்கிறது தமிழ்நாட்டு அரசியல்! இந்தச் சீரழிவின் சிகரமாகத் திராவிட அரசியல் உள்ளது.

தமிழ்ச் சமூகத்தை மேம்படுத்த – முறைப்படுத்த – உண்மையான இலட்சியத் தமிழ்த்தேசிய அரசியலை முன்னெடுப்போம்!

=================================
தலைமைச் செயலகம்,
தமிழ்த்தேசியப் பேரியக்கம்
=================================
பேச: 9443918095, புலனம் : 9841949462
முகநூல் : www.fb.com/tamizhdesiyam

ஊடகம் : www.kannottam.com

நூல்கள் பெற : www.panmaiveli.com

இணையம் : www.tamizhdesiyam.com

சுட்டுரை : www.twitter.com/Tamizhdesiyam

காணொலிகள் : youtube.com/Tamizhdesiyam

=================================

Labels: , , ,

"உச்ச நீதிமன்றத் தலைமை நீதிநாயகம் பி.ஆர். கவாய் மீது தாக்குதல் தொடுத்த நபரைக் கைது செய்து வழக்கு நடத்த வேண்டும்! ---- தமிழ்த்தேசியப் பேரியக்கத் தலைவர் பெ. மணியரசன் அறிக்கை!

Tuesday, October 7, 2025


உச்ச நீதிமன்றத் தலைமை நீதிநாயகம்
பி.ஆர். கவாய் மீது தாக்குதல் தொடுத்த நபரைக்
கைது செய்து வழக்கு நடத்த வேண்டும்!
==========================================
தமிழ்த்தேசியப் பேரியக்கத்
தலைவர் பெ. மணியரசன் அறிக்கை!
==========================================

புதுதில்லியில், உச்ச நீதிமன்றத்தில் தலைமை நீதிநாயகம் உயர்திரு. பி.ஆர். கவாய் அவர்கள் மீது 06.10.2025 அன்று முற்பகல், இந்துத்துவா வெறியர் ஒருவர் தனது காலணியைக் கழற்றி வீசியுள்ள இழிசெயல் கடுமையான கண்டனத்திற்குரியது.

நேற்று முன்தினம் (06.10.2025) முற்பகல் உச்ச நீதிமன்றத் தலைமை நீதிநாயகம் பி.ஆர். கவாய் – நீதிநாயகம் கே. வினோத் சந்திரன் அமர்வு, வழக்குகளை விசாரிக்கத் தொடங்கிய நிலையில், தில்லியைச் சேர்ந்த 71 அகவை வழக்குரைஞரான ராகேஷ் கிஷோர் என்பவர், தலைமை நீதிபதியை நோக்கித் தனது காலணியை வீசியுள்ளார். நீதிபதிகள் தங்கள் தலையை சாய்த்து ஒதுங்கிக் கொண்டுள்ளார்கள். மற்றவர்கள் அந்நபரைத் தடுத்து, காவல் துறையினரிடம் ஒப்படைத்துள்ளனர். காவல்துறை விசாரித்துவிட்டு, அந்நபரை விடுவித்துவிட்டதாகக் கூறப்படுகிறது.

அந்த ராகேஷ் கிஷோர் என்ற நபர், மத்தியப்பிரதேசத்தில் உலக மரபுச் சின்னங்களில் ஒன்றாக விளங்கும் கஜூராகோ கோயில் வளாகத்திற்குள் அமைந்துள்ள ஜவாரி கோயிலில், விஷ்ணு சாமி சிலையை நிறுவக் கோரி உச்ச நீதிமன்றத்தில் ஏற்கெனவே வழக்குத் தொடுத்துள்ளார். அதை விசாரித்த தலைமை நீதிநாயகம் பி.ஆர். கவாய் அவர்கள், அவ்வழக்கின் தன்மையை விசாரித்துப் புரிந்து கொண்டு, அதைத் தள்ளுபடி செய்துள்ளார்.

அவ்வழக்கின் செயற்கைத் தன்மையை உணர்ந்து கொண்ட கவாய், “இது முழுக்க முழுக்க விளம்பர நோக்கத்துடன் தாக்கல் செய்யப்பட்ட வழக்கு; இச்சிக்கலைத் தீர்க்க நீங்கள் வாதாடும் கடவுளிடம் கோரிக்கை வையுங்கள்!” என்று அப்போது கூறியுள்ளார். இதற்குப் பழிவாங்க மேற்படி இந்துத்துவா வழக்கறிஞர் ராகேஷ் கிஷோர், இழிசெயலில் ஈடுபட்டுள்ளார்.

இந்துத்துவா அரசியலுக்கு ஆத்திச்சூடி எழுதிய சாவர்க்கரைத் துதிப்போரின் ஆட்சி இந்தியாவில் நடப்பதால், ஆரியத்துவா ஆர்.எஸ்.எஸ். நூற்றாண்டு விழாவை அரசு விழாவாகவே கொண்டாட துணிந்து விட்டார்கள். இப்போது, உச்ச நீதிமன்றத்தின் தற்சார்பை – வர்ணாசிரமத்திற்கு உட்பட வலியுறுத்தும் நோக்கத்துடன் உச்ச நீதிமன்றத் தலைமை நீதிநாயகம் மீது தாக்குதல் நடந்திருக்கிறது.

உச்ச நீதிமன்றத் தலைமை நீதிநாயகத்தை அவமானப்படுத்திய ராகேஷ் கிஷோர் மீது உரிய வழக்குப்பதிவு செய்து கைது செய்ய வேண்டும் என்று தமிழ்த்தேசியப் பேரியக்கம் சார்பில் கேட்டுக் கொள்கிறேன்.

===============================
தலைமைச் செயலகம்,
தமிழ்த்தேசியப் பேரியக்கம்
=================================
பேச: 9443918095, புலனம் : 9841949462
முகநூல் : www.fb.com/tamizhdesiyam

ஊடகம் : www.kannottam.com

இணையம் : www.tamizhdesiyam.com

சுட்டுரை : www.twitter.com/Tamizhdesiyam

காணொலிகள் : youtube.com/Tamizhdesiyam

==============================


 

Labels: , ,


தோழர் மணியரசன்
அவர்களின் படைப்புகள் மற்றும் கருத்துக்களை இத்தளத்தில் காணலாம்.
வாசகர்களின் கருத்துக்களும் வரவேற்கப்படுகின்றன.

Web This Blog

தொகுப்பு

முந்தைய பதிவுகள்

தோழமைத் தளங்கள்