"*இந்துக்கள் அல்லாதோர் கோயிலுக்குள்* *செல்லத் தடை” – தீர்ப்பு இந்துக்களையும் தடுக்கும்!*" --- தெய்வத் தமிழப் பேரவை ஒருங்கிணைப்பாளர் *பெ.மணியரசன்* அறிக்கை!
Wednesday, January 31, 2024
*இந்துக்கள் அல்லாதோர் கோயிலுக்குள்*
*செல்லத் தடை” – தீர்ப்பு இந்துக்களையும் தடுக்கும்!*===========================================
தெய்வத் தமிழப் பேரவை ஒருங்கிணைப்பாளர்
*பெ.மணியரசன்* அறிக்கை!
===========================================
சென்னை உயர்நீதிமன்றத்தின் மதுரை அமர்வு நீதிபதி ஸ்ரீமதி அவர்கள், 30.01.2024 அன்று அளித்த தீர்ப்பில், இந்துக் கோயில்களின் ஆகமப்படி ஆச்சார அனுஷ்டானங்களைக் கடை பிடிக்காதவர்களைக் கோயில் கொடி மரத்துக்கு அப்பால் – கோயிலுக்குள் அனுமதிக்கக்கூடாது என்று கூறப்பட்டுள்ளது. இது இந்து அல்லாத பிற மதத்தவரின் உரிமையை மட்டுமின்றி இந்துக்களின் உரிமையையும் பறிப்பதாக உள்ளது.
ஸ்ரீமதி அளித்த தீர்ப்பின்படி, குறிப்பிட்ட கோயிலின் ஆகமப்படி ஆச்சார அனுஷ்டானங்களைக் கடை பிடிக்காதவர்களைக் அக்கோயிலின் கொடிமரத்துக்கு அப்பால் செல்ல அனுமதிக்கக் கூடாது. இதனால் இந்து அல்லாதவர்கள் மட்டுமின்றி இந்துக்களே கோயிலுக்குள் சென்று வழிபட முடியாத நிலை ஏற்படும்.
கோயிலுக்குள் ஒருவர் நுழையும் போதே அவர் இந்துதானா என்பதைக் கணக்கெடுக்கப் பதிவு முறை வந்து விடும். அடுத்து அவர் இந்துவாக இருந்தாலும் அந்தக் குறிப்பிட்ட கோயிலுக்குரிய ஆகமப்படியான ஆச்சார அனுஷ்டானங்கள், வழிபாட்டுச் சின்னங்கள், உடைகள் அணிந்து வந்திருக்கிறார்களா என்பதையும் ஆய்வு செய்து, இவை அனைத்தும் ஒத்து வந்தால்தான் அவர்களைக் கோயிலுக்குள் அனுமதிக்க முடியும். குறிப்பாக ஒரு வைணவக் கோயிலுக்குள் வழிபாட்டுக்குப் போகின்றவர் நாமம்(திருமண்) நெற்றியில் போடாமல் திருநீறு பூசியிருந்தால் – அவரை அனுமதிக்க முடியாது. அடுத்து இந்து மதத்தைச் சேர்ந்த வெகுமக்களுக்கு அவர்கள் வழக்கமாக வழிபடச் செல்லும் கோயில் எந்த ஆகமத்தை சேர்ந்தது அதற்குரிய அடையாளச் சின்னங்கள் என்ன என்பதும் தெரியாது. சிவநெறியாளர்கள், திருமால் நெறியாளர்கள் எல்லோர்க்கும் திருநீறு அணிவது பொதுப் பழக்கமாக இருக்கிறது.
அடுத்து, கோயிலில் போய் மூலவரை வழிபட்டுத் திருநீறு பூசிக் கொள்ளலாம் என்று போகின்றோர் ஏராளம். அவர்களையும் தடுக்கக் கூடிய அபாயம் நீதிபதியின் தீர்புரையில் உள்ளது. திருநீறு பூசிக் கொள்ளாமலேயே இறைவனை வணங்கும் வழக்கமும் இந்துக்களில் சில பிரிவார்க்கு உண்டு.
தமிழ்நாட்டில் உள்ள பெரும்பாலான திருக்கோயில்கள் தமிழர்களின் வரலாற்றுப் பெட்டகங்களாகவும் இருக்கின்றன. இந்நோக்கிலும் திருக்கோயிலுக்கு வருவோர் உண்டு.
இந்தியாவிலேயே அதிக எண்ணிக்கையிலும் மாபெரும் வடிவங்களிலும் கலையழகு மற்றும் பொறியியல் நேர்த்தியுடன் உள்ள கோயில்கள் தமிழ்நாட்டில்தான் இருக்கின்றன. தஞ்சைப் பெரிய கோயில், மதுரை மீனாட்சியம்மன் கோயில் போன்ற பல கோயில்களுக்கு வெளிநாட்டினர் வந்து பார்த்து வியக்கின்றனர். நீதிபதி ஸ்ரீமதியின் தீர்ப்பு, தமிழ்நாட்டு திருக்கோயில்களின் புகழ் உலகெங்கும் பரவாமல் தடுத்துவிடும்.
நீதிபதி தமது தீர்ப்பில், திருக்கோயில்கள் சுற்றுலா மையங்கள் அல்ல என்று கூறியுள்ளார். தமிழ்நாட்டு திருக்கோயில்கள் வழிபாட்டுத் தலங்களாவும் வரலாற்றைத் தெரிந்து கொள்ள விரும்புவோரின் வரலாற்று சின்னங்களாகவும் இருக்கின்றன. குழந்தைகளோடு குடும்பமே அமர்ந்து உரையாடிக் களித்து, மனக் கவலையை இறக்கி வைக்கும் இடங்களாகவும் இருக்கின்றன. அரசர்கள் காலத்தில் ஆட்சி நிர்வாக மையமாகவும் திருக்கோயில்கள் விளங்கின. தஞ்சைப் பெருவுடையார் திருக்கோயிலே இதற்குச் சான்று.
இந்து அல்லாத பிற மதங்களின் வழிபாட்டுத் தலங்கள் பிற்காலத்தவை! அவை வழிபாட்டை மட்டுமே கொண்டவை. அவர்களின் வழிபாட்டு தலங்களுக்குள் இந்துக்கள் செல்ல தடை இல்லை. தமிழ்நாட்டு இந்துக் கோயில்கள் தொன்மையானவை; வரலாற்றுக் களஞ்சியங்கள்!
நீதிபதி ஸ்ரீமதி அவர்களின் தீர்ப்பு இந்து சமய அறநிலையத்துறையின் செயல்பாடுகளை முடக்குவதாக உள்ளது. அர்ச்சகர்கள் மற்றும் அவர்களைச் சேர்ந்த வகுப்பாரின் ஆதிக்கத்தின் கீழ் திருக்கோயில்களின் செயல்பாடுகளைக் கொண்டுவரும் தன்மையில் உள்ளது.
கண்ணியமான உடை உடுத்தி, செருப்பணியாமல் கோயிலுக்குள் செல்ல வேண்டும் என்ற கட்டுப்பாடு தேவை. வழிபாடு செய்யாதவர்களும் கண்ணியத்துடன், கட்டுப்பாட்டுடன் கோயிலுக்குச் சென்று வர இப்போதுள்ள அனுமதி தொடர வேண்டும். இந்துக்கள் அல்லாதவர்கள் உள்ளே வரக்கூடாது என்று எச்சரிக்கைப் பலகையோ, கணக்குப் பதிவோ கூடாது.
உயர்நீதிமன்ற மதுரை அமர்வின் நீதிபதி ஸ்ரீமதி தீர்ப்பை இரத்துச் செய்யக் கோரி முழுவீச்சில் சட்ட நடவடிக்கைகளை தமிழ்நாடு அரசு எடுக்க வேண்டும் என்று தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களைத் தெய்வத் தமிழ்ப் பேரவை சார்பில் கேட்டுக் கொள்கிறேன்.
================================
தெய்வத் தமிழ்ப் பேரவை
================================
Labels: அறிக்கைகள், தமிழர்_ஆன்மீகம், தெய்வத்தமிழ்ப்_பேரவை