பெ. மணியரசன் 75 பெருவிழா! ”தமிழ் எங்கள் இளமைக்குப் பால்!” ---- ஐயா பெ. மணியரசன், தலைவர் - தமிழ்த்தேசியப் பேரியக்கம்.
Wednesday, May 31, 2023
பெ. மணியரசன் 75 பெருவிழா!”தமிழ் எங்கள் இளமைக்குப் பால்!”
===============================
ஐயா பெ. மணியரசன்,
தலைவர் - தமிழ்த்தேசியப் பேரியக்கம்.
===============================
எனது அகவை மூப்பு விழாவை ”பெ. மணியரசன் - 75 பெருவிழா” என்ற தலைப்பில் தி.பி. 2054 வைகாசி 28 – 11.6.2023 ஞாயிறு அன்று முழுநாள் விழாவாக திருச்சி திருவெறும்பூரில் தமிழ்த்தேசியப் பேரியக்கம் நடத்தியது.
திருவெறும்பூர் கூத்தைப்பார் சாலை, தாஸ் திருமண மண்டபத்தில் காலையில் நடந்த அரங்கக் கூட்டத்திலும், மாலையில் திருவெறும்பூர் திறந்தவெளியில் நடந்த பொதுக் கூட்டத்திலும் பங்கேற்று என்னை வாழ்த்திய சிறுவர் முதல் பெரியவர் வரையிலான அனைத்துப் பேருள்ளங்களுக்கும் நெஞ்சு நிறைந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
தனிப்பட்ட என்னைப் பாராட்ட – வாழ்த்த வந்தவர்கள் என்று இப்பெருங் கூட்டத்தினரை நான் கருதவில்லை. தமிழ் மொழி காக்க, தமிழ் இனம் காக்க, தமிழர் தாயகம் காக்க, மனித உரிமையும் மக்கள் நாயகமும் காக்க, தமிழீழத் துயர் நீக்க, இலட்சியச் சுடரேந்திப் போராடும் இயக்கத்தின் தலைமைப் பொறுப்பில் உள்ளவன் என்ற முறையில்தான் இவ்வளவு பெருமக்களும் நேரில் வந்து என்னை வாழ்த்தினார்கள்; தொலைபேசி வழியே வாழ்த்தினார்கள்; அறிக்கைகள் வழியே வாழ்த்தினார்கள். தஞ்சை வீட்டிலும், சென்னைத் தலைமை அலுவலகத்திலும் வந்து வாழ்த்தினார்கள்!
அத்தனை பேர்க்கும் நான் செலுத்தும் நன்றி என்பது, என் உடல் இயங்கும் வரை மேற்சொன்ன இலட்சியங்களுக்காக உழைப்பேன் என்ற உறுதிமொழிதான்! நீங்களும் இதைத்தான் ஏற்பீர்கள்!
இப்படி ஒரு விழாவை 75-ஆம் அகவை பவளவிழாவை நடத்தித் தமிழ்த்தேசியப் பேரியக்கத்திற்கு நிதி திரட்டலாமா என்று இரண்டு ஆண்டுகளுக்கு முன் சிந்தித்தோம். ஏற்கெனவே சி.பி.எம். தலைவர் தோழர் பி. இராமமூர்த்தி அவர்களுக்கும், சி.பி.ஐ. தலைவர் ஐயா இரா. நல்லகண்ணு அவர்களுக்கும் இவ்வாறான விழாக்களை அந்தந்தக் கட்சியும் எடுத்து நடத்தியது. அத் தலைவர்களும் தங்களுக்கு அளிக்கப்பட்ட நிதியைக் கட்சி வளர்ச்சிக்குக் கொடுத்தார்கள்.
பின்னர் எனக்கான விழாவை கொரோனாத் தொற்றுக் காலம் என்பதால் தள்ளி வைத்தோம். அதன்பிறகு அடுத்த ஆண்டுகளில் அவ்விழாவை நடத்துவதில் எனக்கு விரும்பம் இல்லாமல் போய்விட்டது. அதுவும் ஓர் ஆடம்பரம் ஆகிவிடுமோ என்ற தயக்கம் என் உள்மனத்தில் உருத்தியது.
இதற்கிடையே என் மகன் ம. செந்தமிழன் இவ்வாறான விழாவையும், என் தன் வரலாற்று நூல் வெளியீட்டையும் தங்களது செம்மை வாழ்வியல் நடுவம் அமைப்பின் சார்பில் நடத்த விரும்பினார். என் வரலாற்றுச் செய்திகள் தொகுக்க ஒரு குழுவையும் அமர்த்தி விட்டார். அதிலும் என்னால் ஒத்துழைக்க முடியவில்லை. நாம் தமிழர் கட்சித் தலைவர் செந்தமிழன் சீமான் அவர்கள் இவ்வாறான விழா நடத்த முன்வந்தார். அந்த அமைப்பின் பொறுப்பாளர்கள் இவ்விழாவிற்கு ஒப்புதல் தர என்னை வலியுறுத்தினார்கள். பொதுவாக இவ்விழா நடத்துவதில் எனக்கு ஆர்வம் இல்லை.
இவற்றிற்கெல்லாம் இடையே தமிழ்த்தேசியப் பேரியக்கத் தலைமைச் செயற்குழுத் தோழர்கள் கொரோனா முடிந்த உடனே இவ்விழாவை நடத்த வலியுறுத்தினார்கள். குறிப்பாக தமிழ்த்தேசியப் பேரியக்கப் பொதுச் செய்லாளர் தோழர் கி. வெங்கட்ராமன் அவர்கள் இவ்விழாவை நடத்த வேண்டும் என்று உறுதியாகவும் பிடிவாதமாகவும் இருந்தார்.
இறுதியில் நானும் ஏற்றுக் கொண்டு, இவ்விழா ஏற்பாடு செய்யப்பட்டது. எனது பிறந்தநாள் 10.5.1947. இதன்படி எனக்கு இப்போது 77 அகவை நடந்து கொண்டுள்ளது. இப்படித்தான் பி. இராமமூர்த்தி அவர்கட்கு 60ஐக் கடந்து மணிவிழா நடந்தது. எனது பவளவிழா 75ஐக் கடந்து 77-இல் நடந்துள்ளது.
தோழர் கி. வெங்கட்ராமன் அவர்களின் திட்டமிடலில், தோழர்கள் உற்சாகத்துடன் உழைத்ததில் இப்பெருவிழா சிறப்பாக நடந்தேறியுள்ளது; அனைவரின் பாராட்டையும் பெற்றுள்ளது.
இப்பெருவிழாவின் திறப்புரையை என் மகனும், செம்மை வாழ்வியல் அமைப்பின் ஆசானுமான ம. செந்தமிழன் வழங்கினார். அதன்பின், ஓவியர் கு. புகழேந்தி வாழ்த்துரை வழங்கி எனக்கு சால்வை அணிவித்தார்.
இந்த விழாவின் நிலைத்த ஆவணமாக என் இயக்க வாழ்வு – போராட்டங்கள் பற்றிய ஆவணத் திரைப்படமும், புகைப்படத் தொகுப்புகளும் அமைந்துள்ளன. இவற்றைத் தேடித் தொகுப்பதில் பெருமுயற்சி எடுத்தவர் துணைப் பொதுச் செயலாளர் தோழர் க. அருணபாரதி! ”பன்முகப் போராளி பெ. மணியரசன்” என்ற ஆவணத் திரைப்படத்தை தோழர் அருணபாரதி எழுதி இயக்கியிருந்தார். அப்படம் அரங்க நிகழ்வில் திரையிடப்பட்டது. சிதம்பரம் மாணவர் ச. கவின் படத்தொகுப்பு மற்றும் ஒலிக் கோவையில் சிறப்பாகப் பங்காற்றியுள்ளார். பாவலர் நா. இராசாரகுநாதன் நிகழ்ச்சி விளக்கப் பின்னணிக் குரல் கொடுத்துள்ளார். பொறியாளர் ச. முத்துக்குமாரசாமி எழுச்சியாக முன்னோட்டப் பாடல் பாடியுள்ளார். ஒளிப்படக் கலைஞர் இராபின் மற்றும் அவரது உதவியாளர் ஜானகிராமன் ஆகியோர், பல சிறப்புக் காட்சிகளை திறம்பட ஒளிப்பதிவு செய்து வழங்கியுள்ளனர்.
இந்த ஆவணப்படத்தில், ஆச்சாம்பட்டியில் 60 ஆண்டுகளுக்கு முன் என்னோடு பழகியவர்கள் 1966-இல் திமுக கிளை தொடங்கிய போது சேர்ந்து செயல்பட்ட திருவாளர் ஆ. கருப்பையன் போன்றவர்கள் – பின்னர் மார்க்சியப் பொதுவுடைமைக் கட்சி (சிபிஎம்)யில் என்னுடன் செயல்பட்ட ஆ. முனியையா, கா. சண்முகம் போன்றவர்களிடம் நேர்காணல் எடுத்துள்ளார் அருணபாரதி!
மாணவர் பருவத்திலிருந்து இக் காலம்வரை உள்ள எனது புகைப்படங்களை – என்னுடன் இருந்தோர் புகைப்படங்களைத் தொகுத்துள்ளார் அருணபாரதி. இப்புகைப்படங்களை என் துணைவியார் ம. இலட்சுமி, தொலை நோக்கோடு பாதுகாத்து வைத்துள்ளார். இவற்றையெல்லம் அன்புத் தோழர் கோவேந்தன் அவர் இணையர் - என் அன்பு மகள் போன்ற ஜன்னா (எ) புதுமொழி ஆகியோர் கணிப்பொறியில் பதிவேற்றி வைத்திருந்தனர். இவ்விருவரும் இளம் அகவையில் அடுத்தடுத்து நோய்தாக்கி இயற்கை எய்தியது பெருந்துயரம்! இவர்கள் பதிவேற்றியவை இப்போது தோழர் அருணபாரதிக்குப் பயன்பட்டன.
பாவலர், ஓவியர் கவிபாஸ்கர் அவர்கள், புகைப்படக் கண்காட்சி அரங்கத்தை சிறப்புற வடிவமைத்திருந்தார். நிகழ்வுகளின் தொடக்கமாகப் பேரியக்கக் கொடியைத் தோழர் கி. வெங்கட்ராமன் ஏற்றி வைத்தவுடன், இந்த ஒளிப்படக் கண்காட்சி அரங்கத்தை தோழர் அ. மன்னர்மன்னன் திறந்து வைத்தார். திருக்காட்டுப்பள்ளியில் 1968 - 69இல் உலகத் தமிழ்க் கழகம் தொடங்கியதிலிருந்து என் இணைபிரியாத் தோழர் அ. மன்னர்மன்னன்.
இவ்விழாவை ஒட்டி ஆவணப்படுத்திய இன்னொரு முயற்சி, எனது தன்வரலாற்று நூலின் முதற்பகுதி வெளியிட்டதாகும். மாதக்கணக்கில் நேரமெடுத்து எழுத வேண்டிய நூல் இது! ஆனால் கடைசிக் கட்டத்தில் பத்து நாட்களில் எழுத வேண்டிய நெருக்கடிக்கு என்னை நானே உட்படுத்திக் கொண்டேன். முன்கூட்டியே கொஞ்சம் கொஞ்சமாக எழுதியிருந்தால் இந்தச் சுமையும் துன்பமும் இருந்திருக்காது. ”எங்கிருந்து.. இங்கு!” என்ற தலைப்புக் கொண்ட என் தன் வரலாற்றுக் குறிப்புகள் இவ்விழாவில் வெளியிட அணியமானது பெருவியப்பு!
ஏற்கெனவே ஐயா கீழடிவாணன், தோழர் அருணபாரதி ஆகியோர் கொஞ்சம் தட்டச்சு செய்திருந்தார்கள். கடைசி நெருக்கடியில் பெரும் பகுதியைத் தட்டச்சு செய்தவர் என் மருமகள் காந்திமதி செந்தமிழன்! திருத்தம் போடுவது உட்பட கடும் உழைப்பு!
அங்கங்கே தேவையான படங்களை இணைத்து முழுநூலையும் வடிவமைத்தவர் தோழர் அருணபாரதி. அட்டை வடிவமைப்பு தோழர் கவிபாஸ்கர்! அட்டையுடன் மொத்தம் 276 பக்கம் இந்த நூலை இரண்டு நாளில் அச்சிட்டுக் கொடுத்தவர் சென்னை ஜோதி அச்சக உரிமையாளர் அன்பு நண்பர் கணேசமூர்த்தி!
கணேசமூர்த்தி அவர்கள் தம் துணைவியாருடன் விழாவுக்கு வந்து என்னை வாழ்த்தினார்கள்!
இந்நூலை விழாவில் வெளியிட்டு சிறப்பாக உரையாற்றினார் முன்னாள் சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி அரிபரந்தாமன் அவர்கள்! அவருடன் மாணவர் பருவத்திலிருந்து மாறாத் தோழமை! தமிழக வாழ்வுரிமைக்கட்சித் தலைவரும், சட்டப்பேரவை உறுப்பினருமான திரு. தி. வேல்முருகன், மனித நேய சனநாயகக் கட்சித் தலைவர் மேனாள் சட்டமன்ற உறுப்பினர் திரு. தமிமுன் அன்சாரி, அறிவியலாளர் தோழர் த.வே. நடராசன், திருச்சி பொறியாளர் திரு. துரை இரவி, பொறியாளர் இரா.பே. இராசப்பா ஆகியோர் நூலின் முதல் படிகளைப் பெற்றுக் கொண்டு உரையாற்றினர்.
திரு. வேல்முருகன் அவர்கள் உரையாற்றும்போது ”மணியரசன் அவர்களும் அவர் கட்சியும் தேர்தலில் பங்கேற்பதில்லை என்றாலும், தனித் தன்மையுள்ள தமிழ்த்தேசியத் தேர்தல் கூட்டணி ஒன்றை உருவாக்க முயன்று என்னுடனும், சீமான் உள்ளிட்ட மற்றவர்களுடனும் பேசினார். ஆனால் கடைசியில் அது உருவாகவில்லை” என்றார். இவ்வுரையைக் கேட்ட ஒரு நண்பர் ‘தேர்தலில் பங்கெடுக்காத நீங்கள் மற்றவர்கள் தேர்தல் கூட்டணி அமைக்க முயலலாமா’ என்று கேட்டார். தேர்தலில் பங்கெடுக்காத விடுதலைப் புலிகள் தலைவர் பிரபாகரன் அவர்கள் தமிழ்த் தேசியக் கூட்டணி என்ற பெயரில் தேர்தல் கூட்டணி அமைத்து வழிகாட்டினார். விடுதலைப் புலிகளுக்கு வலிமையும் மக்கள் செல்வாக்கும் இருந்ததால் அத்திட்டம் செயல்பட்டது. தமிழ்த்தேசியப் பேரிக்கத்திற்கு போதிய மக்கள் செல்வாக்கு இல்லாததால் அது செயல்படாமல் போயிற்று! மற்றபடி அவ்வாறான முயற்சி தவறானதன்று என்றேன்.
தோழர் தமிமுன் அன்சாரி அவர்கள் கூட்டாகச் சேர்ந்து நடத்திய போராட்டங்களை நினைவு கூர்ந்தார். அறிவியலாளர் த.வே நடராசன் அவர்கள், ‘இனத்திற்குள்தான் வர்க்கம் வருகிறது. இனம் இறையாண்மை பெறுவதுதான் அடிப்படைத் தேவை’ என்றார். இவ்வாறாக அவ்வரங்கம் நல்ல கருத்துப் பரிமாற்றக் களமாக அமைந்தது.
முதுபெரும் புலவர் புதுக்கோட்டை துரை. மதிவாணன் ஐயா, காவிரி உரிமை மீட்புக்குழு பொருளாளர் ஐயா த. மணிமொழியன், மக்கள் மருத்துவர் இல.ரா. பாரதிச்செல்வன், தமிழுரிமைக் கூட்டமைப்புத் தலைவர் புலவர் இரத்தினவேலவன், பேரப்பிள்ளைகளான சிறுவர்கள் தஞ்சை நிகரன், மதுரை இலக்கியன் வரை.. பல்வேறு அனுபவங்கள் மற்றும் பார்வைகளில் பேசியது ஈர்ப்பாக இருந்தன.
தமிழ்த்தேசியப் பேரியக்க தலைமைச் செயற்குழு உறுப்பினர்கள் தோழர்கள் அ. ஆனந்தன் (பொருளாளர்), பழ. இராசேந்திரன், நா. வைகறை, மு. தமிழ்மணி, மூ.த. கவித்துவன், திருச்சி வே.க. இலக்குவன், கதிர்நிலவன், க. விடுதலைச்சுடர், புதுவை வேல்சாமி ஆகியோர் உரையாற்றியும், பல்வேறு ஒருங்கிணைப்பு பணிகளைச் செய்தும் துணை நின்றனர். என் வாழ்க்கை இணையர் ம. இலட்சுமி “எனது பார்வையில் பெ.ம” என்ற தலைப்பில் பேசினார்.
கலை நிகழ்ச்சிகள்
-------------------------
முருகன்குடி திருவள்ளுவர் கலைக் குழுவின் பறையாட்டம், சிதம்பரம் தமிழர் தற்காப்புப் பயிற்சிப் பள்ளி மாணவர்களின் சிலம்பாட்டம், மல்லர் கம்பம், குடந்தை பேரக் குழந்தைகளின் நடனம், ஈரோடு பேரக் குழந்தைகள் ஈரோடு சரவணன் எழுதிய பாடல்களைப் பாடியது முதலியவை மனத்தை நெகிழச் செய்தன.
பாடல்கள்
--------------
என்னைப் பற்றிய பாடல்கள் என்றாலும் அவை தமிழ்நாட்டின், தமிழின் உரிமை மீட்பு சார்ந்த போர் முழக்கமாக இயற்றப்பட்டிருந்தன. பாவலர் கவிபாஸ்கர் எழுதித் திரை இசைப்பாடகர் முனைவர் சித்தன் செயமூர்த்தி இசையமைத்துப் பாடிய பாடலை தமிழர் நலப் பேரியக்கத் தலைவர், இயக்குநர் மு. களஞ்சியம் வெளியிட இயக்குநர் கிட்டு பெற்றுக் கொண்டார். பாவலர் நா. இராசாரகுநாதன் எழுதி, பொறியாளர் ச. முத்துக்குமாரசாமி இசையமைத்துப் பாடிய பாடல், இலக்கியர் இலரா. மோகன் அவர்கள் இயற்றி, இசையமைப்பாளர் இரா.நா. வசந்த அவர்கள் இசையமைத்த பாடல் எனப் புதிய பாடல்கள் அரங்கேற்றப்பட்டன.
பகல் கூட்டம் அரங்கத்தில் நடக்கட்டும். மாலைப் பொதுக்கூட்டம் திறந்த வெளியில் நடக்க வேண்டும் என்று வலியுறுத்தியவர் செந்தமிழன் சீமான் அவர்கள். அவ்வாறே நடந்தது. பெருந்திரளான கூட்டம்!
முதல் நிகழ்வாக பெருவிழா நினைவுக் கல்வெட்டை தலைமைச் செயற்குழு உறுப்பினர் தோழர் பி. தென்னவன் திறந்து வைத்தார்.
திறந்தவெளி நிறைவுப் பொதுக்கூட்டத்தில் தமிழ்த்தேசியப் பேரியக்கத்தின் போராட்ட வரலாறு குறித்து தோழர் கி. வெங்கட்ராமன் அவர்கள் எழுதியுள்ள “தடம் மாறாத் தமிழ்த்தேசியம்” நூலின் அறிமுகம் தமிழ்த்தேசியப் பேரியக்கத் தலைமைச் செயற்குழு உறுப்பினர் தோழர் நா. வைகறை தலைமையில் நடைபெற்றது. நூலின் சிறப்பு குறித்து தோழர் கதிர்நிலவன் உரையாற்றினார்.
அதன்பின், ”தமிழ்த்தேசியம் இனி” என்ற தலைப்பில் உரையாற்றிய தமிழ்த்தேசியப் பேரியக்கத்தின் துணைத் தலைவர் தோழர் க. முருகன், தலைமைச் செயற்குழு உறுப்பினர் தோழர் கோ. மாரிமுத்து, துணைப் பொதுச் செயலாளர் தோழர் க. அருணபாரதி மூவரும் செறிவான எழுச்சியுரை ஆற்றினார்கள். தோழர்கள் பெ. மணியரசன், கி. வெங்கட்ராமன் இருவரும்தான் தமிழ்த்தேசிய எழுச்சியுரை ஆற்றுவார்கள் என்பதில்லை, மற்ற தோழர்களும் இளையோரை விழித்தெழச் செய்யும் வண்ணம் உரையாற்றுவார்கள் என்பதற்கு இவர்களின் அன்றைய பேச்சே சான்று!
நிறைவரங்கத்துக்குத் தலைமை தாங்கிய தோழர் கி. வெங்கட்ராமன் இந்திய ஆரியக் கட்டமைப்பின் தமிழின அழிப்பு வேலைகளை விளக்கினார். இந்த இன அழிப்புக் கட்டமைப்பைப் பல முனைகளில் எதிர்கொள்வதுதான், தமிழர்களின் அடுத்த கட்ட நகர்வாக இருக்க வேண்டும் என்று விளக்கி வீர உரையாற்றினார். அவருடைய பேச்சை அக்கறையுடன் ஆர்வத்துடன் கூட்டத்தினர் உள்ளவாங்கினர்!
அடுத்து அனைவரும் ஆவலுடன் எதிர்பார்த்த நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் செந்தமிழன் சீமான் அவர்களின் எழுச்சியுரை! ‘தமிழ்த்தேசியத்தைத் தத்துவமாக வளரத்திட ஐயா பெ. மணியரசன் அளித்துள்ள பங்களிப்புகளை ஏணியாகப் பற்றிக் கொண்டு இளையோர் மேலேறி வரவேண்டும்’ என்றார். பெ. மணியரசனும் கி. வெங்கட்ராமனும் இணைந்து தமிழ்த்தேசியத்திற்கு தந்துள்ள பங்களிப்புகளை வியந்து பாராட்டினார்.
தெய்வத் தமிழ்ப் பேரவை தலைமைச் செயற்குழு உறுப்பினரும், சேலம் மேச்சேரி சத்தியபாமா அறக்கட்டளைத் தலைவருமான கருவுறார் சித்தர் வழிச் செயல்பாட்டாளர் அருள்திரு சத்தியபாமா அம்மா அவர்கள் தம் சீடர்களுடன் வந்து எனக்கு மாலை அணிவித்து தலையில் முடிசூட்டி, கனமான செங்கோல் வழங்கினார். இவற்றை ஏற்பதில் எனக்கு மிகவும் கூச்சமாக இருந்தது. இவற்றை அப்படியே சீமான் அவர்களுக்கு அணிவித்தேன். அவற்றை அவர் எனக்கே திருப்பி அணிவித்தார்.
எனக்குத் தனி மேடை
------------------------------
மண்டபத்தில் நிகழ்ச்சிகளுக்கான மேடைக்கு அப்பால் ஓர் ஓரத்தில் எனக்குத் தனிமேடை போட்டிருந்தார்கள். என்னைப் பார்க்க - வாழ்த்த வருபவர்களால் மேடை நிகழ்வுகளுக்கு இடையூறு ஏற்படக் கூடாது என்று இந்த ஏற்பாடு செய்யப்பட்டது.
தமிழ்நாட்டின் பல பகுதிகளிலிருந்தும் வந்தவர்கள் – குடும்பம் குடும்பமாக வந்தவர்கள் எனப் பலரும் என்னிடம் வந்து வாழ்த்து தெரிவித்தனர். இளையோர் வாழ்த்துப் பெற்றனர். துண்டு, மாலை, நிதி என ஒவ்வொருவரும் அணிவித்தனர்/அளித்தனர். சர் சிவசாமி அய்யர் உயர்நிலைப்பள்ளியில் நாங்கள் மூவராய் இணைந்தவர்கள் – இங்கும் சந்தித்துக் கொண்டோம். திருச்சடை வளந்தை சாமி. தங்கமணி, கூடநாணல் கு. பெரியசாமி (இருவரும் இப்போது மயிலாடுதுறை வாசிகள்) வந்திருந்தனர். உலகத் தமிழ்க் கழகத்தில், திருக்காட்டுப் பள்ளியில் இணைந்த தோழர்கள் திருப்பூந்துருத்தி அ. மன்னர் மன்னன், அடஞ்சூர் புலவர் கரு. அரங்கராசன் ஆகியோர் வந்திருந்தனர். ஈகி என் வெங்கடாசலம் அவர்களின் மகன்கள் பேரா. வெ. சுகுமார், வெ. கண்ணன் (சிபிஎம்) என். வி. அவர்களின் அண்ணன் மகன் இரா. நடராசன் (சிபிஎம்) ஆகியோர் வந்து வாழ்த்தினர்.
காவிரி உரிமை மீட்புக்குழுவைச் சேர்ந்த உழவர் பெருமக்கள், தெய்வத்தமிழ்ப் பேரவையைச் சேர்ந்த பெருமக்கள், பல்வேறு அரசியல் கட்சிகளைச் சேர்ந்த நண்பர்கள் எனப் பலரும் வந்து வாழ்த்தினர்.
திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி. வீரமணி, திராவிட இயக்கத் தமிழர் பேரவைத் தலைவர் பேராசிரியர் சுப. வீரபாண்டியர், தேசிய சமூக கலை இலக்கியப் பேரவைத் தலைவர் திரு. தாரை. குமரவேல் ஆகியோர் இப்பெருவிழா சிறக்க வாழ்த்தி எழுதிய கடிதங்களை மேடையில், தோழர் கி.வெ. வாசித்தார்.
வந்து வாழ்த்தியோர் மொத்தம் 4,00,950 ரூபாய் நிதி அளித்தனர். ஒரு தங்க மோதிரம், இரு தங்கக் காசுகள், ஒரு வெள்ளிக் கைக்காப்பு ஆகியவற்றையும் பரிசளித்தனர். நிதி ரூ. 4,00,950-ஐ அப்படியே தமிழ்த்தேசியப் பேரியக்க வளர்ச்சி நிதிக்கு அளித்து விட்டேன்.
வெளிநாட்டில் பணியாற்றும் தமிழர்களின் நன்கொடையில் எனக்கு புதிய மகிழ்வுந்து வழங்கவும் ஏற்பாடு செய்துள்ளனர். அனைவர்க்கும் நெஞ்சார்ந்த நன்றி!
தஞ்சையிலிருந்து இவ்விழாவுக்குப் புறப்பட்டு வரும்போது புதுக்குடியில் வள்ளலார் பணியக அன்பர்கள் ஐயா சுந்தரராசன் தலைமையில் சிறப்பான இசை முழங்க வரவேற்பளித்தனர். பேரியக்கத் தோழர்களும் க. காமராசு உட்படப் பலர் கலந்து கொண்டனர். வெளிநாட்டில் வாழும் ஈழத்தமிழர்கள் சிலர் நேரிலும், பலர் தொலைபேசியிலும் வாழ்த்தினர்.
வேலைப் பகிர்வு - கூட்டுழைப்பு
-------------------------------------------
நிகழ்வு நாளன்று காலை உணவு, பகல் உணவு (அசைவம்) வழங்கும் பொறுப்பை தோழர்கள் வெ. இளங்கோவன், இளையராசா உள்ளிட்ட ஈரோட்டுத் தோழர்கள் எடுத்துக் கொண்டு பலரும் பாராட்டும் வகையில் உணவளித்தனர். பகல் உணவில் சைவ உணவுப் பொறுப்பை தஞ்சை தம்பி கைலாசம்-செம்மலர் இணையரின் இராமு அடிசில் உணவகம் ஏற்றுக் கொண்டு பலரும் பாராட்டும் வகையில் உணவளித்தனர்.
தமிழ்த்தேசியப் பேரியக்கத் தலைமையகப் பொறுப்பாளர் தோழர் வெற்றித்தமிழன் மற்ற தோழர்களுடன் இணைந்து, இப்பெருவிழா தொடர்பாக சென்னை அலுவலகத்திலிருந்து செய்ய வேண்டிய பணிகள் அனைத்தையும் சுறுசுறுப்பாகச் செய்தார்கள்.
தமிழ்த்தேசியப் பேரியக்கத்தின் அனைத்துப் பகுதி அமைப்புகளும் தன்னார்வத்துடன் இவ்விழாவிற்குரிய அனைத்துப் பணிகளையும் செய்து, இயக்கத் தோழர்களையும் குடும்பத்தினரையும் நண்பர்களையும் அழைத்து வந்தனர். இருந்தும் பலர்க்கு அழைப்பு இல்லை; அறிவிப்பு கூட இல்லை என்ற குறைபாடுகளையும் நண்பர்கள் தோழர்கள் கூறுகிறார்கள். நம் வீட்டுத் திருமணங்களிலும் இவ்வாறான குறைபாடுகள் ஏற்படுவதுண்டு. பொறுத்தருள்க என்று உரிமையுடன் அவர்களைக் கேட்டுக் கொள்கிறேன்.
ஆச்சாம்பட்டியிலிருந்து அனைத்து பகுதியினரும், அனைத்துக் கட்சியினரும் உரிமையுடன் உறவுடன் கலந்து கொண்டது மகிழ்ச்சியாக இருந்தது.
சாரத்தில், இது ஒரு தனிநபருக்கான விழாவன்று; தமிழ்த்தேசிய இலட்சியத்திற்கான விழா! இதில் தனிநபரின் தனிச்சிறப்பும், உறவுகளும் உள்ளடங்கும்! அவரவர் தனித்தன்மை பாதிக்கப்படுவதில்லை!
இது முதுமைக்கால விழாதான்! ”தமிழ் எங்கள் இளமைக்குப் பால்” என்றார் பாவேந்தர்! தமிழுக்கும், தமிழர்க்கும் பணியாற்றினால் மனம் எப்போதும் இளமையாய் இருக்கும்!
இவ்விழாவினை சிறப்பாக நடத்திடத் திருச்சித் தோழர்கள் நல்கிய கடும் உழைப்பும், திட்டமிடலும் மிகமிக பாராட்டிற்குரியவை. வரவேற்புக் குழுத் தலைவர் தோழர் வே.க. இலக்குவன், தோழர்கள் மூ.த. கவித்துவன், நா. இராசா ரகுநாதன், மு. தியாகராசன், பொறியாளர் இராசப்பா, வே.பூ. இராமராசு, இராகுல், பி. சுப்பிரமணியன், ஆகியோர் குழுவாக தொடர்ந்து 1 மாதம் நிதிதிரட்டல் உள்ளிட்ட பணிகளில் ஈடுபட்டனர். தோழர்கள் முருகேசன், அழகர், கென்னடி, இராசா, கிருட்டிணமூர்த்தி (கிச்சா), கோவிந்தன், முனியப்பன், ஆகியோர் நிகழ்ச்சிகள் சிறக்க அக்கறையுடன் உழைத்தார்கள்.
தமிழ்நாடு அளவில் அங்கங்கே நம் தோழர்கள் பலர் பல வேலைகளில் உழைத்தார்கள். அனைவருக்கும் பாராட்டுகள்!
எழுபத்தாறு நிறைவுற்ற முதுமை!
எண்ணமோ இன்னும் இளமை!
உடல் ஒத்துழைக்கவில்லையே
ஓட முடியவில்லையே என்றேன்!
உடனே தமிழ்த்தாய் அதட்டினாள்!
”நீ ஓட வேண்டாம்,
உன் இளையோரை ஓட வை!
எண்ணத்துடிப்பை வெளிப்படுத்தி
இலட்சியத்தை நோக்கி ஓட வை!
நாட்டை விட்டு ஓடுவர் பகைவர்” என்றாள்!
அன்னையின் ஆணைக்கு மறுப்பேது?
அணிதிரட்டுவோம்!
அனைவர்க்கும் நன்றி!
“தமிழ் எங்கள் இளமைக்குப் பால்” என்றார் பாவேந்தர்!
எனக்கும்தான்!
=================================
தலைமைச் செயலகம்,
தமிழ்த்தேசியப் பேரியக்கம்
=================================
பேச: 9443918095, புலனம் : 9841949462
முகநூல் : www.fb.com/tamizhdesiyam
ஊடகம் : www.kannottam.com
இணையம் : www.tamizhdesiyam.com
சுட்டுரை : www.twitter.com/Tamizhdesiyam
காணொலிகள் : youtube.com/Tamizhdesiyam
=================================
Labels: அறிக்கைகள்
0கருத்துக்கள்:
Post a Comment
<< முகப்பு பக்கம்