<body><script type="text/javascript"> function setAttributeOnload(object, attribute, val) { if(window.addEventListener) { window.addEventListener('load', function(){ object[attribute] = val; }, false); } else { window.attachEvent('onload', function(){ object[attribute] = val; }); } } </script> <div id="navbar-iframe-container"></div> <script type="text/javascript" src="https://apis.google.com/js/platform.js"></script> <script type="text/javascript"> gapi.load("gapi.iframes:gapi.iframes.style.bubble", function() { if (gapi.iframes && gapi.iframes.getContext) { gapi.iframes.getContext().openChild({ url: 'https://www.blogger.com/navbar/6955529389241309188?origin\x3dhttp://thozharmaniyarasan.blogspot.com', where: document.getElementById("navbar-iframe-container"), id: "navbar-iframe" }); } }); </script>

"பெண்ணுரிமைப் போராட்டத்தில் புதிய சிந்தனைகள் வேண்டும்" தோழர் பெ.மணியரசன் பேச்சு

Friday, March 20, 2015

"பெண்ணுரிமைப் போராட்டத்தில் புதிய சிந்தனைகள் வேண்டும்"
-- தோழர் பெ.மணியரசன் பேச்சு

கும்பகோணம் பலநோக்கு சமூகப்பணிச் சங்கமும், குடந்தை நடுநகர் சுழற்சங்கமும் இணைந்து நடத்திய, 'அகில உலக மகளிர் தின விழா', 17.03.2016 அன்று குடந்தையில் கடைபிடிக்கப்பட்டது. நிகழ்வின் தொடக்கத்தில், குடந்தை மகாமகக் குளத்திலிருந்து அண்ணா சிலைவரை மகளிர் பேரணி நடைபெற்றது. பேரணியை, குடந்தை நகர்மன்றத் தலைவர் திரு. இரத்னா சேகர் தொடக்கி வைத்தார்.

பின்னர், கும்பகோணம் பல்நோக்கு சமூகப்பணிச் சங்க வளாகத்தில் நடைபெற்ற மகளிர் நாள் கூட்டத் திற்கு, மருத்துவர் சித்ரா வசீகரன் தலைமையேற்றார். கும்பகோணம் பலநோக்கு சமூகப்பணிச் சங்கச் செயலா ளர் அருள்திரு. எஸ். அல்போன்ஸ், குடந்தை நடுநகர் சுழற்சங்கத் தலைவர் பொறியாளர் வின்செண்ட் பிரபாகரன், சங்க உதவி ஆளுநர் பொறியாளர் எம். பழனிவேலு ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர்.

விழாவில் கலந்து கொண்டு, தமிழ்த் தேசியப் பேரியக்கத் தலைவர் தோழர் பெ. மணியரசன் பேசியதன் எழுத்து வடிவம் :
“உலக மகளிர் நாளை ஒட்டி, கும்பகோணம் பல்நோக்கு சமூகப்பணிச் சங்கமும், குடந்தை நடுநகர் சுழற்சங்கமும் இணைந்து “இன்றைய சூழலில் பெண்களின் நிலை” என்ற தலைப்பில் நடத்தும் கருத்தரங்கில் கலந்து கொண்டு பேசும் வாய்ப்பினை எனக்களித்த நண்பர்களுக்கு மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

பெண்ணுரிமை பற்றிப் பேசும்போது, இப்போது ஆண் அனுபவித்துக் கொண்டிருக்கும் உரிமைகளைப் பெண்ணும் அனுபவிக்கும் உரிமை என்று கூறி - அடைய வேண்டிய உரிமையின் எல்லை ஆண் உரிமை என்றும் - ஆண்தான், பெண்ணுரிமைக்கான முன்மாதிரி என்பது போலவும் கூறிவிடுகிறார்கள். பெண்ணுரிமைப் போராட்டம் தனக்கான முன்மாதிரியை உருவாக்கிக் கொள்ளும்.

அதற்கும் மேலே ஆண் - பெண் வேறுபாடு உடையில் ஒப்பனையில் கூடாது; ஒரே வடிவத்திற்கு ஆணும் பெண்ணும் வந்துவிட வேண்டும் என்பது போலவும் பேசுகிறார்கள். அதற்காக ஆணைப் போல் பெண்ணும் தலைமுடியைக் கிராப் வெட்டிக் கொள்ள வேண்டும், முழுக்கால் சட்டை அணிய வேண்டும், பெண் பூ வைத் துக் கொள்ளக் கூடாது, பொட்டு வைத்துக் கொள்ளக் கூடாது என்றும் கூறுகிறார்கள்.

அழகியல் உணர்வும், அழகியல் தேர்வும் ஆணுக்கு ஒரு வகையில் இருக்கிறது, பெண்ணுக்கு இன்னொரு வகையில் இருக்கிறது. இயற்கைப் படைப்பில் ஆண் வடிவம் வேறு; அது வன்மையானது. பெண் வடிவம் வேறு; அது மென்மையானது.

தன்னை அழகுபடுத்திக் கொள்வதற்கு ஆணின் விருப்பமும் தேர்வும் வேறு. பெண்ணின் விருப்பமும் தேர்வும் வேறு. இதில் ஆண் உளவியல் வேறு; பெண் உளவியல் வேறு.

பதினைந்து வயதில் பெண்ணின் உதட்டுக்கு மேல் முடி முளைத்தால் - ஐயோ மீசை முளைக்கிறதே என வருந்தி, அதை நீக்கி விடுகிறார்கள். அதே பதினைந்து வயதில் ஆணின் உதட்டுக்கு மேல் முடி முளைக்க வில்லையெனில் - ஐயோ மீசை முளைக்கவில்லையே என அவன் கவலைப்படுகிறான்; கருப்பு மையால் தீட்டிக் கொள்கிறான். அழகியல் மனநிலை, ஆணுக்கு வேறு பெண்ணுக்கு வேறு.

புடவை கட்டிக் கொள்வதா, சுடிதார் அணிந்து கொள்வதா, முழுக்கால் சட்டை அணிந்து கொள்வதா என்பதைப் பெண் முடிவு செய்யட்டும். அவர் இவற்றில் எதைத் தேர்வு செய்தாலும் நான் ஏற்றுக் கொள்பவன். ஆனால், பெண்ணே நீ உரிமை பெற வேண்டுமானால் ஆண்போல் கிராப் வெட்டிக் கொள், முழுக்கால் சட்டை போட்டுக் கொள் என்பதில் எனக்கு உடன் பாடில்லை. இது இன்னொரு வகை ஆணாதிக்கம்! இன்னொரு வகைப் பெண்ணடிமைத்தனம்!
புடவை அணிந்தால் பெண்ணுக்கு சம உரிமை கிடைக்காதென்றால் அது என்ன பெண்ணுரிமை! புடவை கட்டியிருந்தாலும் வேறு உடை அணிந்தி ருந்தாலும் அந்தப் பெண்ணுக்கு சம உரிமை இருக்க வேண்டும். அப்போதுதான் அவளின் உரிமையை ஆண் அங்கீகரித்தான் என்பதாகும்.

இலண்டன் வட்ட மேசை மாநாட்டிற்கு காந்தியடிகள் வேட்டி துண்டுடன் சென்றார். அப்படிச் செல்வது சரியா, வெள்ளை அரசாங்கம் ஏற்குமா, அனுமதிக்குமா என்று சர்ச்சை எழுந்தது. “என் நாட்டு மக்களின் உடை இது; அவர்கள் உடையில்தான் நான் வருவேன், எங்கள் மக்களை அங்கீகரிப்பதென்றால் இந்த உடையில் ஆங்கிலேயர்கள் என்னை அங்கீகரிக் கட்டும்; அவர்கள் அப்படி ஏற்கவில்லை யெனில் நான் அங்கு போக வேண்டியதில்லை” என்றார் காந்தி.

வெள்ளை அரசாங்கம் காந்தியடிகள் வேட்டி துண்டோடு வட்ட மேசை மாநாட்டில் கலந்து கொள்ள இசைவளித்தது. காந்தியை அரை நிர்வாணப் பக்கிரி என்று ஒரு காலத்தில் வின்ஸ்டன் சர்ச்சில் அழைத்து நையாண்டி செய்தார். ஆனால், காந்தி சுட்டுக் கொல்லப்பட்ட போது, “நாங்கள் இவ்வளவு காலம் காந்தியைப் பத்திரமாகப் பாதுகாத்தோம். உங்களுக்கு அதிகாரம் கொடுத்த பின், 6 மாதம் கூட அவரை உங்களால் பாதுகாக்க முடியவில்லை” என்று சாடினார். இது தான் காந்திக்கும் காந்தியடிகள் அணிந்த உடைக்கும் கிடைத்த அங்கீகாரம்! எனவே, பெண்கள் அவர்கள் விரும்பும் அழகியல்படி அவர்கள் உடை உடுத்திக் கொண்டு சமத்துவம் பெறும் வாய்ப்புதான் சரியான உரிமை மீட்பாகும்.

பெண் ஆணைப் போல் வலிமை உள்ளவள் என்பதை நிரூபித்தால்தான் சம உரிமைப் பெற முடியும் என்று கருதுவது தவறு. அதற்காக, பெண் இராணு வத்தில் பணிபுரிய வேண்டும் - விமானம் ஓட்ட வேண் டும் என்று வலிந்து திணிக்க வேண்டியதில்லை. அவ்வேலைகளைச் செய்ய பெண்ணுக்கு எந்தத் தடையும் இருக்கக்கூடாது. ஆனால், அவற்றையெல் லாம் செய்தால்தான், சம உரிமை பெறத் தகுதி உண்டு என்று நிபந்தனை போடக் கூடாது. ஆணுக்கு ஒருவகை வலிமை இருக்கிறது, பெண்ணுக்கு இன்னொரு வகை வலிமை இருக்கிறது. கருவைச் சுமந்து குழந்தையைப் பெற்றெடுத்து, மனித குலத்தைப் பெருக்கும் வாய்ப்பும் வலிமையும் ஆணுக்கில்லை. இதனால், ஆணைக் குறைவாக நினைக்கிறோமா? இல்லை. எனவே, சமூகத்திற்கு ஆணும் பெண்ணும் சமமாகத் தேவைப்படு கிறார்கள். வலிமை சார்ந்து, சமத்துவத்தை வழங்குவது நீதியன்று!

பெண்கள் ஆபாசமாக உடை உடுத்திக் கொள்கிறார்கள். அதனால்தான், பாலியல் வல்லுறவுக்கு உள்ளாகிறார்கள் என்ற ஒரு விவாதம் தொலைக் காட்சிகளில் நடக்கிறது. ஆபாசமாக உடையணிவதால் அல்ல, ஆண்களின் வக்கிரத்தால் - ஆண்களின் மேலாதிக்க வெறியால் பாலியல் வல்லுறவுகள் நடைபெறு கின்றன. நான்கு வயது பெண் குழந்தையைக் கூட பாலி யல் வன்முறைக்கு உட்படுத்தியிருக்கிறார்கள். மூதாட் டியை இளைஞர்கள் பாலியல் வல்லுறவு கொண் டார்கள் என்ற செய்தியெல்லாம் வந்து கொண்டுதான் இருக்கிறது.

எனவே, பாலியல் வல்லுறவுக்கு பெண்கள் உடை உடுத்தும் முறை முக்கியக் காரணமல்ல. ஆண்களின் ஆணாதிக்கக் குணம் என்று எதிர்வாதம் புரிகிறார்கள். ஆனால், பாலியல் வல்லுறவுகள் பெருகுவதற்கு உண்மையான காரணம் என்ன என்பதை மேற்கண்ட இருவாதங்களும் சரியாக கண்டறியவில்லை என்றே கருதுகிறேன். ஆண்களுக்குப் பாலியல் வல்லுறவில் ஆணாதிக்கக் குணம் இருக்கிறது. அரைகுறை ஆடை உடுத்தல், பாலுணர்வைத் தூண்டும் நிலையும் இருக் கிறது. ஆனால், ஆணாதிக்கக் குணமுள்ள எல்லா மனிதர்களும் பாலியல் வல்லுறவில் இறங்கிவிடுவ தில்லை. அரைகுறை ஆடை உடுத்த பெண்ணை எல்லா ஆணாதிக்க ஆண்களும் பாலியல் வன் முறைக்கு உள்ளாக்குவதில்லை.

சிலருக்குக் கடும் பசியெடுக்கிறது. அவர்கள் கண்முன்னால் கடைகளில், தள்ளு வண்டிகளில் உணவுப் பண்டங்கள் இருக்கின்றன. காசு கொடுத்து வாங்கி உண்ணப் பணமில்லை. பலர், பசியைத் தாங்கிக் கொண்டு போய் விடுவார்கள். சிலர், உணவைத் திருடிச் சாப்பிட முயல்வார்கள். மனத்தைக் கட்டுப்படுத்த முடிந்தவர்கள் திருடிச் சாப்பிட முனைய மாட்டார்கள். மனத்தைக் கட்டுப்படுத்த முடியாதவர்கள் திருடர் களாக மாறி விடுகிறார்கள்.
எல்லா மனிதர்கள் உடலிலும் பாலியல் உணர்வு இயல்பூக்கமாக (Instinct) பசி, தாகம் போல் இருக்கிறது. அது, குறிப்பிட்ட பருவத்திற்குப் பிறகு காமப்பசியாக வளர்கிறது. உரிய காலத்தில், அங்கீகரிக்கப்பட்ட முறை யில் பாலுறவு வாய்ப்பு கிடைக்காத போது, சிலர் மனத்தை அடக்கிக் கொள்கிறார்கள். சிலர் காமுகத் திருடர்களாக மாறி விடுகிறார்கள். காமப்பசி என்பது, உடல் பசி மட்டுமல்ல. மனப்பசியும் ஆகும். காமம் என்பது, மனிதர்களுக்கு உடல் மற்றும் மனம் சார்ந் ததும் ஆகும். மன வளர்ச்சியில் பல நன்மைகள் இருக் கின்றன. சில தீமைகள் இருக்கின்றன. மன வளர்ச்சி பெறாத விலங்குகள் காமத்தில் ஒழுக்கத்தைக் கடை பிடிக்கின்றன. மன வளர்ச்சி பெற்ற மனிதர்கள், காமத் தில் ஒழுங்கு தவறி நடக்கிறார்கள். கற்பனையில் இன்பம் அனுபவிக்கும் - கற்பனையில் வாழ்ந்து பார்க்கும் மன வளர்ச்சி விலங்குகளுக்கு இல்லை. மனிதர்களுக்கு இருக்கிறது. அதுவே, காமப் பெரும் பசியைத் தூண்டுகிறது.
இந்தக் காமப்பசியை காம நெருப்பாக வளர்க்கின்ற புறத் தூண்டுதல் பற்றி நாம் பேசாமலேயே பாலியல் வன்முறைகளை மட்டும் கண்டிக்கிறோம். ஏடுகள், இதழ்களைப் பிரித்தால் காமக் கனலைத் தூண்டும் விளம்பரங்கள், ஒளிப்படங்கள், திரைப்படங்கள், கதைகள், கட்டுரைகள் இருக்கின்றன. தொலைக் காட்சி யைத் திருகினால், இரு சக்கர வண்டி விளம்பரத்திற்கு ஆண் - பெண் உறவைத் தூண்டக்கூடிய காட்சிகள் வருகின்றன. திரைப்படக் காட்சிகள் வருகின்றன.

ஒரு பனியன் விளம்பரத்திற்குக் கூட பாலுறவைத் தூண்டும் காட்சிகள் விளம்பரமாக வருகின்றன. தெருவில், திரும்பிய பக்கமெல்லாம் காம உணர்ச்சியைத் தூண்டும் காட்சிகள். இதனால், ஒருவன் மனத்தில் காம நெருப்பு மேலும் மேலும் பற்றி எரிகிறது. மனத்தை அடக்க முடி யாதவன், எளிதில் திருடக் கூடிய பலவீனமான இட மாகப் பார்த்து, சிறு பெண் குழந்தையை வல்லுறவு கொள்கிறான். தனியே செல்லும் பெண்ணைப் பாலியல் வன்முறை செய்கிறான். இந்தப் பாலியல் வன்முறையில் ஈடுபட்டவனைக் கட்டாயம் தண்டிக்க வேண்டும். ஆனால், இவன் மனத்தில் திரும்பிய பக்கமெல்லாம் பாலுணர்ச்சி நெருப்பைப் பற்ற வைத்த கயவர்களுக்கு என்ன தண்டனை? யார் வழங்குவது? ஒரு பொறுப் புள்ள சமூகம் - ஒரு பொறுப்புள்ள அரசு காமத் தீயை வளர்க்கும் விளம்பரங்களை, காட்சிகளை தவிர்த்து முறைப்படுத்தும் கடமையைச் செய்தாக வேண்டும்.
இந்தப் பாலியல் வன்முறைகளைத் தவிர்க்க ஆண் - பெண் பிள்ளைகளுக்கு பள்ளிக் கூடங்களில் பாலியல் கல்வி சொல்லித்தர வேண்டும் என்று கூறப்படுகிறது. ஐரோப்பாவில் அமெரிக்காவில் மாணவர்களுக்குப் பாலியல் கல்வி சொல்லித் தரப்படுகிறது. அதனால், அங்கு பாலியல் வன்முறைகள் குறைந்துவிட்டனவா என்றால் இல்லை! நான், ஈழத்தமிழர் கருத்தரங்குகளில் கலந்து கொள்வதற்காக மேற்கத்திய நாடுகள் சிலவற்றிற்குப் போன போது, பருவமடைந்து பள்ளிக்குச் செல்லும் சிறுமிகளுக்கு அவர்களின் தாய்மார்கள் புத்தகப் பைக்குள் கருத்தடை சாதனங்கள் அனுப்புவதை அறிந்தேன்.
அவர்கள், 14 வயதிற்குப் பிறகு தங்குதடையற்ற பாலுறவு கொள்கிறார்கள். அதனால், அவர்களில் பலர் கல்வி நாட்டம் குறைந்து பத்தாம் வகுப்புக்கு மேல் படிக்காத நிலை இருக்கிறது. அந்நாடுகளில் பல் கலைக்கழகப் படிப்பிற்குச் செல்லுகின்ற மாணவர்களின் விகிதம் குறைவாக இருக்கிறது. அதற்குக் காரணம் பிஞ்சிலேயே பழுத்துவிடுவது தான்! பாலியல் நாட்டம் கூடுதலாகி படிப்பை விட்டுவிடுகிறார்கள். அடுத்த வளர்ச்சியாக திருமணம் செய்து கொள்ளாமல் சேர்ந்து வாழ்தல் (Living together) என்ற வடிவத்தை உருவாக்கினார்கள்.

திருமணம் செய்து கொள்ளாமல் குழந்தையும் பெற்றுக் கொள்கிறார்கள். பிறகு, ஒருவ ருக்கு ஒருவர் ஒத்துப் போகவில்லையென்று பிரிந்து விடுகிறார்கள். அந்தக் குழந்தையை வளர்க்கும் பொறுப்பு, அந்தப் பெண்ணின் தலையில்தான் விழுகிறது. அங்கேயும் பெண்தான் கூடுதலாகப் பாதிக்கப்படுகிறாள்.

எனவே, மேற்கு நாடுகளைப் பார்த்து அப்படியே காப்பியடிப்பதும், சரிப்பட்டுவராது.

மனித மனத்தை ஒழுங்குபடுத்தாமல், கட்டுப்படுத் தாமல் மிகை நுகர்வு வாழ்க்கைக்குப் பழக்கிவிட்டால், அது பாலுறவிலும் அராஜகத்தையும் ஒழுங்கின் மையையும் உண்டாக்கும். கவியரசு கண்ணதாசன், ‘அண்ணன் என்னடா தம்பி என்னடா’ என்ற பல்லவி கொண்ட பாடலில்,

“கட்டுச் சேவலை பெட்டைக் கோழிக்கு
கட்டி வைத்தவன் யாரடா? - அவை
எட்டுக் குஞ்சுகள் பெற்ற போதிலும்
சோறு போட்டவன் யாரடா?
வளர்ந்த குஞ்சுகள் பிரிந்த போதிலும்
வருந்தவில்லையே தாயடா
மனித ஜாதியில் துயரம் யாவுமே
மனதினால் வந்த நோயடா” என்றார்.

நம்முடைய தொல்காப்பியர், மூவாயிரம் ஆண்டு களுக்கு முன்பே ஆறாவது அறிவு பகுத்தறிவு என்று சொல்லாமல், மனம் என்றார். மன வளர்ச்சி தான் மனித வாழ்க்கையை மேம்படுத்தும்.

நாம் ஐரோப்பா அமெரிக்காவைப் பார்த்து உலக மயம், தாராளமயம் என்ற கருத்துகளை வளர்த்துக் கொண்டோம். மிகையாக நுகர்ந்தால் அதிகமாகப் பொருட்கள் விற்பனையாகும் என்பது பன்னாட்டுப் பெருமுதலாளிகளின் திட்டம்! மிகை நுகர்வுதான் உயர்ந்த வாழ்க்கையின் இலக்கு என்பதுபோல் காட்டப்பட்டுவிட்டது. இங்கு ஒரு சாமியார் கூட, ‘அத்தனைக்கும் ஆசைப்படு’ என்று ஒரு முழக்கத்தையே உருவாக்கியிருக்கிறார். இவர், கார்ப்பரேட் சாமியார். பொருள்களில் மிகை நுகர்வு வருவது பாலியலில் மிகை நுகர்வாக வளரும். அந்தச் சீரழிவைத்தான் நாம் இப்போது சந்தித்துக் கொண்டிருக்கிறோம்.

நம்முடைய மனம் எப்பொழுதும் அற்பச் செய்தி களில் அதிக நாட்டம் கொள்ளும். இங்கேகூட ஏதோ வொரு நடிகை நடிகரின் அந்தரங்க வாழ்க்கை பற்றி நான் பேசத் தொடங்கினால், ஊசிபோட்டால் ஓசை கேட்கும் அளவிற்கு அமைதி உண்டாகிவிடும். அத்தனை உறுப்புகளும் கூர்மையடைந்துவிடும். நமது உடலமைப்பு, மனம் ஆகியவை அப்படித்தான் இருக் கின்றன. இவற்றை, உயர்ந்த செய்திகளின்பால் உயர்ந்த நோக்கங்களின்பால் திருப்பி அவற்றில் மகிழ்ச்சி காணும் பழக்கத்தை மனத்திற்கு நாம்தான் உருவாக்க வேண்டும். மிகை நுகர்வு எதிலும் கூடாது என்ற பயிற்சி, எளிமையில் மனநிறைவு என்பவை உண்டாக வேண்டும்.

ஒவ்வொரு ஆணிடமும் பெண்ணிடமும் உருவாக்க வேண்டிய மாற்றங்கள் இருக்கின்றன. அங்கிருந்து நாம் தொடங்க வேண்டும். அதேவேளை, காமப்பசியைத் தூண்டி வணிகம் நடத்தும் கயமைத்தனம் ஒழிய வேண்டும்.
அவ்வாறான மனப்பயிற்சியும் அதற்கான சமூகமும் உருவாகும்போதுதான், பாலியல் வன்முறைகளை நாம் தவிர்க்க முடியும். அதற்காக பாலியல் வன்முறைக் குற்றங்களுக்கு தண்டனை கூடாது என்பதல்ல என் வாதம். கட்டாயம் தண்டனை வேண்டும். அதே நேரம், மனப்பயிற்சியும் சமூக மாற்றமும் வேண்டும்.

சமையல் செய்வது பெண்ணின் வேலை என்று ஆகி விட்டதால், பெண் விடுதலைக்கு உணவு விடுதிகளில் சாப்பிடுவது ஒரு வழிமுறை என்ற கருத்து உருவாகியுள்ளது. ஆணோ பெண்ணோ முதலில் கற்றுக் கொள்ள வேண்டிய தற்காப்புக் கலை, கராத்தே, - சிலம் பம், - குங்பூ அல்ல, சமையல் கலையே! சமையல் கலை யைக் கற்றுக் கொள்ளாமலே ஆண்கள் பெண்ணுரிமை பேசுகிறோம்.

சமையல் கலையைக் கற்றுக் கொண்டு, வீட்டுச் சமையல் பணியை - குடும்ப வேலைகளை ஆண், பெண்ணுடன் பகிர்ந்து கொள்ள வேண்டும். அதுதான் பெண்ணுரிமைக்கு ஆண்கள் செய்யும் பங்களிப்பு. ஆனால் இப்பொழுது சமைத்த சாப்பாட்டை தானே போட்டு சாப்பிடக்கூட ஆண்கள் தயாராக இல்லை. இரவு பன்னிரெண்டு மணிக்கு வீட்டுக்குத் திரும்பும் கணவன், தூங்கிக் கொண்டிருக்கும் அந்தப் பெண்ணை எழுப்பி சாப்பாடு போடச் சொல்கிறான். அது மிகக் கொடுமையானது. தானே போட்டு சாப்பிட்டால், சாப்பிட்டது போல் இல்லை என்கிறான். இரவு பன்னி ரெண்டு மணிக்கு நன்கு தூங்கிக் கொண்டிருக்கும் பெண்ணை எழுப்பி, சாப்பாடு போடச் சொல்வது எவ்வளவு பெரிய சித்திரவதை!

தானே போட்டு சாப்பிட்டுவிட்டு, தட்டைக் கழுவி வைக்க வேண்டும். தான் சாப்பிட்ட தட்டை கழுவுவது இழிவு என நினைக்கக்கூடிய ஆணாதிக்க மனப் பான்மை இருக்கிறது. இதைச் சொல்லுகின்ற நான், நானே சாப்பாடு போட்டுக் கொண்டு தட்டைக் கழுவி வைக்கும் பழக்கத்தை உடையவன் தான். சமையல் வேலையில் பங்கு கொள்ளவில்லையே என்ற குற்றவுணர்வு எனக்குண்டு.

சென்னை போன்ற இடங்களில் இரவு 9 மணிக்கு மேல் நடுத்தர மற்றும் உயர் நடுத்தர வகுப்புக் குடும்பங் களைச் சேர்ந்தவர்கள், கணவன் மனைவி குழந்தைகள் என அனைவரும் சாப்பிட, உணவு விடுதிக்கு வந்து விடுகிறார்கள். சில வேளைகளில் இவ்வாறு உணவு விடுதிகளில் சாப்பிடலாம். தொடர்ந்து, உணவு விடுதிகளில் சாப்பிடுவது உடல் நலத்துக்குக் கேடு. எவ்வளவு எளிமையாக இருந்தாலும், வீட்டுச் சாப்பாடு உடல் நலத்திற்கும் மன நலத்திற்கும் உகந்தது.

பன்னாட்டு உணவக நிறுவனமான மெக்டொ னால்ட் இந்தியாவில் கடைகள் திறந்திருக்கிறது. சில ஆண்டுகளுக்கு முன் அந்த மெக்டொனால்ட் நிறுவனத்தின் தலைமை அதிகாரி ஒருவர் இந்தியா வந்து, தங்களுடைய உணவு விடுதிகளில் வணிகம் எப்படி நடக்கிறது என்று பார்த்தார். பின்னர் அவர் செய்தியாளர்களிடம் பேசும்போது, “இன்னும் இந்தியர்கள் அதிகமாக வீட்டுச் சாப்பாடு சாப்பிடுவதுதான் சிறந்தது என்றும் கவுரவமானது என்றும் நம்புகிறார்கள். அதனால், நாங்கள் எதிர்பார்த்த அளவு எங்கள் விடுதிகளில் வணிகம் நடக்கவில்லை” என்று சொன்னார். இந்தச் செய்தியை படிக்கும் போது எனக்கு ஒருபக்கம் மகிழ்ச்சியாகவே இருந்தது.

வீட்டுச் சாப்பாடு என்பதுதான் உடல் நலத்திற்கும் சிக்கனத்திற்கும் சிறந்தது. இதிலுள்ள சிக்கல், ஆண்கள் சமையல் பணியில் பங்கு கொள்ளாதது தான். நம்முடைய தமிழ்நாட்டில் ஆண்மக்கள் சமையல் கற்றுக் கொள்ளவேண்டும். தங்கள் குடும்பங்களில் சமையல் பணிகளில் ஈடுபட வேண்டும். இதுவொரு தமிழ்த் தேசியப் பண்பு என்ற உணர்வு வர வேண்டும்.

ஏசுபிரான் சொன்னார், “நான் பாவிகளுக்குத் தீர்ப்பெழுத வரவில்லை. பாவிகளை மீட்கவே வந்திருக்கிறேன்” என்று. காரல் மார்க்ஸ் கல்லூரியில் படிக்கும் போது, ‘தமது எதிர்காலத் திட்டமென்ன’ என்ற கட்டுரையில், “இதுவரை வந்த அறிஞர்கள் உலகத்தை, சமூக சிக்கல்களை விளக்கினார்கள். நான் அவற்றை மாற்றவே விரும்புகிறேன்” என்று எழுதினார். எனவே, செயல் துடிப்புள்ளவர்கள் தீர்ப்பு வழங்கி ஒதுங்கிக் கொள்ள மாட்டார்கள். தீர்ப்பு வழங்குவது எளிது, யாரும் வழங்கலாம். மனிதர்களை மாற்றுவது, சமூக அமைப்பை மாற்றுவது என்பதுதான் கடினம். அதில்தான் நம்மை ஈடுபடுத்திக் கொள்ள வேண்டும். ஏசுநாதரும், காரல் மார்க்சும் சமூகத்தை மாற்றும் தங்கள் நோக்கத்தைத்தான் வெளிப்படுத்தினார்கள்.

நம்முடைய தமிழர் மரபில், சங்ககால வாழ்வில் ஓரளவு ஆணாதிக்கம் இருந்தாலும், பெருமளவு ஆண் - பெண் சமத்துவம் இருந்தது. கணவனுக்குப் பெயர் தலைவன் என்றால், மனைவிக்குப் பெயர் தலைவி என்று இருந்தது. தலைவன்/தலைவி என்ற சமத்துவம் நிலவியது. அக்காலத்தில், பெண்கள்தான் திருமணத்தை நடத்தி வைத்திருக்கிறார்கள். சங்ககாலத்தில் வாழ்ந்த பெண்பாற் புலவர்களின் எண்ணிக்கைக்கு ஈடாக, அதே காலத்தில் வேறு எந்த மொழியிலும் பெண்பாற் புல வர்களோ, அறிஞர்களோ விளங்கியதாக சான்றில்லை.

பிற்காலத்தில், நம்முடைய தமிழ்ச் சமூகத்தில் மிகக் கொடிய முறையில் பெண்ணடிமைத்தனம் வந்து விட்டது. மனிதகுல வளர்ச்சியில் மனிதர்களுக்கும் விலங்குகளுக்கும் முரண்பாடு இருந்தது. அது தீர்க்கப் பட்டு, மனித குலத்தின் வெற்றி உறுதி செய்யப்பட்டது. ஆனால், மனிதர்களுக்குள்ளேயே உள்ள மிகப்பெரிய முரண்பாடாக ஆண் - பெண் முரண்பாடு, ஆணாதிக்கம் - பெண்ணடிமைத்தனம் என்ற முரண்பாடு நீடிக் கிறது. இந்த முரண்பாட்டில் ஒன்று இன்னொன்றை வெற்றிக் கொள்வதல்ல, ஆணும் பெண்ணும் சமத்துவ நிலையில், அன்பு நிலையில் இணக்கம் காண்பது, சமஉரிமை பெறுவது. அப்படிப்பட்ட, சம உரிமையுள்ள தமிழச்சியையும், சம உரிமையுள்ள தமிழனையும் மறுவார்ப்பு செய்து இல்லற வாழ்க்கையையும் சமூக வாழ்க்கையையும் இனிதாக்கக் கூடியதே தமிழர் அறம். அதுவே, தமிழ்த் தேசிய அறம்! பெண்ணுரிமைப் போராட்டத்தில் புதிய சிந்தனைகள்வேண்டும்

இந்த மகளிர் உரிமை நிகழ்வில், இந்த கருத்துகளை உங்களோடு பகிர்ந்து கொள்ள வாய்ப்பளித்தமைக்கு நன்றி கூறி, பெண்ணுரிமை தழைக்கட்டும் என்று வாழ்த்தி விடைபெறு கிறேன்! நன்றி வணக்கம்!”
இவ்வாறு தோழர் பெ. மணியரசன் பேசினார்.

நிறைவில், குடந்தை நடுநகர் சுழற்சங்கச் செயலாளர் திரு. ஜெரால்டு நன்றி நவின்றார். கூட்டத்தில், திரளான பெண்கள் கலந்து கொண்டனர்.

Labels: ,

0கருத்துக்கள்:

Post a Comment

<< முகப்பு பக்கம்


தோழர் மணியரசன்
அவர்களின் படைப்புகள் மற்றும் கருத்துக்களை இத்தளத்தில் காணலாம்.
வாசகர்களின் கருத்துக்களும் வரவேற்கப்படுகின்றன.

Web This Blog

தொகுப்பு

முந்தைய பதிவுகள்

தோழமைத் தளங்கள்