<body><script type="text/javascript"> function setAttributeOnload(object, attribute, val) { if(window.addEventListener) { window.addEventListener('load', function(){ object[attribute] = val; }, false); } else { window.attachEvent('onload', function(){ object[attribute] = val; }); } } </script> <div id="navbar-iframe-container"></div> <script type="text/javascript" src="https://apis.google.com/js/platform.js"></script> <script type="text/javascript"> gapi.load("gapi.iframes:gapi.iframes.style.bubble", function() { if (gapi.iframes && gapi.iframes.getContext) { gapi.iframes.getContext().openChild({ url: 'https://www.blogger.com/navbar/6955529389241309188?origin\x3dhttp://thozharmaniyarasan.blogspot.com', where: document.getElementById("navbar-iframe-container"), id: "navbar-iframe" }); } }); </script>

"இந்திய ஆதிக்கம் – திராவிடத் தற்புகழ்ச்சி இரண்டின் மோதலே ஆளுநர் – முதல்வர் முரண்பாடு!"----- பெ. மணியரசன் தலைவர், தமிழ்த்தேசியப் பேரியக்கம்

Tuesday, January 10, 2023


இந்திய ஆதிக்கம் – திராவிடத் தற்புகழ்ச்சி

இரண்டின் மோதலே ஆளுநர் – முதல்வர் முரண்பாடு!
=========================================
பெ. மணியரசன்
தலைவர், தமிழ்த்தேசியப் பேரியக்கம்
=========================================


தமிழ்நாடு சட்டப் பேரவையில் 9.1.2023 அன்று ஆளுநர் ஆர்.என். இரவி, தமிழ்நாடு அரசு அளித்த “ஆளுநர்க்கான உரையில்” சில பகுதிகளைப் படிக்காமல் விட்டதும், அதற்கு எதிர்ப்புத் தெரிவித்து முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தனித் தீர்மானம் கொண்டு வந்து, விடுபட்ட அப்பகுதிகளை இணைத்ததும், அதனால் ஆளுநர் வெளிநடப்புச் செய்ததும் மாநிலத்தில் தன்னாட்சி, இந்தியாவில் கூட்டாட்சி என்ற கோட்பாடு சார்ந்ததாகத் தெரியவில்லை.

தமிழ்நாடு சட்டப் பேரவை 20க்கும் மேற்பட்ட சட்ட முன்வரைவு (மசோதா)க்களை நிறைவேற்றி ஆளுநர் கையொப்பத்திற்காக அனுப்பி வைத்தது. அவற்றிற்கு ஒப்புதல் தராமல் ஆளுநர் இரவி முடக்கி வைத்துள்ளார். இதுபற்றி ஒருவரித் திறனாய்வுகூட ஸ்டாலின் ஆட்சி தயாரித்த ஆளுநர் அறிக்கையில் இல்லை.

தமிழ்நாடு என்று சொல்லக்கூடாது, தமிழகம் என்றுதான் சொல்ல வேண்டும் என்று ஆளுநர் இரவி கூறிவருகிறார். அதில் தமிழ்நாடு அரசின் நிலைபாடு என்ன என்பதை, மோதல் போக்கில்லாத கருத்தறிவிப்பாக ஒரு வரிகூட திமுக ஆட்சி தயாரித்த ஆளுநர்க்கான அறிக்கையில் கூறப்படவில்லை.

மாநிலத் தன்னாட்சியை வலியுறுத்தி ஒரு வரி கூட 48 பக்க ஆளுநர் அறிக்கையில் இல்லை.

போதைப் பொருட்களின் விநியோகத்தையும் பயன்பாட்டையும் இரும்புக்கரம் கொண்டு ஒடுக்க மாண்புமிகு முதலமைச்சர் உறுதி கொண்டுள்ளார் என்று ஆளுநர்க்கான அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. தமிழ்நாடு அரசு சாரயக் கடைநடத்துவதைப் படிப்படியாகக் கைவிடுவது பற்றி எந்த உறுதிமொழியும் இல்லை.

207 தொழில் நிறுவனங்களுடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் போடப்பட்டுள்ளதாகவும் இவற்றில் 3,44,150 பேர்க்கு வேலை கிடைக்கும் என்றும் அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. அவ்வேலைகளில் 75 விழுக்காடு மண்ணின் மக்களுக்கு வழங்குவோம் என்ற உறுதிமொழி எதுவும் இல்லை. திமுக தனது 2021 தேர்தல் அறிக்கையில், “ஆட்சிக்கு வந்தால் தனியார் துறையில் தமிழ்நாட்டு மக்களுக்கு 75 விழுக்காடு வேலைகள் உறுதி செய்து சட்டம் இயற்றுவோம்” என்று கூறியது.

ஆளுநர் இரவி மாநிலத் தன்னாட்சிக் கொள்கைக்கும், மண்ணின் மக்கள் வேலை சட்டத்திற்கும் எதிரானவர் என்பது நாடறிந்த உண்மை. திராவிட மாடல் புகழ்ச்சி – சமூக நீதி, பகுத்தறிவு, அவை சார்ந்த தலைவர்கள் பெயர்கள் ஆகியவற்றைத்தான் ஆளுநர் படிக்காமல் தவிர்த்தார். அதே ஆளுநர் அறிக்கையில் மாநிலத் தன்னாட்சி, மண்ணின் மக்களுக்கான வேலை உறுதி, ஆளுநர் பதவி ஒழிப்பு போன்ற உரிமைகளை முன்வைக்கவில்லை.

எனவே, 9.1.2023 அன்று சட்டப் பேரவையில் ஆளுநர்க்கும் முதலமைச்சருக்கும் இடையே வெளிப்பட்ட முரண்பாடுகள் இந்திய ஆதிக்க அரசியலுக்கும் திராவிடத் தற்புகழ்ச்சி அரசியலுக்கும் இடையே எழுந்தவையே என்பதைத் தமிழ்நாட்டு மக்கள் புரிந்து கொள்ள வேண்டும்.

இவ்விரு முகாமுக்கும் வெளியேதான் மாநிலத் தன்னாட்சி – தமிழ்நாட்டு உரிமைகள் மீட்பு முயற்சிகள் முன்னெடுக்கப்பட வேண்டும்.

================================
தலைமைச் செயலகம்,
தமிழ்த்தேசியப் பேரியக்கம்
================================
பேச: 9443918095, புலனம் : +91 98419 49462
முகநூல் : www.fb.com/tamizhdesiyam
ஊடகம் : www.kannottam.com
இணையம் : www.tamizhdesiyam.com
சுட்டுரை : www.twitter.com/tamizhdesiyam
காணொலிகள் : youtube.com/tamizhdesiyam
================================

Labels: , ,

0கருத்துக்கள்:

Post a Comment

<< முகப்பு பக்கம்


தோழர் மணியரசன்
அவர்களின் படைப்புகள் மற்றும் கருத்துக்களை இத்தளத்தில் காணலாம்.
வாசகர்களின் கருத்துக்களும் வரவேற்கப்படுகின்றன.

Web This Blog

தொகுப்பு

முந்தைய பதிவுகள்

தோழமைத் தளங்கள்