<body><script type="text/javascript"> function setAttributeOnload(object, attribute, val) { if(window.addEventListener) { window.addEventListener('load', function(){ object[attribute] = val; }, false); } else { window.attachEvent('onload', function(){ object[attribute] = val; }); } } </script> <div id="navbar-iframe-container"></div> <script type="text/javascript" src="https://apis.google.com/js/platform.js"></script> <script type="text/javascript"> gapi.load("gapi.iframes:gapi.iframes.style.bubble", function() { if (gapi.iframes && gapi.iframes.getContext) { gapi.iframes.getContext().openChild({ url: 'https://www.blogger.com/navbar/6955529389241309188?origin\x3dhttp://thozharmaniyarasan.blogspot.com', where: document.getElementById("navbar-iframe-container"), id: "navbar-iframe" }); } }); </script>

"தமிழகம் திவாலாகிறது; தலைவர்கள் கொழுக்கிறார்கள்" தோழர் மணியரசன் கட்டுரை.

Wednesday, April 1, 2015

"தமிழகம் திவாலாகிறது; தலைவர்கள் கொழுக்கிறார்கள்" 
--தோழர் மணியரசன் கட்டுரை.
 
அரசியல் சூதாடிகளுக்குப் பொற்காலம்; மக்களோ கைவிடப்பட்ட அனாதைகள்! இதுதான் இன்றைய தமிழ்நாட்டுக் காட்சி!

ஆட்சியிலிருப்பவர்கள், ஆட்சியிலிருந்தவர்கள் அனைவரும் குதூகலத்தோடும் கும்மாளத்தோடும் பவனி வருகிறார்கள். பணத்திற்குப் பஞ்சமில்லை. அடுத்த ஆண்டு அவர்களுக்கு அறுவடைத் திருவிழா வரப்போகிறது. அதற்கான ஆரவாரத்தில் இப்போதே இறங்கி விட்டார்கள். தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் 2016இல் நடைபெற வேண்டும்.

ஆனால் 25.03.2015 அன்று தமிழக சட்டப் பேரவையில் அ.இ.அ.தி.மு.க. பொருளாளர் மாண்புமிகு ஓ.பன்னீர்ச்செல்வம் அவர்கள் அவரை அப்படித்தான் அழைக்கிறது ஆளுங்கட்சி முன்வைத்த 2015-_2016க்கான நிதிநிலை அறிக்கை, தமிழ்நாடு திவாலாகிக் கொண்டிருக்கிறது என்ற உண்மையை அம்பலப் படுத்திவிட்டது.

‘புரட்சித்தலைவி’யின் பொற்கால ஆட்சிக்கு வழி பாட்டுச் சொற்களால் வண்ணம் தீட்டத்தான் பன்னீர்ச்செல்வம் முயன்றார். ஆனால் தமிழக நிதிநிலை குறித்து அவர் ஒப்பாரி வைத்தபோது, அவரை அறியாமல் வழிந்த கண்ணீர்த் துளிகள் அரிதாரம் பூசப்பட்ட அம்மா புகழ்ச்சிச் சொற்களை நனைத்துச் சாயம் போகச் செய்துவிட்டன! இதோ அவரது அழுகுரல் :
“. . . தொடர்ந்து இரண்டாவது ஆண்டாக சொந்த வரி வருவாய் வளர்ச்சியின் மந்த நிலை பெரும் சவாலாக உள்ளது.”

“நாட்டின் பொருளாதாரச் சூழ்நிலையில் குறிப்பாக உற்பத்தித் துறையில் ஏற்பட்டுள்ள மந்த நிலையினால் வணிக வரி வசூல் அதிகமாகப் பாதிக்கப்பட்டுள்ளதே இதற்குக் காரணம் ஆகும். 2014 - 2015ஆம் ஆண்டு சர்வதேச கச்சா எண்ணெயின் விலை குறைந்ததால் ஏற்பட்ட பெட்ரோலியப் பொருட்களின் விலை மாற் றத்தால் வணிக வரி வசூல் எதிர்பார்த்த அளவைவிட 1000 கோடி ரூபாய் அளவிற்குக் குறைந்துள்ளது.”
”இப்பொருட்களின் தற்போதைய விலை அடிப்படையில் 2015- _ 2016 ஆம் ஆண்டில் 2,141 கோடி ரூபாய் அளவுக்கு வணிக வரி வசூல் குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது.”

“இவ்வளவு பெரிய இழப்பைச் சந்தித்த போதிலும் பெட்ரோலியப் பொருட்கள் மீதான மதிப்புக் கூட்டு வரியை சில மாநிலங்கள் உயர்த்தியுள்ளது போல் நமது மாநிலத்தில் வரியை இந்த அரசு உயர்த்தவில்லை.”
”மற்ற இனங்களிலும் வசூலில் போதிய வளர்ச்சி இல்லை. எனவே, 2014 _ -2015ஆம் ஆண்டில் ஏற்கெ னவே இலக்கு நிர்ணயிக்கப்பட்ட அளவைவிடக் குறைவாகவே மாநி லத்தின் சொந்த வரி வருவாயில் மொத்த வளர்ச்சி இருக்கும்”.

பன்னாட்டுச் சந்தையில் பெட் ரோலியக் கச்சா எண்ணெய் விலை குறைந்து போனதைத் துயரத்துடன் குறிப்பிடுகிறார் முதலமைச்சர் பன்னீர்ச்செல்வம். விலைவாசி உயர்ந்தால்தான் தமிழக அரசின் வருமானம் உயரும் என்றால் அது மக்கள் நலம் சார்ந்த பொருளா தாரமா? காலனியப் பொருளா தாரமா? இதுதான் நமது வினா!

பெட்ரோல், டீசல் விலை குறைந்ததில் மக்களுக்கு மகிழ்ச்சி; மாநில அரசின் வருமானத்திற்கு வீழ்ச்சி என்றால் இதைத்தான் காலனியப் பொருளாதாரம் என்று தமிழ்த் தேசியப் பேரியக்கம் கூறு கிறது.

தமிழகத்தில் கிடைக்கும் பெட் ரோலியம், எரிவளி, நிலக்கரி இவற்றின் விலை, இவற்றின் வழி உற்பத் தியாகும் பெட்ரோல், டீசல், மின் சாரம் உள்ளிட்ட பொருட்களின் விலை, இதனால் கிடைக்கும் இலாபம் அனைத்தையும் இந்திய அரசு அள்ளிக் கொண்டு போகி றது. மக்கள் வாங்கும் அவசியப் பண்டங்களின் விலையில் விற்பனை வரி வசூலிப்பதுதான் தமிழக அரசின் முதன்மையான வருமானம்! இந்திய அரசுக்கு ஏகாதி பத்திய பொருளாதாரம்! தமிழக அரசுக்குக் காலனியப் பொருளா தாரம்! அதனால்தான், பெட்ரோல் _- டீசல் விலை குறைந்ததால், மாநில வரி வருமானம் குறைந்து விட்டது என்று குமைகிறார் முதலமைச்சர்.

இந்திய அரசு தமிழ்நாட்டில், உற்பத்தி வரி, வருமான வரி, நிறுவன வருமான வரி, சுங்க வரி, நடுவண் விற்பனை வரி, சேவை வரி போன்ற வற்றின் வழியாக வசூலித்துக் கொண்டு செல்லும் மொத்தத் தொகை 80 ஆயிரம் கோடி ரூபாய். இதிலிருந்து தமிழ்நாட்டிற்கு இந்திய அரசு தரும் பங்குத் தொகை எவ்வளவு? இதோ முதலமைச்சர் சொல்கிறார்.
“2015-2016ஆம் ஆண்டிற்கான வரவு - செலவுத் திட்ட மதிப்பீட்டில் மத்திய அரசிடமிருந்து பெறும் உதவி மானியங்கள் 16, 376.79 கோடி யாக இருக்கும் என மதிப்பிட் டுள்ளது”.

நடுவண் அரசின் நேரடித் திட்டங்கள் மூலம் - மேலும் தமிழக மக்களுக்கு மானியமாகக் கிடைக்கும் தொகை 21,150 கோடி ரூபாய்! தமிழகத்தில் வசூலித்த வரியின் பங்காகத் தருவது 16,376.79 கோடி ரூபாய். இந்திய அரசு தனது நேர டித் திட்டங்களுக்காகத் தமிழகத் திற்குத் தருவது 21,150 கோடி ரூபாய்! பகிர்வுத் தொகையைவிடத் தனது பரிவுத் தொகையை கூடுதலாக இந்திய அரசு வைத்துள்ளது.

இந்த நிதி உறவுக்குப் பெயர் தான் - ஏகாதிபத்திய - காலனிய நிதி உறவு என்று தமிழ்த் தேசியப் பேரியக்கம் கூறுகிறது.
ஆனால், தமிழ்நாட்டில் 80 ஆயிரம் கோடி ரூபாயை வசூலித்துக் கொண்டு - 37,526 கோடி ரூபாயை மட்டுமே தமிழ்நாட்டிற்குத் தரு கிறது. 42,474 கோடி ரூபாயை இந்திய அரசு எடுத்துக் கொள் கிறது.

நடுவண் அரசு மாநிலங்களில் வசூலிக்கும் வரித் தொகையிலிருந்து மாநிலங்களுக்குத் திருப்பித் தரும் பகிர்வுத் தொகை, கடைசியாகக் காங்கிரசு ஆட்சியில் 32 விழுக் காடாக இருந்தது. நரேந்திர மோடி தலைமை அமைச்சர் ஆனபிறகு, கூட்டுறவுக் கூட்டாட்சி முறை Co-operative Federalism என்ற குலா வல் முழக்கம் ஒன்றை உருவாக்கி னார். அதற்காக மாநிலங்களுக்கான நிதிப்பகிர்வை 32 விழுக்காட்டி லிருந்து 42 விழுக்காடாக்கினேன் என்றார். பகிர்வுத் தொகை பத்து விழுக்காடு உயர்ந்துள்ள போது, தமிழகத்திற்குக் கிடைக்க வேண்டிய தொகை கூடுதல் ஆக வேண்டும் அல்லவா! ஆனால் அதுதான் இல்லை.

இதோ முதல்வர் பன்னீர்ச் செல்வம் அவர்கள் சோகம் கவ்வி டச் சொல்வதைப் பாருங்கள் :
“மத்திய அரசின் வருவாயில் மாநிலங்களுக்குப் பகிர்ந்தளிக்கப் படும் நிதியின் பங்கு 32 சதவீதத் திலிருந்து 42 சதவீதமாக உயர்த்தப் பட்டுள்ள போதிலும், மாநிலங் களுக்கு ஏற்கெனவே மத்திய அரசால் திட்டங்கள் மூலமாக வழங்கப்பட்டு வந்த நிதி உதவிகள் பெருமளவு குறைக்கப் பட்டுள்ள தால், இந்த நிதிப்பகிர்வு மாற்றத் தால் மாநிலங்களுக்குக் கூடுதல் நிதி ஆதாரங்கள் கிடைப்பதற்கான வாய்ப்புகள் எதுவுமில்லை. நான் ஏற்கெனவே குறிப்பிட்டவாறு, மாநிலங்களுக்கு நிதியைப் பகிர்ந்த ளிக்கும் போது, தமிழகத்திற்குக் கிடைக்க வேண்டிய பங்கு மிகவும் குறைக்கப்பட்டுள்ளதால், நமது மாநிலம் பெரும் பாதிப்பிற்குள்ளா கியுள்ளது. தமிழ்நாட்டிற்கான நிதிப் பகிர்வு மற்றும் மானிய உதவிகளில் மொத்த அளவு 2014 _ -2015இல் பெறப்பட்ட 39,057 கோடி ரூபாயைவிட 2015- _ 2016ஆம் ஆண்டு குறைவாக, 37,526 கோடி ரூபாயாக இருக்கும்”.

அதாவது, 1,531 கோடி ரூபாய் குறையும். “இம்மாற்றங்களின் விளை வாக வரும் 5 ஆண்டுகளில் தமிழ் நாடு 35,485 கோடி ரூபாய் அள விற்கு மொத்த நிதி இழப்பைச் சந்திக்க நேரிடும்” என்கிறார் முதல்வர் பன்னீர்ச்செல்வம்.
அரிசி, மண்ணெண்ணெய் உட்பட பல்வேறு இன்றியமையாப் பண்டங்களின் மானியத்தையும் ஒதுக்கீட்டு அளவையும் குறைத்து விட்டது இந்திய அரசு. நடுவண் அரசு குறைத்துக் கொண்ட மானி யத் தொகையைத் தமிழ்நாடு அரசு தனது நிதியிலிருந்து ஈடுகட்டி பழைய விலைக்கே - அல்லது விலை யில்லாமல் -மக்களுக்கு வழங்க வேண்டிய நிலை உள்ளது.

மாநிலங்களுக்கான நிதிப் பகிர்வை 32 விழுக்காட்டிலிருந்து 42 விழுக்காடாக உயர்த்தியுள்ள போது, தமிழ்நாட்டிற்கான பங்குத் தொகை குறைவதேன்? நாற் பத்திரண்டு விழுக்காட்டுத் தொகைப் பகிர்வு என்பது ஒட்டு மொத்தத் தொகையில் அனைத்து மாநிலங்களுக்கும் ஒதுக்கும் தொகையே தவிர, ஒவ்வொரு மாநிலத்திற்கும் அங்கிருந்து வசூ லித்தத் தொகையில் 42 விழுக்காடு தருவதன்று. வளர்ச்சியடையாத மாநிலங்களில் கூடுதலாக நிதி ஒதுக் கிட, வளர்ச்சியடைந்த மாநிலத் திற்கு ஒதுக்கிய 42 விழுக்காட்டுத் தொகையிலிருந்து எடுத்துக் கொள் வார்கள்.
வளர்ச்சியடைந்த மாநிலம் தமிழகம் என்று பெயர் சூட்டி- தமிழ்நாட்டிற்குத் தர வேண்டிய 42 விழுக்காட்டுத் தொகையைக் குறைத்துக் கொண்டார்கள். மானி யங்களையும் கணிசமாகக் குறைத் தார்கள். எனவே, பா.ச.க. ஆட்சி 42 விழுக்காடு என்று படம்காட்டி-- ஏற்கெனவே கிடைத்த தொகை யையும் பிடுங்கிக் கொண்டது.

வளர்ச்சியடையாத மாநிலங் களுக்கு உதவுவது தவறா என்று சிலர் கேட்கக்கூடும்! அவ்வாறு உதவுவது தவறன்று. இந்திய அரசு எடுத்துக் கொள்ளும் 58 விழுக் காட்டிலிருந்து நிதியை எடுத்து, வளர்ச்சியடையாத மாநிலங்களுக்கு ஊக்கத் தொகையாக வழங்குவது தானே ஞாயம்! தமிழ்நாடு போன்று வஞ்சிக்கப்பட்ட, - வருவாய்க் குறை வான மாநிலங்களின் தலையில் கை வைப்பதேன்?

மருத்துவம், வேளாண்மை, கல்வி, சாலை வசதிகள் உள்ளிட்ட மக்களின் இன்றியமையா நேரடிப் பயன்பாட்டிற்குப் பெருந்தொகை ஒதுக்க வேண்டிய பொறுப்பு மாநில அரசிடம்தான் உள்ளது. அவ்வா றான நேரடிப் பெரும் பொறுப்பு நடுவண் அரசுக்கு இல்லை. அது எதற்கு முனை முறியாமல் 58 விழுக் காட்டுத் தொகையை அப்படியே எடுத்துக் கொள்ள வேண்டும்? ஒவ்வொரு மாநிலத்திலிருந்தும் 58 விழுக்காடு எடுத்துக் கொண்டால் மொத்தம் எத்தனை இலட்சம் கோடி நடுவண் அரசுக்குப் போகிறது என்பதை ஊகித்துக் கொள்ள லாம். அதில் ஒரு பகுதியை எடுத்து வளர்ச்சியடையாத மாநிலங்களுக் குக் கொடுப்பதுதான் அறம்!
மோடி அரசு மோடி வித்தை அரசு என்பதை 32 ஐ 42 ஆக உயர்த் திக் காட்டி முன்னர் கொடுத்த தொகையைவிடக் குறைவாகக் கொடுக்கும் சூதாட்டத்திலிருந்து புரிந்து கொள்ளலாம்.

“புரட்சித்தலைவி” அரசு, தமிழக உரிமைக்குப் போராடாமல், உரிமைக்குரலை ஓங்கி முழங்காமல் ஒப்பாரி வைப்பது ஏன்? இதுதான் புரட்சியா? இதுதான் துணிச்சலா? இதுதான் நிரந்தர முதலமைச்சரின் ஆற்றலா? பொறுப்புணர்ச்சியா?
மேலே கூறப்பட்ட வருவாய் இழப்புகளை ஈடுகட்ட அ.இ. அ.தி.மு.க. அரசு எங்கே தஞ்சம் புகுந் துள்ளது? ஒன்று மதுக்கடை; இன் னொன்று கடன் வாங்கித் தள்ளு வது!

தமிழக அரசு நடத்தும் மது வணிகத்தின் (டாஸ்மாக்) மூலம் 2014-2015ஆம் ஆண்டு 26,188 கோடி ரூபாய் வருவாய் கிடைத்தது. 2015-_-2016 இல் 29,672 கோடி ரூபாய் கிடைக்கும் என்று நிதிநிலை அறிக் கையில் கூறப்பட்டுள்ளது. “மது நாட்டுக்கும் வீட்டுக்கும் கேடு” என்று முழக்கம் எழுதி வைத்துக் கொண்டு நடத்தும் மக்கள் விரோத வணிகத்தில், தமிழக அரசு வருவா யைப் பெருக்கி, இந்திய அரசு ஏற் படுத்தியுள்ள வருவாய்க் குறைப்பை ஈடுகட்டப் போகிறது!
நடுவண் அரசு தமிழ்நாட்டில் வசூலிக்கும் மொத்த வரி வருவாயில் 50 விழுக்காட்டுத் தொகையைத் தமிழ்நாட்டிற்குத் திருப்பித் தர வேண்டும் என்று ஒரு கோரிக்கை யைத் தமிழ்நாடு அரசு இந்த நிதி நிலை அறிக்கையில் எழுப்பியிருக்க வேண்டும். அதைவிடுத்து, ஒப்பாரி வைப்பதும் கூடுதல் மது விற்பனை மூலம் கூடுதல் நிதி கிடைக்கும் என்று எதிர்பார்ப்பதும், மக்கள் விரோத அணுகுமுறையாகும்.

அடுத்து, கூடுதலாகக் கடன் வாங்கப் போவதாக நிதிநிலை அறிக்கை கூறுகிறது. இப்போதுள்ள கடன் 1,81,000 கோடி ரூபாய். இனி வாங்கப் போகும் கடன் 30,000 கோடி ரூபாய். ஆக மொத்தம் 2015-_-2016 - நிதியாண்டில் தமிழக அரசின் மொத்தக் கடன் 2,11,000 கோடி ரூபாயாக உயரும்!
2011-இல்தி.மு.க.விடமிருந்து அ.இ.அ.தி.மு.க.ஆட்சிப் பொறுப்பை ஏற்ற போது, தமிழகக் கடன் 1,15,000 கோடியாக இருந்தது. ஐந்தாண்டு களில் 96 ஆயிரம் கோடி ரூபாய் அளவிற்குப் புதிய கடனை சுமத்தி யுள்ளது அ.இ.அ.தி.மு.க. ஆட்சி!

தமிழக அரசின் நிதித்துறை முதன்மைச் செயலாளர் திரு. சண் முகம், கடனுக்கான வட்டித் தொகையாக ஆண்டுக்கு 17 ஆயிரம் கோடி ரூபாய் செலுத்தி வருகிறோம் என்கிறார். வட்டி செலுத்துவது மட்டுமே 17 ஆயிரம் கோடி ரூபாய் என்றால் தமிழகப் பொருளாதாரம் எவ்வளவு பெரிய புதை சேற்றில் சிக்கியுள்ளது என்பது புலப்படும். இவ்வளவு பெரிய தொகையை இந்த நிதிநிலை அறிக்கை வேறு எந்த வளர்ச்சித் திட்டத்திற்கும் மக்கள் நலத்திற்கும் ஒதுக்கவில்லை.

ஆனால், திரு. சண்முகம் துணிச்சலாகப் பொய் சொல்கிறார். “கடன் மூலம் செய்யப்படும் முதலீட் டால் பொருளாதார வளர்ச்சியும் வரி வருவாயும் அதிகரிக்க வாய்ப் புள்ளது” என்கிறார்.

கடந்த நான்காண்டுகளில் அ.இ.அ.தி.மு.க. ஆட்சி கடனைத் திருப்பிச் செலுத்தியதா? புதிய கடன்களை வாங்கிக் குவித்ததா? புதிய கடன்களை வாங்கிக் குவித் துள்ளது. இதைத்தான் திறமையாகக் கடனைக் கையாளும் ஆளுமை என்று நிதித்துறை முதன்மைச் செயலாளர் கூறிக் கொள்கிறார்.
இதையெல்லாம் அம்பலப் படுத்துவதற்கு இங்கு உருப்படியான எதிர்க்கட்சி இல்லை. தி.மு.க.வைப் பொறுத்த வரை கலாட்டா செய்து மக்கள் கவனத்தை ஈர்க்கும் உத் தியைத்தான் தொடர்ந்து கடை பிடித்து வருகிறது.

2015- 2016க்கான நிதிநிலை அறிக்கையை நிதித்துறையையும் வைத்துள்ள முதலமைச்சர் பன் னீர்ச்செல்வம் படிக்க எழுந்ததும், தி.மு.க. குழுவின் தலைவர் திரு. மு.க. ஸ்டாலின் எழுந்து தாம் ஓர் அறிக்கை படிக்க வேண்டும் என்று அனுமதி கோருகிறார். பேரவைத் தலைவர் திரு. தனபால் அனுமதி மறுக்கிறார். அந்த அனுமதி மறுப்பை எதிர்பார்த்து நின்று கொண்டிருந்த மு.க.ஸ்டாலின் குதூகல உணர்வோடு, எக்களிப் போடு தன் கட்சியினரை அழைத் துக் கொண்டு வெளிநடப்பு செய்து, செய்தியாளர்களிடம் அந்த அறிக் கையைப் படிக்கிறார்.

“கருந்தேளாகக் கொட்டும் கடன்கள், கட்டுப்பாட்டுக்குள் இல்லாத சட்டம் ஒழுங்கு, கரை புரண்டோடும் இலஞ்ச ஊழல், பக்கவாதத்தால் பாதிக்கப்பட்டு செயலிழந்துவிட்ட நிர்வாகம்,” என்று அடுக்கி, இரும்புக்கு டாட்டா, செருப்புக்குப் பாட்டா, என்ற தி.மு.க.வின் பழைய பாணியில் அந்த அறிக்கை கூறிச் செல்கிறது.

அ.இ.அ.தி.மு.க. ஆட்சி சட்ட மன்றத்தை அம்மாவின் ஆராத னைக் கூடமாக மாற்றி சனநாயகத் தைக் கேவலப்படுத்தி வரும் உண்மையை நாம் அறிவோம்; நாடறியும். பதவி கொடுத்த சனநாய கத்தின் பல்லை உடைத்து விட்டார் செயலலிதா?

ஆனால் முதலமைச்சர் நிதி நிலை அறிக்கையைப் படிக்க அனு மதிக்க வேண்டும். வாதம் செய்யக் கூடிய வாய்ப்பில் எதிர்க்கட்சி அக்குவேறு ஆணிவேராக அ.இ.அ. தி.மு.க. ஆட்சியில் திவாலாகிவிட்ட பொருளாதாரத்தை அம்பலப் படுத்த வேண்டும். அது பயனுள்ள தாக அமையும். சட்டப்பேரவையில் மட்டுமின்றி மக்கள் மன்றத்திலும் பொறுப்புணர்வோடு, செயலலிதா அரசின் திறமையற்ற நிதி நிர் வாகத்தை - அவர் ஆட்சியில் தமிழ கம் சந்தித்துள்ள மிக மோசமான பொருளாதார நெருக்கடியை அவ்வாட்சியின் ஊழலை, முடங் கிப் போன நிர்வாகத்தை அம்பலப் படுத்தினால் மக்கள் விழிப்படை வார்கள்.

“மக்கள் விழிப்படைவார்கள்” என்ற கருத்தில்தான் தி.மு.க.வுக்கு ஒவ்வாமை உள்ளது. மக்கள் விழிப் படைந்தால், தங்களின் போலித் தனத்தையும் கண்டறிந்து விடுவார் களே என்ற அச்சம் தி.மு.க.வுக்கு இருக்கிறது. தி.மு.க.வுக்கும் அ.இ. அ.தி.மு.க.வுக்கும் உள்ள வேறுபாடு வேட்டியும் சேலையும் மட்டும் தானே!

விசயகாந்து கட்சிதான் ஏற் பிசைவு பெற்ற முதன்மை எதிர்க் கட்சி. தே.மு.தி.மு.க.விற்கும், பொரு ளாதாரச் சிக்கல்கள் போன்ற தமிழகத்தின் அடிப்படைச் சிக்கல் களுக்கும் எந்தத் தொடர்பும் இல்லை. லாட்டரிச் சீட்டு விழுந்து பணக்காரர் ஆனவர் போல் தலைவரானவர் விசயகாந்து!
வேறு சில குட்டித் தி.மு.க.க்கள் இருக்கின்றன. அவற்றின் பெயரும் பேச்சும் வேறாக இருக்கும். ஆனால் அவற்றின் செயல்முறை தி.மு.க. போலவே இருக்கும். கருணாநிதி யைக் கடுமையாக எதிர்த்தும் அவை பேசிக் கொள்ளும். ஆனால் அவர் தான் அக்கட்சிகளின் மானசீக வழிகாட்டி! குடும்ப அரசியல் நடத்துவதிலும் கங்காணி அரசியல் நடத்துவதிலும் கலைஞர்தான் அவற்றின் முன்னோடி!

வெறுமனே செயலலிதா எதிர்ப்பு, - வெறுமனே கருணாநிதி எதிர்ப்பு என்பது தமிழ்நாட்டின் முதன்மை அரசியல் நீரோட்டமாக இருக்கும்வரை, தமிழக உரிமைச் சிக்கல்களும் தீராது; பொருளியல் சிக்கல்களும் தீராது! தமிழ் மக்களில் கணிசமானோர் விழிப்புணர்வும் பெற மாட்டார்கள். தத்துவ அரசி யல் இங்கு நடக்காது; சர்க்கஸ் அரசியல்தான் நடக்கும்! இலட்சிய அரசியல் இங்கு நடக்காது, ஏட்டிக்குப் போட்டி அரசியல்தான் நடக்கும். அடிப்படைச் சிக்கல்களில் தமிழர் ஒற்றுமையும் ஏற்படாது; தமிழக மக்களின் ஓர்மையும் உருவா காது!

தமிழக நிதித்துறையின் முதன் மைச் செயலாளர் சண்முகம் பீற்றிக் கொள்வதுபோல், கடந்த நான் காண்டுகளில் என்ன தொழில் வளர்ச்சி ஏற்பட்டுள்ளது? என்ன வேளாண்மை வளர்ச்சி ஏற்பட்டுள் ளது? வருமானம் பெருக என்ன வழிவகை ஏற்பட்டுள்ளது? பன் னாட்டுச் சந்தையில் கச்சா எண் ணெய் விலை குறைந்ததால் விற்பனை வரி வருவாய் குறைந்து விட்டது என்று சொல்லி சோகப் படும் அவலநிலையில் தானே தமிழகப் பொருளியலை அ.இ.அ. தி.மு.க. ஆட்சி வைத்துள்ளது.

வெளிநாட்டு மூலதனத்தை ஈர்ப்பதில் தமிழ்த் தேசியப் பேரியக் கத்திற்கு மாற்றுக் கருத்து இருக் கிறது என்றாலும், செயலலிதா அம்மையார் வெளிநாட்டு மூல தனத்தை ஈர்ப்பதில் வல்லவர் என்று சொல்லிக் கொள்கிறார் களே, அதற்காகக் கேட்கிறோம். செயலலிதா ஆட்சிக்கு வந்தபின் வெளிநாட்டுமூலதனத்தில் தொடங்கப்பட்ட தொழிற் சாலைகள் எத்தனை? விரல்விட முடியுமா?

14 ஆயிரம் கோடி ரூபாய் அளவிற்குப் புரிந்துணர்வு ஒப்பந் தங்கள் போட்டிருப்பதாக செயல லிதா கூறுகிறார். ஒரு கோடி ரூபாய் அளவுக்காவது புதிய தொழிற் சாலை திறக்கப்பட்டதா? இல்லை. மாறாக 25 ஆயிரம் பேர் வேலை செய்த நோக்கியா ஆலை மூடப் பட்டது. அத்தொழிலாளிகள் தெருவில் நிற்கிறார்கள். அடுத்து பாக்ஸ்கான் ஆலை மூடப்பட்டது.

தமிழ்நாட்டின் மின்தேவை 14 ஆயிரம் மெகாவாட். எட்டாயிரம் மெகாவாட்தான் தமிழ்நாட்டில் உற்பத்தியாகிறது. மீதியை வெளிச் சந்தையில் அதிக விலை கொடுத் துத் தமிழக அரசு வாங்குகிறது. “தமிழகத்தின் உச்சபட்ச மின் தேவையாக உள்ள 13,775 மெகா வாட் மின் தேவையையும் தமிழகம் நிறைவு செய்துள்ளது” என்று நிதிநிலை அறிக்கையில் கூறப்பட் டுள்ளது. “உற்பத்தி” செய்யப்படு கிறது என்று கூறவில்லை, “நிறைவு” செய்துள்ளது என்று சாமர்த்திய மாகக் கூறுகிறது நிதிநிலை அறிக்கை!

தமிழ்நாட்டில் சென்னை, கோவை, ஓசூர் போன்ற முகாமை யான தொழில் நகரங்களில் ஏராள மான சிறிய, நடுத்தரத் தொழில்கள் மூடப்பட்டுவிட்டன.
தமிழக அரசுக்குச் சொந்தமான தமிழ்நாடு சர்க்கரைக் கழகம் நலி வடைந்துவிட்டது. தஞ்சாவூர் குருங்குளம் அண்ணா அரசு சர்க்கரை ஆலை 2012 -_ 2013இல் 7.26 கோடி ரூபாய் இலாபம் ஈட்டியது. ஆனால், 2013 - -2014இல் 23. 63 கோடி ரூபாய் இழப்பு அடைந் துள்ளது. அதேபோல், பெரம்பலூர் அரசு சர்க்கரை ஆலை 2013 -- 2014-இல் 23.59 கோடி ரூபாய் இழப்ப டைந்துள்ளது.
கடந்த ஆண்டு மார்ச் 31 கணக் குப்படி, தமிழக அரசு சர்க் கரைக் கழகத்தின் ஒட்டுமொத்த இழப்பு 99.70 கோடி ரூபாய். தமிழக அரசின் ஆவின் பால் ஊழல் ஊர் சிரிக்கி றது. ஆவின் பால் நிறுவனத் திற்குத் தலைமை தாங்கிய அ.இ. அ.தி.மு.க. பிரமுகர் ஊழல் வழக்கில் சிறையில் உள்ளார்.
தொழில் துறையில் எதில் தமிழக அரசு இலாபம் ஈட்டியுள் ளது? அ.இ.அ.தி.மு.க. ஆட்சியில் திறக்கப்பட்ட புதிய தொழிற் சாலைகள் எத்தனை? உதட்டைப் பிதுக்குவது ஒன்றே விடை!

மருத்துவ மனைகளை மேம் படுத்துவது, தமிழகச் சாலைகளை அகலப்படுத்துவது, குண்டும் குழியு மாகிவிட்ட சாலைகளை செப் பனிடுவது, புதிய சாலைகள் அமைப் பது, கல்வி நிலையங்களின் உள் கட்டுமானங்களை விரிவுபடுத்து வது, - வலுப்படுத்துவது, புதிய வேலை வாய்ப்புகளை உருவாக்கு வது,மூன்றாண்டுளாகத் தொடர்ந்து வறட்சியால் பாதிக்கப் பட்ட வேளாண்மைத் துறையில் உழவர்களுக்கு இழப்பீடு வழங்கு வது, கடன் தள்ளுபடி செய்வது போன்ற எத்தனையோ திட்டங் களுக்குத் தேவையான நிதி ஒதுக்கு வதற்குத் தமிழகக் கருவூலத்தில் நிதியே இல்லை. யானைப் பசிக்கு சோளப்பொறி என்பது போல் ஏதோ “காட்டாப்பு காட்டி”யிருக் கிறார்கள் நிதிநிலை அறிக்கையில்!

வேளாண் உற்பத்திப் பொருட் களுக்கு இலாப விலை கிடைக்கா ததுதான் உழவர்களின் எல்லா இழப்புகளுக்கும் அடிப்படைக் காரணம்! நெல், கரும்பு, பருத்தி, எண்ணெய் வித்துகள் போன்ற வற்றிற்கு இலாப விலை கிடைக்க எந்த வழியும் காணவில்லை. இந்த நிதிநிலை அறிக்கையில் ஒரு குவிண் டால் சாதரண வகை நெல்லுக்கு 50 ரூபாயும் சன்ன ரக நெல்லுக்கு 70 ரூபாயும் ஊக்கத்தொகை வழங் கப்படும் என்கிறது இந்த அறிக்கை. கேரளத்தில் 200 ரூபாய்க்கு மேல் ஊக்கத் தொகை தருகிறார்கள், ஆந்திராவில் 100 ரூபாய்க்கு மேல் ஊக்கத் தொகை தருகிறார்கள். எம். எஸ். சுவாமிநாதன் குழு உற்பத்திச் செலவுக்கு மேல் அதைப்போல் ஐம்பது விழுக்காட்டுத் தொகை யைக் கூடுதலாகச் சேர்த்து விலை நிர்ணயிக்க வேண்டும் என்றது. அதைக் கடைபிடிக்கவில்லை தமிழக அரசு. வேளாண் கடன் களை தள்ளுபடி செய்ய வேண்டும். ஆனால், தமிழக அரசு அதைப்பற்றி பேசவில்லை. கிராமக் கூட்டுறவு சங்கங்கள் பல மடிந்துவிட்டன, மற்றும் பல செத்துக் கொண்டுள் ளன. அரசின் நிதி அவற்றிற்கு உரிய வாறு இல்லை.

கர்நாடக நிதிநிலை அறிக்கை யில் காவிரி உபரி நீரையும் தடுக்கும் சதித் திட்டத்துடன் சட்ட விரோத அணைகள் கட்ட கள ஆய்வுக்கும் விரிவான திட்டம் தயாரிக்கவும் 25 கோடி ரூபாய் ஒதுக்கியுள்ளார்கள். நடுவண் அரசின் சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறையின் ஒப்புதல் இல்லாமலும், இந்த அணை களுக்குத் தடை கோரித் தமிழக அரசு தாக்கல் செய்துள்ள வழக்கு உச்ச நீதிமன்றத்தில் விசாரணையில் உள்ள நிலையிலும், கர்நாடகம் மேற்படி அணைகளுக்கு நிதிநிலை அறிக்கையில் நிதி ஒதுக்கியது சட்ட விரோதம். - நடுவண் அரசு தலை யிட்டு அவ்வறிக்கையில் உள்ள அப்பகுதியை நீக்க வேண்டும் என்ற ஒரு கோரிக்கையைக்கூட அ.இ. அ.தி.மு.க. அரசின் நிதிநிலை அறிக்கை முன்வைக்கவில்லை. சட்டப்படி பார்த்துக் கொள்வோம் என்று சவடால் அடிக்கிறது.

மேற்கண்டஅவலங்கள் அனைத்தின் சுமையைத் தாங்கப் போவது, பாதிக்கப்படப் போவது தமிழக மக்கள்தாம்! இது அ.இ. அ.தி.மு.க. கட்சிக்கு வந்த நெருக்கடி என்ற அளவில் பார்த்துப் பூரித்துப் போகிறது தி.மு.க; புதுவாழ்வு கிடைக்கும் என்று சப்புக் கொட்டு கிறது. குட்டித் தி.மு.க.க்களுக்கு ஒரு கவலையுமில்லை. குழம்பிய குட் டையில் தனக்கு இரண்டு மீன் கிடைத்தால் போதும் என்பதே அவற்றின் எதிர்பார்ப்பு!

அ.இ.அ.தி.மு.க. கட்சியைப் பொறுத்தவரை, செயலலிதாவைத் தவிர மற்ற அனைத்து மட்ட நிர் வாகிகளும் அமைச்சர்களும் நிரந்தர மற்றவர்கள். எப்போது யார் தலை உருளுமோ என்ற அச்சத்திலும் பதற்றத்திலும் அம்மாவைத் தவிர அனைத்தப் பொறுப்பாளர்களும் இருப்பதால், அங்கு உட்கட்சி சன நாயகம், கலந்தாய்வு என்பது செயலலிதா விரும்பும் எல்லைக்குட் பட்டதாகவே இருக்கும். செயல லிதாவைப் பூஜிப்பது, செயலலிதா வுக்காக பூசை புனஷ்காரங்கள் செய்வது என்பவைதாம் அ.இ.அ.தி. மு.க. அணியினரின் அடிப்படைப் பணிகள். அப்பணிகள்தாம் அவர் களுக்கு ஆதாயம் தரும்.

பூஜிக்கப்படும் மனநிலைக்குப் பழகிப்போன செயலலிதாவும், எங்கேயாவது ஏதாவது பேசப் பட்டது என்று கேள்விப்பட்டால், அச்சத்திற்கு ஆளாகிவிடுவார். அது தன்னை எதிர்ப்பதாக இருக்குமோ, -அதை முளையிலேயே கிள்ளி எறிய வேண்டுமே - என்ற பதற்றத்திலேயே நிரந்தரத் தலைவரும் நிம்மதியற்ற மனநிலையில்தான் இருப்பார். எப்போதுமே சர்வாதிகாரிகள் நிம்மதியாக வாழ்வதில்லை.

தமிழ்நாட்டில் தொழில் வளர்ச்சி இல்லை, வேளாண் துறை வீழ்ச்சி கண்டுள்ளது, வேலை யின்மை பெருகியுள்ளது, அரசின் கடன் சுமை உச்சத்திற்குப் போய் விட்டது என்பன பற்றியெல்லாம் எள்ளளவும் கவலைப்படாமல் அ.இ.அ.தி.மு.க. அமைச்சர்கள் அம்மாவின் விடுதலைக்காகப் பால்குடப் பக்தி ஊர்வலங்கள் நடத்திக் கொண்டுள்ளனர். பால் குடவளர்ச்சி தான் செயலலிதா வெளியிட்ட தொலைநோக்கு - 2023 திட்டம் போலும்! ஆரவார மாக வெளியிடப்பட்ட அ.தி.மு.க. அரசின் தொலைநோக்கு - 2023 என்பது வெறும் ஆடம்பரம் என்பதை நிதிநிலை அறிக்கை அம்பலப்படுத்தியுள்ளது.

தி.மு.க.வோ அடுத்த முதல்வ ராகிடும் ஆசையில் ஸ்டாலின் திரு விழாக்களை நடத்திக் கொண் டுள்ளது. ஒப்பாரும் மிக்காரும் இல்லாத ஒற்றைக் கதாநாயகனாக ஸ்டாலினை ஒப்பனை செய்வதில் தான் தி.மு.க.வின் இன்றைய இயக்கம் உள்ளது.
குட்டித் தி.மு.க.க்களும் அடுத்த முதல்வர் மற்றும் அமைச்சர் போன்ற கனவுகளில் கதாகலாட் சேபத்தைத் தீவிரப்படுத்தியுள்ளன.
ஏராளமான அரசியல் கட்சி கள், ஆனால் ஏழரைக் கோடித் தமிழக மக்கள் அரசியல் அனாதைகளாக உள்ளார்கள்.
பொருளாதாரத்தில் திவால் நிலை, அரசியல் நிலையில் அனா தைகள், பண்பாட்டு நிலையில் அரு வருக்கத்தக்கத் தனிநபர் துதிகள்; தனிநபர் பகைகள்! இதுதான் இன்றையத் தமிழ்நாட்டின் காட்சி! இதுதான் திராவிடக் கட்சிகளின் 48 ஆண்டு காலச் சாதனை!

அதிகாரம் கிடைத்ததால் அள விட முடியாத பணத்தைத் திரட்டிக் கொண்ட அரசியல் தலைவர்கள், பேரரசுகள் போல் கொற்றம் நடத்து கிறார்கள். இந்தத் தலைமைகளிட மிருந்து எந்த மாற்றத்தையும் எந்தப் பலனையும் தமிழகம் எதிர் பார்க்க முடியாது. தமிழ்நாட்டைக் காட்டிக் கொடுக்கும் கங்காணித் தனத்தில், ஊழல் கொள்ளையில், மக்களை அண்டிப் பிழைக்கும் அடிமைகளாக மாற்றிவிடும் உள வியல் உத்தியில், தமிழகப் பெருங் கட்சிகளிடையே மற்றும் குட்டித் தி.மு.க.க்களிடையே எந்த முரண்பாடும் கிடையாது. ஆணோ- பெண்ணோ - அவர்கள் அனை வரும் அரசியல் துறையில் ஒரு கருவில் உருவான பல பிள்ளைகள்! இவர்களிடம் மாற்றம் வராது. இவர்களை மாற்றினால்தான் தமிழகத்தின் நோய் நீங்கும்.
பதவி _- பணம் - _ விளம்பரம் மூன்றுக்கும் ஆசைப்படாத மக்கள் தமிழ்த் தேசிய உணர்வோடு மாற்று ஆற்றலாக வளரும் போதுதான், தமிழகம் புத்துணர்ச்சியும் புத்தெ ழுச்சியும் பெறும்!

அவ்வாறான மாற்றுச் சிந்தனை யின்றி, மாற்றுச் செயல்பாடின்றி, பொருளாதார அடிப்படையில் மட்டும் தமிழக நிதிநிலை அறிக்கை யைத் திறனாய்வு செய்தால் பலன் இல்லை!

(இக்கட்டுரை, தமிழ்த் தேசியத் தமிழர் கண்ணோட்டம் - 2015 ஏப்ரல் 1 இதழில் வெளியானது.)

Labels:

0கருத்துக்கள்:

Post a Comment

<< முகப்பு பக்கம்


தோழர் மணியரசன்
அவர்களின் படைப்புகள் மற்றும் கருத்துக்களை இத்தளத்தில் காணலாம்.
வாசகர்களின் கருத்துக்களும் வரவேற்கப்படுகின்றன.

Web This Blog

தொகுப்பு

முந்தைய பதிவுகள்

தோழமைத் தளங்கள்